Monday, September 13, 2010

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும் : ஜெயமோகனுடன் கழிந்த விடுமுறையும் வெறுமையும்

நேற்று 12.09.2010(ஞாயிற்றுக்கிழமை) கோலாலம்பூரில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் இரு முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆகையால் முதல்நாள் இரவு சுங்கைப்பட்டாணியிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம். அதிகாலை 6மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சேர்ந்துவிட்டதால் மீண்டும் ஒரு பேருந்து எடுத்து புடு ராயா பக்கமாகச் சென்று அங்குக் குளித்துவிட்டுக் கிளம்புவதற்கு இடம் தேடினேன். 25 ரிங்கிட் கொடுத்து ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பதற்கும் குளிப்பதற்கும் இயன்றது. பச்சைபாலன் 9மணிப்போல அங்கு வந்து என்னை அழைத்துக் கொண்டார்.

சிறுகதை பட்டறை சரியாக 10மணி போல தொடங்கியது. ஜெயமோகன், பிரமானந்த சுவாமி, எழுத்தாளர் கோ.முனியாண்டி, கௌரி சர்வேசன், நயனம் ஆசிரியர் இராஜகுமாரன், பச்சைபாலன், கல்வி அதிகாரி மூர்த்தி, சேகரன், ஆறு.நாகப்பன், யுவராஜன், நவீன், மணிமொழி, தோழி, சந்துரு, சிவா பெரியண்ணன் போன்ற பல கோலாலம்பூரைச் சேர்ந்த படைப்பாளிகள் பட்டறையில் கலந்துகொண்டனர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறுகதை பட்டறை சங்கத்தின் பனிமனையில் நடத்தப்பட்டது.

ஜெயமோகன் சிறுகதை பட்டறையில் குறிப்பிட்ட சில விசயங்கள் குறிப்புகளாக(ஞாபகத்தில் உள்ள) தரப்படுகிறது:

1. மூன்று நாள் பட்டறையில் தரவேண்டிய சிறுகதை பற்றிய வழிக்காட்டுதல்களை இங்கு ஒரே நாளில் மூன்று பிரிவுகளாகத் தரவேண்டியுள்ளது.

2. சிறுகதை என்பது சிறிய கதை அல்ல. சிறுகதை என்பது சொல்லப்படக்கூடாது, காட்டப்பட வேண்டும்.

3. சிறுகதை என்பது அதன் முடிவை நோக்கி படைக்கப்பட்டதாக அமைக்கப்பட வேண்டும். சிறுகதையின் முடிவு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். வாசகர்கள் எதிர்ப்பார்த்திராத ஒரு முடிவை கதையின் முடிவில் புனைந்து, மீண்டும் சிறுகதை முடிவிலிருந்து தொடங்குவதாக அமைக்கப்பட வேண்டும்.

4. ஒரு சிறுகதையின் முடிவு திருப்பத்தைக் கொண்டிருக்காமல் அது ஒரு கவித்துவமான விவாதமாக அல்லது கவித்துவமான புள்ளியில் முடியலாம்.

5. முடிவிற்கு ஏற்புடைய வகையில் சிறுகதையின் உடல் அமைந்திருக்க வேண்டும். எ.கா, ஈட்டியின் கூர்முனைக்கு ஏற்ப உருவாக்கப்படும் ஈட்டியின் உடல் போல. சில சமயங்களில் அளவுக்கு அதிகமான விவரிப்புகள் கதையின் முடிவில் உருவாகும் தாக்கம்/பாதிப்பை வலுவிழக்கச் செய்துவிடும்.


6. சிறுகதைக்குள் ஒரு கதை ஒளித்து வைத்திருப்பது மேலும் சிறுகதையைக் கூர்மைப்படுத்தும். வாசகன் கதையின் முடிவில் அந்த ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு கதையைக் கண்டடையும்போது சிறுகதை இன்னொரு கதையை வாசகனுக்குள் உருவாக்கிவிட்டிருக்கும்.

7. தேவையில்லாத சொற்களைக் கதையிலிருந்து நீக்குவதன் மூலம் கதை சிறுகதையின் அளவீடுகளைத் தக்க வைத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத வாக்கியங்கள், சாதாரணமான வாக்கியங்கள், கதைக்கு அவசியமற்ற வாக்கியங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

8. உரையாடல் ரொம்பவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சாதரணமாக இருவர் உரையாடும் விதத்தைக் கதையில் அப்படியே பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உரையாடலைச் சிந்தித்து தேவையான அளவில் கச்சிதமாக அதன் முக்கியம் கருதி எழுத வேண்டும்.

9. சிறுகதைகளுக்குப் பக்க அளவில் வரையறை கொடுப்பது மிக மோசமான அபத்தம். ஆகையால் அதற்கு அளவு கிடையாது. வாசிப்பத்தில் ஏற்பட்ட சோம்பேறித்தனம்தான் கடுகு கதை, நொடி கதை என உருவாகிவிட்டது.

10. உலகின் பெரும்பாலான நல்ல சிறுகதைகள் “நான்” என்ற தன்னிலை கதைச் சொல்லலைத்தான் கையாண்டிருக்கின்றன. ஆகையால் கதைச் சொல்லியைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த “நான்” எந்தக் கதைப்பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதையும் யாரிடமிருந்து கதை சொல்லப்பட்டால் மேலும் வலுவான பாதிப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தும் எனவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

11. ஒரு உதாரணக் கதையைச் சொல்லி, அந்தச் சிறுகதை எங்கிருந்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதையும், எந்த இடத்தில் முடிப்பது, யார் கதைச் சொல்லி போன்ற கேள்விகளை எழுப்பி சிறுகதை குறித்து மேலும் விரிவாகப் பேசினார்.

12. பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்கிற கதையெல்லாம் எழுதப்பட முடியாது, அப்படி அடையாளப்படுத்தி எழுதுவது கதையைச் செய்வதற்குச் சமமாகும். நல்ல சிறுகதைகள் மனிதர்களைப் பற்றிய கதையாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் அந்தக் கதையை வாசித்துப் புரிந்துகொள்வதற்கான மதிப்பீட்டுக் கருவிகள் மட்டுமே.


கலை இலக்கிய விழா-2
இடம்: கோலாலம்பூர் சோமா அரங்கம்
மாலை மணி 6.30க்குத் தொடங்கியது.

ஓராண்டு ஓடி முடிந்தது பெரிய இடைவேளியை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் கலை இலக்கிய விழாவிற்கு சுவாமி பிரமானந்தவுடன் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர்களைப் பார்க்கும்போது நேற்றுதான் பார்த்து பேசிவிட்டு வந்ததைப் போல இருந்தது. சந்துரு, சிவா பெரியண்ணன், தோழி, யோகி, தினேசுவரி, வாணி ஜெயம், பச்சைபாலன், சிங்கை இளங்கோவன், ராஜகுமாரன், கோ.முனியாண்டி, டாக்டர் சண்முகசிவா, யுவராஜன், வல்லின ஆசிரியர் நவீன், அகிலன், தயாஜி, பொன் கோகிலம், மணிமொழி, கா.ஆறுமுகம், கல்வி அதிகாரிகள் மூர்த்தி, சேகரன், பெர்னாமா வினோத் குமார், சிதனா, மலாயாபல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் டாக்டர் குமரன், தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் திரு.பாஸ்கரன் போன்ற பெரிய கூட்டம் விழாவிற்கு வருகையளித்திருந்தனர்.

அன்றுதான் இசை விமர்சகரும் கவிஞருமான நண்பர் அகிலனுடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் 2007-இல் அவருடைய கவிதைகளைக் காதல் இதழில் வாசித்திருந்தேன். அதன் பிறகு அகிலன் எந்த இதழிலும் எழுதாமல் போயிருந்ததால், அவரைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்திந்திருந்தது. மீண்டும் அவர் வல்லினத்தில் எழுதத் தொடங்கியபோதுதான் வலைப்பூ மூலம் தொடர்பு ஏற்பட்டது. இன்செப்ஷன் படத்தின் இசை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அநங்கம் இதழ் ஒன்றையும் பெற்றுக் கொண்டார். மிகவும் எளிமையாக நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் நண்பர் அகிலன்.

கவிதாயினி தினேசுவரி கலை இலக்கிய விழாவின் அறிவிப்பாளராக நிகழ்வை நெறிப்படுத்தினார். வரவேற்புரையாற்றிய எழுத்தாளர் பச்சைபாலன் மலேசியாவில் இலக்கிய செயற்பாடுகளையும் வல்லினம் இதுவரை மலேசிய தற்கால இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைச் சொல்லி, வல்லினத்தை “மாற்று அணி” எனும் அடையாளத்துடன் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அநங்கம் மௌனம் போன்ற இலக்கிய சிற்றிதழ்களின் பங்கையும் அடையாளப்படுத்தி பேசினார்.

தலைமை உரை ஆற்றிய வல்லின இதழின் ஆலோசகர் டாக்டர் சண்முக சிவா அவர்கள், எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய அறச்சீற்றத்தைப் பற்றி கூறினார். இளம் எழுத்தாளர்கள் துணிச்சலாக கருத்தையும் எதிர்வினையையும் முன்வைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தொகுப்பாசிரியர் உரையில் நவீன் அவர்கள் வல்லினம் (மலேசியா – சிங்கப்பூர் 2010) இதழ் உருவான பின்னனியைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தற்கால இலக்கியம் குறித்த பிரக்ஞையும் பரிச்சயமும் இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு மலேசிய சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் தொகுப்பை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவருக்குள் உருவாகியிருந்த எண்ணம்தான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் அலிம், பினாங்கு துங்கு பைனுன், ராஜா மலேவார் போன்ற மேலும் சில ஆசிரியர் பயிற்றகத்திற்கும், மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம் போன்ற மேலும் சில கழகங்களுக்கும் இந்த வல்லினத்தின் தொகுப்பு நூல் இலவசமாகத் தரப்படவிருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து ஜெயமோகனை எழுத்தாளர் யுவராஜன் அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார். இதற்கு முன் கெடாவில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் ஜெயமோகன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. அதே போல ஒரு கல்லூரியில் ஜெயமோகனை ஒரு சினிமாக்காரர் என்கிற தோரணையில் ஒரு முக்கியமான நபர் பேசினார். ஜெயமோகனின் களம் சினிமா என்பது ஒரு மேலோட்டமான தட்டையான புரிதல் ஆகும். தவறான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் யுவராஜனும் சுவாமி பிரமானந்தாவும் மிகச் சுருக்கமான அதே சமயம் ஜெயமோகனின் படைப்புலகம் சார்ந்த அருமையான அறிமுகத்தை வழங்கினார்கள்.

தொடர்ந்து ஜெயமோகன் தமிழின் முக்கியமான நாவல் என்கிற தலைப்பில் உரையாடினார். பிரமிக்க வைத்த பிரமாண்டமான இலக்கிய உரை என இதைப் புரிந்துகொள்ளலாம். அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனை அவருடையது. ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி ஒரு நாவல் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிக்கிவிட்டிருக்க வேண்டும் எனக்கூறினார். ஒரு நாவல் என்பது தரிசனம், காலத்தின் தரிசனமாக இருக்க வேண்டும், மேலும் பொது புத்தியைச் சார்ந்ததாகவும் அந்தப் பொது புத்தி என்கிற ஒட்டு மொத்த பார்வையில் நுண்ணிய பார்வையும் இருக்க வேண்டும் எனக்கூறினார். ஒரு கண்ணில் யானையையும் மறு கண்ணில் எறும்பையும் பார்க்கின்ற ஆற்றல் நாவலாசிரியர்களுக்கு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் இந்த நிகழ்வில் நாவல்கள் குறித்து ஆற்றிய உரை ஜெயமோகன் வலைத்தலத்தில் இன்னும் சில நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் அவர் பேசியதின் முழுமையான பதிவும் இருக்கும். நாவல் வாசிப்பு என்பது ஒரு தவம் போல, முடிந்தவுடன் ஏற்படும் அமைதியும் வெறுமையும் தற்கொலை உணர்வுக்குக்கூட இட்டுச் செல்லும் என்கிறார் படைப்பாளர் ஜெயமோகன். அவரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு பேருந்தில் வீடு திரும்பும்போது ஜெயமோகனுடன் கழிந்த எனது விடுமுறையில் எங்கோ ஒரு தனிமையும் வெறுமையும் அப்பிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, September 10, 2010

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்-3: உள் முரண்களும் உலக அரசியலும்

குறிப்பு: இந்தத் தொடர் யாவும் ஜெயமோகனுடன் இருந்த எனது தருணங்களின் பதிவு மட்டுமே. மற்றபடி ஜெயமோகன் கூறிய விசயங்களின் தொகுப்பாகவோ அல்லது மேற்கோளாகவோ இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் பேசியதில் என் மீது படிந்த ஒரு சிறு தெறிப்பின் விளைவே இந்தத் தொடர்ப்பதிவுகள்.

மூன்றாவது நாள் ஏற்கனவே திட்டமிட்டப்படி சுவாமி பிரமனந்தாவும் ஜெயமோகனும் கடாரத்திற்குச் சோழர்கள் வந்ததற்கான அடையாளங்களின் சேகார மையம் எனச் சொல்லப்படும் பூஜாங் பள்ளதாக்கிற்கு வருவதாகக் கூறியிருந்தார்கள். நான் அவர்களை அங்கே போய் சந்திப்பதாக முந்தையநாள் இரவே திட்டமிட்டிருந்தோம். புறப்படுவதற்கு முன் என்னுடன் முடிந்த அளவில் பல நண்பர்களை அழைத்துச் செல்லலாம் எனத் தீர்மானித்திருந்தேன். ஜெயமோகனுடன் உரையாடுவதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க் ஒரு சிறு ஏற்பாடு. அதன்படி தலைமை ஆசிரியரும் வாசகருமான திரு.ரவி அவர்களையும் என்னுடன் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர் திரு.ஹென்ரி அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன்.

தலைமை ஆசிரியர் ரவி அவர்களுடன் பூஜாங் பள்ளத்தாக்கிற்கு கீழேயுள்ள சிறு நகரத்தில் இருக்கும் ஒரு சீனக் காப்பி கடையில் அமர்ந்துகொண்டோம். திரு.ரவி அவர்கள் தீவிரமான தமிழ் தேடல் உள்ளவர். வங்காளத் தேசத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நாவலைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நாவல் பிரதி ஆங்கில வடிவில் அவரிடம் இருப்பதாகவும் எனக்குப் படிப்பதற்குத் தருவதாகவும் கூறிக் கொண்டிருந்தார். சுவாமியும் ஜெயமோகனும் காலை மணி10.30 போல் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அனைவ்ருமாக முதலில் பூஜாங் அருங்காட்சியக மையத்திற்குள் சென்றோம். சோழர் காலத்தில் இங்குக் கிடைக்கப்பட்ட கற்கள், அவர்களின் வருகையைத் தெரிவிக்கும் தொல்லியல் பொருள்கள், சிலைகள், தடயங்கள் போன்றவை அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையிட்டார். பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றிய குறிப்புகள் தற்போதைய வரலாற்று பாடத்திட்டத்தில்கூட இடம்பெறாததை அவரிடம் கூறினேன்.

சிறிது நேரம் எல்லாம் பொருள்களையும் பார்வையிட்ட ஜெயமோகன் இது யாவும் சோழர் காலத்திற்குரிய தடயங்கள்/கலை அடையாளங்கள் கிடையாது எனவும் இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள் கிபி.1 அல்லது கி.மு 1 என்கிற நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளங்களாகக் குறிக்கப்படுகிறது எனக் கூறினார். பௌத்த மதத்தின் முக்கியமான குறியீடுகளான தாமரையும் யானையும் மீண்டும் மீண்டும் தொல்லியல் பொருள்களில் காணப்படுவதன் மூலம் இது பௌத்த காலக்கட்டம் உலகம் முழுவதும் பரவிய நூற்றாண்டைக் குறிப்பிடும் என அடையாளப்படுத்தினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் எந்தவித முழுமையான ஆய்வும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டார். வெளியே மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் Candi எனச் சொல்லக்கூடிய சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களின் கீழ் அடித்தளத்தை ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தோம். அதையும் பார்வையிட்ட ஜெயமோகன் இவையனைத்தும்கூட மிக மிகப் பழமையான பௌத்த கோவில்கள் கட்டப்பட்ட கோவில் கட்டிடங்களின் மிச்சங்கள் எனக் கூறினார். மேலும் தூண்களின் அடித்தளக் கற்களையும் அதன் நடுவில் இருக்கும் குழியையும் காட்டி இங்குத்தான் பௌத்த ஆலயங்களில் பயன்படுத்தப்படும் துபிகளை நடுவதற்கான இடம் எனக் குறிப்பிட்டார். மிகவும் ஆதாரப்பூர்வமான மறுப்புகளை நிகழ்த்திக் கொண்டே வந்து அங்குப் பதிக்கப்பட்டிருக்கும் வரலாற்றுக்கு முரணான கருத்தாக்கங்களையும் முன்வைத்தார். (பூஜாங் பள்ளத்தாக்குகளில் புதைந்து கிடக்கும் உண்மைகள் எனும் ஒரு தலைப்பில் ஜெயமோகனை விவாதிக்கச் செய்தால் உள்நாட்டில் நடந்திருக்கும் இருட்டடிப்புகளைக் கண்டுபிடித்துவிடலாம்.)

பிறகு அவ்வப்போது உலக அரசியலைத் தொட்டும் உலக அளவில் எளிய மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பல தளங்களில் வைத்து பேசிக் கொண்டே இருந்தார். அந்தச் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் இல்லத்திற்கு உணவருந்த சென்றோம்.

மாலை: பினாங்கு காந்தி மண்டபத்தில் “இந்திய ஞான மரபும் காந்தியும்” என்கிற தலைப்பில் உரையாற்றினார். ஜெயமோகனை அறிமுகப்படுத்தி பேசிய மூத்த இலக்கியவாதி திரு.ரெ.கார்த்திகேசு அவர்கள் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலைத் தொட்டுப் பேசி மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தி வைத்தார். சுவாமியின் வகுப்பிற்கு வாடிக்கையாக வரும் பலர் அந்தச் சொற்பொழிவிலும் கலந்துகொண்டனர். எழுத்தாளர் திருமதி பாவை, தேவராஜுலு போன்றவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காந்தி பற்றி குறிப்பிடுகையில் அவர் அஹிம்சை என்கிற கொள்கையை சமணப் பின்புலத்திலிருந்துதான் கற்றுக் கொள்கிறார் எனக் குறிப்பிட்டார். மேலும் காந்தியின் கூற்றுப்படி ஒவ்வொரு சமூகத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் எனவும் ஒரு சமூகம் சிவில் சமூகம் இன்னொரு சமூகம் அரசியல் சமூகம் எனவும் கூறினார். காந்தி முழுக்கப் போராடியது அரசியல் சமூகத்திற்கு எதிராக அல்ல, மாறாக சிவில் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் போராட்டங்களை முன்னெடுத்தார் எனக் கூறினார். அரசியல் சமூகம் என்பது மக்களைப் பிரதிநிதித்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் சமூகத்தையும் மாற்றியமைக்கலாம் எனக் கூறினார். தொடரும்

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, September 9, 2010

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும்

குறிப்பு: இந்தப் பதிவுகளில் ஜெயமோகன் குறிப்பிட்டதாகக் கூறப்படும் எல்லாமும் ஜெயமோகனுடன் ஏற்பட்ட உரையாடலின்போது என் மனதில் பதிவு செய்யப்பட்டது மட்டுமே. ஒளி/ஒலி நாடாக்களைப் பயன்படுத்த வாய்ப்புக் கிட்டவில்லை. ஆகையால் கருத்து பிழை ஏதேனும் நேர்ந்தால், அது என்னுடைய தவறாக இருக்கக்கூடும்.

இன்று காலையிலேயே பிரமானந்த ஆசிரமத்திற்கு நானும் கோ.புண்ணியவானும் சென்றுவிட்டோம். நவீன இலக்கிய சிந்தனைக்களம் அண்ணன் ஜெயமோகனைப் பினாங்கிற்கு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படியே ஆசிரமத்திலிருந்து சுவாமியின் வாகனத்தில் நான், புண்ணியவான், மணிஜெகதீசன், குமாரசாமி, ஜெயமோகன், சுவாமி மற்றும் தமிழ் மாறன் என மொத்தமாக 7 பேர் சென்றோம்.

ஜெயமோகன் இன்று கொஞ்சம் கூடுதலான உற்சாகத்துடன் காணப்பட்டார். காலையிலேயே எழுத்தாளர்களை முன்வைத்து சொல்லப்படும் பல நகைச்சுவைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். அப்பொழுதுதான் அண்ணன் மகிழ்ச்சியாகச் சிரித்ததைப் பார்த்தேன். இரண்டு பேர் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள். அப்பொழுது காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரையும் எழுப்பி மிரட்டியிருக்கிறார். மேலும் இருவரும் யார் என விசாரித்துள்ளார். ஒருவன் எழுந்து விழுந்துகிடக்கும் மற்றொருவனைக் காட்டி அவர்தான் பிரபல எழுத்தாளர் எனக் கூறியிருக்கிறான். பதிலுக்கு நீ யார் என காவல்துறை அதிகாரி கேட்க, “நான் அவருடைய தீவிர வாசகன்” எனக் கூறியிருக்கிறான்.

மேலும் நகைச்சுவைகளை அடுக்கிக் கொண்டே போனார் ஜெயமோகன். ஒருவன் தூக்கம் வருவதில்லை எனவும் அது ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் மருத்துவரிடம் சென்றிருக்கிறான். அந்த மருத்துவர் இலக்கிய நாட்டம் உள்ளவர், உடனே தூக்கம் வருவதற்கு மருந்து எழுதி கொடுத்திருக்கிறார். “பொன்னியின் செல்வன் காலையில் இரண்டு வேளை படிக்கவும், மாலையில் மூன்று வேளை படிக்கவும் என. ஜெயமோகன் ஒவ்வொரு நகைச்சுவையையும் சொல்லிவிட்ட பிறகு தன்னை மறந்து சிரித்தார்.

பினாங்கிலுள்ள தண்ணீர் மலை கோவிலைச் சென்றடைந்ததும், அந்தக் கோவிலைப் பற்றி கேட்டறிந்து கொண்டார். கோவில் புதுப்பிக்கப்பட்டு வருவதையும் மேலே புதிய கோவில் கட்டப்பட்டு வருவதையும் பார்த்தார். தண்ணீர் மலையின் படிக்கட்டுகளில் பேசிக் கொண்டே ஏறினோம். ஜெயமோகன் எப்பொழுதும் வித்தியாசமான அபாரமான தகவல்களையும் ஞானத்தையும் கொண்டுள்ளார். அவரால் உடனுக்குடனே எந்த விசயத்தையும் தொட்டு ஆழமாக உரையாட முடிகிறது.

முருக கடவுள் சங்க காலத்தில் ஒரு குறுநில சிறு தெய்வம் எனவும் சங்கம் மறுவிய காலக்கட்டத்தில்தான் அதாவது பக்தி காலக்கட்டத்தில் பெருந்தெய்வமாக வழிப்படப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். செட்டியார்கள் புலம்பெயர்ந்தபோது முருகரையும் கொண்டு சென்றார்கள், அவரையும் முருக பக்தியையும் பரப்பினார்கள் எனவும் சான்றுகள் உள்ளன. பினாங்கிலுள்ள தண்டாயுதபாணி கோவிலுக்குக் கீழேகூட செட்டியார் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இந்து கடவுள்கள் பற்றியும் அந்தப் பக்தி மார்க்கங்களையும் தண்டாயுதபாணி கோவிலில் வைத்து மேலும் உரையாடினார்.

அங்கிருந்து புறப்பட்டு பிறகு நகர் உலா வந்தோம். ஜெயமோகன் காரிலேயே அமர்ந்துகொண்டு பினாங்கு நகரத்தின் பகுதிகளையும் மக்களையும் பார்த்துக் கொண்டே வந்தார். பினாங்கு குறித்த வரலாற்று சான்றுகள் சிலவற்றை தமிழ் மாறன் கூறினார். நகரத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ஜெயமோகன் அவர்கள் அதன் மக்கள் அமைப்பைப் பற்றியும் அங்கு உருவாகியிருக்கும் இடைவெளிகள் பற்றியும் ஒரு விசயம் கூறினார். பெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். வசதியில்லாதவர்களின் இருப்பிடம்தான் நகரம், அவர்களுக்கான எல்லாம் தேவைகளும் அங்கேயே மிக வசதியாக முடித்துக் கொள்ளப்படுவதால்தான் அவர்கள் நகரத்திலிருந்து தூரமாகத் தள்ளி வசிப்பதை விரும்புவதில்லைப் போல.

மேலும் ஜெயமோகன் கம்ப இராமயணத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். எத்தனை எத்தனை எதிர் அவதூறுகள் வந்தபோதும் கம்ப இராமாயணம் வரலாற்றில் எப்படியாவது தன்னை மீட்டுக் கொண்டு மீண்டும் உயர்வான இடத்தில் தன்னை நிறுவிக்கொள்ளும் எனக் கூறினார். இறை மறுப்பை முன்னெடுப்பதற்காகத் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சி.அண்ணாதுரை கீமாயணம் எனப் புத்தகம் எழுதினார். இது இராமயணத்தைக் கேலி செய்யும் வகையில் எழுதப்பட்ட பிரதியாகும். ஆனால் அதே காலக்கட்டத்தில் சிலம்பொலி செல்லப்பன் மேலும் ஒரு சில மனிதர்களின் மூலம் கம்பர் விழா நடத்தப்பட்டு, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு கம்ப இராமாயணம் மீண்டும் எழுந்து உருப்பெற்றது எனக் கூறினார்.

மாலையில் சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் “எழுத்தும் இலக்கிய எழுத்தும்” எனும் தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்தினார். 100க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்களும் பொது மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். பெரும்பாலும் ஜெயமோகனின் இலக்கிய படைப்புகளைப் படிக்காதவர்கள் இருந்தமையால், அவர் வசனம் எழுதிய சினிமாக்களைக் குறிப்பிட்டு சொல்லி அவரை அடையாளப்படுத்தவே நேர்ந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகாவது ஜெயமோகனைத் தேடி வாசிப்பார்கள் என நம்புகிறேன்.

அந்த நிகழ்வில் ஜெயமோகன் பேசிய சில குறிப்புகள்:

1. தமிழ் இலக்கியம் என ஒன்று இப்பொழுது இல்லை, இனி உலக இலக்கியம் எனப் பிரக்ஞை மட்டுமே உருவாக வேண்டும், உலக இலக்கியங்கள் இப்பொழுது தமிழில் அதிகமாக மொழிப்பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைப்பதால் தமிழ் வாசகர்கள் இனி நம் இலக்கியத்தை உலக இலக்கியம் என்கிற பரப்பிலிருந்துதான் மதிப்பிட வேண்டும்.

2. சமரசமற்ற எழுத்துத் தீவிரம் உருவாக வேண்டும். அது மட்டுமே எப்பொழுதும் தரமான ஓர் இலக்கிய முயற்சியை நோக்கி நம்மை நகர்த்தும்.

3. கறாரான விமர்சனப் போக்கு உருவாக வேண்டும். எதையும் எப்படியும் வன்மையாக நிராகரித்து கலை விமர்சனத்தை நிகழ்த்தக்கூடிய ஆளுமை உருவாக வேண்டும்

4. உலக இலக்கிய வாசிப்பை ஒவ்வொரு எழுத்தாளனும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், உலக இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் அண்மைய மாற்றங்கள்வரை ஒரு எழுத்தாளனால் அறியப்பட்டிருக்க வேண்டும்

5. காலம் காலமாகப் பல மாற்றங்களையும் புதுமையையும் கண்டதுதான் 2000 வருட வரலாற்றைக் கொண்ட நம் மரபு. புதுமையையும் புதுப்பித்தலையும் கொண்டிராத எந்த மரபும் வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. தொல்காப்பியமே மாற்றத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.


6. பின்நவீனத்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் நவீனத்துவம் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நவீனத்துவத்தின் தோல்விதான் பின்நவீனத்துவம் என்கிற புரிதல் ஏற்பட வேண்டும்.

7. கோட்பாடுகள் அனைத்தும் ஒரு படைப்பைப் புரிந்து கொள்வதகான துணைக்கருவிகள் மட்டுமே, அதைக் கொண்டுதான் ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது “படைப்பைச் செய்தல்” எனும் அளவிற்குக் கருதப்படும்.

மேலும் பல விசயங்களைத் தொட்டு ஜெயமோகன் உரையாடினார். சினிமா தொடர்பான சில கேல்விகளும் கேட்கப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. தொடரும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Monday, September 6, 2010

எழுத்தாளர் ஜெயமோகனுடன் முதல் நாள்: பேசித் தீராத பொழுதுகள்

அதிகாலை 6.00மணிக்கெல்லாம் நானும் எழுத்தாளர் கோ.புண்ணியவானும் கூலிம் தியான ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்றோம். பிரமானந்த சுவாமியுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு 7.00மணிக்கு மேல் பினாங்கு விமான நிலையத்திற்கு ஜெயமோகனை அழைத்து வர அவருடன் கிளம்பினோம். இன்றைய காலை ஒரு இலக்கிய பொழுதாகவே தொடங்கியது எனலாம். காலையிலேயே அநங்கம் புதிய இதழ் குறித்தும் மௌனம் இதழ் குறித்தும் பேசிக் கொண்டேதான் இருந்தோம்.

மணி 8.30க்கு மேல் பினாங்கு விமான நிலையத்தில் தோள் பையைப் பிடித்துக் கொண்டும் கையில் உருளைப் பையை வைத்துக் கொண்டும் நின்றிருந்த எழுத்தாளர் ஜெயமோகனைச் சந்தித்ததும் ஒருவித மகிழ்ச்சி உருவானது. நாம் சந்திக்க நினைக்கும் / நினைத்த அரிய மனிதர்களை முதன் முதலில் சந்திக்கும்போது என்ன பேசலாம் என்ன கேட்கலாம் என்கிற தடுமாற்றமே அலாதியானது என உணர்கிறேன். அதை அங்கு உணரவும் செய்தேன். காரில் சென்று கொண்டிருக்கும்போது எப்படியோ உரையாடல் தொடங்கியது. அண்ணன் ஜெயமோகனும் பேசத் தொடங்கினார். எங்கேயும் இடைமறிக்க மனமில்லாமல் கேட்க மட்டுமே பிடித்திருந்தது. எங்களுடன் பழகிய சிறிது நேரத்திலேயே மிக இயல்பாக பேசத் துவங்கினார். ஜெயமோகனை குறுகிய காலத்திலேயே அதிகமாக வாசித்துவிட்ட சுவாமி பிரமானந்த சரஸ்வதி அவர்கள் அவருடன் உரையாடுவதில் கூடுதலான முனைப்பையும் ஆர்வத்தையும் காட்டினார்.

முதல் உரையாடல் சினிமாவிலிருந்தே தொடங்கியது. மணிரத்னம் இயக்கி வெளிவந்த இராவணன் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஒரு இராவணனை வைத்தே படத்தில் புனையப்பட்டிருக்கும் பல சிக்கலான குறியீடுகளைப் பற்றி பேச்சு தொடர்ந்தது. பிறகு மாற்று சினிமாவில் குறிப்பாக மலையாளம் கன்னடம் போன்ற படங்களில் இலக்கியம் வகிக்கும் முக்கியமான இடத்தைச் சுட்டிக் காட்டினார். எப்பொழுதும் அந்த மாதிரி சினிமாக்களில் இலக்கியமும் சினிமாவும் தொடர்புடையதாகவே எடுக்கப்பட்டிருப்பதையும், தமிழில் இன்னமும் இயக்குனர்களே கதையை எழுதி இயக்கவும் செய்கிறார்கள் எனவும், இன்னமும் ஓர் எழுத்தாளனைக்கூட தமிழில் சினிமா ஆக்கங்களுக்காக/கதைகளுக்காகப் பயன்படுத்தியதில்லை எனவும் ஜெயமோகன் மேலும் கூறினார்.

வரலாறு குறித்தும் கடாரத்தை வென்ற ராஜேந்திர சோழன் குறித்தும் வனப்பகுதிகளில் வளர்ந்திருக்க வாய்ப்பில்லாத நாகரிகம் கலாச்சாரம் குறித்தும் பேச்சு தொடர்ந்தது. ஜெயமோகன் எல்லாம் தளங்களிலும் ஆளுமை உள்ளவர் என அவரது உரையாடலை 15 நிமிடத்திற்கு மேல் கேட்கும் யாரும் தீர்மானிக்கக்கூடும். பிறகு தியான ஆசிரமத்திற்கு வந்ததும் அவருடான கலந்துரையாடல் மேலும் தொடர்ந்தது. நவீன இலக்கிய சிந்தனைக்களத்தில் இதுவரை பேசி கலந்துரையாடப்பட்ட ஜெயமோகன் படைப்புகள் குறித்த தகவலை அவருடன் பகிர்ந்து கொண்டோம்.

மாலையில் திட்டமிட்டப்படியே துங்கு பைனும் ஆசிரியர் பயிற்றகத்தில் ஜெயமோகன் அவர்களின் இலக்கிய உரை மிகவும் சிறப்பாக நடந்தேறியது. மண்டபம் நிறைந்து சிலர் கூடுதலான நாற்காலிகள் போட்டு அமர்ந்து கேட்கும் அளவிற்குப் பார்வையாளர்களின் வருகை திருப்தியளித்தது. கெடா மாநில தமிழ்ப்பள்ளி அதிகாரிகளும் ஆசிரியர்களும் மேலும் பினாங்கு மாநில ஆசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் இந்த இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டார்கள். எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்கள் ஜெயமோகனை அறிமுகப்படுத்தி பேசினார்.


ஜெயமோகன் பேசத் துவங்கிய சில நிமிடங்களிலேயே மண்டபத்தில் அமர்ந்திருந்த சிலர் இருக்கையிலிருந்து எழுந்து இடம் மாறுவதும் நகர்வதுமாக இருந்ததைத் தடையாக உணர்ந்த ஜெயமோகன், அதைச் சபையிலேயே குறிப்பிட்டார். வேறு எந்த இடத்திலும்/நாட்டிலும் இப்படியொரு தடைகள் ஏற்படாது, பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் எழுந்து நடக்கமாட்டார்கள் எனவும் வெளிப்படையாகக் கூறினார். அதன் பிறகு யாரும் எழுந்து நடக்கவும் இல்லை, நிகழ்வு மேலும் தனக்கான கவனத்தைப் பெற்று சிறப்பாக நடந்தது.

ஜெயமோகன் நிகழ்வில் பேசுகையில் இலக்கியத்தில் கற்பிக்கப்படும் அல்லது கருதப்படும் அறங்கள் குறித்து மேலும் தெளிவாக முன்வைக்க கதைகளின் வழி விளக்கினார். வெறுமனே அறங்களை மட்டும் போதிப்பது ஒரு நல்ல இலக்கியமாகக் கருத முடியாது எனவும் அந்த அறங்களின் வழி உருவாகும் சீற்றங்களை அந்த அறத்தின் வழி உருவாகும் வெளிப்பாடுகளை ஒரு கலையாகத் ஒரு மகத்தான தருணங்களாகத் தருவதில் இலக்கியத்திற்கு முக்கியமான இடம் உண்டு எனவும் குறிப்பிட்டுப் பேசினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதியதாக ஒரு எழுத்தாளன் முளைத்து வந்து அறங்கள் குறித்து எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறான். அது எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் யதார்த்தத்தையும் குறிப்பிட்டார். தண்ணீரின் மேற்பரப்பை மூடியிருக்கும் பாசியைப் போலத்தான் அறம் என்றும் அதை எப்பொழுதும் விலக்கி பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்து விடுவதாகவும் கூறினார்.

செம்மொழி மாநாடு எந்தவகையில் தமிழின் வளர்ச்சிக்கு வித்திட்டது எனப் பார்வையாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் அற்புதமான பதிலைக் கொடுத்தார். ஜெயமோகன். தமிழில் முக்கியமான (கல்வெட்டுகளின் ஆவணங்கள் நூலாக்கப்படவில்லை, சுவடிகள் நூலாக்கப்படுவதில்லை) சில முயற்சிகள் ஏதும் செய்யாமல், கூட்டம் கூட்டி ஊர்வலம் நடத்தி குடும்ப அரசியலை நிகழ்த்திக் காட்டியெல்லாம் தமிழை வளர்த்துவிட இயலாது எனக் கூறினார்.

மலேசிய இலக்கியம் குறித்து கேட்கப்பட்டபோது ஒரு வாசகனாக மலேசிய இலக்கியத்தை அணுகும் நான் அந்தப் படைப்பின் மூலம் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் அனுபவத்தைப் பெறக்கூடிய சாத்தியங்களை அந்த இலக்கிய படைப்பு தர வேண்டும். அதுவே நல்ல இலக்கியம் எனக் குறிப்பிட்டார். இங்கு வாசிக்கப்படும் பிரதிகள் பினாங்கு பற்றியும் கோலாலம்பூர் பற்றியும் தெரிந்துகொள்ள மட்டும் வாய்ப்பளிப்பதாக இருப்பதை நல்ல இலக்கியம் என அடையாளப்படுத்துவதில் சரியான அணுகுமுறை கிடையாது எனக்கூறினார். மேலும் இங்கு உருவாகி வரும் அநங்கம் வல்லினம் போன்ற இதழ்களின் மூலமும் கராரான இலக்கிய விமர்சனத்தின் மூலமும் வளரக்கூடிய இளம் படைப்பாளிகளை அறிய முடிவதாகக் கூறினார். நிகழ்வு முடிந்தும் எங்களின் உரையாடல் இரவுவரை தொடர்ந்தது. எங்களுடன் விரிவுரையாளர் தமிழ் மாற்ன் அவர்களும் இணைந்துகொண்டார்.

-தொடரும்-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, September 1, 2010

மேற்கத்திய சினிமா விமர்சனம்: Seven Pounds- ஒரு மனிதத்தின் ஏழு துண்டுகள்

( ஏழு பெயர்கள் , ஏழு மனிதர்கள், ஓர் இரகசியம்)

“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என இருண்டிருக்கும் ஓர் அறையிலிருந்து பரவும் மெல்லிய பச்சை விளக்கொளியில் தின் தோமஸ் பேசிக் கொண்டிருக்கிறான். அது அவன் மரணிக்கப் போகும் கடைசி தருணம். அவனுடைய ஏழாவது துண்டுக்காக இன்னொரு உயிர் காத்திருக்கிறது. இப்பொழுது அவன் மரணித்தால்தான் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எமிலியைக் காப்பாற்ற முடியும்.

தின் தோமஸின் உடலின் ஏழாவது துண்டைப் பெறப்போகும் அந்த எமிலி, தின் தோமஸால் காப்பற்றப்படப்போகும் ஏழாவது நபர். யார் இந்த ஏழு மனிதர்களும்? ஏன் இவர்கள் எல்லோரும் தின் தோமசால் காப்பற்றப்படுகிறார்கள்? இவர்களுக்கும் தின் தோமசுக்கும் என்ன தொடர்பு? கதை மீண்டும் பின்னோக்கி நகர்கிறது. வெறும் உரையாடல்களும் எந்தத் திருப்பங்களுமற்ற சம்பவங்களும் எனக் கதை ஓர் இரகசியத்தைச் சுமந்துகொண்டு அதைப் பற்றிய தெறிப்புகளை உருவாக்காமலேயே தின் தோமசுடன் பயணிக்கிறது.

“கடவுள் ஏழு நாட்களில் இந்த உலகத்தைப் படைத்தார் எனப் பைபிள் சொல்கிறது. ஆனால் நான் ஏழு வினாடியில் என்னைத் தொலைத்திருக்கிறேன்” எனும் பின்னனி குரலில் தின் தோமஸ் உரையாட படர்ந்து விரியும் கடலில் நீந்தி கரையேறுகிறான். அவனைப் பின்தொடரும் ஏழு மரணங்களின் கதை அவனுக்குள் அடர்ந்த சோகங்களாகவும் வலிகளாகவும் நிரம்பி வழிகிறது. ஐ.ஆர்.எஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் தன் தம்பியான பென் தோமஸின் அடையாள அட்டையையும் அவனது அடையாளத்தையும் பயன்படுத்திக் கொண்டு போலியான இருப்புடன் அவனுக்கான ஏழு மனிதர்களைத் தேடி அலைகிறான். அவனுக்கு வேண்டியது அவனால் காப்பற்றாப்படப் போகும் ஏழு அந்நிய பெயர்கள். அந்தப் பெயர்களுடைய மனிதர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வாழ்வு கொடுக்க முனையும் ஓர் அசாத்திய இலட்சியத்துடன் இயங்குகிறான் தின் தோமஸ். ஆகையால்தான் தன் தம்பியின் அடையாளத்தைப் பயன்படுத்தவும் செய்கிறான்.

அது ஒரு இருண்ட சாலை. மஞ்சள் விளக்குகள் மட்டும் சாலையோரத்தில் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு நின்றிருக்கின்றன. தின் தோமசும் அவனது மனைவியான சாராவும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். சாரா கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை தோமசிடம் காட்டுகிறாள். அந்த நேரம் பார்த்து தோமசுக்கு தொலைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வருகிறது. அதன் சத்தத்தைக் கேட்டதும் தொலைப்பேசியை எடுத்து குறுந்தகவலை வாசிக்கத் துவங்குகிறான். சாலையில் மிகக் கூர்மையான ஒரு திருப்பம் வருகிறது. திருப்பத்தில் வரும் ஒரு காரை மோதி தடம் புரளும் தோமசின் கார் பக்கத்து சாலையில் வந்து கொண்டிருக்கும் இன்னொரு காரையும் மோதுகிறது. எதிர்ப்பாராத கணத்தில் ஏழு நிமிடங்களிலேயே அந்தக் கொடூர விபத்து சாலையில் நிகழ்கிறது. தோமசின் மனைவி சாராவும் அந்த இன்னொரு காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே பயங்கரமான மரணத்தைச் சந்திக்கிறார்கள்.

கென் அண்டர்சன், நிக்கோல் அண்டர்சன், ஏல்லி அண்டர்சன், ஸ்டீவன் பிளிப்ஸ், மோனிக்கா மற்றும் சாரா ஜோன்சன்( தோமசின் மனைவி). இந்த ஏழு பெயர்களும் அவனுக்குள் குற்ற அடுக்குகளையும் துயரத்தின் கரங்களையும் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றன. ஏழு உயிர்களை தனது சிறிது நேரத்தின் அலட்சியத்தில் கொன்றுவிட்ட குற்ற உணர்வு தோமசின் மனதினுள் ஆழமாக வேர்விடுகிறது. அந்தத் துர்சம்பவத்திலிருந்து மீள முடியாமல் தொடர்ந்து அவதிக்குள்ளாகிறான் தோமஸ். மனப்போராட்டத்தின் உச்சக்கட்டத்தை அடையும் தோமஸ் அவன் அழித்த ஏழு உயிர்களின் இழப்பைச் சரிப்படுத்த இன்னொரு ஏழு உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வருகிறான்.

தன் குற்ற உணர்வின் வெளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் தன்னால் மரணித்த அந்த உயிர்களின் மரண ஓலங்களிருந்து ஓர் ஆத்ம திருப்தியின் மூலம் விடுப்படவும் அவனுக்கு வேண்டிய அந்த ஏழு உயிர்களைத் தேடுவதில் ஈடுபடுகிறான் தோமஸ். அவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை வாழ வைப்பதன் மூலம் அவர்களின் சிக்கலான உலகிலிருந்து அவர்களை விடுதலை பெறச்செய்வதன் மூலம் தன் குற்ற உணர்வையும் கசப்பான தனது கடந்த காலத்தின் பதிவையும் நீக்கிவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறான் தின் தோமஸ். அவனால் காப்பாற்றப்படும் அந்த ஏழு நபர்கள் யார்? அந்தக் கொடூரமான விபத்து நிகழ்ந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தின் தோமஸ் அந்த ஏழு மனிதர்களுக்கும் தன்னை ஏழு துண்டுகளாகப் பரிசளிக்கிறான்.

1. அவனது தம்பியான பென் தோமசுக்கு தன் நுரையீரலைத் தானம் செய்து அவனைக் காப்பாற்றுகிறான்.

2. ஆறு மாதத்திற்குப் பிறகு ஹோலி எனும் குழந்தைகள் சேவை நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்மனிக்கு தனது லீவரை(Liver) தானமாகத் தருகிறான். அதன் பிறகுத்தான் தனது உடல் உறுப்பு தானத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் சில மனிதர்களைத் தீவிரமாகத் தேடுகிறான்.

3. பிறகு ஹாக்கி இளம் பயிற்றுனர் ஒருவருக்கு தன் சிறுநீரகத்தைத் தானமாகத் தருகிறான்.

4. தன் முதுகெலும்பின் ஒரு முக்கியமான எலும்பை நிக்கோல்ஸ் எனும் சிறுவன் ஒருவனுக்குத் தானமாகத் தருகிறான்.

மேற்கண்ட நால்வருக்கும் உடல் உறுப்பு தானம் செய்து அவர்கள் யாவரையும் பிழைக்க வைப்பதாகக் கதையின் ஓட்டத்தில் பின்னனியில் சொல்லப்படுகிறது. பிறகொருநாள் தான் இறப்பதற்கு 2 வாரம் இருக்கும் சமயத்தில் தின் தோமஸ் ஹோலிக்குத் தொலைபேசியின் மூலம் அழைத்து வேறு யாராவது உதவிக்காக ஏங்குபவர்கள் இருக்கிறார்களாக எனக் கேட்கிறான்.

ஹோலியும் தன் காதலனால் கொடுமைப்படுத்தப்படும் இரு குழந்தைகளுக்கான தாயான கொன்னியைப் பற்றி கூறுகிறார். அவளைச் சந்திக்க தின் தோமஸ் அவளது வீட்டிற்குச் செல்கிறான். அவளிடம் அவளுடைய காதலனைப் பற்றி கேட்டதும், தின் தோமசை அங்கிருந்து விரட்டுகிறாள். இந்தக் காட்சியில் இரு கதைப்பாத்திரங்களும் மிக இயல்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொன்னி கணவனை இழந்த இளம் தாய் அந்நியன் ஒருவன் தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதை எண்ணி மேலும் தன் அந்தரங்கமான வாழ்வை உரசிப் பார்க்கும் கேள்விகளைக் கேட்ட தின் தோமசின் செயலைக் கண்டு பதற்றமடைகிறாள். தன் காதலனால் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை மறைக்கிறாள். ஆனால் தின் தோமஸ் அவளை விடாமல் உனக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன், நீ உதவி செய்யப்பட வேண்டியவள் எனக் கெஞ்சுகிறான். தன்னால் அவள் உதவி செய்யப்பட்டு புது வாழ்க்கையை நுகர்வதற்கு அவளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனத் துடியாய் இருக்கிறான்.

5. கொன்னி அவளுடைய இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு கடைசியில் தின் தோமசின் கடற்கரையோர வீட்டிற்கு வந்து சேர்கிறாள். தன்னுடைய வீட்டை அவளுக்கே அன்பளிப்பாகத் தந்துவிடுகிறான் தோமஸ்.

அடுத்ததாக அவனுடைய கடைசி மனிதத்தின் இரு துண்டுகளைப் பெறப் போகும் இரண்டு மனிதர்களை நோக்கி நகர்கிறான் தின் தோமஸ். இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனத்தில் தொலைப்பேசி அழைப்புகளின் மூலம் ஆர்டர்களைப் பெறும் இடத்தில் வேலை செய்யும் கண் தெரியாத எசுராவைச் சந்திக்கிறான். எசுராவைப் பற்றிய விவரங்கள் தின் தோமசுக்குத் தரப்படுகிறது. எசுரா ஒரு மிகச் சிறந்த பியானோ இசையமைப்பாளரும்கூட. கண் தெரியாத எசுராவிடம் ஒருமுறை தொலைப்பேசியில் உரையாடுகிறான். எசுராவிற்கு தன் ஊனத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கு அவனுக்குள் ஆசையை முளைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தின் தோம்ஸ் அவனைப் பயங்கரமாகத் திட்டுகிறான். அவனுடைய ஊனத்தைக் கேலி செய்கிறான். அவனைக் கடுமையான விமர்சனத்தால் தாக்குகிறான்.

இந்தத் தொலைப்பேசி உரையாடல் காட்சியைப் பார்க்கும் யாவரும் தின் தோமசின் கடுமையான வார்த்தையால் வேதனைப்படவோ அல்லது எரிச்சலடையவோ வாய்ப்புண்டு. ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் தின் தோமசின் மனிதநேய குரல் மிகவும் அதிசயமானது. கண் தெரியாத எசுரா இந்தக் காட்சியில் மிக அற்புதமான எளிமையான முகப்பாவனையையும் நடிப்பையும் வழங்கியிருக்கிறார். குறிப்பாக கண்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் மெய்சிலிர்க்க வைக்கும்.

6. இறப்பதற்கு முந்தைய சில மணி நேரத்திற்கு முன் தன் அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் எசுராவைத் தொலைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்கிறான் தின் தோமஸ். உன்னை அன்று கடுமையாகத் திட்டியது நான்தான் எனவும், நீ மிகப் பொறுனையான நல்ல மனம் படைத்த மனிதன் எனவும் கூடிய விரையில் என்னிடமிருந்து உனக்கொரு பரிசு வந்து சேரும் எனவும் தோமஸ் கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறான். எசுராவிற்கு இறந்த பிறகு தன் கண்ணைத் தானம் செய்ய முடிவு செய்திருந்தான் தின் தோமஸ்.

தின் தோமசின் இறுதி தானத்தைப் பெறப்போகும் எமிலி போசாவுடன் ஆரம்பத்திலேயே தின் தோமசுக்கு நட்பும் அன்பும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவளுடன் அன்பைப் பகிர்ந்து கொள்பவனாக அவளிடம் மட்டும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்கிறான் தோமஸ். எமிலி போசா சொந்தமாக அச்சகம் வைத்துக் கொண்டு வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு வருபவள். அவளுக்கு இருதய கோளாறு இருக்கிறது. ரொம்ப நாள் வாழ முடியாத ஒரு சூழல் இருப்பதை அறிந்த தின் தோமஸ், அவளுக்குத் தன் இருதயத்தைக் கொடுத்து அவளை வாழ வைக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறான். அவளுடன் பழகி, அவளைக் காதலிக்கவும் செய்கிறான்.

இருதய நோயால் அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்படும் எமிலிக்குத் துணையாக கடைசிவரை இருந்து அவளைக் கவனித்துக் கொள்கிறான். ஒருநாள் அவளே அவனை வீட்டுக்கு அழைத்து இருவரும் இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசி சிரித்து பொழுதை மகிழ்ச்சியுடன் கடக்கிறார்கள். அந்தச் சமயம் எமிலியின் பழுதைடைந்து போன பழைய அச்சு இயந்திரத்தைச் சரி செய்து அவளிடம் காட்டி அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறான் தோமஸ். நம் வாழ்க்கையில் மிக அற்புதமான கணம் எதுவென்றால் நம் அன்பிற்குரியவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பார்ப்பதுதான்.

இறுதியாக குளியல் அறையிலுள்ள நீர்த்தொட்டியில் பனிக்கட்டிகளை அள்ளிக் கொட்டி அதில் தண்ணீரை நிரப்பி அதில் மூழ்கி, சிறு வயதில் தான் பார்த்து வியந்த ஜெர்ரி மீன் மூலம் கடிப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான் தின் தோமஸ்.

7. அதன் பிறகு அவனது இருதயம் எமிலிக்கு(ஏழாவது மனிதர்) மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றப்படுகிறது.

படத்தின் இறுதி காட்சியில் எசுராவின் இசை விருந்து கூட்டத்திற்கு எமிலி செல்கிறாள். எசுரா நன்றாக உலகையும் மனிதர்களையும் பார்த்து இரசிக்கும் வகையில் அழகான கண்களுடன் ஆனந்தமாகத் திகழ்கிறான். அங்கு எசுராவின் கண்களைப் பார்த்து வியப்புடன் கண்னீர் வடிக்கிறாள் எமிலி. படம் நிறைவடைகிறது. தின் தோமஸ் இறந்துவிட்டாலும் எசுராவின் மூலம் இந்த உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எமிலியின் மூலம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்படி ஏழு மனிதர்களிடமும் சிறு சிறு துண்டுகளாக தின் தோமஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

படத்தில் தின் தோமசாக நடித்திருப்பது பிரபல ஆலிவுட் நடிகர் வில் ஸ்மித் (will smith) ஆகும். ஏற்கனவே பல நகைச்சுவை படங்களில் மிகவும் அபாரமாகத் தனது நடிப்பாளுமையை வெளிப்படுத்தியவர் வில் ஸ்மித். இந்தப் படத்தில் மிகவும் தீவிரமான வாழ்வை எதிர்கொள்ளவும், மனிதர்களை கண்டடையவும் வாழ்வை நகர்த்தும் யதார்த்தமான கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க நிகழும் உரையாடலில் மானுடத்தின் அன்பைக் காண முடிகிறது. தின் தோமஸ் போன்றவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் ஒரு கடவுளின் மனதைப் போல போற்றப்பட வேண்டியது.

குறிப்பு: இந்தப் படத்தை இன்னொரு பரிணாமத்திலும் வைத்துப் பார்க்க முடியும். தனக்குள் முளைத்துவிட்ட குற்ற உணர்ச்சியைச் சரிகட்டவே அந்த ஏழு மனிதர்களுக்கும் தின் தோமஸ் உதவுகிறான். அவனால் கொல்லப்பட்ட ஏழு மனிதர்களுக்கு நிகராக இன்னொரு ஏழு பேரைக் காப்பாற்றி ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட ஏதோ ஒரு விதியை அவன் சீர்ப்படுத்துவது போல இருக்கிறது.

இது மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு செய்யப்பட்ட சுயநலம் போல தெரிந்தாலும், அவன் அவனையே ஏழு துண்டுகளாப் பகிர்ந்தளித்து ஏழு பேரை வாழ வைத்திருக்கும் செயல் எல்லோருக்குள்ளும் இருக்கும் அசாத்தியமான மனிதநேயத்தின் உச்சக்கட்டமாக இதைத் தரிசிக்க முடிகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்திருக்கும் நல்லது கெட்டதில் எது உக்கிரமாக எழுந்தாலும், அது ஒரு சராசரியான மனிதனின் இயல்புகளுக்கு அப்பாற்பட்டுத்தான் தெரியும். மிக மிக நேர்எதிர்மறையான குறிப்புகள்.

இந்தத் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க நேரும்போது, மனிதன் பலவகையான கொடூரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தாலும் நம்முடைய வரலாறு குருதியால் ருசிக்கப்பட்டதாக இருந்தாலும் ஓர் உயிரைக் காப்பாற்றும்போது அல்லது அதைக் காணும்போதும் நம் மனம் அடையும் அதிர்வு எந்த வன்முறையாலும் தகர்க்க முடியாததாகும் என நினைக்கத் தோன்றுகிறது. ஐரோப்பியாவின் சிறந்த வாழ்க்கை வரலாறுக்கான விருதை வென்ற இப்படம் ஒரு ஆழ்ந்த மனிதநேயத்தையும் அன்பையும் சொல்லிவிட்டுப் போகிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Saturday, August 28, 2010

நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை

நேர்காணல்: இலங்கை இணைய இதழுக்காக- முதல் பாகம்
2 மே 2010

குறிப்பு: கீழ்காணும் நேர்காணலில் நான் அளித்த கருத்துகள் என்னைச் சார்ந்தவை. யாரையும் குறிப்பிட்டு சொல்லப்ப்பட்டவை அல்ல. மாற்றுக் கருத்துகள் இருந்தால் தாராளமாகத் தொடர்வுக் கொண்டு தெரிவிக்கலாம்.கேள்விகளில் சிலவற்றை இங்குப் பதிக்கவில்லை. முக்கியமான கேள்விகளும் பதில்களும் மட்டுமே தரப்படுகின்றன.

1. தமிழ் இலக்கியம் என்று விரிந்த பரப்பை முன்வைத்து பேசும்போது மலேசிய மற்றும் சிங்கப்பூர் எழுத்துக்கள் பற்றி எவரும் கவனம் கொள்வதில்லை அது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஆனால் இப்போது நவீன எழுத்துக்கள் என்று பேசும்படியாக அங்கு இலக்கியம் இருக்கிறது அல்லவா?

இந்தக் கேள்விக்கான பதிலை மலேசிய தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பின் முரண்களையும் ஆதிக்க அடையாளங்களையும் வைத்துதான் பேச வேண்டியுள்ளது. தமிழிலக்கிய பரப்பில் மலேசிய இலக்கியத்தை முன்னிறுத்துபவர்கள் மிகக் குறைவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆரம்பக் காலக்கட்டத்தில் இறக்குமதி இலக்கியங்களில் வாசிப்பும் மறுவாசிப்பும் கொண்டவர்கள் அதை மையமாக கொண்டு புனைவதில் ஆர்வமாக இருந்தார்கள். மேலும் ஆரம்பத்தில் இணைய வசதியின்மை அல்லது இணைய பங்காற்றல் குறித்த கற்றலின்மை மலேசிய இலக்கியத்தை வலுவாக முன்னிறுத்த முடியாமல் போனது.

மேலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசிய இலக்கியத்தின் பிரதியாக வேறு நாடுகளுக்குச் சென்று இலக்கியத்தைப் பற்றி பேசியவர்களும் உரையாடிவர்களும் வணிக எழுத்தை மட்டுமே புரிந்து கொண்டவர்களாகவும் அல்லது படைப்புணர்வற்றவர்களாகவும்தான் இருந்திருக்கிரார்கள். தீவிர படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சுருங்கி எழுதிக் கொண்டும் உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். சில காலக்கட்டங்களுக்குப் பிறகுத்தான் அவர்கள் வெளிப்பட்டார்கள். மேலும் ஆதிக்க சக்தி படைத்தவர்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களின் அதிகாரம் வணிக நுகர்வையே மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கையில் எங்கனம் மலேசிய இலக்கியம் வெளிக்கொணரப்படும்?

நவீன எழுத்தில் அதிக ஆர்வம் கொண்டு வாசிப்புன் மூலமும் படைப்பின் மூலம் வளர்ந்து வருபவர்களில் கோ.புண்ணியபான், ந.பச்சைபாலன், ஏ.தேவராஜன், மஹாத்மன் போன்றவர்கள் அடங்கும். இன்னமும் சிலர் அதற்கான களத்தில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களின் எழுத்தில் நவீன எழுத்திற்கான வீரியம் மே;லும் வலுவடைய வேண்டியிருக்கிறது. (திருப்தி அடைதல் என்பது ஒருவேளை போலி ஞானிகளுக்கு ஏற்படலாம், ஆனால் இன்னமும் என் எழுத்தின் மீதும் மலேசிய நவீன இலக்கிய எழுத்தின் மீதும் எனக்குப் போதாமை உணர்வுத்தான் எஞ்சியிருக்கின்றன)

படிமத்தைச் சாராத எழுத்துகள் வெகு சீக்கிரம் உண்மையை அடையும் என்ற கருத்தாக்கம் பின்நவீனத்தில் இருப்பதாக வாசித்ததுண்டு. அதேபோல இன்று ஒரு படைப்பாளி தனித்து நிலைக்க வேண்டுமென்றால் இயக்கங்களைச் சாராத அல்லது இலக்கியம் என்கிற நிறுவனத்தைச் சாராத படைப்பாற்றலின் வழி பயணிப்பதே சிறப்பு என நினைக்கிறேன்.

குறிப்பு: சை.பீர்முகமதுவின் மூலம் மலேசியவிற்கும் தமிழக எழுத்தாளர்களுக்கும் நல்ல நட்புரவு ஏற்பட்டதாகச் சிலர் சொல்லி கேட்டதுண்டு. அங்குச் சென்று மலேசிய இலக்கியம் குறித்து பேசுவது தொடங்கி அங்குள்ள முக்கியமான எழுத்தாளர்களை மலேசியாவிற்குள் கொண்டு வருவதுமென மிகத் துடிப்பாகச் செயலாற்றியுள்ளார் எனவும் சொல்லியிருக்கிறார்கள். எம்.ஏ. நுக்மான் மலேசியா வ்ந்திருந்தபோது, அவர் மலேசியாவின் இலக்கியத்தை அறிந்துகொண்டதில் சை.பீருக்கும் முக்கிய பங்குண்டு எனக் கூறினார். 1999 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன், எம்.ஏ நுக்மானின் மலேசியாவிற்கான முதல் இலக்கியப் பயணத்தை பீர்.முகமதுதான் அமைத்துக் கொடுத்தார் எனவும் மேலும் பினாங்கு கோலாலம்பூர் போன்ற இடங்களில் இலக்கிய சந்திப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார் எனும் தகவல் உண்டு. எஸ்.பொ, பிரபஞ்சன், நுக்மான், போன்ற சொற்ப எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியம் குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் என்பதும் உண்மை.


2. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் ஆரம்பம் எப்போது தொடங்குகிறது ? அதன் வரலாற்றை சற்று விரிவாக பேசலாமா?

மன்னிக்கவும். நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் அல்லது மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை. கல்வியாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ந்து பல மேடைகளில் இலக்கிய வரலாறுகளைக் கட்டுரைகளாகப் படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு வரலாறு இலக்கிய வெளியில் அவர்களின் இருப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பங்காற்றுகிறது. அதை ஒரு தகவல் போல வாசித்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள் அடுத்த மேடை கட்டுரை வாசிப்பு வரும்வரை. அவர்களின் இலக்கிய செயற்பாடு மிகவும் சுருங்கியவை. ஆகையால்தான் பெரும்பாலும் வரலாற்றை நினைவுக்கூர்வதில் எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் நிலவுகிறது. வரலாறு குறித்த புரிதல் என்பது அதன் தொடர்ச்சியை மேலும் வலுவாக அதனிலிருந்து மாற்றி வேறு புதிய உணர்வுமுறையில் வரலாற்றிலிருந்து தகர்ந்த ஒரு இலக்கியப் பரப்பை அடைய செய்ய வேண்டுமே தவிர வரலாற்றையே பேசிக் கொண்டு காலத்தைக் கடத்தக்கூடாது.

இருப்பினும் உங்களுக்கு ஒரு மாற்றுப் பார்வை வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து மலேசிய நவீன இலக்கியத்தை அக்கறையுடன் அணுகுவதன் பொருட்டே எனக்குத் தெரிந்த மலேசிய நவீன இலக்கியத்தின் சில வரலாற்று தகவல்களைச் சொல்கிறேன்.

மலேசிய தமிழ் இலக்கியம் என்பது ஆரம்பக்காலக்கட்டத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தின. காலனியக் காலக்கட்டத்தின் சமூகக் கட்டமைப்பில் மேல்தட்டு மனிதர்கள் சிறுமுதலாளிகளாகவும், அதிகாரத்தைப் பகிர்வதில் தரகர்களாகவும் இருந்தவர்கள் தமிழ்க்கல்வி இல்லாதவர்களாகவும் தமிழ் இலக்கிய நுகர்ச்சி இல்லாதவர்களாகவும்தான் இருந்தார்கள். ஆகவே அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வு பிரச்சனையும் முதலாளி சமூகத்தின் விளைவால் ஏற்பட்ட குடும்பச் சிதைவைகளும்தான் வணிக மொழியில் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டது. ஒரு புதிய கவித்துவமான மொழியும் புதிய அணுகுமுறைகளும் அப்பொழுது பெறப்படவில்லை. தமிழக இலக்கியம் என்கிற பெரும்வெளியின் தாக்கத்தினால் உருவான சிறு பகுதியாகவே அப்பொழுது இலக்கியம் படைக்கப்பட்டது.

மலேசியாவில் நவீனக் காலக்கடடம் என எடுத்துக் கொண்டால், ஒரு பெரும்வெளியாக மட்டுமே இருந்த மலேசிய இலக்கியம் ஒரு நிறுவனமாகச் செயல்படத் துவங்கியக் காலக்கட்டத்தை முன்வைக்கலாம். சிறுகதை துறையை மேலும் வலுப்படுத்த 1950களில் சிறுகதை வகுப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்த பலரை ஒருங்கிணைக்க முடிந்தது. அந்தக் கதை வகுப்பின் மாணவனாக இருந்து பிறகு நவீன இலக்கியத்தின் முன்னோடியாக அடையாளப்படுத்தப்பட்டவர்தான் எம்.ஏ.இளஞ்செல்வன் ஆவார். பிறகு சிறுகதை கருத்தரங்குகள், சிறுகதை போட்டிகள் என அந்தக் களம் விரிவடையத் துவங்கியது. மாதாந்திர சிறுகதைத் தேர்வு, தமிழ் நேசன் பவுன் பரிசுத் திட்டம், சொக்சோ சிறுகதை போட்டி, பேரவைக் கதைகள், பாரதிதாசன் சிறுகதை போட்டி, வாசகர் வட்டங்கள், எழுத்தாளர் இயக்கம், தமிழ் நேசன் நாவல் போட்டிகள், மாதமொரு நாவல் திட்டம் என மலேசிய இலக்கியம் 1946க்குப் பிறகு சிறுக சிறுக ஒரு நிறுவனமயக்குதலின் மூலம் வளர்தெழுந்தது.

இது போதுமான வளர்ச்சியா எனக் கேட்டாலோ அல்லது இதன் மூலம் தீவிரமான படைப்பாளிகள் உருவானர்களா எனக் கேட்டாலோ அது வேறொரு விவாதத்திற்குள் நம்மை நுழைத்துவிடும். ஆகையால் இவையனைத்தும் மலேசிய நவீன இலக்கியத்தை மேலும் தீவிரமாக்குவதில் ஏதோ ஒருவகையில் பங்காற்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

எழுத்தாளர்கள் மலேசிய இலக்கிய ஒரு இயக்கமாக அல்லது நிறுவனமாக செயல்படுவதற்கு முன்பு தனது படைப்புகளின் மூலம் தனிமனித உணர்வுகளையே சமூகம் சார்ந்து எதிர்வினைகளாகவும் சீர்திருத்த கருத்தாக்கங்களாகவும் எழுதி வந்தார்கள். அடையாளங்காணல் அடையாளப்படுத்துதல் என்கிற இலக்கிய நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்குப் பிறகு சமூகக் குறியீடாக மாறி வெளிப்படையாகப் பிரச்சாரத்தை எழுத்தைப் படைக்கத் துவங்கினார்கள். இருப்பினும் தனிமனித கொள்கையில் முழு ஈடுப்பாட்டுடன் சமரசங்களை நாடாமல் எழுதியவர்களும் இருக்கிறார்கள். இதையும் நவீன இலக்கியத்தின் தொடக்க மனப்பான்மை எனப் புரிந்துகொள்ளலாம். படைப்பாளி என்பவனே ஒரு இயக்கமாக தனக்கான அதிகாரங்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு திருப்தியுறுவது.

3. பெண் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தின் அரசியலாக அங்கு எதை முன்வைக்கிறார்கள்?

பெண் எழுத்தாளர்களின் படைப்புலகத்தினுள் இன்னமும் ஆழமான பார்வையும் விமர்சனமும் பரவலாக ஏற்படவில்லை எனறே தோன்றுகிறது. தீவிர படைப்பாளி என்று அடையாளப்படுத்தும் வகையில் யாரும் இல்லையென்றாலும் தனது படைப்பின் மூலம் வளர்ச்சியை எட்டியவர்கள் அல்லது புதிய கதை மொழியை கவிதை மொழியை அடைந்த பெண் எழுத்தாளர்கள் மலேசியாவில் சொற்பமான எண்ணிக்கையில் இருப்பதை மறுக்க இயலாது. கோலாம்லம்பூரில் இருந்து எழுதி வரும் பெண் நவீன படைப்பாளிகளின் படைப்பாற்றல் வாசிப்பின் மூலமும் குழுவாத பகிர்தல்-கலந்துரையாடல், விவாதித்தல், சிற்றிதழின் பங்காற்றல்- சிற்றிதழ் வட்டம் சார்ந்த தீவிர மனப்பான்மை போன்ற களங்களின் மூலமும் சிறுக சிறுக தீவிரமடைந்து வருவதையும் மறுக்க இயலாது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தோழி, தினேசுவரி, யோகி, மணிமொழி, சிதனா, ராஜம் ரஞ்சனி, பூங்குழலி போன்றவர்களை அடையாளப்படுத்தலாம்.

ஆனாலும் இவர்களின் எழுத்துக்களம் சமூகவியலின் அறியாமையை, பிற்போக்குத்தனங்களை, ஒழுக்கநெறியின் ஒடுக்குதல்களை எதிர்க்கொள்வதும் அல்லது பால்ய வாழ்வை மீட்டுணர்தலும் என்கிற தளத்தில் இயங்கி வருவதால் அத்துனை திவீரமான கலை எழுச்சியை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மதவியல், அரசியல், உளவியல், தர்க்கவியல், தத்துவவியல், மானுடவியல், வரலாற்றியல் எனும் பல்வேறு தளத்தின் அனுபவங்களைப் பெறுவதும் வாசிப்பதுமென முயற்சிகளை மேற்கொண்டால் தீவிரமாகக் கவனிக்கப்படுவார்கள். மேலும் சிற்றிதழ் களம் இல்லையென்றால் இவர்களின் எழுத்திற்கு அறிமுகமும் அடையாளமும் இல்லாமல் போய்விடும் அபாயமும் உண்டு.

மூத்த பெண் படைப்பாளிகளை அணுகும்போது அவர்கள் எழுதுவதே ஒரு மிகப்பெரிய போராட்டமாக அமைந்திருந்தது. அவர்கள் அதனை உடைத்துக் கொண்டு புனைந்து கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை. ஆதிக்க ஆண் படைப்பாளிகளின் அடையாளங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தர்க்கம் பேசி வந்த ஆண்வழி இலக்கிய பரப்பினுள் க.பாக்கியம், பாவை, ந.மகேசுவரி, பாமா, போன்றவர்கள் தனது படைப்புகளின் வழி தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இந்த எதார்த்தத்தை அதாவது ஆணாதிக்க கட்டமைப்புகளை தொடர் முயற்சிகளின் மூலம் (அவர்களின் படைப்புகள் தீவிரமாகக் கவனிக்கப்படவில்லையென்றாலும் பேசப்படவில்லையென்றாலும்) எதிர்கொண்டு வந்தவர்களின் இலக்கியத்தை தற்கால மதிப்பீட்டைச் சுமத்தி விமர்சிப்பது அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை. ஆனாலும் மூத்த பெண் படைப்பாளிகளின் எழுத்தில் இந்துத்துவ அடிமைத்தனமும் அதற்கு எதிரான விடுதலையும், குடும்ப அமைப்புகளின் இறையியல்த்தன்மை, மேலோட்டமான பெண் ஒழுக்குமுறைகள் குறித்த எதிர்வினைகள் இருந்திருக்கின்றன. முறையான விமர்சனப் பார்வை கிடைக்காததால் அது ஆழமாக விவாதிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து வந்து சேர்ந்துவிட்டது. இப்போதைய பிரச்சனை வேறு என்பதால் அதையெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பாகவே பார்க்கப்படுகின்றன.

-தொடரும்-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, August 25, 2010

இலக்கியம் எதைக் கற்பிக்கின்றது? ஜெயமோகன் மலேசிய வருகை

ஜெயமோகன் மலேசிய வருகை
சுங்கைப்பட்டாணி –கூலிம் - கோலாலம்பூர்

ஏற்பாடு: நவீன இலக்கிய சிந்தனைக்களம் கூலிம் தியான ஆசிரமம்


எழுத்தாளர் ஜெயமோகன் செப்டம்பர் 6ஆம் தொடங்கி 12ஆம் திகதி வரை மலேசியாவிற்கு வருகை புரிகிறார். கூலிம் தியான ஆசிரம் சுவாமி பிரமானந்தா அவர்களுடன் நவீன இலக்கிய சிந்தனைக்களம் இணைந்து கூலிம், சுங்கைப்பட்டாணி,  பினாங்கு போன்ற இடங்களில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் வல்லினம் குழு சார்பாக நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. விவரங்கள் பின்வருமாறு:

06.09.2010 எழுத்தும் இலக்கிய எழுத்தும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி- பினாங்கு(துங்கு பைனுன்)
மாலை மணி 4.30க்கு


07.09.2010 இலக்கியம் எதைக் கற்பிக்கிறது?
சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
மாலை மணி 7.30க்கு


08.09.2010 “இந்திய ஞான மரபும் காந்தியும்”
காந்தி மண்டபம் பினாங்கு- மாலை மணி 7.30க்கு


09.09.2010 கீதையும் யோகமும்
கூலிம் தியான ஆசிரமம்
இரவு மணி 8.00க்கு


10.09.2010 இலக்கியமும் நவீன இலக்கியமும்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
மாலை மணி 5.00க்கு


11.09.2010 கோலாலம்பூர் இலக்கிய கலந்துரையாடல்


12.09.2010 சிறுகதை பட்டறை
காலை 9 முதல் மதியம் 1.00 வரை
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்- பெ.இராஜேந்திரன்


மாலை 6.00 மணிக்கு வல்லினம் –
தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்
கலை இலக்கிய விழா - ம.நவீன்

நிகழ்வுகள் தொடர்பான விவரங்களுக்கும் தொடர்பிற்கும்:

சுவாமி பிரமானந்த சரஸ்வதி
கூலிம் ஆசிரமம்

கே.பாலமுருகன் (bala_barathi@hotmail.com)
கோ.புண்ணியவான்
தமிழ் மாறன்
திருமதி.க.பாக்கியம்  கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
ம.நவீன் -  ( வல்லினம்)
பெ.ராஜேந்த்திரன்-மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்

குறிப்பு: ஜெயமோகனின் வாசகர்கள் கோலாலம்பூரில் நிகழும் சிறுகதை பட்டறையிலும் வல்லினம் நடத்தும் கலை இலக்கிய விழாவிலும் ஜெயமோகன் அவர்களைச் சந்திக்கலாம். தவறாமல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். மேல் விவரங்களுக்கு சம்பந்தபட்ட ஏற்பட்டாளர்களைத் தொடர்புக் கொள்ளவும்.

சுங்கைப்பட்டாணி வாசகர்களும் இலக்கியவாதிகளும் இங்கு நடக்கும் 5 வகையான நிகழ்வுகளிலும் ஜெயமோகனை நேரிடையாகச் சந்தித்து பேசவும் ஆங்காங்கே நடக்கும் அவரின் உரைகளையும் கேட்கலாம். விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றகங்களில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்படாணி, மலேசியா

Saturday, August 14, 2010

சினிமா விமர்சனம்: தாவரங்களின் நாவும் மனித தற்கொலைகளும் - The Happening

அம்மா தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டின் எதிர்புறத்தில் இரும்பு கதவில் ஊர்ந்து கிடக்கும் கொடியைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருநாளும் அதன் அளவு நீண்டு கொண்டே இருக்கும். அதனைப் பார்த்தப்படியேதான் எங்களின் காலை பொழுதுகள் விடிந்து வெளியில் காத்திருக்கும். கொடி ஊர்வதைப் போல எங்களுக்குள் வீட்டைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் மீதான அன்பும் ஊர்ந்து ஊறிக் கிடக்கின்றன.

அப்பா கொண்டு வந்து சேர்த்த செடிகளில் வர்ணங்கள் எப்பொழுதும் வேறுவேறாகத்தான் தெரியும். காலையில் பார்க்கும்போது இருந்த வர்ணம் மாலையில் சூழலுக்குத் தகுத்தமாதிரி மங்கிப் போயிருக்கும். தாவரங்கள் சூரியன் மறைந்த பிறகு தற்காலிகமாக தற்கொலைச் செய்து கொள்கின்றன போல. தூரத்திலிருந்து எங்கள் வீட்டைப் பார்ப்பவர்கள் அது வீடென்பதைக் கிரகித்துக் கொள்ள கொஞ்சம் தடுமாறிவிடுவார்கள். அந்த அளவிற்குப் பூச்செடிகளும் இரும்பு கம்பிகளில் வேலிகளில் என்று ஊடுருவி பரவிய கொடிகளும் தனது இருப்பைப் பலப்படுத்தி வைத்திருந்தன.

சிறுவயதிலிருந்து தாவரங்கள் அடர்ந்த சூழலில் வாழ்ந்ததால், அந்த வாழ்தலில் கிடைத்த அனுபவத்துடன் இயற்கையின் மேலான பரிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. அன்மையில் பார்த்த the happening என்ற திரைப்படம் தாவரங்கள் மீதான அக்கறையையும் அன்பையும் சிறிதளவு அசைத்துப் பார்த்துவிட்டது என்றே கூறவேண்டும். வெறும் திரைப்படம்தானே என்று அவ்வளவு எளிதாக அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மனித மனநிலைகளை ஒதுக்கிவிட இயலவில்லை.

தாவரங்கள் மனிதர்களின் மீது ஏற்படுத்தும் வன்முறையை மிகவும் முரண்பாடான சூழலில் உலகப் பார்வையை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட படம்தான் M.Night shyamalan அவர்களின் the happening திரைப்படம். இவரின் பெரும்பாலான படங்களில் நீண்டு கிடக்கும் கதைக்கான களம் இருண்மையைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. சில படங்களில் மிகவும் ஆழமான குறியீடுகளை இருண்மை பாணியில் சொல்ல முயற்சித்ததால் சாமன்ய இரசிகர்களுக்குக் கதைக்கான மூலக் கரு விளங்காமலே போய்விடுகிறது. இருந்தபோதும் the happening திரைப்படம் கொண்டு வரும் செய்தி தாவரப் பிரியர்களுக்கும் இயற்கையைச் சுரண்டும் ஏகாத்திபத்திய வளர்ச்சி நிறுவனங்களுக்கும் பெரிய மிரட்டலையே ஏற்படுத்தியுள்ளது.

நாம் புறக்கணிக்க முயலும் ஒன்று நம் வளர்ச்சிக்காகக் கொன்று குவிக்கப்படும் ஒன்று இந்தப் பூமியிலிருந்து நம்மை அப்புறப்படுத்த காற்று வழி மரணமாக வருவதை மிகவும் அபூர்வமாக இந்தப் படத்தில் M.Night Shyamalan பதிவுச் செய்துள்ளார். நீயு யோர்க்கிலுள்ள சென்ரல் பார்க்(central Park) எனும் ஒரு பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களின் இருப்பு திடீரென்று இயக்கம் இழந்து சிலையாகிறது. மரத்தின் அடியிலுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் இரு பெண்களின் உரையாடல் தடைப்படுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் ஏதேதோ உலறுகிறாள், பிறகு சுயமிழந்து தலையிலுள்ள பின்னை உருவி கழுத்தில் சொருகிக் கொள்கிறாள். அதன் பிறகு சிலையாகிய மற்றவர்களின் மனநிலையும் அதேபோல் பாதிக்கப்பட்டு உள்ளார்ந்த நிலையில் அவர்களுக்குள் பெரிய பிரளயம் ஏற்பட்டு சொந்தமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தன்னைக் காயப்படுத்திக் கொள்ள துடிக்கிறார்கள். ஒவ்வொரு உடலாக மண்ணில் சாய்கின்றன. அடுத்து வரும் காட்சியில் உயரமான கட்டடத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிக்கிறார்கள். கீழே விழுந்து சிதறும் அவர்களின் உடல்கள் திடீர் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

முதலில் இது தீவிரவாதிகளால் தொடுக்கப்படும் இராசயண வெடிக்குண்டு (airbomp chemical toxin) எனக் கருதப்பட்டாலும் படத்தின் நடுப்பாகத்தில் இது தாவரங்கள் வெளிப்படுத்தும் ஒருவகையான chemical response என்று வரையறுக்கப்படுகிறது. எங்கெல்லாம் மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றனவோ அங்குதான் முதலில் இந்தக் காற்று பரவி முதலில் அவர்களின் பேச்சில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது(confuse of speak) பிறகு அவர்களின் கவனம் நிலை தப்புகிறது(lost direction) இறுதியாக அவர்கள் மன ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள். சாலையில் போய்க் கொண்டிருக்கும் கார்கள் நின்று விடுகிறது. அதிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும் கண்ணாடியில் மோதி முகத்தைச் சிதைத்துக் கொள்வதும் என தற்கொலைகள் வினோதமாக நிகழ்கின்றன.

அந்தத் தாவரங்களின் தீயக் காற்று பரவும் நகரங்கள் அடையாளம் காணப்படுவதால் ஒருசிலர் அங்கிருந்து கிளம்பி வேறு திசையை நோக்கிப் புறப்படுகிறார்கள். அந்தக் குழுவில் இந்தப் படத்தின் கதாநாயகனான mark wahlberg (அறிவியல் ஆசிரியர்) அவனுடைய மனைவியும் நண்பனின் பிள்ளையும் இடம் பெறுகிறார்கள். அந்தக் குழுவில் இவர்கள் மட்டுமே கடைசியில் உயிர் தப்பிக்கிறார்கள். முழுக் கூட்டமாக நகர்வதால் அந்த விஷக் காற்று நம்மை தாக்கிவிடுகிறது என்பதால் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஓடுகிறார்கள். மனித நடமாட்டம் அதிகமில்லாத சூழலில் மட்டுமே தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற புரிதலில் ஆளுக்கொரு திசையில் மறைகிறார்கள்.

அந்தக் காற்று தாக்கிய மறுகணமே துப்பாகியால் அவர்கள் சுட்டுக் கொண்டு இறப்பதை வெறும் ஒலியினூடாகச் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிக்கும் கதாநாயகனும் அவனது காதலியும் ஒரு வயதான பெண்ணின் வீட்டில் அடைக்களம் பெறுகிறார்கள். பிந்தைய காட்சியில் அந்த வயதான பெண்ணும் தாவரங்களின் விஷக் காற்றால் பாதிக்கப்பட்டு தன் வீட்டுக் கண்ணாடிகளிலே மோதிக் கொண்டு இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

பின்னனியில் நீண்ட சோகத்தின் குறியீடாக ஒலிக்கும் வைலின் இசையுடன் தொடங்குகிற படம் அடுத்து வருக் காட்சிகளில், மனிதர்களைத் துரத்திக் அவர்களின் மூளையின் செயலைத்தளங்களை சேதமாக்கி மூளையின் முக்கியச் செயலாக்கமான பிறப் பாகங்களுக்கு தகவல் அனுப்புவதை தடைச்செய்வதாகக் கதை நீள்கிறது. விழிப்பு நிலை இழந்து தன்னைக் காயப்படுத்திக் கொண்டு (self damaging)மனிதர்கள் இறக்கிறார்கள்.

கதைக்கான களம் பூங்காவில் தொடங்கி பிறகு சிறு நகரத்தில் நுழைந்து சாலை வழியாகப் பயணிக்கின்றது. சிறு நகரத்தில் இருப்பவர்கள் விஷக் காற்று பாதிக்கப்படாத இடங்களை
நோக்கி ஓடுகிறார்கள். செல்லும் வழியில் மரங்களில் மனிதர்கள் தூக்கிலிட்டு சாலைகள்தோறும் தொங்கிக் கிடக்கும் காட்சி தற்கொலையின் உச்சக்கட்டத்தைக் காட்டுகிறது.

இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தும் அழிவை ஒரு காலக்கட்டம்வரை ஏற்றுக் கொள்ளும் இயற்கை திடீரென்று இரசாயண பகிர்வு வழியாக மனித அழிவை ஏற்படுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதைப் போல படமாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தினூடாக தாவரங்களும் செடிக் கொடிகளும் தம்முடைய எதிர்ப்பு சக்தியை இருந்த இடத்திலேயே இப்படியான இராசயண வெளிப்பாடுகள் மூலம்தான் தெரிவிக்கிறது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. The happening திரைப்படத்தை நிகழ்வு சார்ந்த எச்சரிக்கையாகவே அணுக முடிகிறது. இது ஒருவகை தீர்க்கத்தரிசின முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடாகவும் இருக்கலாம்.

இதன் மூலம் இரண்டு மனநிலைகளை உணர முடிகிறது. ஒன்று இயற்கையின் அழிவில் நமக்கெல்லாம் பங்கு இருப்பதால் இனியும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதும் மற்றொன்று வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களைப் பார்க்கும்போது அவையுடன் நட்பு பாராட்டி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதும். எங்காவது நகர மேண்மைக்காக அழிக்கப்படும் மரங்களைப் பார்க்கும்போது அது வெறும் நிகழ்வாகத் தெரிவதில்லை. ஒருநாள் the happening நிகழும் என்பதற்கான எதிர்கால குறியீடாகத்தான் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. இயற்கையின் நாவு வெகுத் தொலைவில் இல்லை.

நன்றி: யுகமாயினி 2009 இதழில் பிரசுரமானது.

ஆக்கம் : கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, August 9, 2010

சிறுகதை: மூனாம் நம்பர் அறை எங்க இருக்கு?

தாத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்திருக்கக்கூடாதுதான். என்ன செய்வது? பின்வாசல் கதவைச் சத்தமில்லாமல் திறந்து மூடும்போது தாத்தாவின் முகம் ஒரு பூச்சாண்டியைப் போல விரிந்து எழ, ஒரு சிறு தடுமாற்றம். எப்படியோ அவருக்குத் தெரியாமல் பள்ளிக்கு வந்தாயிற்று. 10 நிமிடம் நடந்தால் தாத்தா பள்ளியை வந்தடைந்துவிடும் அளவிற்குப் பள்ளியின் நெருக்கம் மேலும் பயமுறுத்தியது. தாத்தா இன்று காலையிலேயே குடித்திருந்தார்.

“டெய் உங்கப்பன் மவனே!” எனக் கத்திக் கொண்டே தாத்தா பள்ளியின் வாசல்வரை வந்து நின்றுவிட்டால், அன்று நான் தொலைந்துவிடுவது நிச்சயம். குறிப்பாக என் வகுப்பில் பயிலும் குமரனும் தர்மேந்திரனும் அடுத்த ஒரு வாரத்திற்கு என்னைப் பற்றி அரட்டையடிக்க கிளம்பிவிடுவார்கள்.

வழக்கமாகச் சொல்வது போல “குடிக்கார தாத்தா பெத்த மவனே” என்பார்கள். என்னை என் தாத்தா பெற்றெடுக்கவில்லை எனச் சொன்னாலும் நம்பமாட்டார்கள். தாத்தாவுடன் இருக்கும் ஒரு காரணத்திற்காக தாத்தா வெளியில் வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் அவப்பெயர்களில் எனக்கும் சிறிய பங்குக் கிடைத்துவிடுவது உறுதி. உயரமான தோற்றம், மெலிந்துபோன உடல், நரைத்துப் போன மயிர். தடிப்பான மீசை. ஏறக்குறைய தமிழ் சினிமாவின் வில்லன் போலத்தான் இருப்பார். அமைதியாகப் பேசுவதோ அல்லது மலாய்மொழி கலக்காமல் பேசுவதோ தாத்தாவிற்குக் கைவராது.

போட்டிக்கு வந்திருக்கும் அனைத்து மாணவர்களையும் அழைத்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இலக்கியப் போட்டிகள் துவங்கப்படவுள்ளது. கவிதை ஒப்புவிக்கும் போட்டிக்காகப் பாரதியார் கவிதை ஒன்றைத் தேர்வு செய்து பயிற்சியும் எடுத்துவிட்டு, இன்று எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் நின்றிருந்தேன்.

“டெ. கவிதையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இன்னிக்குத்தான் சுக்குள் நாள் இல்லையே, எவன் வைக்கறான் உனக்குப் போட்டி?”
“தாத்தா. . இந்த மாதிரி போட்டிலாம் சனிக்கிழமைத்தான் வைப்பாங்க. பிளிஸ் தாத்தா. ஒரு வாட்டி போய்ட்டு வந்துர்றேன்”

“அடி. . பிஞ்சிரும். ஒழுங்க வீட்டுலெ இரு. அப்பறம் இன்னிக்கு வேற உனக்கு காசு தரனும். காசா முளைக்குது இங்க?”

தாத்தா காலையிலேயே கத்திவிட்டு மீண்டும் படுத்து தூங்கிவிட்டார். அணிந்திருந்த பள்ளிச்சீருடையுடன் கையில் வைத்திருந்த பாரதியார் கவிதையும், இன்னும் விடியாத வெளி இருளும் மங்கிக் கொண்டிருந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என யாரிடமும் சொல்லாமல் ஓடி வருவது மிரட்டலாக இருந்தது. யாரோ பின்னால் துரத்திக் கொண்டு வருவது போன்ற பிரமையில் இதயம் படபடக்க பள்ளிக்கு வந்து சேர்ந்தேன்.

“கவிதை ஒப்புவித்தல், மூன்றாவது அறைக்குச் செல்லலாம்”

ஞாபகம் திரும்பியதும் நான் நின்றிருந்த மாணவர் வரிசை மெல்ல நகர்ந்தது. தூரத்தில் தாத்தா பள்ளியின் வெளிவாசல் கதவைத் திறந்துகொண்டு வருவதும் தெரிந்தது. பகீரென்றிருந்தது. கால்களும் கைகளும் நடுங்கத் துவங்கின. வரிசையிலிருந்த மாணவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டே படி ஏறிவிட்டேன். தாத்தா கட்டாயம் யாரிடமாவது என்னைப் பற்றி விசாரிப்பார். அல்லது ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு என்னைத் தேடி அலைவார், அல்லது தலைமை ஆசிரியரைப் பார்த்து அவமரியாதையாகப் பேசுவார். ஏதாவது ஒன்று நடந்தாலும் என்னை அவர் தரதரவென பள்ளியிலிருந்து வெளியிலுள்ள சாலைக்கு இழுத்துக் கொண்டு போவது உறுதியாகிவிடும். போட்டிக்கு வந்திருக்கும் வேறு பள்ளி மாணவர்களுக்கும் என்னைப் பற்றி தெரிந்துவிட்டால்?

மூன்றாவது மாடியை அடைந்ததும், கீழே எக்கிப் பார்த்தேன். தாத்தா கோபு வாத்தியாருடன் பேசிக் கொண்டிருந்தார், கட்டாயம் என்னைத் தேடி வருவார் என உறுதியாகிவிட்டது. கவிதை ஒப்புவிக்கும் போட்டியும் அதன் போட்டியாளர்களும் என்னைவிட்டுத் தூரமாக விலகிச் செல்வது போல ஆகிவிட்டது. எனக்குப் பிடித்ததைச் என்னால் செய்ய முடியாதா? கையில் வைத்திருந்த பாரதியார் கவிதையை ஒருமுறை உற்றுப் பார்த்தேன். அதன் சொற்கள் இடம் மாறி நகர்வது போல தோன்றியது. மீண்டும் கீழே எக்கிப் பார்த்தேன். தாத்தா படிக்கு அருகில் வந்து நின்றிருந்தார். பாக்கேட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் அருகில் யாரோ ஒருவரை அழைத்து எதையோ கேட்டுக் கொண்டிருந்தார்.

“மூனாம் நம்பர் ரூம்பூ எங்க இருக்கு?” எனத் தாத்தா கட்டாயம் கேட்டிருப்பார். அந்த நபர் கையை மேலே உயர்த்தி இந்த மூன்றாவது அறைக்கு வரும் வழியைக் காட்டியிருக்கக்கூடும். இன்னும் 5 நிமிடத்தில் தாத்தா இங்கு வந்து என்னை அடித்து இழுத்துக் கொண்டு போகும்போது, “பொய் சொல்லிட்டு வீட்டுலேந்து ஒடியாந்துட்டியா” எனச் சொல்வார். அப்பொழுது எல்லோருக்கும் தெரிந்துவிடும் நான் பொய்க்காரன் என. இங்கிருந்து ஓடிவிடலாம் எனவும் தோன்றியது. போட்டிக்கான முதல் நபரைக் கவிதையை ஒப்புவிக்க அழைத்தார்கள். நான் மூன்றாவது போட்டியாளர். ஒருவேளை தாத்தா கொஞ்சம் தாமதமாக இந்த மூன்றாவது அறையைக் கண்டுபிடிக்க நேர்ந்தாலும், எனது கவிதையை ஒப்புவித்து முடித்துவிடுவேன்.

மீண்டும் அறைக்கு வெளியே தலையை நீட்டி பார்த்தேன். மூன்றாவது மாடியின் வரந்தா கோடியில் தாத்தா ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தார். எனக்கு வயிறு வலிப்பது போல் இருந்தது. கைகளின் நடுக்கம் அதிகரித்திருந்தது. மனதை எப்படித் திடப்படுத்துவது எனக்கூட தெரியவில்லை. கையில் வைத்திருந்த பாரதியார் கவிதை இனி பயன்படாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். அதை எடுத்து சுருட்டி பாக்கெட்டில் வைத்துவிட்டேன். தாத்தா மூன்றாவது அறையின் வாசலில் வந்து நின்றார்.

“சுகுமாறன் இருக்கானா?” கவிதை ஒப்புவிக்கும் போட்டியை நடத்திக் கொண்டிருப்பவரைப் பார்த்து தாத்தா சத்தமாகக் கேட்டார். எனக்குப் பாதி உயிர் போய்விட்டது. வீட்டிலிருந்து ஓடிவரும் போது பின்வாசல் கதவை அடைக்க மறந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.

“சுகுமாறன் யாரு?”

எழுந்து நின்றேன். தாத்தா கையைக் காட்டி வெளியில் அழைத்தார். பயத்துடன் வெளியில் போய் நின்றேன். அறையில் இருந்த எல்லோரும் என்னையும் தாத்தாவையும் பார்த்தார்கள். தாத்தா அருகில் நெருங்கி வருவதைப் பார்த்ததும் அநேகமாக இங்கு ஒரு குட்டி யுத்தம் நிகழப் போவதை எல்லோரும் வேடிக்கைப் பார்த்துச் சிரிக்கப் போகிறார்கள் எனத் தீர்மானித்துவிட்டேன். புறமுதுகைக் காட்டியவாறு திரும்பினேன். தாத்தா என் கையை இழுத்துப் பிடித்தார்.

“டெ! வந்துட்டெ சரி. . காசு வாங்கனயா? என்னத்தெ சாப்டுவெ? இந்தா பிடி 1 வெள்ளி இருக்கு. வச்சிக்க” எனக் கூறிவிட்டு தாத்தா மீண்டும் நடக்கத் துவங்கினார்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா