காலச்சுவட்டின் வெளியீட்டில் எம்.எஸ் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனைகள்’ மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அர்ஜெண்டானாவில் பிறந்த ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் கதைகள் ஆங்கீலம், போர்த்துகீஸ், ஜெர்மன், வியட்நாமீஸ், பிரெஞ்சு, இத்தாலி, பின்னிஷ், போலிஷ் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு மிகத் தீவிரமாகவும் உரையாடப்பட்டிருக்கின்றன.
தன்னுடைய கதைகளை ஒரு அதீதமான கற்பனைக்குள் புனையப்படும் உண்மையையே ஆதாரமாகக் கொண்டிருப்பதாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டதாக ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ குறிப்பிடுகிறார். இந்தக் கதை தொகுதியைப் படித்து முடிக்கும்போது என்னாலும் அவர் உலகத்திற்குள் அவர் புனைந்திருக்கும் படிமங்களினூடாகவே பயணிக்க முடிகிறது. கதை என்பதோ கலை என்பதோ மேட்டிமைவாத குறிக்கோள்களுடன் அணுகக்கூடியதாக இருத்தல் கூடாது. அது கலைக்கான புரிதலைச் சாத்தியப்படுத்தாது. கலை என்பது பாராபட்சமின்றி மனித குலத்திற்கே உரியது. அது பேசும் உலகை வைத்தே அதன் தீவிரத்தையும் ஆழத்தையும் நம்மால் மதிப்பிட முடியும்.
ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் இந்தத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையான ‘அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ முதல் வாசிப்பில் பெருமளவு சமூக உறவு குறித்தான அதிர்ச்சியையே அளித்தது. அதனைத் தாண்டி கதை கொண்டிருக்கும் வாதங்களுக்குள் நுழைய வேண்டி இருந்தது. கதையின் மேல்தட்டிலேயே ஒருவன் தங்கிவிட முடியும். ஆனால், அது கதையின் ஆழத்திற்குள் நம்மை கொண்டு போகாது. பூங்கா ஒன்றில் பத்திரிகை படிக்கச் செல்லும் ஒருவன் திடீரென தன் தலையில் யாரோ குடையால் அடிப்பதை உணர்கிறான். வலியை உண்டாக்காத அதே சமயம் எந்தவகையிலுமே ஆபத்தில்லாத அடி அது. அவனுடைய குடையால் தொடர்ந்து கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான். ஆத்திரம் அடைந்த கதைச்சொல்லி அவனை ஓங்கிக் குத்துகிறான். மூக்கில் இரத்தம் வடிய பலவீனத்துடன் எழுந்து மீண்டும் அவன் தலையில் குடையால் அடிக்கத் துவங்குகிறான். காலம் காலமாக அதே வேலையைச் செய்து செய்து சலித்துப் போனவனின் பாவனையில் அவன் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்கக் கதைச்சொல்லி அங்கிருந்து ஓடுகிறான். ஆனால், அந்தக் குடையால் அடிப்பவன் கதைச்சொல்லியைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் பேருந்தில் ஏறி எல்லோரும் கேலியாகச் சிரிக்க எந்த உணர்ச்சியுமில்லாமல் கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான்.
இப்படியாக ஐந்து வருடங்கள் கதைச்சொல்லியை அவன் குடையால் தலையில் அடித்து அடித்து, அது ஒரு வழக்கமான விசயமாக மாறுகிறது. அந்தக் குடை அடி இல்லாமல் தன்னால் உறங்க முடியாது என்கிற நிலைக்குக் கதைச்சொல்லி வந்துவிடுகிறான், மேலும் இனி தனக்கு இருக்கும் ஒரே பயம் ஒருவேளை தன்னைக் குடையால் அடித்துக் கொண்டிருப்பவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இனி மிச்ச நாட்களை இந்தக் குடையால் அடிக்கப்படாமல் எப்படி வாழப்போகிறேன் என்கிற சந்தேகங்களுடன் கதை முடிகிறது.
அதெப்படி ஒருவன் சாப்பிடாமல் உறங்காமல் இன்னொருவனைக் குடையால் அடித்துக் கொண்டே இருக்க முடியும் என்கிற லாஜிக்கையெல்லாம் தாண்டித்தான் கதை சமூக உறவு குறித்த ஓர் ஆழமான புரிதலைக் கொண்டிருக்கிருப்பதாக நினைக்கிறேன். அந்தக் குடையால் அடித்துக் கொண்டே இருப்பவன் யார்? என்பதுதான் கதைக்குள் படிமமாக வந்து நிற்கிறது. கதையின் அஸ்த்திவாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதும் அவன் தான். முதலில் வெறுப்பும் இம்சையும் தொற்றிக்கொள்ளும் கதைச்சொல்லிக்குப் பின்னாளில் குடையால் அடிப்பவனின் இருப்பும் அடியும் பழகிவிடுகிறது. கதைச்சொல்லி அவனை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்கிறான். அவனுடைய குடையால் அடிக்கும் நடவடிக்கை அவன் வாழ்நாளில் எந்த அறுவறுப்புமின்றி இம்சையுமின்றி தொடர்கிறது.
1970களில் அர்ஜெண்டினாவில் பொதுமக்கள் சந்தித்த சமூக ஒடுக்குமுறைகள் என்பது மிகவும் கொடூரமானதாகும். ஏறக்குறைய 1976 தொடங்கி 1982 வரையிலும் 30,000க்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராகப் பேசியதால்
காணாமல் போயினர். அவ்வருடத்தில் வீதிகளில் நடமாடிக்கொண்டிருந்த 11,000 பேர் திடீரென்று கடத்தப்பட்டு அதன் பிறகு மீண்டும் வந்ததே இல்லை. ஒரே வருடத்தில் 5000 பெண்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டுப் பாலியல் கொடுமைக்கு ஆளாகினர். இது அர்ஜெண்டினாவின் இரத்த வரலாறு. பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றன. (De-Brainwashing, Cleansing the minds of the brainwashed).
ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ இந்தச் சமூக உருவாக்கத்தின் ஊடாக வளர்ந்து வந்தவர். இருட்டாகிப் போன ஒரு சமூகத்தின் காலி இடத்திற்குள்ளிருந்து, அந்த நகர் கொடுத்த மௌனங்களிலிருந்து அவர் இக்கதையைப் புனைந்திருக்கலாம் என்பதாகவே நான் உணர்கிறேன். பதிலளிக்க முடியாத, ஆறுதல் உரைக்க முடியாத ஒரு இல்லாமைக்கு முன் ஒரு வன்முறைக்கு முன் மனித மனம் எத்தகைய அரூபமான ஒரு செயல்பாட்டுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்கிறது என்கிற ஓர் ஆழ்ந்த உளவியல் உரையாடலே இக்கதை.
தன்னை ஒருவன் குடையால் அடித்துக் கொண்டே இருக்கிறான். நகரில் எல்லோருக்கும் அது கேலியாக இருக்கின்றது. எவ்வளவு விரட்டியும் எவ்வளவு அடித்தும், வலியை உணர முடிந்தாலும், பலவீனமாக இருந்தாலும் அவன் எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல், நிபந்தனையுமில்லாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நிதானமான கதைச்சொல்லியைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். சட்டென நம் அறிவுக்கு எட்டாத ஒரு செயல்பாடு அது.
அரசு ஓர் இயந்திரம். எந்த உணர்ச்சியுமின்றி அடித்தட்டு மக்களைச் சுரண்டிக் கொண்டே, அழுத்திக் கொண்டே அழித்துக் கொண்டே இருக்கும். முதலில் அது வன்முறையாக வெடிக்கும். பின்னர், அது ஒரு குற்றமாக அங்கலாய்க்கப்படும். பிறகொரு சமயத்தில் அதற்கெதிராகக் குரல்கள் ஓங்கும். பின்னர், அது ஒரு வழக்கமான அடிமைப்படுத்துபவனுக்கும் அடிமைக்கும் நிகழும் அன்றாடங்களாக மாறி நிற்கும். அவ்விடம் சமூகத்தின் மிகவும் சாமர்த்தியமான நகர்தல். அடிமையையும் அடிமைப்படுத்துபவனையும் எவ்வித ஆர்பரிக்கும் பார்வையுமின்றி அதன் மேல் ஒரு வாடிக்கையான சட்டகத்தைப் பொருத்தும் அபாயமான முறைமை. சமூகப் பொதுபுத்தியை மொண்ணையாக்கும் வழி. முதன் முறை ஒரு முதியவர் சாலையில் அடிக்கப்படுவதைப் பார்க்கும் பொதுமக்கள் கொதித்துப் போவார்கள். பின்னர் அது ஒரு வன்முறை செயலென விமர்சிக்கப்படும். பிறகு மீண்டும் ஒரு முதியவர் சாலையில் வைத்து அடிக்கப்படும்போது, அதைக் கண்டிக்க ஒரு சாரார் குரல் எழுப்புவார்கள். சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்கள். பின்னர் அந்த எதிர்ப்பாளர்கள் ஒரு குழுவாக மாறி சாலையில் வைத்து அடிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகப் பேசுவார்கள்; போராடுவார்கள். மீண்டும் முதியவர்கள் சாலையில் வைத்து அடிக்கப்படுவார்கள். பிறகு அப்படிச் செய்யும் அதிகாரங்களுக்கு எதிராக அந்த எதிர்ப்புக்குழு வன்முறையை நடத்தும்.
இப்பொழுது எவ்வித சுயப்பிரக்ஞையுமின்றி பொதுமக்கள் இரண்டாகப் பிரிந்திருப்பார்கள். முதன் முதலில் ஒரு முதியவர் சாலையில் வைத்து அடிக்கப்பட்ட போது எல்லோருக்கும் பொதுவாக எழுந்த இரக்க மனம், கொதிப்பு, கோபம் இப்பொழுது குழுவயப்பட்டிருக்கும். ஒரு சிறிய குழு மட்டுமே சாலையில் வைத்து அடிக்கப்படும் முதியோர்களுக்கு எதிராகக் குரலெழுப்பிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் இதனைப் பழகிக் கொண்டு அவர்களின் அன்றாடங்களில் மூழ்கியிருப்பார்கள். பின்னொரு சமயம் ஒரு முதியவர் சாலையில் வைத்து அடிக்கப்படுவதைப் பார்க்கும்போது, ஒரு தலைப்புச் செய்தியை எவ்வித உணர்ச்சியுமின்றி படிக்கும் ஒரு சராசரி மனநிலைக்கு ஆளாகியிருப்பார்கள். மானசீகமாகப் பொதுமக்கள் தங்களுக்குப் பதிலாகப் போராடவும் பேசவும் ஒரு சிறிய குழு உருவாகியிருப்பதைக் கண்டு மனம் திருப்திக் கொண்டு ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், அதைவிட மிகவும் கொடூரமானது, அடிமைப்படுத்துபவனுக்கும் அடிமைக்கும் நடக்கும் உடன்படிக்கைத்தான். ஏனோ இக்கதையில் அந்தக் குடையால் அடிப்பவனை அடிமைப்படுத்துபவனாகவும் குடையில் அடி வாங்கிக் கொண்டிருப்பவனை அடிமையாகவும் பாவித்துப் பார்த்தால், தன் மீது நடத்தப்படும் அடிமைத்தனம் மிகவும் இலாவகமாக மாறுவதை அவன் உணர்ந்து அதனுடன் பழகி பின்னர் அஃது இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலைக்குள் வருகிறான். தன்னை அடிமைப்படுத்த ஒரு மேலானவன் வேண்டும் என்கிற ஓர் உணர்வு சாமர்த்தியமாக ஒரு சமூகத்திற்குள் நுழைக்கப்படுகிறது. இதனை சமூக உறவு குறித்தான புரிதலில் வைத்து அணுகினால்தான் நம்மாலும் உணர முடியும்.
நமக்கு தெரியாமலே நாம் உணராமலே யாரோ ஒருவன் நம் தலையில் குடையால் அடித்துக் கொண்டே இருக்கிறான். அது நமக்கு வலியைக் கொடுக்கவில்லை; அது நம்மை அதிகப்படிக்கு இம்சிக்கவும் இல்லை; நாளாடைவில் அது நமக்கு இதமாகவும் இருக்கிறது. அஃது ஒருவகையான அடிமைத்தனம் எனத் தெரியாமலேயே அதனை முழுவதுமாக விரும்பத் துவங்குகிறோம். அர்ஜெண்டினா நகரங்களில் ஆள் கடத்தல் என்பதும் 1976களில் இதே போன்ற சுரணையற்ற தொனியில்தான் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் திடீரென காணாமல் போவதைப் பற்றி எந்த உணர்ச்சியுமில்லாமல் பெருமளவிலான மக்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ தெரிந்தவர்களை அழைத்துப் போவதைப் போல பெண்களைக் கடத்திக் கொண்டுபோன சம்பவங்களுக்கு முன் அர்ஜெண்டினா பொதுபுத்தி சலனப்படவே இல்லை எனும் தகவல் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம்.
ஆனால், ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் ‘அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ எனும் கதையைப் படிக்கும்போது சமூகம் இருவகையான மனங்களைக் கொண்டிருப்பதை ஆழ உணர முடிகிறது. ஒரு வன்முறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக எழும் சமூகம், பின்னர் அதனை எப்படிப் பழகிக் கொண்டு இன்னொரு மனத்துடன் வாழத் துவங்குகிறது எனும் ஆக நிலையான யதார்த்தங்களைக் கதையாசிரியர் கதைக்குள் அப்படியே விட்டுச் செல்கிறார். அவர் தன்னைக் குடையால் அடித்துக்கொண்டிருப்பவனைப் பற்றி அதீதமான பிரக்ஞை கொள்ளவில்லை; அவன் மீது எவ்வித தத்துவார்த்தமான புரிதல்களையும் கதையில் சொல்லிக்கொள்ளவுமில்லை. எப்படி ஒரு சமூகம் தன்னை அடிமைப்படுத்துபவனின் மீது சட்டென இரக்கம் கொள்கிறது; எப்படி அவனை ஏற்றுக்கொள்கிறது என்பதையும், ஓர் அதிகாரம் எப்படிச் சாமர்த்தியாக சமூகப் பொதுபுத்தியை அடிமைப்படுத்தி சாதிக்கிறது என்பதையும் இருவேறு தளங்களில் இரண்டே கதாபாத்திரங்களின் வழி ஆழமாக உரையாடிச் செல்கிறது இக்கதை.
கதையைப் படிக்கும்போது ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்கள் விட்ட மௌனத்திலிருந்து நான் உரையாடினேன். இது மாறுப்படலாம். தொடரும்.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment