நேற்று ஒரு திருமண விருந்தில் எனக்கு எதிராக அமர்ந்திருந்த பள்ளிச் சிறுமி ஒருவளிடம் சிரித்து வைத்தேன். பதிலுக்கு அவளும் சிரித்ததும் பேசத் துவங்கினேன். பேச்சின் இறுதியில் பொது அறிவுக்காக, பள்ளி நாள் பிடித்திருக்கிறதா அல்லது பள்ளி விடுமுறை பிடித்திருக்கிறதா எனக் கேட்டேன். கொஞ்சமும் தயங்காமல் கண்கள் விரிய உதடு சிரிக்கப் பள்ளி விடுமுறைத்தான் எனச் சொன்னாள்.
சட்டென்று எனக்குள்ளும் இருந்த சிறுவன் மனம் மலர் சிரித்தான். அவள் திரும்ப என்னிடம் அதே கேள்வியைக் கேட்டாள். வேடிக்கையாக இருந்தது. நானும் சிரித்துக் கொண்டே நிச்சயம் விடுமுறைத்தான் என்றேன். கைக்கழுவிவிட்டுப் போகும்போது கையசைத்து மீண்டும் சிரித்தாள்.
டிசம்பர் மாதம் முழுவதும் திடீரென நம் நாட்டில் சிறுவர்கள் அதிகமாகிவிட்டதைப் போல தோன்றுவதை யாராலும் தவிர்க்க முடியாது. அத்தனை நாள் அமைதியாக இருந்த தெருக்கள் இனி குழந்தைகளின் சத்தத்தாலும் சிறுவர்களின் விளையாட்டுகளாலும் நிரம்பி வழியும். எப்பொழுதும் நம் வசிப்பிடங்களில் நிலவும் அமைதி இனி ஒருமாதத்திற்குச் சீர்குழைந்து போகும். சிறுவர்களின் அழுகையாலும் சிரிப்பாலும் புகார்களாலும் வசிப்பிடங்கள் திணறும்.
முன்பெல்லாம் விடுமுறை என்றால் நானும் அம்மாவும் பேருந்தில் ஏறி கோலாலம்பூரிலுள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று விடுவோம். அப்பொழுதெல்லாம் கோலாலம்பூர் பயணம் என்பது மிக நீண்ட பேருந்து பயணமாகும். வாய்நீர் ஒழுக தூங்கி வழிந்து போய் சேர்வதற்குள் அரைத்தூக்கம் கொடுத்த மயக்கத்தில் இருப்பேன். பாட்டி வாரி அணைத்து மடியில் வைத்துக்கொள்ளும் தருணத்திலிருந்து எனது டிசம்பர் விடுமுறை தொடங்கும்.
ஏனோ டிசம்பர் விடுமுறையில் நமது வீடுகள் துள்ளி எழுந்து எங்கேயோ ஓடிப்போவதற்குத் தயாராகிவிட்டதைப் போல செழிப்புடன் காட்சியளிக்கும். அத்தனை நாள் மௌனத்திற்குள் புதைந்திருந்த சிறுவர்கள் டிசம்பரில் கொஞ்சமாய் விழித்தெழுகிறார்கள். 7 மணிக்கு மேல் வீட்டுப்பாடங்களையே செய்து களைத்தவர்கள் இப்பொழுது தெருவில் ஓடியாடி மகிழ்வார்கள்.
சாதாரண நாட்களில் நகரம் குழந்தைகளை இழந்து வெறுமையில் பரப்பரப்புடன் இருக்கும். ஆனால், டிசம்பரில் எங்குப் பார்த்தாலும் சிறுவர்களாகத் தென்படுவார்கள். இது ஒரு மாயை அல்ல. நீங்கள் வேண்டுமென்றால் அதைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். ஒரு வருடம் அவர்களின் மீது ஒட்டிக்கிடந்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் ஒரு கணம் உதறித்தள்ளிவிட்டு கூட்டைவிட்டுப் பறந்த குருவிகளாக நகரம், வீடுகள், வசிப்பிடத் தெருக்கள், பேரங்காடிகள் எனப் பரவித் திரிகிறார்கள்.
இன்று போன ஒரு வசிப்பிடத்தில் சிறுவர்கள் ‘ஜூத்தா ரியா’ விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு சிறுவன் லங்காவி தீவைத் தான் வாங்கிவிட்டதாகும், இன்னொரு சிறுவன் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைத் தான் இப்பொழுதுதான் வாங்கினேன் என்றும் மிகவும் சீரியசாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். என்னை நம்ப வைப்பதற்காக வாங்கிய ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார்கள். இந்த விளையாட்டில் மட்டும்தான் நம் மாணவர்கள் தொடர்ப் பணக்காரர்களாக வலம் வருகிறார்கள். மதியங்களின் சோர்வையும் வெறுமையையும் கடத்தக்கூடிய ஒரே விளையாட்டு இதுதான். எவ்வளவு நேரம் விளையாடினாலும் முடியவே முடியாது. இப்படிப் பல விளையாட்டுகள் டிசம்பரில் கலைக்கட்டும்.
நம் வீட்டுச் சிறுவர்கள் ஏன் பள்ளி விடுமுறையை அபிரிதமான முறையில் விரும்புகிறார்கள் என என்றாவது நாம் சிந்தித்ததுண்டா? மாலை வீடு வந்து சேரும் நாம் உடனே சிறுவர்களிடம் கேட்கும் முதல் கேள்வியாக இருப்பது என்ன?
வெகுநாட்களுக்குப் பிறகு திடீரென நாம் சிறுவர்களிடம் பேசும் முதல் விஷயம் என்ன? நம்மிடம் கட்டளைகள் மட்டுமே இருக்கின்றன. பகிர்வுகள் குறைவாக இருக்கின்றன.
உங்கள் அனுபவத்தில் எத்தனைமுறை அவர்களைத் திரையரங்கில் ஓடும் கார்ட்டூன்களைப் பார்க்க அழைத்துச் சென்றுள்ளீர்கள்? எத்தனைமுறை அவர்களிடம் பஞ்சத்தந்திரக் கதைகள் பற்றி பேசியுள்ளீர்கள்? எத்தனைமுறை அவர்களிடம் விக்ரமாதித்தியனின் முதுகில் சுமக்கப்படும் பூதமாக மாறிக் கதை சொல்லியுள்ளீர்கள்? ஒருமுறை கூட இல்லையென்றால் நீங்கள் அவர்களுக்காக ஆசை ஆசையாய் உருவாகியிருக்கும் வீடு என்பது சிறைச்சாலை எனச் சொல்வதை விட வேறு தகுதியான சொல் இல்லையென்றே சொல்லலாம்.
நம்முடைய அன்றாட இறுக்கங்களின் விளைவுகளை அவர்கள் மீது கட்டளையாக மாற்றிப் பார்க்கிறோம். அவர்கள் உங்களுக்கு அடிப்பணிவதன் மூலம் நீங்கள் குடும்பத்தின் அதிகாரத்தைத் தன்வசப்படுத்தியுள்ளதாக நம்புகிறீர்கள். F isher (1960) எனும் உளவியல்/கற்பனையாற்றல் கல்வியாளர் இதுபோன்ற வழக்கத்தின் மூலம் குழந்தைகளின் மனங்களை சீக்கிரமாகவே கொன்றுவிடுகிறோம் எனக் கூறுகிறார். அதன் பிறகு வளர்வது குழந்தைகள் அல்ல, ஒரு சாதாரண நம்மைவிட பலம் குறைந்த ஒரு சதை பிண்டம்தான் எனத் தோன்றுகிறது.
டிசம்பர் விடுமுறை மட்டுமே நீங்கள் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்காக/சிறுவர்களுக்காகச் செலவிடும் கிடைக்கத்தக்க அருமையான தருணங்கள். படகு பயணம் போகலாம், திரையரங்கில் அவர்களுடன் கார்ட்டூன்கள் பார்த்து அதைப் பற்றி பேசுங்கள். அவர்களின் முடிவுகளைக் கேளுங்கள். நாமே காலம் முழுக்க முடிவெடுக்கும் சக்தியாக இருந்தது போக, டிசம்பரிலாவது அவர்களை முடிவெடுக்க விடுங்கள்.
ஒரு கதை புத்தகம் வாங்கி இருவருமாகப் படித்து அதனைப் பற்றி பேசுங்கள். அவர்கள் ஒவ்வொருநாளும் நம்முடைய கவனத்திற்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சிறுவர்களை ஓடச்சொல்லிவிட்டு நீங்கள் அமர்ந்து கவனித்துப் பார்க்கவும். நம் கவனம் அவர்கள் மீது இருக்கும் தருணங்களில் அவர்கள் எல்லையற்ற மனமகிழ்ச்சிக்கு ஆளாகிறார்கள் என்பது உளவியல்பூர்வமான உண்மை. உடலில் இறக்கையொன்று முளைத்ததைப் போன்று அவர்களின் உடல்மொழி மாறுவதை உணரலாம்.
டிசம்பர் என்பது சிறுவர்கள் முளைக்கும் மாதம். நமக்குள்ளும் ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ முளைக்கட்டுமே. நம் சிறுவர்களுக்காக நாமும் சிறுவர்களாவதில் என்ன கெட்டுவிடப் போகிறது?
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment