வழக்கமாக மிஷ்கின் படம் என்றாலே அதன் ஒளிப்பதிவும் மனிதர்களின் பாத்திரப்படைப்பும் கொஞ்சம் பேய்த்தனமாக மிரட்டலாகத்தான் இருக்கும். அவர் கேமராவைக் கையாளும் விதமே ஒரு சராசரி திரைப்படங்களின் பார்வையாளனைப் பயங்கரமாகத் தொந்தரவு செய்துவிடும்; அவன் பொறுமையைச் சோதித்துவிடும். அப்படிப்பட்ட மிஷ்கின் ஒரு பேய் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் மிரட்டலுக்கா பஞ்சம்?
மிஷ்கின் படம் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பம். அவர் தழுவல் கதைகளைக் கையாண்டாலும் தமிழ் சினிமா சூழலில் அவருக்கென்று ஒரு சினிமா மொழி உண்டு. அது தமிழுக்கு மிகவும் அழுத்தமானவை. இதுவரை மிகவும் மோசமாக/இழிவாகக்/ ஒரு பிரதானத்தன்மையற்று காட்டப்பட்ட விளிம்புநிலை மனிதர்களே மிஷ்கின் படத்தில் கவனத்திற்குரிய பாத்திரங்களாக வருவார்கள். மிஷ்கின் பொருளாதார ரீதியில் பல படங்களால் தோல்வி அடைந்தாலும் அவர் ஒரு சிறந்த கதைச்சொல்லி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனாலும், மிஷ்கினின் திரைப்பட அரசியலும் விமர்சனத்திற்குரியதுதான். அதை அப்படியே போற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
பிசாசு: ஒரு நல்ல பேயின் கதை என்றும், கதாநாயகனின் வீட்டில் தங்கியிருக்கும் பேயின் கதை என்றும் பல பொறுப்பற்ற வலைத்தல விமர்சகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சினிமா விமர்சனம் என்பது ஒரு வாடிக்கையான விசயமாக ஆகிவிட்டது. போகிற போக்கில் கதையின் தொடக்கம் முதல் இறுதிகட்டம் வரையிலான காட்சிகளை வாந்தியெடுத்துவிட்டு, அதை விமர்சனம் என்கிறார்கள்.
படைப்பின் ஊடாக வாழ்வைப் பார்க்கும் மகத்தான ஒரு பார்வைத்தான் விமர்சனம். நமக்கு முன் வழங்கப்பட்ட ஒரு படிமத்தை உடைக்கத் தெரிந்தவனே விமர்சகன். ஒன்றை அப்பட்டமாகப் புரிந்துகொள்வது விமர்சனநிலை அல்ல. அதையும் தாண்ட தெரிந்தவனே விமர்சகன். இல்லையென்றால் விமர்சிக்கக்கூடாது. மிஷ்கின் நிறைய திருப்பமிக்க காட்சிகளைப் படத்தில் கொடுத்திருக்கிறார். அதனை பார்வையாளனே நேரில் கண்டு உணர வேண்டும்.
எந்தப் படம் பார்த்தாலும், எந்தக் கதை படித்தாலும் ஏன் பலருக்கு எவ்விதமான தத்துவப் பார்வையோ உளவியல் பார்வையோ, வாழ்வியல் பார்வையோ எழுவதில்லை? பொதுவாக எல்லோரும் அக்கலைப் படைப்பின் மூலம் சமூகத்திற்கான ஒரு கருத்தைத் தேடுகிறார்கள். பிறகு அதனுடன் ஒத்துப் போகிறார்கள். அவ்வளவுத்தான் என சமாதானம் கொள்கிறார்கள். அவர்களின் தேடல், ருசி அக்கட்டத்தைத் தாண்டி நகர்வதில்லை. படைப்பாளன் பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். மிஷ்கின் அவர்களால் இவ்வளவுத்தான் தர முடியும் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், படைப்பு அப்படியல்ல. ஒவ்வொருமுறையும் அதனை நாம் நுகரும்போது நமக்கு அது விந்தையான ஒரு திறப்பைக் கொடுக்கக்கூடும். யாரும் பார்த்திராத ஒரு நுட்பமான இடத்தைக் காட்டக்கூடும். இது நுகர்வோனுக்கும் படைப்பிற்குமான சந்திப்பு. அதை ஏன் நாம் சீக்கிரத்திலேயே முடித்துக்கொள்ள வேண்டும்? வெகு எளிமையாகச் சமாதானம் அடைந்துகொள்ள வேண்டும்?
பிசாசு படத்தின் கதையை நான் ஆரம்பம் தொடங்கி முடிவுவரை சொல்லப்போவதில்லை. ஆனால், அப்படம் எனக்கு என்ன திறப்பைக் கொடுத்ததைப் பற்றி உரையாடலாம். மன்னிப்பு மிகவும் சராசரியான ஒரு நிகழ்வுதான் என எனக்கு மீண்டும் மீண்டும் அப்படம் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. யார் யாரை மன்னிக்க வேண்டும், மன்னிப்பவன் தெய்வமாக்கப்படுகிறான், மன்னிப்புக் கேட்பவன் அதற்கும் மேலே நிறுத்தப்படுகிறான், மன்னிப்பு ஓர் உன்னத செயலாக முன்னிறுத்தப்படுகிறது, மன்னிப்பு ஒரு தண்டனையாகவும் கருதப்படுகிறது, மன்னிப்புக்காக யார் யாரோ தவம் கிடக்கிறார்கள், ஒரு மன்னிப்பு எத்தனையோ பேரின் வாழ்வைத் திறந்துவிட்டிருக்கும். மன்னிப்புப் பொதுவெளியில் சட்ட ரீதியில், சமூக ரீதியில் நடத்தப்படும்
மன்னிப்பை மதம் இரகசியமாக வழங்குவதை விளம்பரப்படுத்துகிறது. மன்னிக்க கடவுளால் மட்டுமே முடியும் என நிறுவுகிறது. அம்மா மகனைப் பொதுவில் மன்னிக்கிறார், தவறு செய்தவனை பொது மன்னிப்புக் கேட்கச் சொல்லிக் கோரப்படுகிறது. இப்படிச் சில மன்னிப்புகள் இருக்க, உலகில் யாருக்கும் தெரியாமல், எந்த அறிவிப்பும் இல்லாமல் யாரோ சிலர் சிலரால் மன்னிக்கப்படுகிறாகள். தான் மன்னிக்கப்பட்டது கூட தெரியாமல் எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கணம் அத்தனை இறுக்கங்களும் போய் அத்தனை கோபங்களும் செயலிழந்து யாரோ ஒருவர் மன்னிக்கப்படலாம். அது எத்தனை காலம் ஆனாலும் சொல்லப்படாமலும் இருக்கலாம். இது மன்னிப்பின் மேன்மையான நிலையா அல்லது கொடூரமான நிலையா?
மிஷ்கின் உலக நடைமுறையிலுள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒரு மன்னிப்பின் சராசரியான நிலையைக் கடந்து வேறொரு மன்னிப்பிற்குள் கதையை நகர்த்துகிறார். ஒரு மன்னிப்பு வழங்கப்படுவதை எந்தச் சடங்கு ரீதியிலான அறிவிப்பும் இன்றி கதைக்குள் ஒளித்து வைக்கிறார். அது மிகவும் கொடூரமான மன்னிப்பு. மிகவும் பேய்த்தனமான மன்னிப்பு. ஒரு பொதுபுத்தியால் ஏற்றுக்கொள்ளப்படாத மன்னிப்பு.
தான் மன்னிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த மன்னிப்பின் உக்கிரம் தாளாமல் கதாநாயகன் ஒரு கட்டம் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறான். மன்னிப்பின் தேவதையை ஒரு பிசாசிற்குள் அவன் தரிசிக்கும் கணம் தன்னை இழக்க முற்படுகிறான்; உடைந்து அழுகிறான். ஆனால், மன்னிப்பு என்பதுதான் என்ன? அத்தனை புனிதமான செயலா? பிசாசு தொடர்ந்து மனித்து நேசிக்கிறது. யாரை, ஏன் எப்படி என்பதைப் படம் சொல்லும்.
திகிலூட்டும் காட்சி அமைப்புகள். அரோல் குரோலியின் மிரட்டலான இசை, தமிழுக்குப் புதியது. நிச்சயம் படத்தின் மர்மப் பிடியை விட்டு விலகாமல் படம் முழுக்க பயணிக்க இசை கைக்கொடுத்துள்ளது. போலித்தனமில்லாத ஒரு இசையைக் கேட்ட திருப்தி.ஒளிப்பதிவைப் பற்றி சொல்லியாக வேண்டும். மிஷ்கின் படங்களில் ஒளிப்பதிவும் வர்ணமும் கவனத்திற்குரியவை. இப்படத்தில் ஒளிப்பதிவு மிகவும் கவனமாகக் கையாளப்பட்டுள்ளது. ஒரு பேய் படத்திற்குரிய வழக்கமான பரப்பரப்பு இல்லாமல் கச்சிதமாக கேமராவை நகர்த்தியுள்ளார்கள்.
மிஷ்கின் காட்சிகளால் நம்மை இம்சிக்கக்கூடியவர். மகளைப் பறிக்கொடுத்த அப்பா கதறி அழும் காட்சியை மற்ற இயக்குனர்களாக இருந்திருந்தால் குளோசாப்பில் காட்டியிருப்பார்கள். ஆனால், மிஷ்கின் அதனைத் தொலைவிலிருந்துதான் காட்டுவார். ஏன்? மகளைப் பறிக்கொடுத்த அப்பாவின் அழுகை எப்படியிருக்கும் என்று நமக்கென்ன தெரியாதா? வாழ்வு குறித்து அத்தனை தட்டையான மக்காகவா நாம் இருப்போம்? அதனை ஏன் அருகாமையில் காட்டி ஒன்றாம் ஆண்டு பிள்ளைகளுக்கு விளக்குவதைப் போல சொல்ல வேண்டுமா என்ன? அதன் தூரமே நம்மை நெருக்கமாக்கும். மிஷ்கின் நம்மைப் பக்குவப்படுத்தப்பட்ட ஒரு நிலைக்குள்ளே வைத்துக் கொள்கிறார். இதையெல்லாம் ஒரு பெரும் குறையாகச் சில வலைத்தல விமர்சகர்கள் பேசுகிறார்கள்.
படத்தில் பலவீனமே இல்லை எனச் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் பலத்தரப்பட்ட கதாபாத்திரங்களை 'பிசாசு' படத்தின் வழியாகக் காண முடியும். சுரங்கத்தில் பிச்சையெடுக்கும் கண் தெரியாதவர்கள், அவர்களிடமிருந்து காசைப் பிடுங்கி வாழ நினைக்கும் ஊதாரிகள், சாலையில் நடப்பவர்களை மோதிவிட்டு ஓட நினைப்பவர்கள், டீ கடையில் ஒரு டீயைக் குடித்துவிட்டு அங்கேயே பொழுதைக் கழிப்பவர்கள், குழந்தையைத் திருடி தன் மனைவியைச் சமாதானப்படுத்துபவர்கள், இப்படி படம் நெடுகிலும் பல விளிம்புநிலை மனிதர்கள் வந்து போகிறார்கள்.
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் அளவிற்கு மெனக்கெடாவிட்டாலும் இப்படம் ஓர் ஆழ்ந்த தத்துவத்தையும் வாழ்வையும் விட்டுச் செல்கிறது. 'பிசாசு' என்பதுதான் என்ன? ஒரு பேயா? அல்லது ஒரு மனிதனால் இயல்பாக செய்ய முடியாத ஒன்றை சமூகம், உலகம் பிசாசுத்தனமானவை எனக் கருதுகிறதா? நம் மனத்தின் ஆழமான பகுதி மிகவும் நுட்பமான ஒரு பிசாசாக இருக்குமோ? எனக்கே பிடிக்காத எனக்கே ஒவ்வாத ஒரு செயலை எனக்கு நானே முரணாக நின்று செய்யும்போது என்னை நானே பிசாசாகப் பார்க்கிறேனோ?
- கே.பாலமுருகன்
1 comment:
boss superb neengalum miskin mari differen ah yosichu intha vimarsanam panni irukinga all the best...........
Post a Comment