‘பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர ராமசாமி (செப்டம்பர் 2002)
2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் காளிதாஸ் மூலமே அவருடைய அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜன்
பற்றி தெரிய வந்தது. அப்பொழுது அவர்
மலாயாப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ‘ஊதுபத்தி சிறுவன்’ சிறுகதையை வாசிக்கும்படி
நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பொழுது தமிழ் இலக்கியத்திலும் வாசிப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால் அவருடைய அக்கதையைப் படித்தேன். மொழி பற்றியோ
உத்திகள் பற்றியோ எவ்வித பரிச்சயமும் பெற்றிருக்காத அக்காலக்கட்டத்தில் ‘ஊதுபத்தி சிறுவன்’ எனக்குள் பெரிய
தாக்கத்தை உருவாக்கியது.
அதன் பிறகு 2005ஆம் ஆண்டில் காதல் இதழ் வாசிக்கத் துவங்கியிருந்தேன். அதன் வழி சு.யுவராஜனின்
தனித்துவமான எழுத்துகளை வாசிக்க முடிந்தது. மலேசியத் தமிழ்
இலக்கியத்தில் ஒருவரின் மொழியாளுமையைக் கண்டு நான் பிரமித்தேன் என்றால் அது சு.யுவராஜனின்
மொழியே. அப்பொழுதே சற்று
மாறுப்பட்டு ஜனரஞ்சகத்தன்மைகள் இல்லாமலிருந்தது. சில காலங்கள் கடந்தே அவருடைய அல்ட்ரோமேன் சிறுகதையையும் வாசித்தேன். அப்பொழுதும் இப்பொழுதும் சு.யுவராஜனின்
கதைகளில் அல்ட்ரோமேன் எனக்கு நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் தீவிரமான வாசிப்பின் மூலம் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனிக்கத்தகுந்த அளவிலான தோட்டப்புற வாழ்வியலை மையப்படுத்தி சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு முறை 2007ஆம் ஆண்டில் மாணவர்ப் பிரிவுக்காகத் தமிழ்ப்பேரவை சிறுகதை போட்டியில் எனக்கும் நண்பர் சுந்தரேஷ்வரனுக்கும் பரிசை அறிவித்திருந்தார்கள். அதுதான் சிறுகதைக்காக நான் பெறப்போகும் முதல் பரிசு. காலையிலேயே நண்பர்
வினோத்குமார் மூலம் அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் அறைக்குள் நுழைந்தபோது சு.யுவராஜன்
அங்கு வரவேற்பரையின் தரையில் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். தான் தமிழ்ப்பேரவை கதை எழுதும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாகவும் அடுத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும் பரிசும் போட்டியும் ஆரம்பநிலை எழுத்தாளனுக்கே தகும் என்றும் மிகவும் முதிர்ச்சியாக உரையாடினார். இத்தனை இளம் வயதிலேயே அவர் மிகவும் அப்பாற்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார். இவருடைய அல்ட்ரோமேன் சிறுகதை 2004ஆம் ஆண்டில் மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்ற கதையாகும்.
1. அல்ரோமேன் சமூகத்தில் உருவாக்கும் தாக்கம்
சு.யுவராஜனின்
அல்ட்ரோமேன் தலைப்பைப் படித்ததுமே இது என்ன கார்ட்டூன் சம்பந்தப்பட்ட மிகைகற்பனை சிறுகதையோ எனத் தோன்ற வைக்கலாம். காலம் காலமாக
அல்ட்ரோமேன், பாவர் ரேஞ்சர்ஸ் போன்ற மிகைகற்பனை கதாநாயகக் / சாகச நாயகக் கார்ட்டூன்கள் சமூகத்தின் மனத்தில் விதைத்துவிட்ட மனோபாவம் அது. அதுவும்
அல்ட்ரோமேன் 1960களில் அனைத்து சமூகங்களிலும் மிகவும் கவனம்பெற்ற கார்ட்டூன் ஆகும். 1966ஆம் ஆண்டில் ஜப்பானியத் தொலைக்காட்சி தொடராக அல்ட்ரோமேன் தொடங்கப்பட்டது.
கைஜு, கொட்சிலா போன்ற
விநோதமான கொடூரமான ராட்சத மிருகங்களைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் வேலையைத்தான் அல்ட்ரோமேன் செய்யும். யுவராஜன் தன்
கதைக்கு அல்ட்ரோமேன் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததையொட்டி உடனே ஒரு ஜனரஞ்சகமான பொதுமனத்திற்கு இக்கதை தோட்டப்புற மக்களைக் காக்கும் தெய்வமாகத் திகழும் ஒரு ரோபின் ஹூட் கணக்கில் உள்ள யாரோ ஒருவரைப் பற்றியதாக இருக்கும் எனத் தோன்ற வாய்ப்புண்டு. என்னிடமும் சிலர் இதையே கேட்டிருக்கின்றனர். ஆனால், இக்கதையில் வரும்
அல்ட்ரோமேன் வேறு.
யுவராஜன் இக்கதையின் ஊடாக தோட்டப்புறங்களில் நிகழ்ந்த குடும்ப வன்முறையைப் பேசும்பொருளாக மாற்றுகிறார். இந்திய மனங்களில் ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரான பார்வை அவருடைய கதையில் வியாபித்து வெளிப்படுகிறது. 1996ஆம் ஆண்டிற்குப் பிறகே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டம் தீவிரப்படுத்தப்பட்டது (Domestic Violence Act) என்றால் 1960களில் தோட்டப்புறங்களில் எந்தச் சட்டம் குறித்தும் பிரக்ஞை இல்லாமல் இருந்த இந்தியப் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிர்வினையாற்றாமல் அடங்கி உள்ளுக்குள் புழுங்கி தொய்ந்து சலித்துக் கிடந்தார்கள் என்கிற வேதனையையே யுவராஜன் அல்ட்ரோமேன் கதையில் முன் வைக்கிறார்.
கைஜூ, கொட்சிலா போன்ற
மிருகங்கள் நம் சமூகத்தில் வன்முத்துடன் வீடுகளில் ஒளிந்திருந்த்தை அடையாளம் காட்டும் அவருடைய இக்கதையில் ஓர் அல்ட்ரோமேனையும் படைக்கிறார். ஒரு சிறுவனின் விசித்திரமான மனோபாவத்திலிருந்து அல்ட்ரோமேன் எழுந்து கொள்கிறது. இக்கதையை வாசிக்கும்போது
அந்த அல்ட்ரோமேன் யாரென்று புலப்படும். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் கொடூரங்களுக்கு எதிராக ஒரு சிறுவன் நம் வீட்டில் திடீரென்று அல்ட்ரோமேனாக மாறி நம்மை எதிர்க்கக்கூடும்.
2. குடும்ப வன்முறையின் அரசியல்
ஓர் ஆண் தன் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் முதலில் மனைவியிடமிருந்தே தொடங்குகிறான். இன்றைய குடும்ப உளவியலின் வழி ஆண்களிடமுள்ள அதிகார உணரு முதலில் மனைவியிடமே உக்கிரமாகப் பிரயோகிக்கப்பட்டு பிறகு சமூகத்திற்குள் நுழைவதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப அதிகாரம் என்பது உடலை வதைப்பது, கொடுமைப்படுத்துவது என்று மட்டுமல்ல. மனைவிக்கும் சேர்த்து முடிவெடுப்பது, அவளுக்குத் தேவையானவற்றை முன்னின்று நிறைவேற்றுவது, குடும்ப்ப் பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு தன் ஆளுமையின் வழியே தீர்வுக்காண முடியும் என நம்புவது முதல் எல்லாமே அதிகாரத்தின் பல வடிவங்கள்தான்.
மனைவி முழுக்கவும் தன்னைச் சார்ந்தவள் என்கிற தீர்க்கமான புரிதலை ஓர் ஆண் முதலில் இந்த ஆணாதிக்க சமூகத்தின் சடங்குகளின் வழியாகவே பெறுகிறான். அது தார்மீகமான அதிகாரமாகவும் அல்லது கொடூரமான அதிகாரமாகவும் மாற்றம் கொள்வது அவரவர் சூழலையும் மன அமைப்பையும் பொருத்தவை. ஆனால், தன்
மனைவியிடம் அதிகாரத்தை இழக்கும் ஒருவன் பெரும் தடுமாற்றம் கொள்வதற்குக் காரணம் தன் அதிகாரம் எங்கோ பலவீனம் அடைந்துவிட்டதாக அவன் கருதுகிறான். அதிகாரத்தின் வழி அவன் நிறைவேற்றி வந்த கடமைகள் ஒடுக்கப்படுவதன் மூலம் தன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை இழக்கின்றான். அவனது இருப்பு பெரும் கேள்விக்குள்ளாகுவதாக எண்ணுகிறான். ஆணிடம் இருக்கும் அதிகாரம் பெண்ணிடம் மாறுவதாக அச்சம் ஏற்படும் அடுத்த கணமே அமைதியிழந்து கொடூர மனத்துடன் இயங்குகிறான். யுவராஜன் கதையில் வரும் அப்பாவும் அப்படிப்பட்டவராக இருக்கின்றார். கதையில் அவரைப் பற்றிய சித்தரிப்புகள் அதிகம் இல்லையென்றாலும் ஆங்காங்கே காட்சி அடக்கத்துடன் அவர் படைப்பக்கப்படும் வித்த்திலிருந்து நம்மால் அவரின் மீதான கற்பிதங்களை வியாபித்துக் கொள்ள முடியும்.
அதிலிருந்து மீண்டு
தனித்து இயங்குவதன் மூலம் ஆண் வழி சமூகத்தைச்
சேர்ந்த ஒரு
கணவன் தன்
அதிகாரத்தின் நிலை
குறித்து அச்சம்
கொள்ளத் துவங்குகிறான். அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க
வன்முறையைக் கையாள்கிறான்.
ஒரு குடும்ப
வன்முறை இங்கிருந்து
தொடங்குவதாக நினைக்கிறேன்.
யுவராஜன் தன்
அல்ட்ரோமேன் கதையிலும்
அத்தகையதொரு சூழலே
அன்றைய இந்தியக்
குடும்பங்களுக்குள் வெடித்துச்
சிதறுவதாகக் காட்டுகிறார்.
உடல் ரீதியிலான அடக்குமுறை
இக்கதையில் வரும்
அம்மா தீம்பாருக்கு
மரம் வெட்டப்
போகிறார். அப்பா
இரவெல்லாம் குடித்துவிட்டு
வந்து அம்மாவை
அடிக்கின்றார். வேலைக்குச்
செல்லும் பெண்களின்
நடத்தையைச் சந்தேகிப்பதே
இந்திய சமூகத்தில்
ஆணாதிக்கத்தின் முதல்
செயல்பாடு. குடும்பத்
தலைவர் மட்டுமே
வேலைக்குச் செல்ல
வேண்டும்; பெண்கள்
வீட்டைப் பாதுகாக்க
வேண்டும் என்கிற
அரதபழமையான சிந்தனை
ஆண் மனங்களில்
படிந்து கிடப்பதால்
ஏற்படும் விளைவு. அடுத்து, வேலைக்குச்
செல்லும் பெண்களை
உடல் ரீதியில்
அடக்குவது. ஆண்
தன் பலத்தைக்
கொண்டு பெண்
உடலைச் சிதைப்பதும்
அன்றே குடும்பங்களில்
ஓர் அடக்குமுறையாக
இருந்திருக்கிறது. இதே
பிரச்சனை 1980களில்
இரவு வேலை(Night
shift) வந்தபோது இதைவிட மேலாக
வெடித்தது என்றே
சொல்ல வேண்டும்.
மன நீதியிலான ஒடுக்குமுறை
அடுத்து, மனரீதியிலான
நெருக்குதலைக் கொடுப்பதும்
ஆண் ஆதிக்க
சமூகத்தின் இன்னொரு
அடக்குமுறையாகவும் கருதப்பட்டது.
யுவராஜனின் கதையில்
வரும் அம்மாவிற்கு
வீட்டில் பெரிதாக
எந்த உரிமையும்
இருப்பதில்லை. இரவு
நேரங்களில் சமையலறையின்
இருட்டில் அமர்ந்து
கொண்டு கூரையை
வெறித்துக் கொண்டிருப்பார்
என அவர்
சொல்லும் வரி
மனத்தை இறுக்கமாக்குகிறது.
இருட்டைத் தாண்டி
அதற்குள் கொல்லப்பட்ட
பல உணர்வுகளுடன்
தகித்துக் கொண்டிருப்பதுதான் அடக்குமுறைக்கு ஆளான பல
அம்மாக்களின் உலகமாக
இருந்திருக்கிறது. வீட்டைத்
தாண்டி வராத
அவர்களின் கண்ணீர்
குரல்களை யாருமே
கேட்டதில்லைத்தான். ஆண்
அதிகாரம் பெண்கள்
தங்களின் மனத்தைத்
தானே ஒடுக்குக்
கொண்டு வாழ
மட்டுமே விட்டிருப்பதும் நம் இந்தியக் குடும்பங்களில்
நடந்த உண்மைகளாகும்.
ஒருமுறை எல்லோரும்
நாம் பார்த்த, அல்லது நம்
வீட்டில் வாழ்ந்த
அம்மாக்களை, பெரியம்மாக்களைப் பின்நோக்கிப் பார்த்தால், அவர்கள்
உடல் ரீதியில்
கொடுமைக்குட்படுத்தபடவில்லையென்றாலும் கருத்துரிமை
இல்லாமல் வாயொடுங்கிப்
போனவர்கள் நம்மிடையே
உலா வந்திருப்பார்கள்.
இதுவும் ஆணாதிக்கத்தின்
முகம்தான் ஆனால்
குடும்ப வழக்கமாக
பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.
இன்றளவும் அப்பாவை
மீறி எந்த
முடிவும் எடுக்க
முடியாத பெண்கள்
இருக்கவே செய்கிறார்கள்.
இத்தகைய குடும்ப
சூழலில் வளரும்
ஓர் ஆண்
எப்படிப் பெண்களை
அடக்கி ஆள
வேண்டும் எனத்
தன் அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்கிறான். அதுவே
பெண்ணாக இருந்தால்
எப்படி ஆண்களுக்கு
அடங்கி நடந்து
கொள்ள வேண்டும்
எனத் தன்
அம்மாவிடமிருந்து கற்றுக்
கொள்கிறார். இத்தகைய
கொடூரமான ஆணாதிக்கச்
சிந்தனை பாரம்பரியமாகக்
குடும்பங்களுக்குள்ளிருந்து விரிகிறது. அதன் நூலிழையில்
ஒரு எதிர்ப்புணர்வைக் காட்டும் முயற்சியே யுவராஜனின்
அல்ட்ரோமேன் ஆகும். எல்லாம் காலக்கட்டத்திற்கும் தேவையான ஒரு விழிப்புணர்வை
விதைத்துச் செல்கிறது
கதை. விரைவில்
வெளிவரவிருக்கும் சு.யுவராஜனின் சிறுகதை
தொகுப்பில் அல்ட்ரோமேன்
சிறுகதையை வாசிக்கலாம்.
Thanks: Puthiya Parvai
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment