இரயில் கிளம்பும்போது மணி 4.50 இருக்கும். இரயில் பயணம் என நினைக்கும்போது ஒரு வகையான பூரிப்பு சட்டென மனத்திலிருந்து தாவி உடலில் நெளிகிறது. பயணங்களில் கிடைக்கும் ஓர் அர்த்தமற்ற தனிமை விசாரணைகளற்றது.
எவ்வித யோசனையுமின்றி வெறுமனே வெளியைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தவம். காலையில் வேலைக்குப் போனால் மீண்டும் திரும்ப இரவாகும் நாட்களில் அது நமக்கு கிடைக்காது.
‘The next station is Butterworth’
என்னை நான் கவனிக்கும் ஒரு தருணம் எப்பொழுதும் கிடைத்ததில்லை. அவசரமாகத் தலை சீவும்போது கண்ணாடியில் நான் என்னைக் கவனித்ததில்லை.
அதுவொரு சடங்கைப் போல பகட்டுமேனியைக் கவனிக்கும் நேரம் மட்டுமே. ஆனால், அன்று முதன்முறையாகப் பல நாட்களுக்குப் பிறகு என்னை நான் உற்றுக் கவனிக்கும் ஓர் இடைநிலைப்பள்ளி மாணவனாக மாறினேன். என் எதிர் நாற்காலியில் வந்தமர்ந்த பெண் யாராக இருக்கும்? அவளை நான் அத்தனை ஆச்சர்யமாகப் பார்ப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு பெண்ணை, அதுவும் நமக்கு அறிமுகமில்லாத ஒரு பெண்ணை அப்படி நான் பார்த்ததில்லை. வாய் சொல்லில் இருக்கும் வீரம் ஒரு பெண்ணின் கண்களை எதிர்க்கொள்ளும்போது தாவி குதித்து உள்ளுக்குள் போய் கொடூரமாகச் சுருண்டு படுத்துக்கொள்ளும்
இரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். அன்று அவளை அப்படிப் பார்த்த மாத்திரத்தில் நான் என்னை வெகுநாட்களுக்குப்
பிறகு துல்லியமாகக் கவனிக்கத் தொடங்கினேன். காற்சட்டையின் ஓர் இடத்தில் ஏதோ அழுக்குப் படிந்திருந்தது.
கால் மேல் காலைப் போடுவதைப் போல செய்து அதனைத் துடைத்தேன். கண்ணாடியில் வெளிக்காட்சியைப்
பார்ப்பதைப் போன்று முடியைச் சரி செய்தேன். மீண்டும் அவளைப் பார்த்தேன். ஓர முடி அவள் வலது கண்ணை மறைத்தவாறு குறுக்காக விழுந்து கிடந்தது. பெண்களின் அனைத்தையும் இரசிக்கும் ஒரு சுபாவத்தை ஆண்களுக்கு இயற்கை வழங்கிவிட்டிருக்கிறது. சட்டென எழுந்துபோய் அவள் அருகில் அமர்ந்து கொள்ள மனம் துடித்தது.
நான் ஒரு பேச்சாளன். நாடு முழுவதும் சென்று தன்முனைப்பு உரை வழங்குபவன். பெரும்பான்மையான
பேருக்கு என்னைத் தெரியும். நான் இப்படி அற்பத்தனமாக நடந்து கொள்வது சரியா? மீண்டும் கால் மேல் காலிட்டு உசுப்பும் என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயன்றேன். ஒரு பேச்சாளனுக்கே உரிய ஞானப்பார்வையை வரவழைக்க முயன்று தோற்றேன். மீண்டும் கண்கள் அவளைத் தேடின.
ஏதாவது பேச வேண்டும் என மனம் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. யாரோ குச்சியைவிட்டு மனம் என்ற பிரமையான ஒன்றைத் திடப்பொருளாக்கி
உள்ளே கணக்க வைத்துவிட்ட திடீர் அலர்ஜிக். அவள் தன் கைப்பேசியையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படிக் குனிந்து கொண்டு கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும்
தோரணையும் உதட்டில் சட்டென உருவாகி மறையும் மெல்லிய சிரிப்பும் எப்பொழுது வேண்டுமென்றாலும் களையலாம் என்கிற நுனியில் தத்தளித்துக் கொண்டிருந்தன.
இந்தியப் பெண்கள் எப்பொழுதும் உடனே பேசிவிட மாட்டார்கள். ஒரு எளிய சிரிப்புக்குக்கூட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
அவள் கண்கள் விரிந்து மீண்டும் அமைதி கொள்வதில் என்னால் அப்படி மட்டுமே அனுமானிக்க இயன்றது. கண்ணாடியில் தெரியும் அவளின் பிம்பத்தைக் கவனித்தேன். சற்று திரும்பி என்னையும் பார்த்தேன். பாதி விழுந்துவிட்ட வழுக்கை. திடீரென மனம் என்னிடமிருந்து விலகி நின்றது. அவள் பளிச்சென்ற நிறத்தில் இருந்தாள். என்னைவிட இளமையாகவும் தெரிந்தாள்.
அடுத்த கணம் என் பக்கத்து இருக்கையில் ஒரு சீனப் பெண்மணி வந்தமர்ந்தாள். முட்டிவரை பாவாடை போட்டுக் கொண்டிருந்த அவள் என்னைப் பார்த்தாள். என் கண்கள் எனக்கு எதிரில் இருந்த பெண்ணைப் பார்த்த பூரிப்பில் அதே நிலையில் உயிர்ப்பாய் இருந்தது அவளுக்கு ஏதும் அசூசையை உருவாக்கிவிட்டிருக்கலாம். சட்டென என்னைப் பார்ப்பதிலிருந்து
தவிர்த்துவிட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.
நான் ஒன்றும் அத்தனை மோசமாகவும் இல்லை. எது அசிங்கம் எது அழகு என்பதில் எப்பொழுதும் எனக்கு மாற்றுக்கருத்துண்டு. வியர்வை வடியும் ஒருவனைக் கொஞ்சம் ஒதுக்கிப் பார்ப்பதும் வாசனை திரவியம் பூசியிருக்கும் ஒருவனோடு சமூகம் கூடித்தழுவதையும் நினைத்தால் எரிச்சல் உண்டாகும். அவள் அப்படித் தள்ளி அமர்ந்ததை மட்டும் என் எதிரில் அமர்ந்திருந்த பெண் கூர்ந்து கவனித்தாள்.
ஒரு பெண் அத்தனை இலாவகமாக இன்னொரு பெண்ணிடம் எந்தச் சமிக்ஞையும் காட்டாமலே தன் அசௌகரிகங்களைப் பறிமாறிவிடுகிறாள். என் எதிரில் அமர்ந்த பெண் வலது காலை இறக்கி தொடை இரண்டையும் ஒட்டி வைத்துக் கொண்டு தன் ஆடையைச் சரிப்படுத்தினாள்.
அது மேலும் என்னை எரிச்சல்படுத்தியது. அச்சீனப்பெண்மணியைப்
பார்த்தேன். நான் அவளைப் பார்ப்பதை அவள் கண்ணாடியின் வழியாகப் பார்த்திருக்கலாம். அவளுடைய குட்டை பாவாடையைக் கவனித்துவிட்டு அதனை முடிந்தவரை இழுத்து சரிப்படுத்தினாள். எனக்கு அவமானமாக இருந்தது. அவர்களைப் பார்க்கக்கூடாது
என முடிவு செய்து கைப்பேசியை வெளியில் எடுத்தேன். யாராவது குறுந்தகவல் அனுப்பியிருந்தால் அதற்குப் பதிலளிக்கலாம் எனத் தேடினேன்.
கையை அசைக்கும்போது அக்குளில் இருந்து ஒருவிதமான நெடி சட்டென அவ்விடத்தைச் சூழந்ததற்கு நான் பொறுப்பில்லை. அவசரமாகக் கிளம்பி வந்து வேகமாகக் காரை பார்க் செய்துவிட்டு ஓடிவந்து இரயிலில் ஏறும் யாவருக்கும் நிச்சயம் வியர்க்கும். மேலும் தள்ளி அமர்ந்த அந்தச் சீனப்பெண்மணியைக் கவனித்த அவள் தன் கைக்குட்டையை எடுத்து மூக்கைத் துடைப்பதைப் போன்று பாவனை செய்தாள். அது நிச்சயம் பாவனைத்தான். அந்த நெடி அவளைத் தாக்கியிருக்கும்.
ஏன் சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு வியர்வை நெடி என்றால் விரோதமா? அம்மாவும் சிவப்புத்தான்.
அவர் அப்பாவின் மோட்டார் பட்டறை நெடி வீசும் சட்டைகளைத் துவைக்கும்போது முகம் சுழித்ததே இல்லையே. அதுவரை என் அருகில் அமர்ந்திருந்த அந்தச் சீனப்பெண்மணி எழுந்து வேறு இடத்திற்குப் போனாள். எனக்குள் எரிச்சலும் கோபமும் தகித்துக் கொண்டிருந்தன.
மீண்டும் அப்பெண்ணைப் பார்த்தேன். இப்பொழுது அவள் கைக்குட்டையைக் காணவில்லை. இயல்பாக இருந்தாள். அவள் கண்களைச் சந்தித்தேன். அவள் சிரித்தாள். ஒரே சிரிப்பில் என் மொத்த தடுமாற்றங்களையும் அள்ளி எடுத்தாள்.
ஆச்சர்யமாக இருந்தது. கால்களில் இருந்த இறுக்கம் குறைந்திருந்தது.
“உங்க பேரு என்ன?”
அவளே முன்வந்து பேசியது மேலும் மகிழ்ச்சியையும் நடுக்கத்தையும் ஒன்றெனக் கூட்டியது.
“ம்ம்ம்…மனோகரன். உங்க…”
“ஷாலினி. எங்கப் போய்க்கிட்டு இருக்கீங்க?”
“கோலாலம்பூருக்கு…ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வழக்கமா கார்லய போய்டுவேன். ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்ல…அதான்…ரொம்ப நாளுக்குப் பிறகு…என்னைத் தெரியுதா? நாந்தான் தன்முணைப்பு மனோகரன்”
அவளுக்கு அழைப்பு வந்ததும் வலது கண்னை மூடிவிட்டு இடது கண்ணால் மன்னிப்பைத் தெரிவிக்கும் போக்கில் கெஞ்சினாள். அதிகம் பேசிவிட்டதைப் போல உணர்ந்தேன். அவள் பார்க்காதபடி என் உடலை முகர்ந்தேன். வியர்வை நெடி அப்படியே இருந்தது. அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு
என்னைக் கவனித்தாள்.
“மன்னிச்சிடுங்க சார்…என்ன சொன்னீங்க?”
“இல்ல பரவால….ஆங்ங்…ஒன்னும் இல்ல. நம்மள பார்த்தாலே மத்த இனத்துப் பெண்களுக்கு ஒரு மாதிரி ஏளனம்தான்னு நினைக்கறன்?”
“ஏன் அப்படிச் சொல்றீங்க?”
“எல்லா தமிழங்களையும் திருடன் மாதிரி பாத்தா எப்படி?”
“ஏங்க? உங்கள யாராவது அப்படிச் சொன்னாங்களா?”
“அதுக்கு சொல்லல…நான் இப்படிப் பப்ளிக்ல வர்றது குறைவுத்தான்.
இப்படித்தானே தெரியுது…”
“அப்ப அடிக்கடி வாங்க சார். அப்பத்தானே இரயில்லயும் பஸ்ஸூலயும் கால் கடுக்க போற வர்றவங்கள தெரியும்… ஆ ஆஆ”
அவள் சிரித்தாள். ஆனால் அது சிரிப்பல்ல. நான் வரவழைக்க நினைத்த ஞானத்தை அவளுடைய சிரிப்பு அத்தனை சாதூர்யமாகத் தாங்கியிருந்தது.
பெண்களால் மட்டுமே சிரித்துக் கொண்டே நிதானமாக நம்மை விமர்சிக்க முடியும்.
“ஆமாம்… என்ன பப்ளிக்? அடுத்த மனுசனோட சிரமங்களைப் புரிஞ்சிக்காமல்
நடந்துக்குறதுதான் பப்ளிக்கா?”
“பப்ளிக்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? நீங்களும் நானும்தான் பப்ளிக்”
அவள் வாக்குவாதத்திற்குத்
தயாராகிவிட்டதைப் போன்று தோன்றியது. பெண்கள் சட்டென நாம் எதிர்ப்பார்க்காத தருணத்தில் வாதத்திற்குத் தயாராகிவிடுவார்கள். மேலும் ஆண்களைவிட அவர்கள் வார்த்தைகளைக் கூர்மையாக்கி சரியான நேரத்தில் பயன்படுத்தும் வல்லமை உள்ளவர்கள். அதனால்தான் சாபம் விடுவதில் பெண்களுக்கு ஒரு மரபுண்டு. என் அப்பா செய்த அத்தனை வருடங்களின் கொடூமைக்கும் முன் என் அம்மா ஆகக் கடைசியாக அவருடைய 47ஆவது வயதில் போட்ட சத்தத்தில் மொத்த வீடே அமைதியாகி போனது. அதன் பின் அப்பாவிடமிருந்து
வீடு அம்மாவிடம் வந்து சேர்ந்தது.
“அப்படி இல்லைங்க…கொஞ்ச நேரத்துக்கு முன்னால இங்க இருந்தாங்களே அந்தச் சீனப்பொண்ணு… என் மேல வீசற நாத்தத்துக்கு என்ன ரியேக்ஷன் பண்ணாங்கனு பாத்தீங்கத்தானே?”
“ஆ..ஆஆ ஏங்க… நாத்தம் அடிச்சா உலகத்துல எல்லாரும் அப்படித்தான் ரியேக்ட் பண்ணுவாங்க. அவுங்க என்னா உங்கப் பொண்டாட்டியா சகிச்சிக்கிட்டு
இருக்க?”
“ஏங்க? இந்த இரயிலுக்கு வெளிய நாத்தமே இல்லையா? ஏன் பப்ளிக் இந்த மாதிரி சில விசயங்களை மற்ற மனுசன் மனசு பாதிக்காமல் சகிச்சிக்கக் கூடாது? அதை அப்படியே வெளிப்படுத்தி அடுத்தவனைக் காயப்படுத்தனும்னா
என்னா பப்ளிக்?”
நான் அப்படிக் கோபப்பட்டிருக்கக்கூடாது. அவள் என் கணகளை உற்றுக் கவனித்துவிட்டு வேறு பக்கம் திரும்பினாள். புதிதாக அறிமுகம் ஆனவளிடம் கோபத்தைக் காட்ட எனக்கென்ன உரிமை உண்டு? மீண்டும் நிதானத்திற்கு வந்து சிரித்தேன்.
“சார்…ஆம்பளைங்க சத்தம் போட்டு பேசனா வீரம்னு நினைச்சிக்கிட்டு
இருக்காங்க. கத்துனா உண்மையெ பேசிட்டதாக அவங்களே நினைச்சிக்கிட்டு
ஏமாந்து போறாங்க…அவங்க உண்மையிலே பாவம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹார்ண் அடிச்சதுக்காக ஒருத்தன் காடிலேந்து இறங்கி வந்து அந்தப் பொண்ணை ஏசிட்டுக் கார்ல எச்சில் துப்பிட்டுப் போய்ருக்கான்… இதுதானே ஆம்பளைங்க? எங்க அப்பா…சும்மா சும்மா கத்திக்கிட்டே இருப்பாரு. எதுக்கெடுத்தாலும்
மிரட்டுவாரு. மிரட்டுனா அதட்டுனா அப்பா கடமைய செஞ்சிட்டதா நினைக்கறாரு…அவ்ளத்தான் ஆம்பளைங்களா? இப்ப நீங்களும் உங்க கோபத்தை அப்படித்தான் சத்தம் போட்டுக் காட்ட நினைக்கிறீங்க சார்”
“என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க?
நான் கத்தலங்க. என் நியாத்தைச் சொன்னங்க”
“அதே மாதிரித்தான் சார் அந்தப் பொண்ணுக்கு அவங்க நியாயம். அவங்க ஏன் நீங்க எதிர்ப்பார்க்கற
மாதிரி இருக்கும்னும்னு
நீங்க நினைக்கிறீங்க?
அவுங்களுக்குப் பிடிக்கல அவுங்க போய்ட்டாங்க”
பெண்களின் கோபம் நிதானமானது. மெதுவாகத் தன்னை உருவாக்கும். அதன் வளர்ச்சி நம்மால் அணுமானிக்க இயலாது. அடுத்த கட்டம் அது ஆக்ரோஷமாக உருவாகி நிற்கும். அவள் கண்களில் அந்த ஒளியைக் கண்டேன். தன் நியாயத்தைக் கூற முடியாமல் இதற்கு முன் தடுத்த பல ஆண்களின் மீதான கோபத்திற்கு இன்று நான் பலியாகக்கூடாது எனத் தோன்றியது.
“சரிங்க…தப்புத்தான். நம்ம எதிர்ப்பார்க்கறது மாதிரி பப்ளிக் இருக்கக்கூடாது.
நம்ம பப்ளிக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும்? அப்படித்தானே?”
“சார்…உங்களால என் கருத்தைப் புரிஞ்சிக்கவே முடில. சார் இங்க எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கு. நீங்க நீங்களாவே இருங்க. அவுங்க அவுங்களாவே இருக்கட்டும். நீங்க பத்து நாள் குளிக்காமல் வந்து பொதுவுல திரிஞ்சாலும் உங்கள யாரும் கேள்விக் கேட்க முடியாது. ஆனால், அந்த நாத்தத்தை அடுத்தவன் சகிச்சிக்கணும்னு
மட்டும் நினைக்காதீங்க…அவ்ளத்தான்”
அவள் முடிக்கும்போது அவளுக்கு வழக்கத்திற்கு மாறாக மூச்சிரைத்தது.
அதுவரை கண்களில் இருந்த நிதானம் கோபமாகியிருந்தது.
“பொண்ணுங்கனா மேக்கப் மட்டும்தான் போடுவாங்க…எது சொன்னாலும் தலையாட்டிக்குவாங்கனு நினைக்கிறீங்களா
சார்?”
அவளுடைய கண்களின் என் அம்மாவைப் பார்த்தேன்.
“தோ பாரு…நீ குடிக்கிற கிலாஸ்லே உன் மண்டைய பொளந்துருவேன். குடிச்சிட்டா வீரம் வருதா? குடிச்சிட்டா நீ பெரிய மன்மத குஞ்சா? செருப்பால அடிப்பென்…பொம்பளையெ எட்டி உதைப்பெ? உன் காலை எடுத்து நெருப்புல பொசுக்கிருவென்…பாத்துக்க…”
அன்று நான் பார்த்த அம்மா வேறு. அவளிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து வேறு நாற்காலியைத் தேடினேன். எங்குமே இடம் இல்லாமல் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். தூரத்தில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக இருந்தது. அருகில் ஒரு மலாய்க்காரப் பெண் அமர்ந்திருந்தார்.
முதலில் தயக்கமாக இருந்தது. உடலை முகர்ந்தேன். நெடி குறையவே இல்லை.
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment