தெருவோரம் இருந்த யூ வாங் கொய்த்தியோ கடையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அன்று விநோதமாகத் தெரிந்தன. கரண்டில் பட்டு செத்துக் கொண்டிருந்த ஈக்களின் சாவு சத்தமும் மனிதர்களின் கூச்சலும் கேட்டு கேட்டு சலித்த களைப்பில் அமர்ந்திருந்தேன். வழக்கமாக வேலை முடிந்து வரும் வழியில் ஒரு கொய்த்தியோ சாப்பிடாமல் வீட்டுக்குப் போவதில்லை. ஓரளவிற்கு கொய்த்தியோ என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவு. ஒருநாள் சாப்பிடவில்லையென்றாலும் அன்றிரவு முழுவதும் கொய்த்தியோ நாசியைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கும்.
ஓர மேசை, கருவடைந்த மஞ்சள் தட்டு, கரண்டிகளின் சண்டையிடும் ஒலி, யூ வாங் நெருப்பில் வாட்டியெடுத்த கொய்த்தியோ, அன்றைய நாள் அத்தனை அற்புதமானதாக மாறும். யூலி தொழிற்சாலையில் 8 மணி நேரம் நின்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பும் விலகும். அவ்வப்போது ஐ.டி கார்ட்டைக் கழற்றுவதற்கு மறந்து கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்க அமர்ந்திருப்பேன்.
“ஓய்ய்ய்ய் தவுக்கே மனா கொய்த்தியோ?”
கேட்க விரும்பாத கொஞ்சமும் ஈரமில்லாத குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும் ஒருமுறை அப்படிக் கத்திப் பார்த்தேன். எனக்கே அருவருப்பாக இருந்தது. கொஞ்சமும் இலகுவாக இல்லை. கடினமான குரல். இயந்திரத்தின் சத்தம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர இந்தியர்கள் அங்கு வருவது கொஞ்சம் குறைவு. எப்பொழுதாவது சட்டென யாரையாவது பார்க்கலாம். வேண்டாதவனைப் போல என்னைப் பார்த்துவிட்டு போய்விடுவார்கள். தனியாக அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் என்ன ஆபத்தானவர்களா எனத் தோன்றும்.
ஆகையால், ஆட்களை வெறிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு சட்டியைத் தாண்டி திமிறிக் கொண்டிருக்கும் நெருப்பைக் கவனித்துக் கொண்டிருப்பேன். யூ வாங் இலாவகமாகச் சட்டியைத் தூக்கி உருட்டி கிண்டி நெருப்போடு விளையாடிவிட்டு அதை ஒரே அள்ளில் தட்டில் போடும்போது ஆச்சர்யமாக இருக்கும். அது ஒரு வித்தை. சோர்ந்துவிட்ட என்னிடமிருந்து எதையோ அள்ளுவதைப் போல இருக்கும்.
ஓர மேசையில் தனியாக அமர்ந்திருக்கும் என்னை யூ வாங்க்கு நன்றாகப் பழக்கம். நான் வந்ததும் என்னிடம் ஆர்டர் எடுக்க மாட்டார்கள். அடுத்த சில நிமிடங்களில் கொய்த்தியோ மேசைக்கு வந்துவிடும். பிறகு, ஒரு குவளை தே ஓ. வீட்டுக்குச் சென்றதும் எனக்கொரு அறை இருக்கிறது. எனக்கான அறை. அங்கு நான் அநாவசியமாக விளக்கைத் தட்ட மாட்டேன். தே ஓ-வை ஒரு ஜக்கில் வைத்துவிட்டு அவ்வப்போது அருந்துவேன். அதையும் மீறி அலுப்பு அளவுக்கு மேல் இருந்தால் உறக்கம் வராது. அப்பொழுது மட்டும் கொஞ்சம் நேரம் சிகரேட். வெறுப்பும் அசதியும் மனத்திலிருந்து உடல் வரை நீளும்.
அன்று இரண்டிற்கும் மேல் ஆங்காங்கே இந்தியக் குடும்பங்கள் வந்திருந்தனர். தமிழ் உரையாடல்களை அங்குக் கேட்கும்போது மனத்திற்கு இதமாக இருக்கும். யாரோ தோளில் கையைப் போட்டு தடவுவதைப் போல இருக்கும். ஆனால், என்னால் நிமிர்ந்து அவர்களைப் பார்த்து சிரிக்க முடியாது. தயக்கமாக இருக்கும். யாரும் தப்பியும் என் மேசையில் வந்து அமர்ந்த்தும் இல்லை. யூ வாங் கடையில் நிறைய மேசைகள் என்பதால் இடப்பிரச்சனை ஏற்படாது.
கீரை ஒன்று பல்லின் இடுக்கில் மாட்டிக் கொண்டு இம்சித்துக் கொண்டிருந்த கணத்தில் என் தோள்பட்டையைக் கீழே இழுத்து கன்னத்தில் யாரோ முத்தமிட நெருங்கியதைச் சட்டென உணர்ந்தேன். சட்டென எல்லாவற்றையும் மறந்து உடைந்தேன். அதற்குள் ஒரு சத்தம். ஒரு நடுத்தர அம்மா ஓடி வந்து நீலக் கவுன் அணீந்திருந்த தன் மகளை இழுத்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்குப் போனார்கள்.
“அவருக்கா முத்தம் கொடுக்கச் சொன்னோம்? அறிவிருக்கா உனக்கு? அங்கப் பின்னாலதானே முத்து அங்கள் இருக்காரு? உனக்கென்னா ஆளா தெரியல? பாருங்களே இவள….”
என் ஓர மேசைக்குப் பின்னால் பார்த்தேன். சிரித்துக் கொண்டே ஒரு தடிப்பான உருவம். சாவி கொடுத்த பொம்மை போல. மீண்டும் திரும்பி அந்த நீலக் கவுன் அணிந்திருந்த சிறுமியைத் தேடினேன். உடலில் இருந்த மெய்சிலிர்ப்பைத் தவிர்க்க முடியவில்லை. என் கன்னத்தில் குவிந்த அந்தச் சின்ன உதடுகளிலிருந்து பட்டும் படாமல் போன அந்த ஆக சிறிய முத்தம். அன்று இரவு அறைக்குச் சென்று ஓயாமல் அழுது கொண்டே இருந்தேன்.
- கே.பாலமுருகன்
1 comment:
அருமையான படைப்பு ஐயா.. சிறுகதை இனிமையான உணர்வு ♡
Post a Comment