சினிமா ஒரு மாபெரும் சிம்பனி இசையின் கோர்வையைப் போல. ஒவ்வொரு இசைக்கருவியும் இசைக்கத் துவங்கி அனைத்தும் ஓர் பேரோசையாக மாறி ஓர் உச்சத்தை அடையும் நிலையில் இதற்கு முன்பான நம்மை/ நம் இரசனையை உடைக்கக்கூடும். ஒரு நல்ல கதை மட்டும் நல்ல சினிமாவாகிவிடாது. அல்லது பேரரசை இயக்கச் சொல்லிவிட்டு சந்தோஷ் சிவன் அவர்கள் ஒளிப்பதிவு செய்வதன் மூலம் ஒரு நல்ல சினிமா உருவாகிவிடாது, அல்லது ஏ.ஆர் ரஹ்மான் சங்கர் படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் ஒரு நல்ல படம் உருவாகிவிடாது.
சினிமா என்பது எப்பொழுதுமே ஒரு கூட்டு முயற்சியே. தனியாளாக இருந்து கற்பனை செய்யக்கூடியவை அல்ல சினிமா. அது பலருடைய கனவின் ஆதாரம். இசை, ஒளிப்பதிவு, கலை, துணை இயக்கம், பின்னணி இசை, ஒப்பனை, உடை, குரல் பதிவு, திரைக்கதை, வசனம் எனப் பலதுறைகளின் விரிவாக்கமே சினிமா. இவை அனைத்தையும் உள்ளடக்கியே ஒரு சினிமா முழுமைப் பெறுகிறது.
அந்த முழுமையையும் நாம் நம் இரசனை அடிப்படையிலும் ஆய்வின் அடைப்படையிலும் விமர்சிக்க முடிகிறது. பெரும்பாலும் இரசனைகள் வேறுப்பட்டு நிற்கும். சிலருக்கு சூரிய உதயத்தைக் காட்டினால் பிடிக்கும்; சிலருக்கு சூரிய உதயத்தில் சில பறவைகளையும் சேர்த்துக் காட்டினால் பிடிக்கும். சிலருக்கு படம் இருளில் நகர்வது பிடிக்காது, சிலருக்கு படம் குறைவான வெளிச்சத்தில் போவது பிடிக்கும். ஆனால், சினிமாவில் காட்சியின் தேவைக்கேற்ப வர்ணங்களையும் வெளிச்சத்தையும் எப்படிக் கையாள்வது என ஒரு தேவையே இருக்கிறது. அதனை ஒரு விமர்சகன்/பார்வையாளன் தெரிந்து கொள்வது அவசியம். அதுவும் ஒரு கற்றலே. அதே போல ஒளிப்பதிவிலும் சில நுட்பங்கள் அடங்கியுள்ளன.
ஒரு நல்ல சினிமா விமர்சகன் சினிமா அனைத்து விசயங்களையும் வாசித்துத் தெரிந்து கொள்வது முக்கியம் என்றே கருதுகிறேன். என்னிடம் உள்ள இரு முக்கியமான நூல்கள் சினிமாவைப் பற்றிய பல தேடல்களையும், நுட்பங்களையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றன. அவற்றை கொண்டு நான் படம் இயக்கப் போவதில்லை. ஆனால், நிச்சயம் சினிமாவை விமர்சிக்க அவை எனக்குத் தொடர்ந்து உதவி வருகின்றன.
1. அகிரா குரோசாவின் சினிமா கட்டுரைகள்
2.சினிமா கோட்பாடு
மேலும் தமிழ்ச் சூழலில் வெளிவரும் சினிமா விவாதங்களை உள்ளடக்கிய மாத இதழ் காட்சிப்பிழையும் ஒரு சினிமாவை எப்படியெல்லாம் விவாதிக்கலாம் என்கிற அனுபவத்தை நமக்குக் கொடுக்கலாம்.
சினிமா நம் நேரத்தைக் கழிக்கும் ஒரு ஊடகம் மட்டுமல்ல. சமூகத்தின் அன்றாட வெறுமைகளை ஏதோ ஓர் உரையாடலுடன் கீறிப்பார்க்கும், உசுப்பிப் பார்க்கும், தூண்டிப்பார்க்கும் ஒன்றாகவே கருதுகிறேன். அதுவே, நம்மை மகிழ்ச்சிப்படுத்தவும் செய்கிறது. சத்ய ஜித்ரே குறிப்பிட்டதைப் போல சினிமா மாபெரும் மக்கள் கலை. மக்கள் குவிந்து கிடக்கும் இடம். ஆகவே, அதன் பொருட்டு சிந்திக்கவும் எழுதவும் நிறைய உள்ளது.
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment