Tuesday, April 21, 2015

திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்

மணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒளிப்பதிவு

மும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

லீலா

இந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.


கலாச்சார அதிர்வு

எந்தக் கலாச்சார நிபந்தனையும் மதம்/சட்டம் குறுக்கீடும் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் எனும் ஒரு புதிய நவீன வாழ்க்கைமுறை தேர்வைப் பற்றி படம் ஆரம்பத்தில் பேசுகிறது. அமெரிக்காவிற்குப் போகத் துடிக்கும் கதாநாயகனும், பாரிஸுக்குப் போகத் திட்டமிட்டிருக்கும் கதாநாயகியும் மும்பையில் இருக்கும்வரை இணைந்து வாழ முடிவெடுக்கிறார்கள். இத்தகைய முடிவென்பது இந்து கலாச்சாரப்படி மிகவும் ஒவ்வாத ஒன்றாகும். திருமணம் என்பதே சமூகத்தின் விழுமியங்களில் ஒன்றாகும். ஒரு அதிகாரப்பூர்வக் குடும்ப அமைப்பின் மூலம் ஒரு சமூகத்திற்குள் இடம்பெற அவர்கள் மதம்/சட்டம் என்பதற்கு உட்பட்டுத் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் சமூகம் அவர்களை அங்கீகரித்து அவர்களை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பெருநகர் வாழ்க்கையில் சமூகம் அதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உதறித் தள்ளிவிட்டு அடுத்த நிலைக்குத் தாவிக் குதித்துப் போய்க்கொண்டேயிருக்கிறது.

சேர்ந்து வாழ்தல் பெருநகர் வாழ்வின் கட்டாயமாகவும் தேர்வாகவும் உலக முழுவதும் பரவி வந்திருக்கிறது. பலர் பல சமயங்களில் பல பேருடன் சேர்ந்து தெரிந்தும் தெரியாமலும் வாழும் ஒரு நிலைக்குள்தான் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பங்களில் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் எத்தனையோ உறவுகள் இதுபோன்ற சேர்ந்து வாழ்தலுக்கு உட்பட்டும், உடைந்தும், சேர்ந்தும் பிரிந்தும் கரைந்து கொண்டிருக்கின்றன. முதலாலாளிய உலகம் கண்டுப்பிடித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த குடும்பம் என்கிற ஒரு பிரக்ஞையை வேறோடு அறுத்துவிடக்கூடியதுதான் சேர்ந்து வாழும் முறை. இதற்கு எந்த மத நிபந்தனைகளோ, சமய நிர்பந்தங்களோ சட்ட நெருக்கடிகளும் இல்லை என்பதே பெருநகர் மனிதர்கள் அதுபோன்ற ஓர் உறவுமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். சட்டென்று அவசியம் ஏற்பட்டால் தூக்கியெறிந்துவிட்டுப் போக நவீன வாழ்க்கை கண்டுப்பிடித்துக் கொண்ட ஓர் உறவுமுறையாக அது நகரங்களில் வியாபித்துக் கொண்டிருக்கிறது என்பதனை காதல் கண்மணிபடத்தின் ஆரம்பத்தில் சொல்ல முனைகிறது.

மணிரத்னம் நவீன வாழ்க்கையின் ஒரு முகத்தைக் காட்டிச் செல்கிறார் என்றே நினைத்தேன். ஆனால், படம் சிறுக சிறுக முதலாளித்துவத்திற்கு வசதியான நேர்மையும் இறையாண்மையும் மிக்க பழைய குடும்ப அமைப்பிற்குத் தோதான, சட்டப்பூர்வமான உறவுமுறையாக அவர்களின் உறவு மாறுவதில் கொண்டு வந்து படத்தை முடிக்கிறார். நவீன வாழ்வியலில் நுழைந்த கலாச்சார அதிர்வைப் பற்றி பேசத் துவங்கி மீண்டும் பழமையான சமூக அமைப்பிற்குள் கொண்டு வந்து படத்தின் கருவை நிறுத்துகிறார். ஒரு நவீன வாழ்வின் உலகமயமாக்கலில் சிக்கிக் கொண்ட குடும்பம், திருமணம் என்கிற பிரக்ஞையைக் கதை விவாதிக்கவே எந்தச் சர்ந்தர்ப்பமும் படத்தில் அமையவில்லை. இந்திய இறையாண்மையையும் குடும்ப அமைப்பின் புனிதத்தையும் பேசத் துணிந்த மணிரத்னம் ஏன் விவாதிக்கத் தயங்கியிருக்கிறார்? அவரின் தடுமாற்றம் படத்தின் இடைவேளைக்குப் பிறகு மெல்ல மேழலும்புகிறது.

படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் அவர்களும் லீலாவும்இணைந்து வாழும்ஒரு தோரணையிலேயே படம் முழுக்க எந்தச் சிதைவும் இல்லாமல் எந்தச் சிக்கலும் இல்லாமல் அற்புதமான காதல் உணர்வையும் அன்பையும் பகிர்ந்து கொள்பவர்களாக வருகிறார்கள். திருமணம், குடும்பம் என்கிற பிரக்ஞையையெல்லாம் தாண்டி அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அல்லது மறைமுகமாக கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இணைந்து வாழ்வதைவிட சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து சமூகத்தில் கௌரமாக வாழ்வதே ஆகச் சிறந்த தேர்வு என்பதைக் காட்டுவதற்காக மணிரத்னம் உருவாக்கிய கதாபாத்திரங்களாகக்கூட பிரகாஷ் ராஜும் லீலாவும் இருந்திருக்கலாம்.

மும்பையின் இரு பக்கங்கள் ( மும்பை 2.0)

படத்தின் தொடக்கத்தில் விடீயோ கேம்களைத் தயாரிக்க வரும் கதாநாயகன் மும்பை 2.0 என்கிற கேம் விளையாட்டைப் பற்றி சொல்லும் இடம் மிக முக்கியமானதாகும். மும்பையின் இரண்டு பக்கங்களைப் பற்றி அவர் பேசுகிறார். மும்பை பெருநகரின் இரண்டு வாழ்க்கையைப் பற்றி வீடியோ கேமில் அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறார். ஒன்று மது, மாது, கேளிக்கை எனக் கொண்டாட்டத்தின் உச்சத்தில் தகிக்கும் மேல்தட்டு மும்பை, இன்னொன்று கொலை, கொள்ளை, போதைப்பொருள் எனச் சிதறிக்கிடக்கும் கீழ்த்தட்டு மும்பை. மேல்தட்டிலிருந்து எப்படிக் கீழ்த்தட்டுக்குப் போக முடியும் என்கிற கற்பனையாக அந்த வீடியோ கேம் பற்றி கதாநாயகன் விவரிக்கும்போது அவருடன் சேர்ந்து நாமும் பெருநகரின் இரண்டு முகங்களைப் புரிந்து கொள்ள நேரிடும். ஆனால், மணிரத்னம் காதல் கண்மணி படத்தின் மூலம் மும்பையின் மேல்தட்டு வர்க்கத்தின் ஒரு சிறிய கலாச்சார தடுமாற்றத்தையே காட்டியிருக்கிறார்.

கே.பாலமுருகன்


No comments: