முருகனுக்கு வேலையே அந்தப் பாலத்தில்தான். பள்ளி முடிந்து வீடு வந்ததும் புத்தகைப்பையை ஒரு மூளையில் வைத்துவிட்டு தூண்டிலை எடுத்துக்கொண்டு அந்தப் பாலத்திற்கு ஓடிவிடுவான்.
பரப்பரப்பு இல்லாத ஓய்ந்த சாலைக்குக் குறுக்காக ஓடும் ஆறு. மேட்டுக்கம்ப ஆறு என்றுத்தான் வழக்கமாகச் சொல்வார்கள். நாகா லீலீட் பெரிய ஆறு அடித்துக் கொண்டு வரும் அனைத்துக் குப்பைகளும் இங்குத்தான் வந்து சேரும். பிறகு ஒரு வாரத்திற்குக் கம்பத்திலுள்ள அனைவரின் உடலிலும் வீட்டிலும் சாப்பாட்டிலும் அதே வாடைத்தான்.
அந்த ஜாலான் லாமா ஆற்றிற்கு மேல் இருந்த பாலம் கயூ பாலாக் கட்டையால் செய்யப்பட்டது. பல வருடங்களுக்குத் தாங்குகிறது. எப்பொழுதாவது செம்பனை தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு போகும் லாரியைத் தவிர அவ்வப்போது சில வாகனங்கள் வந்து போகும்.
அன்று பள்ளி முடிந்து முருகன் தூண்டிலைத் தூக்கிக் கொண்டு தனது சைக்கிளில் அந்தப் பாலத்திற்கு வந்தான். தூரத்துக் குருவிகள் அலறல் தவிர சத்தமே இல்லை. பாதி செம்பனை அழிக்கப்பட்ட காடு அது. எதற்காகவோ அந்தக் காட்டின் பெரும்பகுதியை அழித்துவிட்டார்கள். ஒரு சிறு சத்தமும்கூட வெறித்துப் போயிருக்கும் அந்தக் காட்டின் பகுதியில் எதிரொலிக்கப்படும். பாலத்தின் நடுவில் அமர்ந்து தூண்டிலை ஆற்றில் வீசினான். தூண்டின் கொக்கி ஒரு கணம் மூழ்கி மீண்டும் தடுமாறி குப்பென்று வெளியே வந்தது.
‘நாளைக்காவது அந்தச் சண்ட மீனைப் பிடிச்சிருவியா?’ என அவன் நண்பன் சுகுமாறன் கேட்டதே அவன் ஞாபகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
கடந்த 2 வாரமாக அவனிடம் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சண்டை மீன் எங்கிருந்து வருகிறது என அவனுக்குத் தெரிந்ததே இல்லை. அநேகமாக நாகா லீலீட் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம். ஒரு நாளும் அவனிடம் சிக்கியது இல்லை. அபூர்வமாகவே சண்டை மீன்கள் இப்படிச் சிறிய ஆறுகளுக்கு வரும். அவ்வளவு சாதூர்யமாக யாருக்கும் சிக்காது.
ஆறு அமைதியில் இருக்கும் தருணத்தில் சட்டென சீறிப் பாய்ந்து அது மீண்டும் ஆற்றிற்குள் நுழையும்போது முருகனுக்கு வாய்ப்பிளக்கும். கருப்பும் செம்மண் வர்ணமும் கலந்த ஒரு பளப்பளப்பு. வெய்யில் பட்டு மின்னும் உடல். பறவையின் இறக்கையை அதன் வாலில் வைத்துத் தைத்தது போன்று ஒரு தோற்றம்.
“சண்ட மீனு கெடைச்சா அது அதிர்ஷ்டம்டா” எனக் கண்கள் விரிய அவன் நண்பர்கள் சொன்னதே முருகனின் காதில் ஒலித்தது.
வெகுநேரம் முருகன் தூண்டிலோடு பாலத்தில் அமர்ந்திருந்தான். தூண்டிலில் ஒரு அசைவும் இல்லை. வானமும் ஆறும் வெறிச்சோடி போயிருந்தன. சட்டென வெறுப்பு வந்து தூண்டிலை மேலே இழுத்தான். ஆற்றின் கரையோரம் உடைந்த கூடை ஒன்றைக் கவனித்தான்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கரையோரம் கிடக்கும் அந்தக் கூடையை எடுத்தான். கூடைக்குள் குறைந்தது 10 ஓட்டைகள் இருக்கும். அதனை உதறிவிட்டு மெல்ல ஆற்றில் இறங்கினான். அவனுடைய முட்டியளவே தண்ணீர் இருந்தது.
“ஏய்ய்ய் சண்ட மீனு...உன்னை இன்னிக்குப் பிடிக்கிறேன் பாரு” எனச் சத்தமாகக் கத்தினான்.
ஆற்றில் நீர் ஓட்டம் வேகமாக இல்லாத்தால் மீன்கள் நீந்திச் செல்வதை அவனால் பார்க்க முடிந்தது. பளப்பளக்கும் அந்தச் சண்டை மீனையே அவன் எதிர்ப்பார்த்திருந்தான்.
“சண்ட மீனு சாதாரணமானது இல்லடா. அதைப் போத்தல்ல போட்டு மண்ணுக்குள்ள புதைச்சித்தான் வளர்க்கணும். அப்பத்தான் அதுக்கு வெறி ஏறும்” கண்களை உருட்டி உருட்டி நண்பர்கள் சொன்னதெல்லாம் அவனை மேலும் ஆர்வமாக்கியது.
வெகுநேரம் கூடையைத் தண்ணீருக்குள் முக்கி எடுத்தான். செடிகளும் சேறும் மட்டுமே பல்லிழித்துக் கொண்டிருந்தன. கூடுதலாக இன்னொரு அடி எடுத்த வைக்கலாம் என்ற நினைத்த மாத்திரத்தில் சட்டென காலில் ஏதோ அகப்பட்டது.
அதற்கு மேல் வலது காலை அவனால் அசைக்க முடியவில்லை. கீழே விழப்பார்த்தான். கூடையைக் கொண்டு தன் காலில் மாட்டிக்கொண்டதை முடிந்தவரை தள்ளினான். பிறகு இரு கைகளாலும் அதனை மேலே தூக்க முயன்றான்.
மெல்ல மெல்ல மேலேறிய அதனைப் பார்த்து முருகன் அலறினான். உடல் நடுங்க சட்டென கரைக்குப் பாய்ந்து வீட்டை நோக்கி ஓடினான். அவனுக்குத் திரும்பிப் பார்க்கவும் மனம் அவகாசம் கொடுக்கவில்லை. தலைத்தெறிக்க ஓடினான்.
“ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆ” என அவன் அலறியது கம்பத்தையே உலுக்கியது. மேட்டு வீட்டு பாபுஜி மாமாதான் முதலில் ஓடி வந்தார்.
முருகன் மூச்சிரைக்க நடந்ததைக் கூறினான். உடனே பாபுஜி மாமா, முருகனின் அப்பா என ஒரு சிறு கூட்டமே கூடி ஆற்றுப் பக்கம் ஓடியது. முருகனும் உடன் சென்று அவ்விடத்தைக் காட்டினான்.
“எல்லாம் கீழ இறங்கி தூக்குங்க” என மாமா வாட்டசாட்டமாக இருந்த இளைஞர்கள் சிலரை ஏவினார்.
அவர்கள் ஆற்றில் இறங்கி அதனைத் தூக்கினர். அனைவருக்கும் அதிர்ச்சி. முகம் வீங்கி உடல் உப்பி போன போத்தக்காரனின் உடல்.
“அடப்பாவி! இங்க வந்தா செத்துருக்கான்? கம்பமே தேடுனுச்சே” என முருகனின் அப்பா அரற்றுவது கேட்டது.
போத்தக்காரன் கம்பத்தில் பயங்கரக் சண்டைக்காரர். கம்பத்தில் அவனை ‘தவுக்கே’ என்றுத்தான் எல்லோரும் அழைப்பார்கள். எல்லோரிடமும் சண்டைக்கு நின்று வம்பிழுப்பான். ஒருமுறை கம்பத்து சீனக்கடை ஆபேங் கிழவனுக்கும் போத்தக்காரனுக்கும் சண்டை வழுத்துக் கைக்கலப்பாகிவிட்டது. கட்டையைத் தூக்கிக்கொண்டு போத்தக்காரன் கம்பம் முழுக்க கிழவனை விரட்டினான். ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே வெறியுடன் அவன் ஓடியதைப் பார்த்த பிறகுத்தான் அவன் மீது அனைவருக்கும் பயம் கூடியது. அவன் அதற்குமேல் கம்பத்தில் வசிப்பது ஆபத்து என எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
பெரும்பாலும் அனைவருக்கும் அவரைப் பிடிக்காமல் போய்விட்டது. பயங்கரக் குடிக்காரர். போதையில் எல்லோரையும் ஏசுவார். போத்தக்காரரின் கண்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். பின் முடி சடையைப் போல தொங்கும். சுருள் முடி.
போத்தக்காரன் அடிக்கடி வெறிப்பேறி தன்னைத் தானே அடித்துக் கொண்டு புரள்வான். அவனைக் கேளாங் லாமா பெரிய காட்டில் உள்ள பேய் அடித்துவிட்டது என்றும் அதனால்தான் அப்படி ஆய்விட்டான் என தூக்குக் கோவில் பூசாரி சொல்லி எல்லோரும் பின்னர் நம்பத் தொடங்கினர். போத்தக்காரன் தூக்குக் கோவில் பூசாரியைப் பிறகு ஓட ஓட அடித்து விரட்டியது வேறு கதை. அதுவரை கம்பத்தில் அவரிடம்தான் காய்ச்சல் வந்தால் முடிக் கயிறு கட்டிக்கொள்வார்கள். சிறு பிள்ளைகளுக்கு மந்திரித்துத் தண்ணீர் கொடுப்பது, அம்மைப் போட்டவர்களுக்கு வேப்பிலை பூஜை செய்வது என சில காரியங்கள் செய்து காலத்தை ஓட்டிய பூசாரி போத்தக்காரனிடம் அடி வாங்கிய பிறகு கம்பத்துப் பக்கமே வருவதில்லை.
இரண்டுமுறை அவனைக் காவல்துறையினர் கைது செய்து தனிமைப்படுத்தினர். கேளாங் லாமா சிறைச்சாலையில் இரண்டு வருடம் தனிமையில் இருந்துவிட்டு மேலும் வெறியுடனே கம்பத்திற்கு வந்து சேர்ந்தான். வந்ததும் அவன் மனைவி சரசைச் சாலைக்கு இழுத்து வந்து எல்லோர் முன்னிலையிலும் போட்டு அடித்தான். அவள் கதறியழுது மண்ணை அள்ளி அவன் மீது வீசி மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள். போத்தக்காரனைத் திருத்தவே முடியாது என எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
சரசு அக்கா ஓடிப்போன பிறகுத்தான் போத்தக்காரன் பைத்தியம் பிடித்தவனைப் போல ஆகிவிட்டான். சரியாக மேட்டுக்கம்பம் வேப்பிலை மாரியம்மன் திருவிழாவிற்குப் பிறகுத்தான் சரசு அக்காவைக் காணவில்லை. பால் குடம் எடுக்கக் காலையிலிருந்தே பரப்பரப்பாக மஞ்சள் உடையில் இருந்தவள் இரவுக்குப் பிறகு சத்தமே இல்லை. போத்தக்காரன் குடித்துவிட்டு வந்து கம்பத்தில் ஓலமிட்டான்.
"அவ ஓடுகாளி...பாத்தீங்களா பாபு..."
பார்ப்போரிடமெல்லாம் அன்று அதிசயமாக ஒப்பாரி வைத்தான். அவன் அப்படி அழுது யாருமே பார்த்ததில்லை. மேல் சட்டைக் கிழிந்து நொந்து போய் சாலையிலேயே படுத்துவிட்டான். மறுநாளும் சரசு வரவில்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரண்டு வாரத்திற்குப் போத்தக்காரனைக் கம்பத்தில் யாரும் பார்க்கவில்லை. பலரும் போகிற போக்கில் போத்தக்காரனைச் சில இடங்களில் தேடினர். ஆனால், போத்தக்காரன் எங்கும் கிடைக்கவில்லை. அவனைக் காவல்துறையினர் பிடித்துப் போயிருக்கக்கூடும் என்றே பிறகொருநாள் எல்லோரும் நம்பினர்.
“சண்டைக்காரப் பையன். இப்படியா சாகணும்?” எனக் கூட்டத்தில் இருந்த பெரியவர் சோர்வுடன் பேசினார். முருகன் போத்தக்காரரின் முகத்தைப் பார்த்துப் பயந்தான்.
“இந்த முருகன் பையன் பாருங்க. எவ்ள கெட்டிக்காரன். கண்டுப்பிடிச்சிட்டான்” என பாபுஜி மாமா புகழும்போது மட்டும் முருகன் தலையைக் கம்பீரமாக வெளியே நீட்டினான். பிறகு, அந்தப் போத்தக்காரரின் உடலை நினைத்ததும் சட்டென ஒளிந்துகொண்டான்.
எல்லோரும் போத்தக்காரனின் உடலைத் தூக்கிக் கொண்டு கம்பத்திற்கு நடந்தனர். உடலின் துர்நாற்றம் காற்றில் கலந்து கம்பம் முழுவதும் வீசியது. முருகன் கவலையுடன் அந்த ஆற்றைப் பார்த்தான். இப்பொழுது அந்த ஆறு பயங்கரமானதாகத் தெரிந்தது.
சட்டென ஆற்றிலிருந்து முருகன் அதனைக் கண்டான். அவன் தேடிக்கொண்டிருந்த அந்தச் சண்டை மீன் மேலே ஆக்ரோஷமாகத் தாவியது. சாம்பல் நிறம் பளப்பளக்க அந்தச் சண்டை மீன் விநோதமாக மீண்டும் அந்த ஆற்றில் குதித்தது.ஆற்று நீர் சலசலத்தது.
"சண்ட மீனு தனியாதான் வாழணும்டா....சண்டைலே தோத்துருச்சினா செத்துரணும்"
கம்பம் மையான அமைதியில் இருந்தது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
20 நம்வம்பர் 2014
No comments:
Post a Comment