கண்ணீர் அஞ்சலி
தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடக்கவிருக்கும் என்னுடைய சிறுகதை பட்டறைக்குக் கிளம்பி பேருந்தில் சென்று கொண்டிருந்த நேரம். சிறுவர் நாவல் தொடர்பாகப் பேசுவதற்காக நண்பர் மூர்த்தி அவர்களுக்குத் தொடர்புக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். சட்டென அவருடைய அழைப்புத் துண்டித்துக் கொண்டது. உரையாடல் பாதியிலேயே நிற்கக்கூடாது என்று எண்ணி மீண்டும் அழைத்தேன். மறுமுனையில் திரு.மூர்த்தி அவர்கள் சோர்வடைந்த குரலுடன் ஒரு துக்கச் செய்தியை வைத்திருந்தார். அழைப்புத் துண்டிக்கப்பட்ட இடைவேளையில் அவருக்கு இன்னொரு அழைப்பு வந்திருக்கிறது. மூர்த்தி அவர்கள் கணத்த குரலுடன் ‘சீனி ஐயா இறந்துட்டாராம் பாலா’ என்றார்.
ஐயா காலமாகி பல நாட்களுக்குப் பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது. மனத்திலிருந்து சுமையை எல்லாம் நேரங்களிலும் சட்டென எழுத்திற்குள் இறக்கி வைத்துவிட முடியாதுதான். எனது தந்தையார் இறந்து சில நாட்களே ஆகியிருந்த தருணம் அது.
சீனி ஐயாவுடனான உறவு எனது கல்லூரி காலத்திலிருந்தே தொடங்கியது. 2004ஆம் ஆண்டு விரிவுரைஞர் திரு.தமிழ்மாறன் அவர்கள் சீனி ஐயாவை இலக்கணப் பட்டறைக்காகக் கல்லூரிக்கு அழைத்து வந்திருந்தார். அதற்கு முன்பே ஐயாவை ‘உங்கள் குரல்’ இதழின் வழி ஓரளவிற்கு அறிந்திருந்தேன். தவறாமல் மாதந்தோறும் அந்த இதழை வாசித்தவர்களில் நானும் ஒருவன். அதை அவ்வப்போது விரிவுரையாளர்களிடம் சொல்லிக் கொள்வதிலும் ஒரு பெருமை இருக்கவே செய்தது.
ஐயா அவர்களிடம் விரிவுரையாளர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையோடு நடந்து கொண்டார்கள். அதிலும் திரு.தமிழ்மாறன் அவர்கள் எப்பொழுதும் வகுப்பில் சீனி ஐயாவைப் பல நேரங்களில் மேற்கோள் காட்டிய வண்ணமே இருப்பார். அன்று முதன் முதலாக சீனி ஐயாவின் இலக்கணப் பட்டறையில் கலந்து கொண்டேன். அத்துனை அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் பேசும் திறன் கொண்டவர்களை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. குரலில் எந்தத் தயக்கமும் இல்லாமல் கற்றோர் நிறைந்திருந்த சபையில் ஐயா பேசிக் கொண்டிருந்தார். அதுவரை அல்ல, எப்பொழுதுமே மனத்தோடு ஒட்டாத இலக்கணம் என்னைவிட்டுத் தூரமாகவே இருந்தது. ஆனால், அன்று ஐயாவின் உரை வழக்கமான ஒரு பாடமாக அல்லாமல் மிகவும் இயல்பாகவும் நகைச்சுவையுடன் இருந்தபோதே அந்த இடைவேளி குறைவதைப் போல உணர்ந்தேன்.
அவருடைய உரையின் நடுவே சட்டென எத்தனை இலக்கண விதி இருந்தாலும் சில சமயங்களில் அத்தனையையும் ஓசை விதி மீறி நிற்கக்கூடும். அப்பொழுது இதற்கு முன் கற்ற விதிகள் மீது நமக்கு சந்தேகம் வரக்கூடும். ஓசை விதி வாழ்க்கைக்குள்ளிருந்து வெளிப்பட்டவை. இலக்கண விதி சான்றோர்கள் சொன்னவை. சான்றோர்களை விட வாழ்க்கை அத்தனை அசாதாரணமானது என ஐயா கூறும்போது அப்பொழுது அவர் ஒரு யதார்த்த மனிதராகத் தெரிந்தார். ஏதாவது கவிதை எழுதச் சொன்னாலும் நம் திறமையைக் காட்டிவிடலாம் என வெகுநேரம் அமர்ந்திருந்து இறுதியில் ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தேன். ஏனோ தெரியவில்லை அப்பொழுதும் இலக்கணம் மனத்தில் ஒட்டவில்லைத்தான். ஆனால், அதுவரை உங்கள் குரல் இதழின் வழியே அறிந்து வைத்திருந்த சீனி ஐயாவை முதன் முதலில் நேரடியாகச் சந்தித்த மகிழ்ச்சி மட்டும் மனத்தின் ஓரம் சில்லிட்டது.
அதன் பிறகு ஐயா அவர்கள், மூன்றுமுறை வெவ்வேறு காலக்கட்டங்களில் கல்லூரிக்குப் பட்டறைகள் நடத்த வந்திருப்பார் என நினைக்கிறேன். கல்லூரி முடிந்து நான் வேலையில் இருந்த காலக்கட்டம். அது 2009ஆம் ஆண்டு. அதுவரை நான் ஓர் ஆளுமையாக மதித்துக் கொண்டிருந்த சீனி ஐயாவுடன் கருத்து முரண் ஏற்பட்டு அது பகையாகிப் போயிர்ந்த காலம். பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கமும் சீனி ஐயாவும் இணைந்து நடத்திய தமிழக அறிஞருடனான ஒரு சந்திப்பிற்கு நானும் கோ.புண்ணியவான் அவர்களும் சென்றிருந்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு நவீன இலக்கியவாதியாகத் தீவிரமாகவும் எதிர்வினைகளுடன் எழுதிக் கொண்டிருந்த நேரம். (இப்பொழுதும் அப்படியேத்தான் இருக்கிறேன், அதில் சமரசம் இல்லை). அந்தச் சந்திப்புக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து வந்திருந்த அவ்வறிஞர் நவீன இலக்கியவாதிகள் யாவரும் பைத்தியக்காரர்கள் எனப் பொத்தம்பொதுவாகக் கூறியதும் எனக்குக் கோபம் தலைக்கேறியது.
தமிழ் இலக்கியத்தின் நீட்சியே நவீன இலக்கியம். அதனை நகர்த்திக் கொண்டு போய் உலக இலக்கியத்தின் நீரோட்டத்துடன் சேர்த்துக்கொண்டிருப்பவர்களே நவீன இலக்கியவாதிகள். சில கோளாறானவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கூட்டத்தையும் அப்படிச் சாடுவது தவறென உணர்ந்தேன். உடனே எனது வலைத்தலத்தில் மிகவும் காட்டமாக ஒரு பதிவை எழுதினேன். பினாங்கு எழுத்தாளர் சங்கத்தையும் , சீனி ஐயா அழைத்து வந்திருந்த அந்த அறிஞரையும் சாடி அக்கட்டுரையை எழுதியிருந்தேன். அது சீனி ஐயா பார்வைக்குச் செல்லும் அளவிற்கு மிகுந்த கவனம் பெறத் துவங்கியது. ஐயா அவர்களின் நட்பு வட்டமும் மாணவர்கள் வட்டமும் எல்லாம் இடங்களிலும் என்னைத் தாக்கிப் பேசத் துவங்கினர். ஒட்டுமொத்தமாக சீனி ஐயாவிற்குச் சார்பாகப் பலர் பேசினர். யாருடைய உதவியுமின்றி தனியனாக அவர்கள் அனைவரையும் எழுத்தால் மட்டுமே எதிர்க்கொள்ள முயன்றேன். சில நாட்களிலேயே அனைவரும் அதை மறந்தனர்.
பிறகு 2011 ஆம் ஆண்டு, சிங்கையில் என்னுடைய நாவலுக்குக் கறிகாற் சோழன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராமல் சீனி ஐயாவை வெகுநாட்களுக்குப் பிறகு அங்குச் சந்தித்தேன். அழைப்பின் பேரில் அவர் அங்கு வந்திருந்தார். மிகுந்த பகையாகிப் போயிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த அவருடைய முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. மிகவும் சாதாரணமாக என்னைப் பார்த்து சிரித்தார். அவர் மீது இருந்த எல்லாம் கோபங்களும் அப்படியே உறைந்து நின்றன.
விருது வழங்கப்பட்ட பிறகு கூட்டங்களுக்கு நடுவே பேசிக்கொண்டிருந்த என்னை அழைத்து கைக்கொடுத்து என் தோளில் கைப்போட்டவாறு நாவல் வந்ததும் ஒன்று கண்டிப்பாகக் கொடுங்கள் என்றார். ஏதோ பல நாள் அன்பாகப் பழகியதைப் போன்ற ஓர் உபசரணை அது. பிறகு இரண்டுமுறை சுங்கை பட்டாணியில் நடந்த அவருடைய தொல்காப்பிய வகுப்பில் கலந்து கொண்டேன். அப்பொழுதெல்லாம் கடந்தகால சண்டைகளை எல்லாம் மறந்து கொஞ்சம் இயல்பாகப் பேசிக்கொள்ளும் நிலையில் இருந்தோம்.
நாங்கள் எதிர்த்துக்கொண்டிருந்த பல இலக்கிய மோசடிகளையும் ஐயா அவர்கள் அவரது பாணியில் எதிர்த்து எழுதியிருக்கிறார் என்பதே அவரின் மீது தனி கவனம் வரக் காரணமாக இருந்தது. படைப்புகளை வளமாகப் படைக்க நிச்சயம் இலக்கண அறிவு அவசியமானது என நான் உணர்ந்து கொண்டிருந்த ஒரு காலக்கட்டம் அது. இலக்கியத்திற்காகவே இலக்கணம் தோன்றியது என்பதில் எனக்கு இப்பொழுதும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், தொல்காப்பியத்தையும், இலக்கணத்தையும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஒரு நவீன படைப்பாளியின் படைப்பில் நிச்சயம் செம்மை கூடியிருக்கும் என்பது உண்மையே.
அதே காலக்கட்டத்தில் சீனி ஐயாவின் செம்மொழி மாநாட்டு மலர் இதழ் வெளியீடு, அவருடைய கவிதை தொகுப்பு வெளியீடு எனப் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்திருந்தேன். இறுதியாக அவருடைய கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் பட்டறையில் இடையில் போய் கலந்து கொண்டேன். ஆச்சர்யமாக புதுக்கவிதை எழுதுவது பற்றி மிகவும் நகைச்சுவையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய கவிதை தொகுப்பை வாங்கிக் கொண்டு விடைப்பெற்றதுதான், அதன் பிறகு சீனி ஐயாவை வேறு எங்கேயும் பார்க்கவில்லை.
தொல்காப்பியம் தனது ஆதர்சன வாசகனை இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இனி அவ்விடம் காலியாகவே மிஞ்சியிருக்கின்றது. அத்துனைத் துணிச்சலுடன் யாராலும் அதனை நிரப்ப முடியவில்லை. அனைவரும் தயக்கத்துடன் சீனி ஐயா விட்டுச் சென்ற காலி இடத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பேருந்தில் போய்க்கொண்டிருந்த என்னால் பாதியிலேயே இறங்கவும் முடியவில்லை. பயணம் தொடர்ந்தது. சீனி ஐயாவின் நம்பிக்கைக்குரிய மாணவரான கலைமலருக்குப் பலமுறை அழைப்பேசியில் அழைத்தேன். எனது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். ஐயாவின் இறுதி சடங்கிற்கு வரமுடியாததையும் கூறினேன். அப்பாவை இழந்து நின்ற எனக்கு அந்தச் செய்தி பெரிய பாதிப்பை உருவாக்கவிட்டாலும் மனத்தைக் கணக்கவே செய்தது.
“நான் இருக்கும்போதே என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என மிகுந்த பிரயாசையுடன் செயல்பட்ட சீனி ஐயாவிற்குத் திரும்ப நாம் என்ன செய்யப்போகிறோம்?
-
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment