Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- திரைவிமர்சனம்

அஜித் சமீபமாக சினிமா கொண்டாட்டங்களை, சினிமா சார்ந்து கிடைக்கும் புகழ்களை, ஆர்ப்பாட்டங்களை விரும்பாத நடிகராகவே உலா வருகிறார். தன்னுடைய அனைத்து இரசிகர் மன்றங்களையும் களைக்கும்படி தைரியமாகச் சொன்னவர். சினிமா உலகம் அதுவும் கதாநாயகர்களின் கொண்டாட்டங்களை முன்னிறுத்தும் தமிழ்ச்சினிமாவில் இத்தகையதொரு முடிவை எடுப்பதற்கு ஓர் எளிமையான மனம் வேண்டும்.

அஜித் அவர்களை விஜய் இரசிகர்களின் மனநிலையிலிருந்து பார்ப்பதோ அல்லது விஜய்க்கு எதிரான மனநிலையிலிருந்து பார்ப்பதோ தவறாகும். நடிகர்கள் என்ன சினிமாவின் கடவுள்களா? அவர்கள் சினிமா தொழிலாளிகளே.

அதற்காக, அஜித் நடிக்கும் படங்களை அப்படியே போற்றிப்பாடவும் முடியாது. விமர்சனம் ஒட்டுமொத்த சினிமாவைக் குறித்து இல்லாவிட்டாலும் ‘என்னை அறிந்தால்’ கதையை விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. கௌதம் மேனனின் முந்தைய படங்களான காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்றவற்றின் தாக்கம் இப்படத்திலும் இருக்கின்றன.

வேட்டையாடு விளையாடு படத்திலும் கதாநாயகி ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருப்பவராக அறிமுகமாகிறார். கமல் அவரை மறுமணம் செய்து கொள்கிறார். அதே போல என்னை அறிந்தால் படத்திலும் கதாநாயகி த்ரிஷாவும் ஓர் அம்மாவாகத் தோன்றுகிறார். ஆனால், இதில் அஜித் த்ரிஷாவைத் திருமணம் செய்வதற்குள் கொலை செய்யப்படுகிறார். வேட்டையாடு விளையாடு படத்திலும் கமல் தன் மனைவியை இழப்பதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்படுகிறது. இப்படத்திலும் அதே போல பின்னோக்கு உத்தியில் மனைவியாக ஆகவிருந்த த்ரிஷாவின் மரணம் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. ஒன்று,  அஜித் த்ரிஷாவின் மகள் மீது காட்டும் அன்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. மாற்றனின் மகள் மீது காட்டும் அன்பைப் பெருந்தன்மை போன்ற அடையாளத்துடன் காட்டாமல் கதையோடு இயல்பாகப் பயணிக்க வைத்திருக்கிறார்கள். நான் வாழ்க்கை கொடுத்து தியாகம் செய்கிறேன் என்ற பாவனையெல்லாம் இப்படத்தில் வழிந்து காட்டப்படவில்லை. அடுத்து அஜித்துக்கும் அவரின் அப்பாவாக வரும் நாசருக்குமான புரிதல். நீ யாரென்று தெரிந்துகொள்ள பயணம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார். இது வாழ்க்கை குறித்த ஒரு மகத்தான புரிதல். உன்னை நீ அறிய நீதான் முற்பட வேண்டும். வேறு யாரும் உன்னை யாரென்று உன்னைவிட ஆழமாகச் சொல்லமாட்டார்கள். நாசர் வந்து போகும் காட்சிகள் அசலானவை.

திரைக்கதை

ஒரு திரைக்கதையின் வேலை என்ன? இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கதையின் மீது பற்பல சம்பவங்களையும் உட்சம்பவங்களையும் ஏற்றி கதையைப் படம் முழுக்க நகர்த்திச் செல்வதுதான் திரைக்கதை என சுஜாதா தன் திரைக்கதை நூலில் சொல்கிறார். அதனை விறுவிறுப்பாகக் கொண்டு போக வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பம் சார்ந்தவை. ஒரு நல்ல கதை மக்களை அடைய அதன் திரைக்கதை அமைப்பு வேகமும் ஆழமும் கொண்டிருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். சில சமயங்களில் தொய்வான திரைக்கதை நல்ல கதையைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவதுண்டு. கதையில் எவ்வித சமரசமும் இல்லையென்றாலும் காலம் முழுவதும் பல இயக்குநர்கள் திரைக்கதையில் நிறைய சமரசம் செய்தே வருகிறார்கள். ஆனால், கௌதம் மேனன் அப்படிச் சமரசம் செய்பவராகத் தெரியவில்லை. கதையை நகர்த்த திரைக்கதையை மிகவும் இறுக்கமாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்;

வெகுஜன இரசிகர்களின் இரசனைக்குள் அடங்காமல் ‘என்னை அறிந்தால்’ படம் திணறுகிறது என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித் போன்ற மாஸ் கதாநாயகர் இப்படத்தில் கௌதம் மேனனுக்குரிய திரைக்கதையோடு பொருந்தி போவது அவருடைய உழைப்பைக் காட்டுவதோடு அவருக்கு வித்தியாசமான தோற்றத்தையும் இருப்பையும் கொடுக்கிறது. ஆனால், அஜித்தின் வழக்கமான இரசிகர்கள் ஏமாந்து போகிறார்கள். ஒரு நடிகனைத் தன் தொழிலைத் தன் விருப்பத்திற்கேற்ப செய்யவிடுவதே அஜித் இரசிகர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டியவை ஆகும். தங்களின் மாஸ் விருப்பங்களை அஜித் மீது திணிப்பதால் அவரும் வேறு வழியில்லாமல் குண்டு சட்டியிலேயே குதிரையோட்டி குதிரையோட்டி இரஜினியைப் போல ஆக வேண்டிய நிலை உருவாகிவிடும். இன்றும் இரஜினி போன்ற நல்ல நடிகர் ஏன் சிறு வயது பெண்ணைக் காதலிப்பதைப் போல நடிக்கிறார்? வெகுஜன இரசனை அவர் மீது செய்த வன்முறையின் உச்சப்பட்சம் அது. காலம் முழுவதும் நான் என் இரசனையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றால் சினிமா எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளாது.


என்ன கதை?

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றிப்பெறுகிறார் என்பதைப் பொருத்தே உலகின் சமநிலை அடங்கியுள்ளது எனக் கௌதம் இப்படத்தின் ஊடாகச் சொல்ல முற்படுகிறார். ஆக, அஜித்தை நல்லவனாகவும் அருண் விஜயைக் கெட்டவனாகவும் எந்தப் பாராபட்சமுமின்றி கௌதம் வெள்ளிடை மழையாகக் காட்டியிருக்கிறார். ஒரு சாதாரண பார்வையாளனால்கூட எந்தக் குழப்பமும் இல்லாமல் நல்லவன் கெட்டவனின் விளையாட்டைக் கவனிக்க முடியும். இறுதியில் நல்லவன் எனச் சித்தரிக்கப்பட்டவனே வெற்றிப்பெற வேண்டும் என்கிற நியதிக்குள் படம் முடிவடைகிறது. கௌதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர் கதையை இன்னும் ஆழமாகச் சிந்தித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. யாராலும் சட்டென்று சொல்ல முடிந்த ஒரு திரைக்கதை, பார்வையாளனுக்குச் சவாலாக இல்லை. இப்படத்தின் இணை இயக்குனராக வேலை செய்த தேசிய விருதைப் பெற்ற ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனரான தியாகராஜா குமாராஜா போன்றவரின் பங்களிப்பு என்னவென்று கேள்விக்குள்ளாக்குகிறது என்னை அறிந்தால் படத்தின் திரைக்கதை.

யதார்த்தம் என்பது தொய்வை உண்டாக்கும் வகையில்தான் காட்டப்பட வேண்டுமா என்பதில் பொதுவாகவே எல்லோருக்கும் கேள்வி இருக்கும். தொய்வு என்பதை எப்படி வரையறுக்கிறோம்? ஒவ்வொரு காட்சிகளும் slow – ஆக நகர்ந்தாலோ, அல்லது உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றாலோ தொய்வு என்கிறோமா? அப்படியென்றால் இடையில் ஒரு சந்தானம் நகைச்சுவை, 10 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு குத்தாட்டம் எனச் சேர்த்துக்கொண்டால் அந்தத் தொய்வு இல்லாமல் போகுமோ? அப்படியென்றால் ஒரு பார்வையாளன் இந்தக் காட்சிக்கு அலுப்பாகிவிடுவான் என முன்கூட்டியே கணிப்பவர்கள்தான் அதனைச் சரிக்கட்ட அடுத்த கட்டத்தில் விருவிருப்பான காட்சிகளைச் சேர்க்கிறார்கள். இதையே வணிக சமரசம் எனச் சொல்லலாம். தான் நிர்ணயம் செய்யும் காட்சிகளுக்கு முன் கௌதம் என்றுமே சமரசம் செய்து கொள்வதில்லை. அதே சமயம் அவரைச் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்றும் சொல்வதற்கில்லை. திரைக்கதை சார்ந்து இப்படி மாறுபட்ட சிந்தனைகள் உள்ளன.

ஆகவே, கௌதம் மேனனின் இப்படம் தனது கடந்த காலப் படங்களின் சாயல்களில் அமைக்கப்பட்டிருப்பதையே படத்தின் பலவீனம் என்று சொல்ல வேண்டும். மற்றப்படி அவருடைய திரைக்கதை அமைப்பில் ஒரு வெகுஜன பார்வையாளனுக்குரிய வேகம் இல்லாததை ஒரு குறையென சொல்வதற்கில்லை. கதையோட்டத்திற்கு அதுதான் தேவை என ஓர் இயக்குனர் அதனை முன்னெடுக்கிறார்.

தன் வயதுக்கு உகந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு இப்படத்தை அஜித் படமாக இல்லாமல் கௌதம் படமாகவே எடுக்கும்படி இயக்குனருக்குச் சுதந்திரம் வழங்கியதற்காக அஜித் என்கிற நடிகரைப் பாராட்டலாம். மாஸ் காட்சிகள் ஏதும் இல்லாமல் படத்தின் முதல் பாடலைக் கதாநாயகிக்கு வைப்பது கௌதம் அவர்களின் தனித்துவத்தைக் காட்டுகிறது. ஒரு சில காட்சிகளைத் தவிர அஜித் அவர்களை மேலும் அழுத்தமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். மையப்பாத்திரமான அவர் கதையில் அழுத்தமாக விழாமல் விலகி இருப்பதைப் போன்றே தோன்றியது.

அருண் விஜய் தனக்கான பாத்திரத்தில் சரியாகப் பொருந்த முடியாமல் இருக்கிறார். இருப்பினும் அவருக்கு இப்படம் ஒரு மிகப்பெரிய திறப்பே. என்னத்தான் வில்லன் என்றாலும் ஏதோ கல்லூரி பையன் போலவே கதைக்குள் உலா வருகிறார். ஒருவேளை அஜித்தின் நண்பனாக ஒரு கதாபாத்திரம் செய்திருந்தால் மேலும் பேசப்பட்டிருப்பார் என நினைக்கிறேன்.

த்ரிஷா, இதுவரை அவர் நடித்த எந்தப் படமும் அவரை இதுபோல அழகாகக் காட்டியதே இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம். அவருடைய அறிமுகமே பிரசவத்திற்காக மருத்துவமனை போகும் காட்சியாக இருக்கிறது. படம் முழுக்க தன்னளவில் வியாபித்துள்ளார். எளிமையான நடிப்பு. எங்கும் பதற்றப்படாத முதிர்ச்சியான வெளிப்பாடு. த்ரிஷா தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தை இப்படத்தில் உருவாக்கியுள்ளார். கொஞ்சம் காட்சிகள் வந்தாலும் மனத்தில் இடம் பிடிக்கிறார்.

அஜித் காட்சி அளவில் அஜித் இரசிகர்களை ஏமாற்றியிருந்தாலும் ஹரிஷ் ஜெயராஜ் அதனைத் தக்க வைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். பின்னணி இசை மிரட்டுகிறது. சில காட்சிகளின் மீது படரும் தொய்வை இசையின் மூலம் சரிக்கட்டுகிறார். நல்ல முயற்சி ஆகும். அவருக்கே உரிய இசை.

படத்தில் அருண் விஜய் தவிர வேறு வில்லன்களே சொல்லத்தக்க வகையில் புத்திசாலியாகவும் மிரட்டலாகவும் இல்லாதது ஆச்சர்யம்தான். ஏன் நிறைய வில்லன்கள்தான் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. இது வழக்கமான தமிழ் சினிமா கொடுத்த மனப்பான்மையாக இருக்கலாம். இருந்தாலும் என்னால் திரைக்கதையை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிகிறது என்றால் அதன் ஆழம் போதவில்லை என்றே படுகிறது.


-    கே.பாலமுருகன்

No comments: