Thursday, February 5, 2015

சிறுகதை: அவசரம்

“அவசரம் ஒன்னும் இல்லையே?” எனக் கேட்டுக்கொண்டே சொற்களால் இரம்பம் போடும் இவனிடம் மாட்டி 2 நிமிடங்கள் ஆகின்றன. சிறுநீர் முட்டிக்கொண்டிருந்த கணம். அலுவலகத்திலேயே சிறுநீரை அடக்குவதில் எனக்குத்தான் திறமை அதிகம். ஆனால், இப்பொழுது அந்த எல்லையைத் தாண்டி 5 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

சிறுநீரை அடக்குவதற்குத் தனியாக அறிவெல்லாம் தேவையில்லை. தம் கட்டுவதில் வல்லுனராக இருக்க வேண்டும். அவசரத்தை முகத்தில் பளிச்சென்று காட்டக்கூடாது. வழிந்து வரவழைத்துக் கொள்ள எப்பொழுதும் ஒரு பொய்யான நிதானம் தேவை. முட்டிக்கொண்டு வந்தாலும் கழிப்பறைக்குச் செல்ல முடிவெடுத்த பிறகு ஓடக்கூடாது. ஏதோ சாதாரணமாக எழுந்து நிதானமாக நடக்க வேண்டும். நீர் அருந்துவதில் கூடுதலான கஞ்சத்தனம் செய்தாக வேண்டும். அடுத்ததாகக் கழிப்பறைக்குப் பலமுறை எழுந்து சென்றுவிட்டு வருபவரைப் பார்த்துச் சிரிக்கவே கூடாது. அடுத்து நமக்கு அது நேரிடலாம்.

 “நீங்களே சொல்லுங்களேன் ப்ரோ…”

எனக்கு முன் நின்று கொண்டிருந்த அவன் தொடர்ந்து புகார்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஏற்பாடு மட்டுமே. நான் கேட்கிறேனா என்பதில்கூட அவனுக்கு அக்கறை இல்லை. என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்ற திட்டமும் அவனிடம் இல்லை. இதே நேரத்தில் வேறு யார் அவன் கண்ணில் பட்டிருந்தாலும் அவன் இதே போலத்தான் பேசியிருப்பான். டைக் கட்டிக்கொண்டு ஒரு கண்ணாடி போட்டிருந்தால் உலகத்திலேயே அவன் மட்டும்தான் புகார்களைப் பெறத் தகுதியானவனைப் போல எல்லாம் பொதுபுத்திகளும் நம்புகின்றன.

“ரெண்டாவது கல்யாணம் தப்பா? சொல்லுங்க ப்ரோ? நான் என்னா வச்சிக்கிட்டேவா இன்னொன்னு தேடிக்கிட்டேன்? யேன் இவுங்களாம் இப்படி இருக்காங்க?”

“ஐயோ! எதுமே தப்பில்லை. போதுமா? அப்பறம் பேசுறேன்”

“என்னா ப்ரோ? இப்படிப் பேசுறீங்க? நான் என்னா தப்பு பண்ணேன் சொல்லுங்க?”

“நீங்க எந்தத் தப்பும் பண்ணலை ப்ரோ. இப்ப நான் உடனே போகலைனா, அப்புறம் உண்மைலே இங்கத் தப்பாயிடும்”

அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு விட்டால் போதுமென அவனிடமிருந்து விடைப்பெற்றேன். அவன் முன்னே கொஞ்சம் நேரம் யாராவது நிற்க வேண்டும். அதற்கு நான் ஆளில்லை என்று தப்பித்தேன். இன்னுமொரு 30 அடியில் கழிப்பறை. உடனே அடக்கிக் கொண்டிருந்த சிறுநீரை வெளியேற்ற வேண்டும். வழக்கமாக குளிரூட்டி அறையில் 10 மணி நேரம் வேலை செய்பவர்களின் அவதியும் அவசரமும் வெளியில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அதுவும் மழைக்காலம் என்றால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லும் அவதியும் அலுப்பும் சொல்ல முடியாதவை. வெய்யில் படாத வாழ்க்கை. எப்பொழுதும் சில்லென்ற உடல். ஏறக்குறைய தோல் மறுத்துப் போய்விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் என்னவோ 'சூடு சுரணை இல்லாமல் தோல் தடிச்சிப் போச்சி' என எங்களைப் போன்றவர்கள் சிலர் திட்டித் தீர்க்கின்றனர்.


அடிக்கடி கழிப்பறை போனால் சகப் பணியாளர்கள் கிண்டலாகப் பார்ப்பார்கள் என்பதற்காகவே அடுத்து வரும் அவசரத்தைக் கொஞ்சம் அடக்கித் தாமதப்படுத்துவதில் என்னைப் போல பலருக்கும் நல்ல பயிற்சி இருந்தது. இருப்பினும் சிறுநீரை அடக்குவது அசௌகரிகமானது. உடனே அந்த அசௌகரிகத்தை ஒரு புன்னகையின் மூலம் மறைக்க முடியும். ஆனாலும், சிறுநீரை அடக்குவதன் மூலம் அருகில் இருப்பவர்களின் மீது எரிச்சல் உண்டாகும். அவர்கள் கேட்கும் கேள்விகளின் மீது கொலைவெறி வந்து நிற்கும். அடுத்த வேலையில் மனம் இலயிக்காது. எப்பொழுதும் கழிப்பறையை நோக்கியே எண்ணங்கள் குவிந்துவிடும்.

பெரிய கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தேன். கழிப்பறை மூடப்பட்டு வாசலில் மஞ்சள் நெகிழிக் கயிறு கட்டப்பட்டிருந்தது. “under construction’ என எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததும் எரிச்சல் உடல் முழுவதும் பரவியது.

“அடப்பாவிங்களா. இந்த நேரத்துலயா?” என முனகிக் கொண்டே படியில் இறங்கி அடுத்த மாடிக்கு ஓடினேன். வயிறு இலேசாக உப்பியிருக்க வேகமாக ஓடக்கூட முடியவில்லை. இன்றே முடித்துக்கொடுக்க வேண்டிய வேலைகள் தேங்கி இருந்ததால் சிறுநீரை வழக்கம் போலவே அடக்க முயன்றும் அதன் உச்சப்பட்ச தொல்லை தாங்காமல் வெளியே வந்துவிட்டேன்.

மழை விட்டப்பாடில்லை. இன்று அடித்து விலாசியது. கீழே இறங்கி அடுத்த தளத்திலுள்ள கழிப்பறைக்கு விரைந்தேன். அது கார்கள் விற்பனைப்பகுதி. ஆள் நடமாட்டம் கொஞம் அதிகமாகவே இருந்தது. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் வந்து விலையுயர்ந்த கார்களை ஏக்கத்துடன் பார்த்துவிட்டும், கணக்கிட்டு பிறகு சோர்ந்த முகத்துடனும் வெளியேறுவதையே நிறைய பார்த்திருக்கிறேன். அவர்கள் ஏதோ அவசரத்தில் சிக்கியிருக்கிறார்கள். நகரங்களில் பெரும் குழப்பங்களுடன் வாழ்பவர்கள் அவர்களே.

அவசரம் அவசரமாக வந்து நிதானமாக வெளியேறுபவர்கள் ஏராளம். ஒரு மிக விலைக் குறைவான காரைக்கூட வந்து தடவிப்பார்த்துச் சிறிது நேரம் மகிழ்ந்துவிட்டு மனத்தில் கிடக்கும் கற்பனையான மகிழுந்துடன் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். ஒரு கார் வாங்கி அதனை ஓட்டுவது என்பது சமூகத்தில் கௌரவம் சார்ந்ததாக மாறியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரன் கொஞ்சம் விலையான கார் வாங்கிவிட்டால் அத்துடன் அவனுக்கு அடுத்த வீட்டில் வசிப்பவனின் வாழ்க்கை பெரும் சிக்கலாகிவிடுகிறது. தான் இந்தச் சமூகத்தில் ஒரு பொதுவான வாழ்க்கையை வாழவில்லை என்கிற குற்ற உணர்ச்சிக்குள் தள்ளப்படுகிறான். தன் சக்திக்கு மிஞ்சிய ஒன்றைத் தேடி அப்பொழுதுதிலிருந்தே ஓட ஆரம்பிக்கின்றான். அப்படி அவசரத்துடன் ஓடி வந்து எங்களைப் பார்ப்பவர்களின் மீது ஆகக் கடைசியாகப் பரிதாபம் மட்டுமே மிஞ்சும்.

வாழ்நாள் முழுக்க ஒரு கார் வாங்க வேண்டும் என மோட்டாரிலேயே சுற்றி மோட்டாரிலேயே வேலைக்குப் போய் அந்த மோட்டாரினாலேயே விபத்துக்குள்ளாகி இறந்துபோன முனியாண்டி அண்ணன்தான் அடிக்கடி ஞாபகத்திற்கு வருவார். இங்கே நிறைய முனியாண்டிகளை நான் பார்த்திருக்கிறேன்.

“டேய் மச்சான்!” ஹென்ரி கூச்சலிட்டப்படியே அருகில் வந்தான். பால்ய நண்பன். இப்பொழுது சொந்தமாகக் கைத்தொலைபேசி விற்பனைக் கடை வைத்திருக்கிறான். அவன் அழைப்பை முதலில் நான் கண்டுக்கொள்ளாததைப் போலவே முன்னே நகர்ந்தேன். வந்து முதுகில் படாரென வைத்தான். சிறுநீரகப் பை அநேகமாக அதிர்ந்து நடுங்கியிருக்கலாம். உடலிலேயே இப்பொழுது அதிகப்படிக்கு அழுத்தத்தில் இருப்பது அதுதான்.

“என்னடா நீ இருக்னேன்னுதானே இங்க காடி வாங்க வந்திருக்கேன்…தெரியாத மாதிரி போற?”

“இருடா மச்சான்….அவசரம்”

“டேய்ய் கொஞ்சம் இருடா. நானும் சாப்பாடு நேரத்துக்குத்தான் இப்படி இறங்கிருக்கேன். இப்ப புதுசா வந்த ப்ரோடுவா காடியே ட்ரேட் இன் பண்ணி வாங்க முடியுமா?”

“முடியும்டா. எந்தக் காடியையும் அப்படி வாங்கலாம் மச்சான். இருடா வர்றேன்”

“டேய்ய்…எனக்கு கொஞ்சம் லோன்ல பிரச்சன இருக்குடா”

“எந்தப் பெரச்சனையா இருந்தாலும் நான் பாத்துக்கறண்டா. இப்ப ஆள விடு”

அவன் ஏதோ முனகும் சத்தம் கேட்டது. அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் கழிப்பறைக்கு ஓடினேன். ஒரு மூட்டை நீரை வயிற்றில் கட்டி சுமந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. உடனடியாக அதனை வெளியேற்றுவதைவிட உலகத்தில் அப்போதைக்கு எனக்கு வேறு முக்கியமான வேலை இல்லை என்றே தோன்றியது.

நான் அந்தத் தளத்திலுள்ள பெரியக் கதவைத் திறப்பதற்கு முன்பாகவே அலுவலகப் பெண் கமலா பின்னாடி ஓடி வருவது தெரிந்தது.'

“சார்…மேனஜர் உடனே வரச் சொன்னாரு. லோன் அப்லிகேஷன் பெண்டிங் பற்றி பேசணுமாம்”

“ஆங்ங்ங் வர்றேன் வர்றேன். கொஞ்சம் நேரம் பிளிஸ்”

ஆர்வத்துடன் பெரிய கதவைத் திறந்தேன். அங்கேயும் ‘under construction’ என்றே போட்டிருந்ததைப் பார்த்ததும் ஒரு கணம் உடல் மொத்தமாகக் குலுங்கியது.

“சார் நீங்க ஆகக் கீழ உள்ள டாய்லேத்தான் போக முடியும்” எனச் சொல்லி மெல்ல புன்னகைத்தாள்.

இன்னும் ஒரு தளம் கீழே போக வேண்டும். முன்பு மாதிரி இயல்பாக நடக்க முடியவில்லை. சிறுநீரகப் பை நிறைந்து வெடித்துவிடத் தயாராக இருந்தது. எஸ்க்லேய்ட்டரில் போய் மெதுவாக நின்றேன். கொஞ்சம் கூடுதலான அசைவும் ஆபத்து நிரம்பியது. கவனமாக மூச்சை இழுத்துவிட்டேன். மனம் பதற்றமாக இருந்தது.

“சார்…வாங்க வாங்க” கீழே இறங்குவதற்கு முன்பே முருகேசனின் மகன் முகமெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்தான். கடந்த 6 மாதமாக வந்து வந்து போகிறான். ஆனால், இன்னமும் ஒரு கார் கூட வாங்கவில்லை.

“சார்…மைவி எடுக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன். என்ன சொல்றீங்க?”

“நான் என்னத்த சொல்ல? தாராளமா வாங்குங்க. கொஞ்சம் இருங்க வந்துர்றேன்”

“சார்…ஆனா, ஏற்கனவே 65% சம்பளத்துல வெட்டு இருக்கே, அதான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு…”
“சரி இருங்க வர்றேன்…அவசரமா போறேன்”

“உங்கள நம்பித்தான் சார் முடிவு பண்ணேன். காடி இல்லாம கஸ்ட்டமா இருக்கு. எனக்கும் அவசரம்தான் சார்”

“ஐயோ! சரிங்க. கொஞ்சம் நில்லுங்க”

“எங்க சார் பாத்ரூமுக்கா?”

அதற்கு மேல் அவனிடம் பேச உடலில் நிதானம் இல்லை. ஓடவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் ஒரு வழியாக கீழ்த்தளத்தில் இருந்த கழிப்பறையை அடைந்தேன். பயன்பாட்டில் இருந்தது. ஒரு மிகப்பெரிய விடுதலைக்கு உடல் தயாரானது. மனம் இலேசாகத் துவங்கியது. உள்ளே நுழைந்தேன்.

அடக்கி வைத்திருந்த சிறுநீர் வெளியேற வெளியேற உடலும் மனமும் இதமானது. அமைதியானது. முடித்துவிட்டு வெளியே வந்தேன். சற்றுமுன் பார்த்த முருகேசன் மகன் வெளியில் காத்திருந்தான்.

“ஆங்ங் சார் வந்துட்டீங்களா? கொஞ்சம் உதவி பண்ணுங்களேன். எனக்கு உடனே கார் வேணும். சின்ன காரா இருந்தாலும் ஓகேதான். மைவிகூட வேண்டாம். அவசரம்…பிளிஸ்…”

எனச் சொல்லிக்கொண்டே உடன் நடந்தான்.

-    கே.பாலமுருகன்

No comments: