Friday, December 26, 2014

பெரும் வெள்ளக்காடாக மாறிக்கொண்டிருக்கும் மலேசியா 2014 : ஆம் ஆண்டின் மூன்றாவது துயரமிக்க கணம்

"என் குடும்பத்தார் சிலர் கடைசியாக மேட்டுப் பகுதிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பினர். அவர்கள் அங்கு உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நாங்கள் பிழைத்துக் கொண்டோம் என்கிற தகவலும் அவர்களுக்குத் தெரியாது" கெராய் மருத்துவமனையின் இருளுக்குள்ளிருந்து வரும் குரல்கள்.

//bius melalui hidung) kepada seorang bayi dalam gelap untuk menyelamatkan nyawanya selepas generator di Hospital Kuala Krai kehabisan minyak hari ini.//

பிறந்த குழந்தையொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. மின்சார நிறுத்தப்பட்டதால் கெராய் மருத்துவமனையில் பெரும் அவதி.




இன்று சுனாமி நினைவு நாள். கடந்த 10 வருடங்களுக்கு முன் 2004ஆம் ஆண்டு ஒரு இறப்பு வீட்டில் பஜனையை முடித்துவிட்டு புக்கிட் மெர்த்தாஜமிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தோம். (அப்பொழுது ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் இருந்த காலம்) தொலைப்பேசியின் மூலம் உலகம் முழுக்க சுனாமி ஏற்பட்டதுள்ளதாக அறியப்பட்டோம். உடனே காரில் இருந்த ஒரு பக்தர் இந்தப் பூமிக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது என்றார். நான் வெளியில் பார்த்தேன். சுகந்தமான காற்றும் அமைதியுமே நிலவியிருந்தது. பிறகெப்படி இது கெட்ட காலம் எனத் தோன்றியது.

உலகில் இந்தக் கணம் எங்கோ ஓர் இறப்பு நடந்து கொண்டிருக்கலாம். ஒரு கொலை நடந்து கொண்டிருக்கலாம். ஒரு குழந்தை பிறந்து கொண்டிருக்கலாம். ஒரு நாட்டில் குண்டு போடப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் பட்டினியில் வாடிக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கலாம். இதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது பொறுத்தே வாழ்வு. வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டிருப்பவனும் எல்லோருமே கடைசியாக உணர்வது வாழ்க்கை அத்தனை எளிமையானது அல்ல; வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து எல்லோருக்கும் பயம் உண்டு. குறிப்பாக மரணம் குறித்து அனைவருக்கும் தீராத ஒரு திகில் உள்ளுக்குள் உறைந்து போய்க் கிடக்கின்றது. அதிலிருந்து மீள பக்தி, கடவுள், தன்முணைப்பு, துறவு என மனித மனம் பல களங்களைத் தாண்டி வந்துவிட்டது. இதில் எது உண்மை எது பொய் என விவாதிக்கும் சூழல் இல்லாமல் தினம் தினம் ஒரு கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சடாரென்று அன்று காரில் அமர்ந்திருந்த அவரும் ஒரு கார்ப்பரேட் சாமியாருக்குரிய பொய்யான சமாதானம் சொன்னதாகவே இப்பொழுது தோன்றுகிறது. ஏதோ ஓர் இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டால் போதும் நம்மை ஒரு பாதுகாப்பான சூழலில் அமர்த்திக் கொண்டுவிட்டோம் என மனம் அமைதியடைகிறது. ஆனால், இது போன்ற சுனாமியின் போது நல்லவன் கெட்டவன், சாமியார் பக்தன், அரசன் ஆண்டி எனப் பேதம் பார்க்காமல் அனைவரையும் அடித்துத் தள்ளித் துடைத்துவிடுகிறது இயற்கை.


பத்து வருடம் நினைவுகளைக் கடந்து நிற்கும் இன்றைய மலேசியா, திடீரென்று பெரும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் (கிளாந்தான், பேராக், பகாங், பெர்லிஸ் & திரங்காணு) பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அநேகமாக மலேசியாவின் வரலாற்றில் மிகக் கொடுமையான வெள்ளம் எனப் பேசப்படும் 1982ஆம் ஆண்டில் நடந்ததைவிட இவ்வாண்டின் வெள்ளம் பெரும் சரித்திரமாக மாறக்கூடும். இதுவரை 100,000 க்கும் மேற்பட்டோர் வெள்ளைத் துயர்த்துடைப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,000- தாண்டுகிறது.


ஒரு கனவன் மனைவி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுக்கின்றனர். குவாலா கெராயில் ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் பறிக்கொடுத்துள்ளார்கள். இப்படி ஆங்காங்கே பல மரணங்கள் தொடர் செய்திகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. பேராக் மாநிலத்தில் இப்போதைய தகவம் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதீதமாக அதிகரித்து வருகிறதாம். அவானி செய்தி இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

கிளாந்தான் மாநிலமே பெரிய பாதிப்பை எட்டியுள்ளது

கிளாந்தான் மாநிலத்திற்கு உதவிகளைக் கொண்டு போவதில் நாடு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது. அவானி செய்தியில் இன்று டத்தோ முஸ்தப்பா முகமட் சொல்லுகையில், ‘இதுபோன்ற ஒரு மோசமான வெள்ளப்பேரிடரை இதுவே நாடு எதிர்க்கொள்வது முதன் முறையாகும். ஆகவே, அதனை எதிர்க்கொள்வதில் எங்களுக்குத் தடுமாற்றமும் சிரமும் நேர்ந்துள்ளதை ஒப்புக்கொள்வதாகஅறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உணவும் வசதியும் கிடைக்காமல் கிளாந்தான் மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். குடும்பத்தை இழந்தவர்கள் சொந்தங்களைப் பறிக்கொடுத்தவர்கள் கடுமையான மனசோர்வுக்கு ஆளாகியிருக்கும் இந்தவேளையில் உணவும் இல்லாமல் வாடிக்கொண்டிருக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது.

துயர்த்துடைப்பு மையங்களில் நிலை என்ன?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும் பகுதியினர் கொஞ்சமும் வசதியற்ற நிலையில்தான் துயர்த்துடைப்பு மையங்களின் வரந்தாவில் படுத்துறங்கிக் கொண்டிருக்கின்றனர். பலருக்கும் போர்த்தப் போர்வைக்கூட இல்லை. சாப்பாடு தட்டுப்பாடு வேறு கிளாந்தான் மாநிலத்தை எட்டியுள்ளது. ஹெலிகப்டர் போய் தரையிறங்கும் வசதி இல்லாமல் போய்விட்டதால் அதற்கும் இப்பொழுது தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடே பெரும் வெள்ளக்காடாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஏன் ஏற்கனவே வசதியான துயர்த்துடைப்பு மையங்கள் நாட்டில் நிறுவப்படவில்லை? நம் நாட்டில் வெள்ளமே ஏறாது என ஏதாவது ஜோதிடர்கள் கணித்துக் கூறினார்களா? அப்படியிருக்க முன்னேற்பாடாக இதுபோன்ற இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கென எப்பொழுதுமான ஒரு துயர்த்துடைப்பு மையங்கள் கட்டப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வெள்ளம் ஏற்படாத மேடான பகுதிகளை அடையாளம் கண்டு அதுபோன்ற இடங்களில் துயர்த்துடைப்பு மையங்களை அரசாங்கம் நிறுவியிருக்கலாம். இப்பொழுது தங்குவதற்கு வசதியே இல்லாத பள்ளிக்கூடங்களின் மண்டபத்தின் தரையில் எல்லோரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கெராய் மருத்துவமனையின் நிலை?

கிளாந்தானில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையே இப்பொழுது பெரும் ஆபத்தில் உள்ளது. பெரும்பாலான கிளாந்தான் பகுதியில் இப்பொழுது மின்சார வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் அங்குப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவானி செய்தியில் கிளாந்தானில் பாதிக்கப்பட்ட தன் உறவினர்களைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை என ஒருவர் பேசினார்.

கெராய் மருத்துவமனையில் மின்சார வசதி இல்லாத்தால் பெரும் பரப்பரப்பும் மோசமான நிலையும் உருவாகியுள்ளதாக அவானி செய்தி பிரிவு தகவல் தெரிவிக்கிறது. அந்த மருத்துவமனையே இப்பொழுது இருளில் மூழ்கியுள்ளது. உதவிக்கு வருபவர்கள் வந்து தரையிறங்க முடியாமல் திரும்பிப் போய்விடுகின்றனர் என அங்கு உதவிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்களும் நோயாளிகளும் தெரிவித்துள்ளனர். 

அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மின்களத்தின் வழியே அவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருத்துவ இயந்திரங்கள் செயல்ப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் எவ்வளவு நேரம் தாங்கும் என்றும் சொல்வதற்கில்லை என அங்குள்ள மருத்துவர் ஒருவர் வாட்சாப்பின் வழி தெரிவித்திருக்கிறார்.

நேற்று இரவு அவர்களுக்கு உதவுவதற்காக வந்த ஹெலிகப்டரும் அவர்களின் இடத்தைச் சரியாக அடையாளம் காண முடியாமல் தடுமாறி மீண்டும் சென்றுவிட்டதாகச் செய்தியில் சொல்லப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தின் அறிவிப்பு

இதற்கிடையில் சிலாங்கூர் மாநிலம் துன்பத்தில் வாடும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு கிளாந்தான் மாநிலத்திற்கு 1 பில்லியன் பணத்தையும், பாதிக்கப்பட்ட மற்ற நான்கு மாநிலத்திற்கும் தலா ஒரு லட்சம் தர முன்வந்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல் சிலாங்கூர் மாநில அரசு, வெள்ளப்பேரிடரை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தின் கேளிக்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இரத்து செய்யும்படி தடை விதித்துள்ளது. உலகில் எங்கோ கண்ணுக்குத் தெரியாத நாட்டில் துன்பம் நடக்கும்போது நாம் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாட்டின் உள்ளேயே பெரும்பாலான மக்கள் வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கையில் நாம் என்ன செய்யலாம்?

வானொலிகள், தொலைக்காட்சிகள் அவ்வப்போது மக்களுக்குச் சரியான தகவலைக் கொடுக்க்க்கூடிய பொறுப்பான நிலையில் இருக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் என்பதையெல்லாம் கொஞ்சம் நிறுத்திவிட்டு தி.எச்.ஆர் ராகா போன்ற வானொலிகள் வெள்ளம் தொடர்பான தகவல்களையும் அதைச் சார்ந்த பொதுமக்களின் உணர்வுகளையும் ஒலிப்பரப்பும் நிலைக்கு வரவேண்டும். இதுதான் பொதுபுத்தி.

நாம் நம் வாழ்வைக் கொண்டாடலாம், அதை யாரும் தடுப்பதற்கில்லை. ஆனால், கொஞ்சமாவது நாட்டின் நிலையறிந்த ஒரு பொதுபுத்தி எப்படிச் செயல்பட வேண்டும் எனும் அளவிற்காவது நமக்கு சுயசிந்தனை இருக்க வேண்டும் அல்லவா? நம் வீட்டில் வெள்ளம் புகவில்லை என்பதால் நாம் ஆயாசமாக சுகவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்தான், ஆனால் ஒருமுறை நினைத்துப் பாருங்கள், சீரியல்களைப் பார்த்துக் கழிப்பதை நிறுத்திவிட்டு செய்திகளைக் கேளுங்கள்; பாருங்கள். மக்களின் துயரத்தில் பங்குக் கொள்வோம்.

-    கே.பாலமுருகன்


No comments: