Monday, October 20, 2014

சொல்ல மறந்த சினிமா – ஜிகர்தாண்டா ,மெட்ராஸ், அட்டக்கத்தி, ஜீவா & ஆதலால் காதல் செய்வீர்

திடீரென முதன்முறையாக என் சினிமா விமர்சனக் கட்டுரையைப் படிப்பவர்கள் எனக்கும் சினிமாவிற்கும் என்னத் தொடர்பு என்பதைப் போலவே சந்தேகிப்பார்கள். ஆகவே, அவர்களிடம் நான் சொல்வது இரண்டு விசயங்கள். ஒன்று, இதுவரை சினிமா சார்ந்து விரிவான விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூலை மலேசியாவில் யாரும் வெளியிட்டதில்லை. நான் வல்லினம் பதிப்பகம் மூலம் உலகச் சிறுவர் சினிமாக்களின் முழு ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியதீர்ந்து போகாத வெண்கட்டிகள்நூலை எழுதி 2012ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளேன். இது தற்புகழ்ச்சி அல்ல. என் கட்டுரைக்குள் எவ்விதத் தடையும் சந்தேகமும் இல்லாமல் பயணிக்க வாசகனுக்கு நான் கொடுக்கும் ஆதாரம்.

இரண்டாவது, நான் இதற்கு முன் எழுதிய அனைத்து சினிமா விமர்சனக் கட்டுரைகளும் என் வலைத்தலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே, இது என்னுடைய முதல் சினிமா விமர்சனக் கட்டுரை அல்ல என்பது புரியும். (http://bala balamurugan.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D )

வெகுஜன இரசனை

பொதுமக்களின் பெரும்பான்மையான இரசனையின் வளர்ச்சியே கலையை நகர்த்துகிறது, கலையைப் பொருளாதார ரீதியில் வெற்றியடைய வைக்கிறது. ஒரு கலைக்கு நிச்சயம் பொருளாதார வெற்றி ஒரு தலையாய பொருட்டே கிடையாது. ஆனால், கலையை வளர்க்கவும் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தவும் பொருளாதாரம் நிச்சயம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

ஆகவே, இன்றைய கலையின் பொருளாதார வெற்றியை நிர்ணயம் செய்வது பொதுமக்களின் இரசனையே. இரசனை என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழும் சமூகத்தினரால் தீர்மானிக்கக்கூடியவை. அனைவருக்குமான ஒன்று எனச் சமூகம் அதிகார்வப்பூர்வமற்ற நிலையில் தனக்கான இரசனையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அதன் வழியில் வரக்கூடிய அனைத்தையும் அச்சமூகம் வரவேற்று வெற்றியைத் தேடித் தருகிறது. சமூக இரசனைக்கு எப்பொழுதுமே ஒரு போராட்டமும் போட்டியும் அவசியமாகத் தேவைப்படுகிறது. காலம் முழுக்க சினிமா துறையில் மட்டுமே இந்தப் போட்டித்தன்மை பின்பற்றப்பட்டும் வருகின்றது.

எம்.ஜி.ஆர்- சிவாஜி, கமல்ரஜினி, விஜய்அஜித், இப்பொழுது சிவகார்த்திகேயன்விஜய் சேதுபதி என இந்தப் பட்டியல் காலத்திற்கும் தொடர்கின்றது. இந்தப் பட்டியலையும் போட்டியையும் உருவாக்குவது அந்தந்த நடிகர்கள் அல்ல. இது ஒரு வகையில் சமூகத்தின் இரசனை கொண்டாட்டம். தனக்கு பிடித்த ஒரு மாஸ் கதாநாயகனை முன்னிலைப்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமா அவர்கள் செய்யத் துவங்குகிறார்கள். அது ஒரு சங்கமாக மாறுகிறது. இப்படித்தான் சமூக பொது இரசனை கூட்டுச் சேர்க்கப்பட்டு ஒரு கொண்டாட்டமாகவும் போட்டியாகவும் மாறுகிறது. அஜித் ஒரு குப்பை படம் நடித்துக் கொடுத்தாலும் அது வெற்றியாவதற்கு இதுபோன்ற கூட்டுமுறையிலான இரசனையே காரணம் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இரசனைக்கும் சமூகத்திற்குமான தொடர்பைப் புரிந்துகொள்ள முதலில் அந்தச் சமூகம் எவ்வித மனநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏதோ நெருக்கட்டிக்குள்ளும் வறுமைக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெகுஜன சிந்தனை புரட்சி என்பதே அங்கு மிகவும் சொற்பமாகவே நடக்கின்றது. படித்த மக்கள் எப்பொழுதுமே எல்லாம் நாட்டிலும் பொதுபுத்தியை பொது இரசனையைத் தீர்மானிப்பவர்கள் அல்ல. அவர்கள் சிறுபான்மையினர்.

பெரும்பாலும் ஒரு நாட்டில் படித்தவர்களைவிட படிக்காதவர்களே அதிகமாக இருக்கிறார்கள். படித்தவர்கள் மட்டும் அப்படி என்ன தனித்துவமாக இருக்கிறார்கள் என்று கேட்டாலும் அதற்கும் பதில் இல்லை. அவர்கள் ஒரு உயர்த்தரக் கூலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். (விதிவிலக்குகள் உள்ளனர்). ஆனாலும், வெய்யிலுலும் புழுக்கத்திலும் மழையிலும் உழைத்துத் தொய்ந்து ஏதோ கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் வாழ்ந்துகொள்ளும் சராசரி மக்களே இன்று எல்லாம் நிலங்களிலும் குவிந்து கிடக்கிறார்கள். அவர்களை நோக்கியதாகவே சினிமா உலகம் வியாபார உத்திகளைப் பாவித்து வருகிறது. கலை உச்சம், கலை வெளிப்பாடு என்பது சொற்பமாகவும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை இரசனைகளை மனத்தில் கொண்டு வியாபார சந்தையைப் பெருக்கிக் கொள்ள ஏற்கனவே இரசனையாக்கப்பட்ட ஒன்றை எவ்விதத்திலும் கலைக்காமல் மீண்டும் மீண்டும் அதையே கொடுக்கும் ஒரு நிலைக்கு இன்று தமிழ் சினிமா ஆளாகிவிட்டது.

ஆக, ஒரு மோசமான படம் சமூகத்தில் ஏன் வெற்றியடைகிறது ஒரு மிகச்சிறந்த தனித்துவமான படம் ஏன் வரவேற்பில்லாமல் தோல்வியடைகிறது என்பதை விசாரிக்க நாம் முதலில் தமிழ் மக்களின் பொது இரசனையையும், கதாநாயகக் கொண்டாட்ட உணர்வையும் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். விஜய் இன்று கலைமிக்க படம் நடித்தாலும் அது அவர் மீதான அபிமானத்தால் ஓடிவிடும்; அதே போல மோசமான படம் நடித்தாலும் அது வெற்றியடையும். கலை, சினிமா சார்ந்து மிகப்பெரிய இரசனை மாற்றம் இங்கு ஏற்படாமல் போனதே இதற்குக் காரணம். மாஸ் ஹீரோக்களின் கைகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா, இப்பொழுது திடீரென தமிழ் சினிமா இயக்கத்தில் நுழைந்திருக்கும் கார்த்தி சுப்புராஜ், ரஞ்சித், சுசிந்திரன், அருண் போன்றவர்களால் சிரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவர்களும் பொருளாதார ரீதியில் திடர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் ஒருவேளை தமிழ்நாட்டின் பொது இரசனையுடன் சமரசம் செய்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதற்கிடையில், மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்கள் பெரிய மாஸ் ஹீரோ பின்னணி இல்லையென்றாலும் வெற்றியடைய காரணம் என்ன? குடும்பம் என்பது தமிழ் மக்களின் சமூக விழுமியம். எல்லாம் நிலைகளிலும் கலை என்பது தாயின் மேன்மையை, தந்தையின் மகத்துவத்தை, சகோதரர்களின் அர்ப்பணிப்பை, தங்கையின் அன்பைப் போற்றிப்பாடும் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதே பொது சிந்தனையாக இருக்கின்றன. ஆகவே, அதனைக் கருத்தில் கொண்டு வெளிவரும் பல படங்கள் வெகு சீக்கிரம் பொது மக்களைக் கவர்ந்திட வாய்ப்பாக அமைகின்றது. இன்னும் சிலர், சமூகத்தில் இப்பொழுது இல்லாமல் போன மகத்துவங்களை ஒரு திரைப்படம் சொல்ல முற்படும்போதும் அது கவனத்திற்குரியதாக மாறுவதாகச் சொல்கிறார்கள். இன்றைய சமூகத்தினர் யாரும் வீட்டில் தன் தாயை மதிப்பதில்லை. ஆகவே, பொதுப்புத்தி அப்படியொரு தாய் மதிக்கப்பட வேண்டும் எனக் கற்பனை காண்கிறது. அக்கற்பனையைத் தர்க்கம் செய்து நியாயம் போற்றும் படங்கள் வெகு இயல்பாகக் கொண்டாடப்படுகின்றன.

விஜய் படங்களில் தாய், தங்கை பாசம் கட்டாயமாக்குப்படுவதன் பின்னணியிலும் இந்தக் காரணமே அடங்கியுள்ளது. சமீபத்திய அஜித் படங்களிலும் சகோதரத்துவ அன்பும், நட்பின் ஆழமும் கதையின் ஒரு பகுதியாகத் தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. இதுபோன்ற படங்களுக்கு மத்தியில் மிகுந்த சமூகப் பொறுப்புணர்வைக்கூட யதார்த்தப் பாணியில் சத்தமே இல்லாமல் நுழைக்கும் படங்களும் வெளிவந்து கவனம் பெறாமல் போய்க்கொண்டுத்தான் இருக்கின்றன.

ஆதலால் காதல் செய்வீர்

சுசிந்திரனின் 2013 ஆம் ஆண்டு வந்த படம்ஆதலால் காதல் செய்வீர்எனும் பட்த்தைக் குறிப்பிடலாம். எந்தச் சுரணையும் இல்லாமல் கிடக்கும் வெகுஜன சிந்தனையைப் படத்தின் கடைசி காட்சியில் மட்டுமே கலைக்க முற்படும் மிக முக்கியமான படம். ஆனால், பிரச்சாரம், பொறுப்புணர்வு, சமூக அக்கறை என்கிற எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் வெளிவந்த படம் ஆகும். தமிழ் சினிமாவின் அதிநுட்ப அறிவியல் படமாக இருந்தாலும், அதில் இயந்திரத்திற்குக் காதல் வந்து தொலைத்துவிடும். அத்தனை அசாதரணமான இயந்திரமும் கதாநாயகிக்குப் பின்னால் லோல் லோல் என ஓடும். இந்த அபத்தத்தைத்தான் ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர் பிதுக்கித் தள்ளுகிறார். தமிழ் சினிமா உலகமும் அவருக்கு விருது கொடுத்து சாதனையாளர் எனக் கௌரவிக்கும்.

அப்படி எதற்கெடுத்தாலும் காதலைத் தூக்கி வைத்துக் கொண்டாடித் திரியும் சூழலில் காதலுக்கு முரணான ஒரு கருத்தை முன்வைக்கும் படம் சுசிந்தீரனின்ஆதலால் காதல் செய்வீர்’. படத்தின் தலைப்பே காதலை வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றது. இத்தனை கொடூரங்களுக்கும் ஆளாகிவிட்ட காதல், இத்தனை சிதைவுகளுக்கும் ஆளாகிவிட்ட காதல், அதனைப் பற்றி கவலையே இல்லாமல் நன்றாகக் காதல் செய்வீர் எனச் சமூகத்தை நோக்கி விமர்சிக்கும் பாணியிலேயே இப்படத்தை நான் புரிந்து கொள்கிறேன். காதல் என்கிற பெயரில் கூடி, உரசி, புணர்ந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்து, பிறகு குடும்பக் கௌரவம் , சாதி என்ற பெயரில் பிரிந்து விடும் இன்றைய நவீன சமூகத்தின் சிதைவுக்கு மும் முகவரிக்கூட இல்லாமல் அனாதையாக்கப்படும் குழந்தைகளை நோக்கியே படம் சென்றடைகிறது. ஆனால் இப்படம் அப்படியொரு நிலையில் போய் முடியும் என்கிற எந்த முன்னறிவிப்பும் இப்படத்தில் இல்லை.

அட்டக்கத்தி

அடுத்து, பா.ரஞ்சித் அவர்களின்அட்டக்கத்திபடத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இதுவும் இத்தனை காலம் தமிழ் சினிமாவில் ஓர் உயர்ந்த விழுமியமாகவே காட்டப்பட்ட காதலைத் தகர்த்து ஒரு சாதாரணத்திற்குள் கொண்டு வந்திருக்கும் படம் ஆகும். காதல் தோல்வி என்பது ஒரு பெரிய விசயமே இல்லை என்பதுதான் யதார்த்த உலகின் போக்கு எனக் காட்டுகிறது. காதலுக்கு முன்பு வாழ்க்கை எத்தனை இயல்பாக நகர்ந்து செல்கின்றது என்ற யதார்த்தையே ரஞ்சித் மிகவும் வித்தியாசமான முறையில் காட்டியிருக்கிறார்.

மெட்ராஸ்

அவருடைய அடுத்த படமானமெட்ராஸ்அதிகமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சமூக அரசியலுக்குள் நிலவும் அதிகாரப் போட்டியை ஒரு சுவரைப் பிம்பமாக வைத்து மிரட்டியிருக்கிறார். ‘அதென்னடா சுவர், அடிக்கடி காட்டுறானுங்க?’ என்றே சமூகத்தின் பொது இரசனை ரஞ்சித் முன்வைக்கும் ஆழ்ந்த அரசியல் கருத்துக்கு எதிராக எந்த நியாயமும் இல்லாமல் ஒலிக்கிறது. பிறகெப்படி ஒரு கலைஞன் சமூகத்தின் பொது இரசனைக்கு முன் சமரசம் செய்யாமல் நிற்க முடியும்?

ஜிகர்தாண்டா

தொடர்ந்து சமீபத்தில் வெளியானஜிகர்தாண்டாபடத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். இது மேற்கத்திய சினிமா ஒன்றின் தழுவல் எனப் பரவலாக விமர்சிக்கப்பட்டாலும் நான் எப்பொழுதும் கார்த்தி சுப்புராஜின் திரைக்கதையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். தழுவல் கதையைக்கூட ஒரு புதிய கோணத்தில் சொல்ல திரைக்கதை பலம் அவசியம். கார்த்தி சுப்புராஜின் திரைக்கதை உத்தி தமிழ்சினிமாவிற்கு மிகவும் புதிதாகும். அவருடைய பீட்சா வெகுஜன இரசனையைக் கவர்ந்திருந்தது. கதை மிகவும் ஆழமானதாக இல்லாவிட்டாலும்பீட்சாஒரு புதிய கதைச்சொல்லலை தமிழ் சினிமாவின் பொது இரசனைக்குள் நுழைத்தது.

ஜிகர்தாண்டா என்பது எளிய மக்களை அடக்கி ஆளும் ஒரு கேங்ஸ்டரிசத்தின் வன்மத்தைக் காட்டுவதாக எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் தாதாவாகச் சண்டித்தனம் செய்துகொண்டு வாழும் சேதுவைப் பின் தொடர்ந்து அவன் மூலம் ஒரு கேங்ஸ்டரிசம் படத்தை எடுக்க முயற்சிக்கிறான் கதாநாயகன். இறுதியில் கேங்ஸ்டரின் வாழ்க்கை சினிமாகிறது, சினிமாக்காரனின் வாழ்க்கை கேங்டரிசத்திற்குள் நுழைகிறது. வாழ்க்கை நம்மால் அணுமானிக்க முடியாத முடிச்சுகளைக் கொண்டவை. எப்படியும் யாரையும் புரட்டிப் போடும் என்கிற ஒரு புள்ளியிலிருந்து படத்தைக் கார்த்தி சுப்புராஜ் விரிவாக்கம் செய்துள்ளார்.

ஜீவா

அடுத்ததாக, ‘ஜீவாபடத்தையும் ஒரு முக்கியமான படமாகக் குறிப்பிடலாம். கிரிக்கேட் தேர்வில் பரவியுள்ள பார்ப்பனிய ஆக்கிரமிப்பை நோக்கி ஓரளவிற்குக் கேள்விக்கேட்டுள்ள படம். கிரிக்கேட் என்பதில் எந்தக் குற்றமும் இல்லை. அது இந்தியாவில் பிறந்த பலரின் கற்பனையாக இருக்கின்றது. ஆனால், அப்படிப் பல கற்பனைகளுடன் தன் வாழ்நாள் முழுக்க கிரிக்கேட்டுக்காகப் பல மகிழ்ச்சிகளை அர்ப்பணித்து வரும் ஓர் இளைஞன் பார்ப்பனிய வெறிக்கு முன் எப்படிப் பழி வாங்கப்படுகிறான் என்பதேஜீவாபடத்தின் சாரமாக இருக்கின்றது. அதையும் படத்தின் பாதிவரை எந்த மிகையான பரப்பரப்பும் இல்லாமல் தேர்வாகும் ஜீவாவின் முதுகில் பூநூல் இருக்கிறதா எனத் தடவிப் பார்ப்பதிலிருந்து படத்தின் அரசியலை இயக்குனர் பேசத் தொடங்குகிறார்.


இதுபோன்ற முக்கியமான சினிமா குறித்து மீண்டும் மீண்டும் பேச நேர்கிறது. இது போன்ற பேச்சுகளே தமிழ் சினிமாவின் மீது படிந்திருக்கும் பாரம்பரியான பொது இரசனையைக் கேள்விக்குள்ளாக்கும். ஒரு சிறிய அளவிலான மாற்றத்தை உருவாக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்

No comments: