Wednesday, May 6, 2015

செம்பருத்தி.காம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு

‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ & மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்’



கடந்த 12 வருடமாகத் தீவிரமாக எழுதி வரும் நவீன எழுத்தாளரும் தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களை புதிய உத்திகளிலும், புதிய முறைகளிலும் சொல்லி வரும் கவனிக்கத்தகுந்த ‘கரிகாற்சோழன் 2011’ விருதை வென்ற மலேசியாவின் இளம் நாவலாசிரியரான கடாரத்தைச் சேர்ந்தச் கே.பாலமுருகனின் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவலும், சிறுவர் மர்மத் தொடர் நாவலின் இரண்டாம் பாகமான ‘மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்’ வெளியீடு காணவிருக்கின்றன. அந்த நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி, 2.00மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன், தான்சிறி சோமா அரங்கத்தில் மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனரும் சமூக சேவையாளருமான திரு.சி.பசுபதி அவர்களின் தலைமையில் வெளியீடு காணவிருக்கின்றன.




மேலும், வழக்கறிஞரும் கட்டுரையாளருமான திரு.கா.ஆறுமுகம் அவர்களின் வாழ்த்துரையும், நாடறிந்த மூத்த எழுத்தாளர் டாக்டர் மா.சண்முகசிவா அவர்களின் மலேசிய நாவல்கள் தொடர்பான இலக்கிய உரையும், எழுத்தாளர் ந.பச்சைபாலன், யோகி, இலக்கியகத்தைச் சேர்ந்த திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் நாவல் விமர்சனங்களும் இடம் பெறவிருக்கின்றன. 1980களுக்குப் பிறகு தோட்டத்துண்டாடல்கள் காரணமாகவும் வேலை இழப்புகள் காரணமாகவும் தோட்டங்களைவிட்டு ஓடிவந்து கம்பங்களிலும் ஆற்றோரங்களிலும் அடுக்குமாடிகளிலும் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கையில் நுழைந்த வன்முறையின் வரலாற்றை பேசும் கே.பாலமுருகனின் இந்த நாவல் சமூகத்தில் நாம் கண்டுக்கொள்ளாத குற்றவாளிகளின் உருவாக்கங்களைக் கேள்வி எழுப்புகிறது. அதுபோன்ற இந்திய சமூகத்தின் இருண்ட வரலாற்றைப் பேசும் இந்த நாவலின் வெளியீட்டுக்கு வருகையளித்து ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் மலேசியாவின் முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவலின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்’ என்கிற மலேசிய இந்திய சிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல் இரண்டாம் பாகமும் இந்த நூல் வெளியீட்டில் வெளியீடு காணவிருப்பதால் இலக்கியவாதிகள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினர்களையும் நாவல்கள் வெளியீட்டுக்கு வருகையளித்து ஆதரவு நல்கும்படி எழுத்தாளர் கே.பாலமுருகன் கேட்டுக்கொண்டார். மேல் விவரங்களுக்குத் தொடர்புக்கொள்ளவும். கே.பாலமுருகன் 0164806241.

Tuesday, April 21, 2015

திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்

மணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒளிப்பதிவு

மும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

லீலா

இந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.

Saturday, April 18, 2015

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

http://www.selliyal.com/?p=88939
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தமிழ் நாவல் போட்டியில் 2007ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்று தமிழ் இலக்கியச் சூழலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதோடுமட்டுமல்லாமல் அவருடைய அந்த நாவல், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முஸ்தப்பா அறவாரியத்தின் வழியாக அவருக்கு ‘கரிகாற் சோழன்’ விருதைப் பெற்றுக் கொடுத்தது. நாவல் பயணத்தில் தனித்து விளங்கும் கே.பாலமுருகனின் அடுத்த இரண்டு குறுநாவல்கள் அடங்கிய ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் தொகுப்பு குறித்து அவரிடம் உரையாடியபோது:
unnamed (1)
கேள்வி: ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவல் எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன?
கே.பாலமுருகன்: நான் எனது 11ஆவது வயது முதல் 15ஆவது வயதுவரை ஆற்றோரக் கம்பத்தில்தான் வாழ்ந்தேன். பின்னர் அந்த ஆற்றோரம் இருந்தவர்களுக்கு ஒரு மலிவு அடுக்குமாடி கட்டித்தரப்பட்டது. நாங்கள் சீனக் கம்பத்திலேயே இருந்துவிட்டோம். என் நண்பர்கள் பெரும்பாலானோர் அடுக்குமாடிக்குப் போய்விட்டதால் வாரத்தில் நான்குமுறை அங்குப் போய் அவர்களுடன்தான் இருப்பேன்.