Friday, December 11, 2009

தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் எங்கே தங்களின் குரல்?

இந்திய இளைஞர் மேம்பாட்டுப் பேரவையின் தலைவரும் வாசகருமான தமிழ்வாணன் அவர்கள் எசு.பி.எம் தமிழ் மொழி பாட விவகாரத்தில் தமிழ் மொழிக்கான அங்கீகாரம் பெறும் போராட்டக் களத்தில் இன்னமும் வெளியே எட்டிப் பார்க்காத தமிழாசிரியர் சங்கங்களையும் தலைமை ஆசிரியர்கள் மன்றங்களையும் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்வி எனக்கும் எழுந்தது. தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தையும் உரிமையையும் பெறும் வகையில் இந்திய சமூகமே தமது தாய்மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு பலவகையான தற்காப்பு கருத்துகளையும் எதிர்க்குரலையும் பதித்தவாறே இருக்கையில், தமிழ் மொழியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழாசிரியர் சங்கமும் தலைமை ஆசிரியர் மன்றமும் இன்னமும் கூட மௌனமாக இருப்பது பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது.

என்ன நடந்தால் என்ன? சம்பளம் பெறப்போவது உறுதி என்கிற அலட்சியமா? அல்லது போராட நேர்ந்தால் பதவியும் வாய்ப்புகளும் பறிப்போய்விடும் என்கிற அச்சமா?

சிறுபான்மையின் உரிமைகள் ஒவ்வொருமுறையும் புறக்கணிக்கப்படும்போதெல்லாம் அதை எதிர்த்துக் குரல் கொடுக்காதவர்கள் சமூகத்தின் து. . .கள் எனத்தான் அழைக்க வேண்டும். கொடியைத் தூக்கிக் கொண்டு சட்ட விரோத பேரணியின் ஈடுப்படச் சொல்லவில்லை. சாலை மறியலில் ஈடுப்பட சொல்லவில்லை. குறைந்த அளவில் தமிழ்வாணன் குறிப்பிட்டிருப்பது போல தங்களின் தற்காப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான தரமான கருத்துகளையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இதுதான் சமூகத்தின் ஆதங்கம்.

ஒரு மொழிக்கு அரசியல் பின்னடைவுகள் வருகிறதென்றால் அதை உடனே களைய தொடர்புடையவர்கள் பெரும் அரசியல் சக்திகளாக கூட்டமைந்து தமது கருத்துகளை நாகரிகமான முறையில் எடுத்து முன்வைத்தால், அதைத் தடுப்பதில் முன்னேற்றம் காணலாம். செய்வார்களா? அல்லது இதுவும் வழக்கம் போலான அடித்தட்டு மொழி உணர்வாளர்களின் போராட்டமாக முடிவடைந்துவிடுமா?

செய்திப்படம்: மக்கள் ஓசை (11.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, December 10, 2009

தேர்வு பாடங்களா கட்டாய பாடங்களா? எதை எடுப்பது? எதை விடுவது?

அரசியல் விழுமியங்களின் விளிம்பு மதிப்பீடுகளாக தற்போதைய சிறுபான்மை இனத்தின் தாய்மொழி தற்காப்பு உணர்வு மேலோங்கி அதிகார மையங்களை நோக்கி புதிய அனுமானங்களையும் கருத்துகளையும் பதிவு செய்தவாறே இருக்கின்றன.

எசு.பி.எம் தேர்வில் எந்தப் பாடத்தை எடுப்பது எந்தப் பாடத்தை விடுவது என்கிற உச்சமான மன உளைச்சல் இனி எதிர்காலங்களில் உருவாகும் வகையில் புதிய தீர்மானங்கள் தனது எல்லையை விரித்துள்ளன. எதை எடுப்பது எதை விடுவது என்ற கேள்வியே தமிழ் மொழியை(இந்தியர்களின் தாய்மொழி) விழுங்குவதற்கு ஆயிரம் நாக்குகள் என காத்துருப்பது போன்ற தொனியைக் கொண்டுருக்கிறது.

இனி புதிய விவரங்கள்:

அறிவியல் பிரிவுக்கான கட்டாயப் பாடங்கள்:

1. தேசிய மொழி
2. ஆங்கிலம்
3.கணிதம்
4.வரலாறு
5. நன்னெறிக் கல்வி (மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு)
6.பௌதிகம்-அல்லது
7.ரசாயணம்
8.உயிரியல்-அல்லது

தேர்வுப் பாடங்கள்

1. அறிவியல்- தொழில்நுட்பப் பாடத்திற்கான ஆங்கிலம்
2. கூடுதல் கணிதம்
3. கணக்கியல்
4. பொருளாதாரம்
5.வாணிபம்
6. தமிழ் மொழி
7. தமிழ் மொழி இலக்கியம்
8. பூகோளம்

கலைப் பிரிவுக்கான கட்டாயப் பாடங்கள்

1. தேசிய மொழி
2. ஆங்கிலம்
3. கணிதம்
4. வரலாறு
5. பொது அறிவியல்
6. நன்னெறிக் கல்வி (மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு)

தேர்வுப் பாடங்கள்

1. அறிவியல்- தொழில்நுட்பப் பாடத்திற்கான ஆங்கிலம்
2. கூடுதல் கணிதம்
3. கணக்கியல்
4. பொருளாதாரம்
5. வாணிபம்
6. தமிழ் மொழி
7. தமிழ் மொழி இலக்கியம்
8. பூகோளம்
9.கலைத்துறை

அமைச்சரவையின் புதிய தீர்மானமான எசு.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் ஆனால் மொத்த புள்ளி கணக்கெடுப்பில் 10 பாடங்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படும் மேலும் கூடுதலான் இரு பாடங்கள் எதிலுமே சேர்த்துக் கொள்ளப்படாது. இவற்றில் பெரிய சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் எதை அந்த இரு கூடுதல் பாடங்களாக எடுத்து விரையம் செய்யப் போகிறார்கள் என்பதுதான். இந்தத் தேர்வு ரீதியிலும் பள்ளியின் நிர்வாகத்தின் தலையீடும் அடங்கியிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஒரு சில பள்ளிகள் தேர்வு பாடங்களான சிலவற்றை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற விதியை வைத்திருப்பது ஆரோக்கியமற்ற விடயமாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக கலைப் பிரிவு மாணவர்கள் கட்டாயப் பாடமாக 6 பாடங்கள் எடுக்க வேண்டும், இப்பொழுது கூடுதலாக அவர்கள் 4 பாடங்கள் எடுக்கலாம். அந்த 4 தேர்வுப் பாடங்களில் பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் பொருளாதாரம், வாணிபம், பூகோளம், கலைத்துறை போன்றவற்றைக் கட்டாயம் எடுக்க வேண்டும் என்கிற விதியை வைத்திருப்பதால், மாணவர்கள் அதையும் எடுத்தாக வேண்டும். ஆக மொத்தம் தமிழும் தமிழ் இலக்கியமும் இல்லாமல் 10 பாடங்கள் ஆகிவிட்டன. இனி அந்தத் தமிழ் பாடமும் தமிழ் இலக்கியமும் இரு கூடுதல் பாடங்களின் வரிசையில் வந்துவிட்டால், அது அலட்சியத்திற்க்குரிய பாடமாக எந்த மதிப்பீடும் இல்லாமல் தேங்கி நின்றுவிடும். நமது தாய்மொழிக்கு இந்த நிலைமை வர வேண்டுமா?

எசு.பி.எம் தமிழ் மொழி இலக்கியப் பாட மீட்பு குழு நடத்தும் :

கவன ஈர்ப்புக் கூட்டம்
நாள்: 12.12.2009 (சனிக்கிழமை)
இடம்: தோட்ட மாளிகை
நேரம்: காலை மணி 10

இன்றைய தினத்தில் இந்திய மக்கள் ஒன்றாக இனைந்து அரசாங்க சார்பற்ற இயக்கங்களுடன் இந்த மாற்றங்கள் குறித்தும் எதிர்க்கால அரசியல் விளைவுகள் குறித்தும் மீண்டும் தமிழுக்கு வலு சேர்க்கும் தீர்மானங்கள் குறித்தும் ஒரு மிகப் பெரிய கலந்துரையாடலை நடத்தவுள்ளது. தமிழ் ஆர்வளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிக்கவும்.

நன்றி: மக்கள் ஓசை நாளிதழ்(10.12.2009)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Monday, December 7, 2009

தமிழ் மொழி (நீக்குதல் - நீங்காமை) பின்விளைவுகள்

எஸ்.பி.எம் உயர் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே மாணவர்கள் எடுக்க முடியும் என்கிற கல்வி அமைச்சின் அறிவிப்பு குறித்து நாடளவில் இந்திய சமூகத்தினரிடமிருந்து பெரும் எதிரிவினைகளும் எதிர் கருத்துகளும் ஆட்சேபனைகளும் சமூக அமைப்பு சார்ந்தும் தனி மனிதர்கள் சார்ந்தும் வெளிவந்தவண்னமே உள்ளன.

இதற்கிடையில் நேற்றைய முன்தினம் கூடிய அமைச்சரவை இந்தப் பிரச்சனைகள் குறித்து மாற்று அறிவிப்பைத் தெரிவித்திருந்தது. இனி எஸ்.பி.எம் மாணவர்கள் 12 பாடங்கள் வரை தேர்வில் எடுக்கலாம் ஆனால் 10 பாடங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், உயர்/தொடர்க் கல்விக்கான விசயங்களில் மொத்த கணக்கிட்டில் கூடுதலாக எடுத்த இரு பாடங்களும் சேர்த்துக் கொள்ளப்படாது எனும் வகையில் அந்த அறிவிப்பு இருந்தது.

இந்த அறிவிப்பு குறித்து மீண்டும் எதிர் அலைகள் கிளம்பியுள்ளன. தமிழுக்கு நிகழப் போகும் அரசியல் பின்னடைவுகளை முன்வைத்து இந்த அறிவிப்பை அணுக நேர்ந்தால், அமைச்சரவையின் இந்தத் திடீர் மாற்றம் இந்திய மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பின்விளைவுகளின் அலசல்:

1. தொடர்க் கல்விக்குரிய நிபந்தனைகளில் கூடுதலாக எடுக்கப்படும் அவ்விரு பாடங்கள், அதாவது (தமிழும் தமிழ் இலக்கியமும்) எந்தவகையிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பதன் மூலம் எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்களின் மன அமைப்பு தமிழ் பாடத்திற்கு எதிராகச் சிந்திக்கத் தூண்டக்கூடும்.

2. அறிவியல் துறையில் பயிலும் மாணவர்கள் கூடுதல் பாடமாக தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்க நேர்கையில், அவ்விரு கூடுதல் பாடங்களுக்கும் அங்கீகாரம் இல்லாத சூழலை சிறுக சிறுக ஆழமாக உணர நேரும்போது, அந்த இரு பாடங்களையும் ஒரு சுமையாக எண்ணி எதிர்க்காலத்தில் அந்தப் பாடங்களை அவர்கள் துறக்க நேரிடும்.

3. கலை துறையில் பயிலும் மாணவர்கள் மேல்படிப்பிற்கான வாய்ப்புகளை நிர்ணயம் செய்யும் அளவுகோள்களாக தமிழ் பாடம் இல்லாதிருப்பதை உணர்ந்து, அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், மிக அலட்சியமாக தமிழ் மொழியை எண்ணுவதற்கு வழிவகுக்கும்.

4. கூடுதல் பாடங்கள் எந்த ரீதியிலுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் மூலம், மாணவர்கள் அக்கூடுதல் பாடங்களை எடுக்காமல் தவிர்த்துவிட வாய்ப்பிருக்குமாயின், மீண்டும் தாய்மொழிக்கான அழிவு உறுதிப்படுத்தப்படும், மீண்டும் போராட்டம் எதிர்க்காலத்தில் தொடங்க நேரும்.

5. இதற்கு முன் வரையறை இல்லாத ரீதியில் அவரவர் விருப்பத்திற்கேற்ப எஸ்.பி.எம் தேர்வில் கூடுதல் பாடங்களைத் தேர்வில் எடுத்து, அதில் சாதித்துக் காட்டியும், அவர்களின் எதிர்க்கால கல்வி வாய்ப்பை பரந்தப்பட்ட சூழலில் அமைத்துக் கொண்டு சாகச பிம்பங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இது ஒரு தனிநபரின் கல்வி சுதந்திரமாகும். இந்தச் சுதந்திரம் வரையறுக்கப்படுவதன் மூலம், கல்வி ஒரு அதிகார மையத்தின் உற்பத்தி போல அடையாளப்படுத்தப்படவும், மாணவர்கள் இந்தக் கல்வி அமைப்பின் மீதான விரக்தியையும் சலிப்பையும் வெளிப்படுத்தக்கூடும்.

6. எதிர்க்காலத்தில் இந்திய மாணவர்கள் தமிழ் கல்விக்கான பங்களிப்புகளைப் பின்னடைவிற்கான களமாக அறிய நேர்ந்தால், தமிழால் பயனில்லை என்ற அரசியல் விடயத்தை முன்வைத்து, தமிழைப் புறகணிக்கக்கூடும். இதன் மூலம் உயர் கல்விக்கூடங்களில் தமிழ் வகுப்புகள் காலியாககூடும்.

7. 1998 தமிழ் இலக்கியம் பாடத்தை எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 361 ஆக இருந்தது, ஆனால் 2008இல் அந்த எண்ணிக்கை 4000 ஐ கடந்து பெரிய அளவிலான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இதை உடனடியாக இத்தகைய வரையறையின் மூலம் முடக்குவதால், தமிழ் இலக்கியம் மீதான மாணவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் வேறறுக்கப்படும் மேலும் தரமான தமிழ் இலக்கிய அறிவைக் குறைத்து, எதிர்க்காலத்தில் மலேசிய தமிழ் படைப்புகளில் காலி இடங்களை மட்டுமே மீதமாக விடப்படும்.

8. மேலும் நாளடைவில், எஸ்.பி.எம் உயர் தேர்விலேயே தமிழ் ஓர் அங்கீகாரமிக்க பாடமாக இல்லாதிருப்பதை உணரப்படும்போது, பி.எம்.ஆர் தேர்விலும் தமிழ் மொழி பாடத்தை ஓர் அலட்சியமிக்க பாடமாகக் கருதப்பட்டு நீக்கப்படவும் வாய்ப்புண்டு. மேலும் மாணவர்களின் தமிழ் மொழி பாடத்தின் அடைவுநிலையும் சரியக்கூடும்.


ஒரு நாட்டின் சிறுபான்மை இனத்தவரின் மொழியையும் இலக்கியத்தையும் வளர்க்க எந்த அளவிலான முன்னேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு கையாளப்பட்டுள்ளன என்பதன் ஆய்வும் அதனையொட்டிய விமர்சனமும் மிக முக்கியமானவை. ஆனால் இங்கு அரசாங்க சார்பற்ற இயக்கங்களே தமிழ் இலக்கியத்தை வளர்க்க பல திட்டங்களை முன்னெடுக்கின்றன. குறைந்தபட்சம் கல்வி ரீதியிலாவது தமிழ் இலக்கியத்தைப் பயிற்றுவிக்க கற்பிக்க அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு தடையும் வரையறையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

தமிழ் இலக்கிய அறிவும் மொழியறிவும் சிறந்த மொழி ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க துணைப்புரியும் என்பதை உணர்ந்து தேசிய ரீதியில் தமிழ் இலக்கியத்தையும் மொழியையும் அங்கீகரிக்கவும் அதன் தொடர்பான உயர் கல்வி மதிப்பீடுகளுக்கு அந்தப் பாடங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதையும் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் கோறிக்கைகளாகும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 சுங்கைப்பட்டாணி, மலேசியா
                http://bala-balamurugan.blogspot.com/

Saturday, December 5, 2009

எஸ்.பி.எம் தேர்வு குறித்த அமைச்சரவை தீர்மானமும் மீண்டும் அதிருப்தியும்

நேற்று கூடிய அமைச்சரவையில் இந்திய மக்களின் ஒட்டு மொத்த எதிர்வினையாலும் எதிர்ப்புக் குரலாலும், அரசாங்கம் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் என்கிற அறிவிப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தயக்கமின்றி தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தேர்வில் எடுக்கலாம். இது சிறுபான்மை இனத்தின் மிகப் பெறிய வெற்றி என்றே சொல்லலாம். வன்முறையைக் கையாளாமல் கருத்தியல் ரீதியிலான அணுகுமுறையினால் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது.
வெளி அமைப்புகள், பத்திரிக்கைகள் மேலும் தனிநபர்கள் என தமிழுக்கு ஆதரவாக எதிர்வினைகளை கருத்துகளை தைரியமாக பதிவுச் செய்திருப்பது தமிழ் சமூதாயம் இன்னமும் விழிப்புநிலையில் இருப்பதையே அடையாளப்படுத்துகிறது.

இருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் மீண்டும் ஒரு அதிருப்தியை எழுப்பியிருக்கிறது. அமைச்சரவையில் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்திய மக்களின் சார்பாக முன்வைத்த கோரிக்கையைக் கலந்துரையாடிய அமைச்சரவை எடுத்திருக்கும் புதிய தீர்மானங்கள் இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது:

1.இனி வரும் எஸ்.பி.எம் மாணவர்கள் தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே தேர்வின் முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.மேலும் கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.(அதாவது தமிழ் / தமிழ் இலக்கிய பாடங்கள் அரசு ரீதியிலான எந்த மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படாது)

அப்படியென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் பொழுது போக்கு பாடங்களாக மாற்று அடையாளத்துடன் திரும்பவும் கொண்டு வரப்படுகிறது என்று மட்டுமே அர்த்தப்படும். ஓர் அரசு ஏன் சிறுபான்மை இனத்தின் தாய்மொழியை அங்கீகரிக்க இத்துனை தயக்கங்களைக் காட்டுகிறது என்ற கேள்வி சராசரி குடுமகனுக்கும் எழக்கூடும். இதன் மூலம் மூன்று முக்கிய இனத்தவர்களின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, பெரும்பான்மை சிறுபான்மை என்கிற இடைவெளியின் மொத்த அரசியல் சௌகரிகங்களையும் முன்வைத்து எடுக்கப்படும் மேல்மட்ட தீர்மானங்களா இவை?

எல்லாம் எஸ்.பி.எம் மாணவர்களுக்கும் தேசிய மொழி கட்டாயப் பாடமாக இருக்கும் பட்சத்தில், ஏன் இந்திய மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க மலேசியாவில் வழியில்லை? எங்களின் மொழியை அங்கீகரிக்கவும் அதை எஸ்.பி.எம் தேர்வு அறிக்கையில் மரியாதைக்குரிய மொழியாக அங்கீகரித்து வெளியீடவும் ஏன் அரசாங்கம் இத்துனை மௌனங்களையும் தடைகளையும் உற்பத்தி செய்து வாளாயிருக்கிறது? என்று ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கேள்வியாலும் சந்தேகத்தாலும் எதிர்ப்பார்த்து நிற்கின்றது.

அமைச்சரவைக்கு மீண்டும் ஓர் எதிர்க்கருத்தாக,நியாயமான வேண்டுகோளாக அவர்களின் தீர்மானங்களை மாற்றியமைக்கக் கோறி, தோட்ட மாளிகையில் வருகின்ற 12.122009 நடப்பதாக இருந்த கவன ஈர்ப்புக் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். கெடா பினாங்கு மாநைலங்களிலிருந்து 10 பேருந்திற்கும் மேலாக வரவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புக் கூட்டங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அடுத்த மாற்றம் குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, December 3, 2009

சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு - மொழி பேரழிவு



கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 4391 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு பாடமாக எடுத்து அதன் தேர்வையும் எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை 1998-இல் 340ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடக் காலக்கட்டத்தில் 4000 இந்திய மாணவர்கள் தன் தாய்மொழி மீதான அக்கறையையும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் காட்டியிருப்பது பெருமைக்குரிய முன்னேற்றமாகும். இனத்தின் அடையாளம் மொழியும் மொழியறிவும் ஆகும் தொடர்ந்து தன் தாய்மொழியை வளர்ப்பதன் மூலமும் அதை அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதன் மூலமும் ஒரு மொழியை அழியாமல் பாதுகாக்க இயலும்.

அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. ஒரு சராசரி மலேசிய குடிமகனாக இந்தப் பிரச்சனையை அணுகும்போது, தமிழ்க் கல்விக்கே பேரழிவு நடைப்பெறவிருப்பதை மிகவும் வெளிப்படையாக அனுமானிக்க முடிகிறது.

எஸ்.பி.எம் என்பது மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள்(17/18 வயது)) படிவம் 5இல் மேற்கொள்ளும் உயர் தேர்வாகும். இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடரலாம் அல்லது வெளிநாட்டில் பயிலச் செல்லலாம், அல்லது உள்நாட்டு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்றகம், தொழில் திறன் பயிற்சி கல்லூரிகள் எனத் தொடரலாம். இத்துனைக் காலமாக எஸ்.பி.எம் தேர்வில் கலை மற்றும் அறிவியல் வகுப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தனது தேர்வு பாடமாகவும் எடுத்து வந்தனர்.

ஆனால், அடுத்த வருடம் தொடக்கம், எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடம் மட்டுமே எடுக்க முடியும் என்கிற வரையறை கல்வி அமைச்சின் புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி இரண்டு வகையான மொழி பேரழிவு தனது அரசியல் கிளையைப் பரவவிடும் என்பதை நமது இந்திய கல்வியாளர்கள் உணர்ந்து அதை வெளிப்படையாகப் பொது மக்களுக்கு தெரிவிப்பார்களா என்பதும் சந்தேகத்திற்குரிய இடமாக இருக்கிறது.

பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்களின் மொழியான தேசிய மொழி(மலாய் மொழி) கட்டாயப் பாடமாகவும் அதிகாரப்பூர்வ மொழியாகவும் கற்பிக்கப்பட்டு, அதை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வி வாய்ப்புகள் சாத்தியப்பட வேண்டுமென்றால் தேசிய மொழியில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற சட்டத்தை ஒட்டுமொத்த மலேசியர்களும் ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் இன்னமும் அதைப் பின்பற்றுவதோடு தமிழ்ப்பள்ளியில் மரியாதைக்குரிய வகையிலும் நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டு, இன்றும் நம் இந்திய மாணவர்கள் தேசிய மொழியான மலாய் மொழியில் சிறந்த தேர்ச்சிப் பெற்றும் வருகின்றனர். சிறுபான்மையினர் தேசியத்தை ஏற்றுக் கொள்வதோடு மதிக்கவும் செய்கிறார்கள், ஏன் இந்தத் தேசியம் சிறுபான்மையினத்தவரின் தாய்மொழிக்கு சரிவு ஏற்படகூடிய சட்டங்களை அமல்ப்படுத்த வேண்டும்?

எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற சட்டம், இந்தப் புது நடைமுறை அமலுக்கு வந்தால் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது தமிழ் இலக்கியம் என ஏதாவது ஒன்றையே தேர்வு செய்ய முடியும், மேலும் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் இரண்டு தமிழ் பாடத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும்.(மக்கள் ஓசை 2.12.2009) இது தாய்மொழிக்கு நேரிடையாக ஏற்படப் போகும் அழிவு என்பதை எந்தவித உடனடி உணர்ச்சிவசத்திற்குரிய புரிதலும் இல்லாமல் மிக வெளிப்படையாகவே தெரிந்துகொள்ள முடியும்.

    "எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை, ஆகையால் தாய்மொழி தேர்வை பள்ளியளவிலேயே எழுதிக் கொள்ளுங்கள்" என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு முக்கியமான சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்கு எதிரான ஆதிக்கக் குரலாக இந்தப் புதிய சட்டத்தை அணுகக்கூடுமா? தேசியம் என்ற கட்டமைப்பு சிறுபான்மையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர சிறுபான்மையின் முக்கியத்துவங்களை அலட்சியப்படுத்துவதாக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது அரசியலின் மிகப் பெரிய தவறாகவும், அரசியல் சக்திகளின் நேர்மையின்மையெனவும் கருதக்கூடும்.

பள்ளி அளவிலேயே தாய்மொழி தேர்வை நடத்திக் கொண்டு, பள்ளி நிர்வாகமே அதற்குரிய சான்றிதழை வழங்கிக் கொள்ளட்டும் என்ற பரிந்துரை மேல்மட்ட தீர்மான மதிபீட்டுக் கொள்கையிலிருந்து சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியை அலட்சியப்படுத்தி நீக்குவது போல தோன்றுகிறது. இது ஒருவகையில் தாய்மொழியைப் பயின்றால் எதிர்க்காலத்தில் வேலை வாய்ப்பும் வெற்றி வாய்ப்பும் இல்லை, அதே சமயம் அறிவியல் மாணவர்களுக்குத் தமிழ் மொழி தேவையில்லாத மொழியாகிவிடும் என்கிற புரிதலையும் கொண்டிருக்கிற அரசின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

“ஒரே மலேசியா” என்கிற கொள்கையின் தந்தையான மலேசியப் பிரதமர், இந்தச் சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்குரிய பெரும் பாதிப்பை உடனடியாக உணர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க ஆலோசிக்க வேண்டும் என்றுதான் இந்திய சமூகமே எதிர்ப்பார்க்கின்றது.

குறிப்பு:  ஏ எடுக்க முடியாமல் போனதற்காக, தற்கொலை செய்து கொண்ட இந்திய மாணவர்களின் முகங்களும், அதே சமயம் 6 பாடத்தில் ஏ எடுத்து ஒரு பாடத்தில் வீழ்ச்சி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட யூ.பி.எஸ்.ஆர் மாணவரின் முகமும் தோல்வியின் பிம்பமாக வந்துவிட்டுப் போகிறது. அப்படி வந்துவிட்டுப் போகும் போதெல்லாம் எந்தவித முன்னறிப்பும் இன்றி அதிருப்தியும் கோபமும் ஏற்படுகின்றது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.


Tuesday, December 1, 2009

பிழையான செய்தியை வெளியிடுவதுதான் பத்திரிக்கை தர்மமா? மலேசிய நண்பன் பத்திரிக்கைக்குக் கண்டனம்

ஒரு முக்கியமான செய்தி தகவல் ஊடகமான பத்திரிக்கையில் வெளியிடப்படுகிறதென்றால், அது பலமுறை ஆய்வு செய்யப்பட்டு, தகவல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு தொடர்புடையோரின் அனுமதியும் பெற்ற பிறகுதான் பிரசுரம் ஆக வேண்டும். இது பத்திரிக்கையில் செய்தி பிரசுரத்திற்கான நம்பகமான வழிமுறை.

ஆனால் அன்மையில் (29.11.2009) மலேசிய நண்பன் பத்திரிக்கையில் வெளிவந்த “யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் கோலா மூடா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகளின் வீழ்ச்சி” எனும் தலைப்பிட்ட செய்தியில் பிழையான தகவலை எப்படிப் பொறுப்பிலுள்ள பத்திரிக்கை அனுமதித்திருக்கக்கூடும் என கேள்வி எழுகிறது. அந்தப் பத்திரிக்கை செய்தியில் கேள்விக்கு இடமாக வழிமுறை தவறிய இரண்டு விசயங்கள் யாருடைய கவனக்குறைவால் கையாளப்பட்டுள்ளது எனவும் தெரியவில்லை.

1. கோலா மூடா யான் (கெடா மாநிலம்) சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தொடர்ந்து 3 ஆண்டுகள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் வீழ்ச்சி அடைந்து வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – மலேசிய நண்பன்

மேற்குறிப்பிட்ட தகவல் பிழையானதாகும். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களைச் சந்தித்த போது, அவர் ஆதாரத்துடன் மூன்றாண்டுகளாக அப்பள்ளி தேர்வு விகிதத்தில் உயர்வுக் கண்டுள்ளாதத் தெரிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்நாட்டு தமிழ்ப் பத்திரிக்கையில் அலட்சியம் ஒரு தமிழ்ப்பள்ளியின் நற்பெயரை எந்த அளவிற்கு பொதுவில் பொய்யான தகவலால் அவமானப்படுத்தியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது. இது கண்டிக்கத்தக்க கவனக்குறைவு.

2. மேலும், தொடர்ந்து 3 ஆண்டுகள் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வீழ்ச்சி குறித்து சமூக அமைப்புகள் பள்ளி நிர்வாகத்துடன் பேசவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. –மலேசிய நண்பன்

பொய்யான தகவல் அடிப்படையில் வெளியான செய்தியை ஒட்டி மேலும் அதை வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் என்ற சொல்லையும் பயன்படுத்தி அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கேலி செய்வது போலவும் இப்படியொரு வரி சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

யார் அந்தச் சமூக அமைப்புகள்? அந்த அமைப்பின் பெயரை வெளியீடக்கூட சம்பந்தபட்ட பத்திரிக்கைக்குத் தெரியாதா? கல்வி அமைச்சுக்குக் கீழ், மாவட்ட கல்வி இலாகாவின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்க தமிழ்ப்பள்ளியின் மீது கேள்வி எழுப்பும் முன் சரியான முறையான அணுகுமுறைகளைக் கொண்ட செய்தி சேகரிப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இம்மாதிரி அரைகுறையான தகவலை வெளியீட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை செய்யக்கூடிய தர்மமா இது?

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக இந்த மாதிரி தமிழ்ப்பள்ளிகளின் பிம்பத்தை அவமானப்படுத்தும் செயல்களை (கொஞ்சமும் நியாயமற்ற செயல்களை) செய்பவர்களுக்கு எதிராக மாற்றுக் குரலை எழுப்ப வேண்டும். எழுச்சியும் வீழ்ச்சியும் எல்லாம் இடங்களிலும் மிக இயல்பாக நடக்கக்கூடியவை. கல்வி சிந்தனையும் பொது அறிவும் சமயோசிதமும் நிரம்ப இருக்கக்கூடிய சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், இம்மாதிரியான வீழ்ச்சியையும் எழுச்சியையும் அணுகக்கூடிய ஆற்றலும் பக்குவமும் கைவரப் பெற்றிருக்க வேண்டும். உடனடியாக உணர்ச்சி அலையை எழுப்புவதன் மூலம் இப்படித்தான் சில தவறுகளும் சரிவுகளும் நடந்துவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சமூக அலட்சியங்களை பொது ஊடகத்தில் நிகழ்த்துவதன் மூலம் சொந்த இனத்தின் அடையாளங்களின் மீதே மண்னை வாரி இறைத்துக் கொள்வது போன்ற செயலாக ஆகிவிடும்.

இதற்கு முன்பும் ஒருமுறை (2008-ல்) ஆர்வார்ட் 3 மற்றும் ஆர்வார்ட் 2 தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைப் பிழையாகப் பிரசுரித்த ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் அலட்சியத்தையும் நினைவுக்கூற முடிகிறது.

குறிப்பு: பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியீடும் முன் தனது செய்தி குறித்து நம்பகமான தகவல்கள் இருப்பதையும், கேலியான கடுமையான விமர்சனங்களை உள்ளடக்கிய சொல்லாடல்களைத் தவிர்த்திருப்பதையும் உறுதிப்படுத்துவது நல்லது. தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கும் சராசரி வாசகர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com



Sunday, November 29, 2009

அதிகாரத்தின் குரல் -3 உரையாடல் (தொண்டை குழியிலிருந்து நிரம்பும் ஆணாதிக்கம்)


இடம்: வீடு
கரு: குரலை உயர்த்தும் சில அப்பாக்களின் தொண்டை குழியிலுருந்து நிரம்பும் ஆணாதிக்கமும் அதன் கொடூரமான உடலில் முளைக்கும் மயிர்களும்

அப்பா: எங்க போறாளாம் அவ? (அம்மாவை நோக்கி)

மகள்: ம்மா. . கொஞ்சம் மரியாதையா பேச சொல்லுங்க.

அப்பா: என்னாடி மரியாதெ? வாயெ உடைச்சி, கட்டிப் போட்டு வளர்த்திருந்தா போவாளா இப்படி ஊர் மேய?

மகள்: ப்பா. . திருப்பியும் சொல்றேன் மரியாதையா பேசக் கத்துக்குங்க. உங்க குடும்ப லட்சணம்தான் ஊர் மேயுது. . கேட்டுக்குங்க.

அப்பா: திமுற பாத்தியா? அப்பனையே எதிர்த்துப் பேசறே? எவன் கத்துக் கொடுத்தான்? அதான் ஊர் மேயறியோ. . மூஞ்சிலாம் உடைஞ்சிறும் சொல்லிட்டேன்.

(வெற்று மேலுடலுடன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அப்பா எழுந்து திடமாக நின்று கொண்டார். தன் திமிர் பிடித்த உடலை மிகப் பயங்கரமான தோற்றத்துடன் முறுக்கினார்)

மகள்: நான் எங்கப் போறேன் எங்கேந்து வர்றேன்னு உங்களுக்குத் தெரியுமா? யேன் இப்படி நாகரிகம் இல்லாம யோசிக்கிறீங்க?

அப்பா: உங்க நாகரிகத்தெ தூக்கி ஜாம கொட்டாய் பீ அல்லூருலெ போடு! அதான் அன்னிக்கு பாத்தனே. . அப்பயே வெட்டிப் போட்டுருக்கனும் உன்னெ. உனக்கு எதுக்குடி எவன் கூடயோ பேச்சி? அதுவும் காதலிச்சவன்கூட. அதான் அவனெ மிரட்டி அடிச்சி விரட்டியாச்சே

மகள்: பழைய கதையை பேசாதீங்க. படிக்கறெ வயசுலெ காதல் வர்றதெ ஒரு அப்பாவா எப்படிக் கையாளனும்னு தெரியாமே காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்கிட்டிங்க. இன்னிக்கு வரைக்கும் ஒரு சந்தேகம் பிடிச்ச மிருகம் மாதிரி இருக்கீங்க. அன்னிக்கு அவனெ எதார்த்தமாதான் டவுன்லெ பாத்தேன். பேசனன். . அவ்ளதான்.

அப்பா: ஆளே ஏக்காதேடி. உன்னெ விட்டா பிள்ளையே பெத்துப் போட்டுடவெ. எந்தப் புத்துலெ எந்த பாம்பு இருக்குனு எவனுக்குத் தெரியும். அடிச்சாதான் மிதிச்சாதான் நீ அடங்குவே, படிக்கற வயசுலெ காதல் பண்ற எரும மாடுகளும் அடங்கும். காதலாம் காதலாம் மண்ணாங்கட்டி.

மகள்: காதல் பண்றெ எல்லாரும் என்னா தப்பாவா போய்ட்டாங்கெ? சும்மா நியாயம் இல்லாம பேசாதீங்க. உங்க கட்டுப்பாட்டுலெ இருக்கறனாலே உங்களுக்கு மிஞ்சி நாங்க எதுவும் செஞ்சிற கூடாது. அதனாலெதான் உங்க திமிறுத்தனத்தாலே எங்களெ கட்டுப்போட்டுப் பார்க்கறீங்க.

அப்பா: படிச்சட்டா. . படிச்சிட்டாலே. . அதான் இந்தப் பேச்சி. அப்பனுக்கு தெரியும் மகள எப்படி வளக்கறதுன்னு. நீ எங்கயும் வெளிய போக வேணாம். கம்முன்னு வீட்டுலே இரு. எவன வந்து எங்க நிக்க சொல்லிருக்கெ படுவா. .

மகள்: ம்மா. . இவரு ஓவரா பேசறாரு. என் வயசுக்கு மரியாதை கொடுக்க சொல்லு. ஒரு பொம்பள பிள்ளைக்கிட்ட எப்படிப் பேசனும்னுகூட தெரில. .

அப்பா: ஆங்ங்ங். . எங்களுக்கு எல்லாம் தெரியும். அவளெ அதிகம் பேசாமெ வாயெ மூட சொல்லு. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பொம்பள பிள்ளிங்க பேசக்கூடாது, தெரியுமா? உங்களுக்குல்லாம் ஒன்னும் தெரியாது.. .

மகள்: தெரியுமே எல்லாம் தெரியும்! சின்ன வயசுலேந்து என்னோடெ எந்தத் திறமையும் வெளிய காட்ட முடியாத மாதிரி அடக்கி அடக்கி வச்சி என்ன கொன்னுட்டிங்களே, அது தெரியும். சந்தேகப் பிடிச்ச பேய் மாதிரி அலைஞ்சி எங்க சந்தோசத்தையும் கொன்னுட்டிங்களே, அதும் தெரியும்.

அப்பா: உன் திறமையே தூக்கி மண்ணுலெ பொதைச்சிரு. இங்க நான் இருக்கன், சம்பாரிச்சி போட, உங்கள பாத்துக்க, உனக்கு எதுக்கு தனியா திறமையெ காட்டனும். . திறமையெ காட்டி என்னா மந்திரி பதவியா வாங்க போற?

மகள்: எல்லாருக்கும் சின்ன சின்ன கனவு ஆசையும் இருக்கும். நீங்க மட்டும்தான் வாழ்றதா உங்களுக்கு நெனைப்பா? எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்க. மத்தவங்க உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுங்க. .

அப்பா: தோ பாரு. .என்னை என்னா கையாளாகாத அப்பன்னு நினைச்சியா, பிள்ளிங்கள பேசவிட்டுட்டு ஒம்போது மாதிரி நிக்க. . அடிச்சி மண்டையெ பொழந்துருவேன். நான் என்னா சொல்றெனோ அதை மட்டும் கேளு. நீயா எதையும் யோசிக்காதெ. மத்தவன் சொல்றதெ கேட்டுக்கிட்டு படிச்ச திமுறுல பேசாதெ. உன்னெ வளர்த்தெ எனக்கு தெரியும் உனக்கு என்ன செய்யனும்னு. .

மகள்: சின்ன வயசுலேந்து நான் ரொம்ப நல்லா பாடுவேன்னு எல்லாம் சொல்லுவாங்க, மனசாறெ புகழுவாங்க. உங்களுக்கு இது தெரியுமா? என்னிக்காவது பாராட்டிருக்கீங்களா? உங்களுக்கு வேண்டியதெல்லாம் “ஏ” எடுக்கனும். அப்படி “ஏ” எடுக்கறவங்கத்தான் உங்களுக்கு மனுசாளு. “பீ” எடுத்தா அவுங்களாம் என்னா மிருகமா? ஊர்ல உள்ளவந்தான் இன்னிக்கு, “ஏ” யை தூக்கி வச்சிக்கிட்டு, “ஏ”க்காக வாழ்றான் ஓடுறான், அலையுறான். . கொண்டாடுறான். . சொந்த அப்பா நீங்களும் அப்படித்தானே? “ஏ” எடுக்கனும் பரீட்சையிலேன்னு சொல்லி எப்படிலாம் என்னெ கொடுமெ படுத்துனிங்க? என்னிக்காவது நான் நேசிச்சி படிச்சிறக்கனா? உங்களுக்கும் மத்தவங்களுக்கும் பயந்தே எல்லாம் “ஏ” ஏ” ஏ ன்னு எடுத்தேன். எனக்காக என் ஆசைகளுக்கா வாழ்க்கையிலே ஒரு “சீ” கூட நான் எடுக்கலெ.

அப்பா: உன்னெ கஸ்ட்டப்பட்டு படிக்க வச்செ என்ன பாத்து எப்படிக் கேக்கறே. . நாயே! படிச்ச பிள்ளைன்னு பாத்தா, அடாவடியா பேசறே. . மவளே. . உன்னெ என்னா செய்யனும்னு தெரியுமா, கை காலுளாம் உடைச்சி மூளையிலெ உக்கார வைக்கனும். .

(இன்னமும் நம்முடைய காதுகளுக்கு எட்டாத இரகசியங்களில் இப்படியொரு அதிகாரத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன)

-இந்த வருடம் யூ பி எஸ் ஆர் தேர்வில் இந்தச் சமூகமும் பள்ளி நிர்வாகங்களும் எதிர்ப்பார்க்கும் “ஏ”க்களைப் பெறாத மாணவர்களுக்காக அடுத்த பாகம் விரைவில் வரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, November 26, 2009

ஆர்வார்ட் 3 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 4 நாள் கோலாலம்பூர் புத்ராஜெயா கல்விச் சுற்றுலா

கடந்த 19 ஆம் திகதி தொடங்கி 22 ஆம் திகதி வரை பள்ளி விடுமுறைக்காலத்தை முன்னிட்டு எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் (குரூண் ஆர்வார்ட் 3 – கடாரம்) கோலாலம்பூர் புத்ராஜெயா போன்ற இடங்களுக்குக் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

முதலில் மாணவர்களுக்கான மதிய உணவு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்(kementerian Belia dan sukan) ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் வழங்கப்பட்டது. அதன் பிறகு புத்ரா ஜெயா வட்டாரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு கோலாலம்பூர் பயணம் செய்தோம்.

கோலாலம்பூரில் முக்கியமான இடங்களான தேசிய மிருகக்காட்சி சாலை, பெட்ரோ சைன்ஸ், அறிவியல் மையம், பிளேனெட்டேரியோம், மைன்ஸ் வொண்டர்லைன், இரட்டை மாடி கோபுரம், ஒற்றை மாடி கோபுரம் என்று மேலும் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.

குறிப்பு: இந்தப் பயணத்தில் (கல்விச் சுற்றுலா) கலந்துகொண்ட பெரும்பாலான மாணவர்கள் இதுவரை கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்லாதவர்கள் ஆகும். இது அவர்களுக்கு ஒரு நல்ல மகிழ்ச்சிக்கரமான விடுமுறையாக இருந்தது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, November 18, 2009

காந்தி: வேறொரு அடையாளம் (நவீன களம்)

இந்த மாதத்தின் நவீன களத்தின் இரு சந்திப்பிலும் காந்தியவாதத்தைப் பற்றிய உரையாடல்களே அதிகமாக இருந்தது. ஏற்கனவே காந்தியைப் பற்றிய வரண்ட வரலாற்றுப் பார்வையே இருந்ததால், பிறர் காந்தியைப் பற்றிய எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைகள் புத்தகங்கள் என வாசித்தேன்.

விவாதிப்பதற்கு காந்தி குறித்த தத்துவ அரசியல் பார்வை அவசியம் என்பதால் மேலும் மேலும் அவரைப் பற்றிய கட்டுரைகள் பலராலும் பல நிலைகளில் எழுதப்பட்ட படிமங்களே அதிகமாகக் கிடைத்தும், ஒருவருக்கொருவர் காந்திய சித்தாந்தத்தில் மிகத் தீவிரமாக முரண்படுவது முதலில் வாசிப்பு சிக்கலை ஏற்படுத்தியது. நவீன களத்தில் மிக எளிமையான சொல்லாடல்களில் அவரைப் பற்றிய புரிந்துகொள்ள முற்பட்ட கடினமான மதிப்பீடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரமாக உரையாடினோம்.

காந்தியின் அரசியல், அவர் உருவாக்கிய தேசியம், பெரும்பான்மைய சக்திகளின் மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றை உள்ளடக்கியதல்ல, சிறுபான்மையையும் உள்ளடக்கியது. பார்ப்பனர்கள் பார்ப்பனல்லாதவர்கள் என இரு பிரிவினருக்கும் மத்தியில் நிலவிய அரசியல் நேர்மையின்மை, சர்ச்சை, இனவாத தீண்டாமைகளை, தனது அரசியல் நேர்மையுடன் களைய முற்பட்டவர். இந்தச் சிக்கல், முரண்பாடு மட்டுமே அவரது தேசிய கட்டமைப்பின் நடைமுறைக்கு மாபெரும் சவாலாக இருந்தது.

காந்தியின் , “மகாத்மா” என்கிற அடையாளம்தான் அவர் குறித்த மதிப்பீடுகளைப் பலவீனமாக்குகிறது என்றும், காந்தி ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாக மட்டுமே அணுகப்படுவதால், வாழ்நாள் முழுவதும் தனது பின்பற்றுதல்களை, வாழ்வைப் பரிசோதனை செய்து கொண்டே இருந்த காந்தி, ஒழுக்கம் என்கிற கோட்பாட்டிலிருந்து நழுவிய ஓர் இந்துத்துவவாதி என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார். இது தன்னை ஒரு சாதாரண மனிதன் என்று தன் வாழ்வை பரிசோதனை களமாக ஆக்கிக் கொண்ட காந்தியின் கோளாறு கிடையாது, மகாத்மா என்ற சொல்லாடல்களுடன் அவர் மீது நாம் வைக்கும் மதிப்பீடுகளின் கோளாறு என் அ.மார்க்ஸ் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்து மதத்தால், வருணா சாதி முறையால் பாதிப்புக்குளளான ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியிலிருந்து பேசியவர்கள் அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள். ஆனால் காந்தியோ இந்த ஒடுக்குமுறைக்கு யார் காரணமோ அந்த மக்களின் மத்தியில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பேசியவர். எந்த வருணாசிரம கொள்கையின் பிடிமானத்தில் தீண்டாமையின் மூலம் பிறரை ஒடுக்கினார்களோ, அந்த நம்பிக்கையின் மூலமே அதன் அடிபடையிலேயே அதை மறுக்க முனைந்தவர். காந்தியின் மொழியும் பெரியாரின் மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று அதன் நுண் அரசியலுடன் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

காந்தியின் சத்தியாகிரகம் குறித்து, அது அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வருத்திக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியம் என்று சர்ர்ச்சை இருந்தது. அ.மார்க்ஸ் போன்ற கட்டுரையாளர்கள், அது பெருந்திரளான மக்களை சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் என்ற புரிதலை ஏற்படுத்தினார்கள்.

தனது தேசியவாதக் கொள்கையின் மூலம், மதச்சார்பின்மை என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கு மிக முக்கியமானது. மேலும் நடப்பில் இருந்த இந்து மத்திற்கு எதிரான கருத்துகளையே கடைசிவரை முன் வைத்துள்ளார் காந்தி. இந்து மதத்தை முற்றிலும் மறுக்காமல், அதைச் சீர்த்திருத்த வேண்டும் சீரமைக்க வேண்டும் என்றே பரிந்துரைத்தார். காந்தி ஒரு இந்துத்துவவாதி என்று சொல்வதைச் சிலர் மறுக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், காந்தியைக் கொன்றது ஓர் இந்துவாக இருக்கும்பட்சத்தில் காந்தியை வெறும் இந்து கொள்கைவாதி என்று அடையாளப்படுத்துவதில் அர்த்தம் இல்லை எனவே நினைக்கிறேன்.

காந்தியின் அரசியல் நேர்மை அவரது அடையாளத்தைத் தூக்கிப் பிடித்தது. வன்முறைக்கு எதிரான ஒரு போராட்ட வடிவத்தை முன்மொழிந்து அதனைக் கொண்டு போராடியவர். பார்ப்பானியவர்களை நோக்கி, உங்கள் அதிகாரங்களையும் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள், திராவிடர்களுக்கான வாய்ப்புகளை அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும், பார்ப்பனியில்லாதவர்களை நோக்கி, பிராமனர்களை ஒழிப்பதுதான் என்கிற கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள், அதிகாரங்களையும் பதவிகளையும் பகிர்ந்து கொள்வதிலும் பறிப்பதிலும் இருக்கும் வெறியையும் துறந்துவிட வேண்டும் என்று தனது அரசியல் பார்வையை இந்த இரு தரப்பினரால் பிளவுப்படும் தேசியவாதத்தை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தினார். காந்தியின் வேறொரு அடையாளம் இது. காந்தியை ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாகப் பார்க்கும் விதத்திலிருந்து விலகி, அவரை நோக்கிய வேறொரு அடையாளத்தையும் கொண்டிருப்பதும், மறுவாசிப்பும் மிக அவசியமானது.

( ஒரு தந்தையாக காந்தி மிகப் பெரிய தோல்வியடைந்தார் என்ற சர்ச்சையும் அவர் மீது உள்ளது- இதை அவர் குடும்ப வாழ்வுடன் மட்டும் ஒப்பிடாமல், அவரது அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருப்பதால் இங்குக் குறிப்பிடபடவில்லை- தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தால்)

சொல்வதற்கு நிறைய இருந்த போதிலும். . . முற்றும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

நன்றி: அ.மார்க்ஸ் கட்டுரைகள்
மணிஜெகதீசன், பிரம்மானந்தா, கோ.புண்ணியவான், வாசகர் பாண்டியன்,
பாலாஜி(சிங்கப்பூர்)

Monday, November 9, 2009

செழியன் - சாரு - எஸ்.ரா - விச்சுவாமித்திரன் அவர்களின் சினிமா பார்வை

அய்யப்பன் மாதவன் இயக்கிய “தனி” குறும்பட வெளியீட்டிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் குறும்பட இயக்குனரும் ஆனந்த விகடன் “உலக சினிமா” கட்டுரையாளருமான செழியன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும் நேர்காணல் செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

இயக்குனர் பேரரசுவின் சகோதரரான அறிவுநிதி அவர்களின் இல்லத்தில்தான் செழியனைச் சந்தித்துப் பேசினேன். தெளிவான முகத்துடன் மிகவும் நிதானமாகக் காட்சியளித்தார். கருத்துகளை மிக எளிமையாக எவ்வித சிக்கலும் தடுமாற்றங்களும் இன்றி முன் வைக்கக்கூடியவராக இருந்தார். ஏற்கனவே செழியனின் சினிமா பார்வையை ஆனந்த விகடன் தொடர் சினிமா கட்டுரையின் மூலம் பலர் அறிந்திருக்கக்கூடும்.

இன்றைய தழிச் சூழலில், சினிமா குறித்த ஆழ்ந்த பிரக்ஞையையும் மாற்றுப் பார்வையையும் தனது கட்டுரை மூலம் வெளிப்படுத்துபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ஆகும். குறிப்பிட்டு சொல்வதென்றால் சாரு நிவேதிதா, விசுவாமித்திரன், செழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களே ஆகும். மேலும் இணையத்தில் பலர் சினிமா குறித்த (முக்கியமாக தமிழ் சினிமா) விமர்சனங்களை எழுதி வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த நால்வரின் சினிமா கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் சில நேர்த்தியான இடங்களில் வித்தியாசப்படுவதை அறிய முடியும்.

சாரு தனது சினிமா கட்டுரைகளில் திரைக்குப் பின்னாலுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி மிகவும் விரிவாக அவர்களின் ஆளுமை சார்ந்து பேசக்கூடியவர். சினிமாவில் உள்ள மற்ற பல அம்சங்களையும் குறிப்பாக இசையைப் பற்றி அதன் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை ஒப்பீடுகளைத் தரக்கூடியவர் ஆகும். ஒரு சில ஒப்பீடுகளுக்காக அவர் தனது விமர்சனங்களுக்குள் கொண்டு வரும் திரைப்பட கலைஞர்கள் தமிழில் அறியப்படாதவர்களும் அதே சமயம் கவனிக்கத்தக்க ஆளுமைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒளிப்பதிவுகள் பற்றி பேசும்போது மிகவும் தட்டையான மொழிகளுக்குள் தகவல் வரட்சியின்றி, உலக சினிமாக்களை மேற்கோள்காட்டி விரிவாகப் பேசக்கூடியவர் சாரு. ( சில சமயங்களில் நமது செல்வராகவனையும் அகிரா குரோசாவையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அபாயமான ஒப்பீடுகளையும் காட்டி மிரளவும் செய்வார்)

அடுத்தபடியாக எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமா கட்டுரைகள் மிக முக்கியமானவையாகும். எளிதில் வாசகனை ஈர்க்கக்கூடிய வகையிலான சினிமா பார்வையை கவர்ச்சியான மொழியுடன் சொல்லக்கூடியவர். நண்பன் சினிமா பற்றி கூறுவது போல அவரது சினிமா கட்டுரைகள் நம்மை நெருங்கி வந்துவிடும். அவரது பெரும்பாலான சினிமா பார்வை மனித வாழ்வோடு ஒப்பிட்டு அதன் அழகியலை அடையக்கூடியதாக விவரிக்கப்பட்டிருக்கும். மேலும் எல்லாம் சினிமாக்களின் முகத்தையும் அதன் அடையாளத்தையும் வாழ்வியலின் பின்புலத்தோடு அவதானிக்கக்கூடியவர் எஸ்.ரா. (சினிமாவிற்கான உண்மையான படிமங்களுக்குள் அதிகபடியான இவரது வழக்கமான சொல்லாடல்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது, சினிமாவின் சில காட்சிகள் புனைவுகளாக மாறிவிடுகிறது- “போல போல” என்ற தனது கற்பனைவாத ஒப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் அசலைத் தவறவிடுவதாகத் தோன்றும்)

அடுத்ததாக செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது. (தனது மனோத்துவ/உளவியல் மதிப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் வாசகனின் அல்லது பார்வையாளனின் சாதாரண கிரகித்தலையும் சிக்கலாக்கிவிடும் ஆக்கிரமிப்பு செழியனின் விமர்சனங்களில் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் ஒரு சில கட்டுரைகளில் ஒரே விதமான அணுகுமுறைகளே நுட்பமாகப் பாவித்திருப்பது போல தோன்றக்கூடும்.)

அடுத்ததாக தீராநதி இதழில் சினிமா பற்றி எழுதிவரும் விச்சுவாமித்திரன் ஆவார். இவருடைய சினிமா கட்டுரையின் மொழி மிகவும் சிக்கலானது. அதே சமயம் இவரது சினிமா மீதான சொல்லாடல்கள் தத்துவம் சார்ந்து அதன் கட்டமைப்பைத் தரமான களத்தில் விவரிக்கக்கூடியது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. மேலும் ஆரம்பக்கால சினிமா வாசகனுக்கு முற்றிலும் ஏதுவான வடிவமும் அல்ல. இவரது சினிமா கட்டுரைகள் பெரும்பாலும் பிராந்திய அடையாளத்துடன் எழுதப்படக்கூடியது. ரஷ்ய சினிமா, கொரியா சினிமா எனப் பெயரிடப்பட்ட, நிலப்பரப்பின் பின்னனியில் அதன் தத்துவம் - பண்பாடு - கலாச்சாரம் - அரசியல் - போன்ற அம்சங்களின் உள்ளீடுகளை அளவுகோளாக்கி படத்தை விவரித்து எழுதுவார். ( இவரது சினிமா கட்டுரையைப் படித்து முடித்த பிறகு, சினிமா பார்க்கும் ஆவலைவிட வரலாறு அரசியல் படிக்க வேண்டும் என்ற ஆவலே மேலிடும் என்றே கருதுகிறேன். அளவுக்கு அதீதமான தகவல்களும் சான்றுகளும் சில சமயங்களில் அசல் சினிமா என்கிற வடிவத்தின் எளிமையைக் குறைத்துவிடுவதாகப்படுகிறது)

தமிழில் சினிமா குறித்தும் உலக சினிமா குறித்தும் இனி அதிகம் எழுதவும் விவாதிக்கவும் பட வேண்டும். தமிழிலேயே பல மாற்றுச் சினிமா எடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது உள்நாட்டில்கூட பல இளைஞர்கள் தரமான குறும்படங்களை எடுப்பதில் ஆர்வமும் காட்டி வருகிறார்கள் என்பதால் சினிமா குறித்தான வாசிப்பும் மீள்வாசிப்பும் அவசியமானதாகும். நமது வாழ்வைப் பதிவு செய்து வைப்பதில் இலக்கியமும் சினிமாவும் மிக முக்கியமான வடிவங்களாகும். போலித்தனமான, அசலுக்கு எதிரான இலக்கியமும் சரி, சினிமாவும் சரி, வெறும் மசாலா கலவைகளாகத்தான் பணம் சம்பாரித்துவிட்டு காணாமல் போய்விடும். யதார்த்தங்களை சினிமா புனைவுகளுடனும் அசலான மனிதர்களையும் வாழ்வையும் கலை நுட்பம் சார்ந்து வெளிப்படுத்தும் சினிமாவும் இலக்கியமும் மட்டுமே ஆரம்பத்தில் சர்ச்சைகளைச் சந்தித்தாலும் வரலாற்றில் பேசப்படும் முக்கியமான பதிவாக இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா