Sunday, July 19, 2015

இன்று நேற்று நாளை: திரைப்படம் ஒரு பார்வை

காலம் என்பதன் அர்த்தம் என்ன? அது ஒரு ஜடப்பொருள் இல்லை. அசையவில்லை. தெரியவில்லை. ஆனால், அளக்க முடிகிறது. வினாடி, நிமிடம், நேரம், வருடம், மாதம், நூற்றாண்டு என காலத்தை அளக்க மட்டும் முடிகிறது. காலத்தின் அளவையை எது ஆதாரப்படுத்துகிறது? என்கிற அடுத்த கேள்விக்குப் பதில் நாம்தான். நம் முன்னோர்கள்தான். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக தோல் சுருங்கி, உருவம் மாறி, உடல் தளர்ந்து மூப்பெய்தி இறந்துபோகும் நம் வீட்டுப் பெரியவர்கள்தான் காலத்தின் அளவையை உறுதிப்படுத்துபவர்கள். காலம் என்கிற ஒன்று மாயை இல்லை என்பதனை அவர்களின் மூப்பெய்தலே நிறுபித்துக் கொண்டிருக்கிறது. ஒரு செடி மரமாவதில் காலம் ஒளிந்திருக்கிறது. ஒரு மரம் முதிர்ந்து சாய்வதில் ஒரு காலம் நிரூபணம் ஆகின்றது. ஒரேயொரு மாயம் என்னவென்றால் பிறப்பதற்கும் இறப்பதற்கும் மட்டும் சரியான காலத்தை நிர்ணயிக்க முடியாது. அது நடந்து முடிந்த பிறகே நேரம் கணிக்கப்படுகிறது. ஆகவே, பிறத்தலும் இறத்தலும்விட வாழ்தலே மிக முக்கியம். பிறந்ததற்காக வாழ்ந்து சாவதைவிட, இறந்த பிறகும் நம் வாழ்தலை உலகம் நினைவுக்கூறும் வகையில் வாழ்ந்து சாக வேண்டும் என்பதையே காலம் ஒவ்வொரு கணமும் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட காலம் குறித்த விவாதங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் நடந்ததில்லை. இறந்தகாலத்தை மறத்தல், எதிர்காலத்தைக் கணிக்க முடிதல் போன்ற விசயங்களைத் தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. பீட்சா 2 கூட எதிர்காலத்தை ஏதாவது ஒரு கலை வடிவத்தின் மூலம் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்கள் விட்டு செல்கிறார்கள் என அமானுஷ்யமாகவும் சிந்திக்கும் வகையிலும் கொடுத்திருக்கும். ஒரு மனித வாழ்வின் நடந்த முடிந்தவை, நடப்பவை, நடக்கப் போகுபவை என மூன்றைப் பற்றியும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இன்று நேற்று நாளை படம் தந்திருக்கிறது. இப்படம் காலத்தை விவாதிக்கவில்லை; ஆனால், காலத்தில் நிகழ்காலமே அவசியம் என உணர்த்துகிறது.

டைம் மிஷன் என்றதும் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஆங்கில சினிமாக்களின் தழுவலோ காட்சிகளோ இடம்பெற்றுவிடும் என நினைத்துதான் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். ஆனால், இயக்குனர் ரவிகுமார்(அறிமுகம்) ஓர் அறிவியல் புனைக்கதையை அசலாக  தமிழ்ப்படுத்தி இயக்கியுள்ளார். சிக்கலான கதையைக் குழப்பமே இல்லாத திரைக்கதையின் வாயிலாக சிறுவர்கள் படத்தைப் பார்த்தாலும் புரியும் அளவிற்குத் தந்திருப்பதுதான் அவருடைய சாமர்த்தியம். அவருக்கு ஈடாக எடிட்டிங், கலை, பின்னணி இசை, நடிப்பு என அனைத்துப் பகுதிகளும் சமமாக உழைத்திருக்கின்றன.


இப்படம் மலேசியத் திரையரங்குகளில் ஓடவில்லை என நினைக்கிறேன், ஆனால் சென்னையில் படம் நல்ல வெற்றி. எங்கேயும் சோர்வளிக்காத ஒரு திரைக்கதையையும் புதுமையான ஓர் அனுபவத்தையும் நாடித்தான் மக்கள் திரையரங்கம் செல்கிறார்கள். அத்தகைய தேவையைப் புரிந்து கொண்டு இக்கதையை ஒரு திரைக்கதை குழுவே விவாதம் நடத்தி உருவாக்கியிருக்கிறது. கதை ந்மக்கு எப்பொழுதும் கிடைத்துவிடும், ஆனால் அதனைத் திரைக்குக் கொண்டு வருவதற்குத்தான் பயிற்சியும் உழைப்பும் தேவை. அதனை இயக்குனர் ரவிகுமார் மிகுந்த கவனம் செலுத்தி செய்திருக்கிறார்.


அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். குடும்பத்துடன் பார்க்க வேண்டியப் படம் எனச் சொல்லி குடும்பங்களையும் உறவுகளையும் கீழ்மைப்படுத்திக் காட்டும் தமிழ்ப்படச் சூழலில் இப்படம் உண்மையில் குடும்பத்தோடு பார்க்க வேண்டியப் படமாக இருக்கிறது. இரட்டை அர்த்தங்கள் கொண்ட பார்ப்பவர்களை முகழ் சுழிக்க வைத்து செய்யப்படும் மூன்றாம்தர நகைச்சுவைகள் இல்லை.

ஒளியைவிட வேகமாகப் பயணிக்க முடியும் என்றால் நாம் நிகழ்காலத்தைவிட்டு இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணிக்க முடியும் என்பதைத்தான் இந்த அறிவியல் புனைக்கதை முன்னிறுத்துகிறது. இதனையே கிரிஸ்டப்பர் நோலன் தன்னுடைய 'இண்டர்ஸ்டீல்லர்' படத்திலும் காலம் என்பதற்கும் புவி ஈர்ப்பு சக்திக்குமான தொடர்பை அறிவியல் விவாதமாகக் கொடுத்திருப்பார். இருப்பினும் அந்த அறிவியலைத் தாண்டி மனித உறவுகளின் ஆழத்தை மையப்படுத்தி படத்தை முடிப்பார்.  இன்று நேற்று நாளை படமும் மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அறிவியலைத் தாண்டி தத்துவார்த்தமான ஒரு பார்வைக்குள் வந்து நிற்கிறது. இறந்தகாலத்திற்குச் சென்று அதன் சம்பவத்தில் ஏதேனும் ஒன்றை மாற்றினாலும் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, சோகத்திலோ, மகிழ்ச்சியிலோ போய் முடிய வாய்ப்புண்டு என்பதனைச் சொல்ல விழைந்தாலும், நிகழ்காலமே நிஜம் அதில் நாம் எடுக்கும் நல்ல முடிவுகளே நம் வாழ்க்கையை வழிநடத்தவிருக்கிறது என்பதையே இயக்குனர் படத்தில் ஆழமாக விதைக்கிறார்.

Tuesday, July 14, 2015

காக்கா முட்டை- அ.ராமசாமி அவர்களின் விமர்சனப் போக்குடன் ஒரு கண்ணோட்டம்

//இரக்கமற்ற நிலையில் குறுகிய இடங்களில் மூத்திர நெடியும்,அடைத்து வைக்கப்பட்ட பொருள்களும், சதா வெயில் தீண்டும் வெற்றுக் கூரைகளும் என ஆற்றோரங்களிலும் குப்பங்களிலும் தன் குடிசை வீட்டில் கிடைக்கும் சிறிய இடத்தில் வாழ்ந்து கழிக்கும் அடிமட்ட வேலைகள் செய்து, நகரத்தின் விளிம்பில் கண்டுக்கொள்ளப்படாமல் தவிக்கும் விளிம்புநிலை மனிதர்கள் உலகமயமாக்கலின் முன் எப்படிப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பதை  ‘காக்கா முட்டை’ சொல்லிச் செல்கிறது.// அம்ருதா இதழில் பிரசுரமான எனது திரைவிமர்சனத்தின் நீக்கப்பட்ட  பகுதி.

திரைப்படங்களை அதன் அரசியல் போக்குடன் அது தொட்டுப் பேசும் சமூக சூழலுடன், படமாக்குவதிலுள்ள தமிழ்ச்சினிமாவின் உள்ளார்ந்த நிலைபாடுகளுடன் இணைத்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தமிழ் சினிமாவை அது பேசும் நிஜத்துடன் முழுவதுமாகப் பொறுத்திப் பார்க்க முனையும்போது ஒரு சராசரி பொதுபார்வையாளனுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஒரு முழுமைக்கான நெருக்கம் அப்படத்தில் எதிர்பார்க்கும் அளவில் இருக்காது. ஆனால், அப்படத்தின் நேர்மை என்ன என்பதைத் தீர்மானிக்கும்போது, இயக்குனர், தயாரிப்பாளர், பொது அரசியல் என்பதனை ஒட்டி விமர்சிக்க இயல்கிறது.

ஒரு சினிமா உருவாவதன் பின்னணியிலுள்ள நிகழ்வு, புனைவு இவையிரண்டையும் ஆய்வாளர் அ.ராமசாமி  'ஒளிநிழல் உலகம்' எனும் தன் சினிமா கட்டுரை நூலில் இதனை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நான் அதனை விமர்சனப்பூர்வமான பார்வையுடன் அணுகி பார்க்கிறேன். எல்லாம் சினிமாக்கள்ளும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி புனைவொன்றை உருவாக்குகிறது. அப்புனைவு அப்படத்தின் நிகழ்வுடன் ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் போக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக 'சென்னை அன்புடன் வரவேற்கிறது' எனும் படத்தின் நிகழ்வு என்னவென்றால் சென்னை நகர் சூழலில் கிராமங்களிலிருந்து வந்து வேலை செய்யும் மேன்ஷன்வாசிகளின் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கை. அந்த நிகழ்வை/கருத்தை மையமாகக் கொண்டு அத்தகைய சில நண்பர்களின் மேன்ஷன் வாழ்க்கை புனைவாகக் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், இப்படத்தின் வெற்றி என்னவென்றால் இயக்குனர் ஏற்படுத்திய புனைவு அவருடைய சினிமா கருத்துடன்/நிகழ்வுடன் எந்த நெருடலும் இல்லாமல் இயந்து நிற்கிறது. உண்மைக்கு மிக நெருக்கத்தில் புனைவைக் கொண்டு வைக்கிறார். மையத்தைவிட்டு விலகாமல் அவ்வாழ்க்கையுடன் நம் பொதுபுத்தியும் அலைக்கழிக்கப்படுகின்றது.

Wednesday, June 17, 2015

குற்றவியலின் தர்க்கங்கள்: ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும் சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது. காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்று நிலையிலும் விரிவான எல்லைகளுக்கு இடம் அளிக்கும் நாவல் என்னும் இலக்கிய வகையை வாசிக்கும்போது, புனைவுவெளியை உருவாக்கும் படைப்பாற்றலுக்கு முக்கியம் தந்து வாசிக்கவேண்டும் என்பது எனது வாசிப்பு முறை. இன்னும் சொல்வதானால், நாவலாசிரியர்கள் புனைவு வெளியை முதலில் உருவாக்கிக்கொண்டே காலம், பாத்திரங்கள் என்ற இரண்டிற்குள்ளும் நுழைகிறார்கள் என்பது எனது கணக்கு.
புனைவு வெளியையே தலைப்பாகக் கொண்டிருக்கிறது பாலமுருகனின் இரண்டாவது நாவல். ஆப்பே கடை தான் நாவலின் மையமான புனைவு வெளி. அரசாங்கம் கட்டிக்கொடுத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கக் கூடிய ஆப்பே கடை, கொஞ்சம் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்ததால், உண்பதோடு உட்கார்ந்து பேசுவதற்குமான வசதிகொண்ட கடை என்பது அதன் இருப்பு.
வரலாற்றின் பகுதியாக ஆகிவிடும் ஒரு பேரரசின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சியை முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பாகச் சொல்வது வரலாறு. வரலாற்றைச் சொல்லும்போது காலவரிசையைப் பின்பற்றுவதும், இன்னாருக்குப் பின்னர் இன்னார் என வரலாற்று மாந்தர்களை நிறுத்துவதும் வரலாற்றாய்வாளர்கள் கவனம் செலுத்தும் முக்கியமான கூறு. புனைகதை ஆசிரியர் வரலாற்றாய்வாளரல்ல என்பதை உணர்ந்திருப்பதால், அதனைக் குலைப்பதிலும் அடையாளமற்ற பாத்திரங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறார். புனைவின் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கக்கூடியவை; அப்படி நிகழ்ந்திருக்கத் தேவையான காலச்சூழலும், சமூகக்குழுக்களின் முரண்பாடுகளும் இருந்தன என எழுதிக்காட்டுவதின் வழியே தான் தனது புனைவை நம்பகத்தன்மை கொண்ட பிரதியாக மாற்றுகிறார்.
ரப்பர்த் தோட்டத் தொழிலாளர்கள் என்பது மலேசியத் தமிழர்களின் கால் நூற்றாண்டுக்கு முந்திய அடையாளம். நிகழ்காலத்தில் இந்த முக்கிய அடையாளம் சிதைந்துவிட்டது. கல்விகற்ற சிறுபான்மையினர் அகதிமனநிலையிலிருந்து விடுபட்டுத் தேசத்தின் பொருளாதார வாழ்வின் அங்கமாக மாறிவிட்டனர். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் நகரங்களில் சேவைப்பணியாளர்களாகவும், அன்றாடக் கூலிகளாகவும், பொறுக்கிகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சேவைப் பணியாளர்கள் , கூலிகள் நிலவும் பொருளாதார முரண்பாட்டில் தேவையான கூட்டம் எனக் கருதி அரசும் சமூகத்தின் மேல்தள மனிதர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பொறுக்கிவர்க்கத்து மனிதர்களின் செயல்பாடுகளும் தொடர்புகளும் ரகசியங்களும் ‘குற்றங்கள்’ என வகைப்படுத்தப்பட்டு ‘நீக்கப்பட வேண்டியவர்களாக’ முத்திரை குத்தப்படுகிறார்கள். பாலமுருகனின் இந்த நாவல் நீக்கப்பட வேண்டிய மனிதர்கள் – குற்றவாளிகள்- என வகைப்படுத்தப்பட்டவர்களின் சந்திப்பு மையமாக விளங்கிய ஆப்பே கடையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சியை விரித்துள்ளது. பாஞ்சாங் சுரேஷ், கட்டைமணியம், முத்து அபாங் எனவும், ஆண்களால் வழி நடத்தப்பெற்ற குழுக்களின் நடவடிக்கைகளை விவரிப்பதோடு, சரசு என்னும் புரிதலும், தன்னம்பிக்கையுமிக்க பெண்ணின் வாழ்க்கையையும் கோடுகளாக்கிப் பரப்பியுள்ளது நாவலில். தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தல், பாலியல் உறவுகளுக்கு ஏற்பாடு செய்தல் வழியாகக் கிடைக்கும் பணம் உண்டாக்கும் வாழ்க்கை முறையையும், அதன் பின்னணியில் இருக்கும் அச்சமனத்தையும், பொது நடைமுறைகளுக்கு மாற்றான எதிர்நடவடிக்கைகளையும் பதிவாக்கும் பாலமுருகன், அதன் உணர்வுத் தளத்திற்குள் நுழையாமல் விவரித்துச் செல்கிறார். குறிப்பான நிகழ்வுகளை விரிவாக்கும் நோக்கத்தோடு ஒன்றிரண்டு மேசைப்பேச்சுகளை – விவாதங்களை – விரித்திருந்தால் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அப்போது படர்க்கைக் கூற்றுக்கு மாறாகப் பாத்திரங்களின் உரையாடல், உடல்மொழி, மனவோட்டம் என எழுத்துமுறை மாறியிருக்கும். அப்படி மாறும்போது பாத்திரங்களின் மீதான அவரது மதிப்பீடுகளும் உருவாகியிருக்கும். இதிலிருந்து கவனமாகவே பாலமுருகன் விலகியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதனால் பாத்திரங்கள் எழுத்தாளரிடமிருந்தும் தப்பித்து அவர்களின் வாழ்வாகவும், வாழ்க்கையின் மீதான கேள்வியாகவும் நிற்கிறார்கள் . ஆப்பே கடை என்னும் குறிப்பான கதைக்களத்திலிருந்து மலேசியாவின் மொத்தப்பரப்பும் நினைக்கப்படும் பரப்பாக நாவலுக்குள் இடம்பெற்றுள்ளது. அத்தோடு அண்டைநாடுகளான சயாம், சீனம் ஆகியனவும் கதைப்பரப்பாகியுள்ளது. விரிவான காலம் மற்றும் வெளிகளைப் பாலமுருகன் எழுதும் மொழியின் வேகத்தின் மூலம் முன்னும்பின்னுமாக நகர்த்திக் குலைத்துப் போட்டு விறுவிறுப்பை உண்டாக்கியுள்ளார்.
எனது வாசிப்புப் பரப்பில் இந்த நாவலில் வரும் பாத்திரங்களையொத்த மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜெயகாந்தன் கதைகளிலும், சாருநிவேதிதாவின் படைப்புவெளிக்குள்ளும் தட்டுப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஜி. நாகராஜனின் புனைவுகளில் அதிகமாக வாசித்திருக்கிறேன். அந்த மனிதர்களின் மீது கொஞ்சம் இரக்கம் உண்டாக்க வேண்டும் என்ற தொனி ஜி. நாகராஜனுக்கு இருந்ததாகத் தோன்றியதுண்டு. ஆனால் பாலமுருகனின் எழுத்து அதிலிருந்து விலகி, இந்த மனிதர்களை உருவாக்கியது ஒரு தேசத்தின் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கை எனக் கூறுகிறது. அவர்களின் தொழில்களாக மாறிய கூலிக்குக் கொலை செய்தல், கடத்தல், பாலியல் தொழில் ஏற்பு போன்றவற்றிற்கு அவர்கள் பொறுப்பல்ல; அவர்களை அப்படியான வாழ்க்கை வெளியில் தள்ளிய அமைப்புகளும், அவற்றின் கடந்தகால, நிகழ்காலத்திட்டமிடல்களுமே காரணங்கள் என்கிறது.
பாலமுருகனின் சிறுகதைகள், கட்டுரைகள் சிலவற்றைத் தமிழகத்திலிருந்து வரும் இடைநிலைப்பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். அவரது சிறுவர் நாவலான மர்மக்குகையும் ஓநாய் மனிதர்களையும் மலேசியாவிற்குச் சென்றபோது தந்தார். அவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் எனத் தோன்றியதில்லை. இந்த நாவல் தனது களம், எழுத்துமுறை, எழுப்பும் கேள்விகள் என்பன மூலம் விவாதிக்கவேண்டிய நாவல் என்று தோன்றுகிறது. மலேசியா நாவல் வரலாற்றுக்குள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாவல் எழுத்துக்குள்ளும் முக்கியமான அடையாளத்தைப் பதித்துள்ளது என நினைக்கிறேன். படிக்க வேண்டிய நாவல்.
அ.ராமசாமி/ மலைகள்.காம்

Wednesday, May 6, 2015

செம்பருத்தி.காம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு

ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ & மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்



கடந்த 12 வருடமாகத் தீவிரமாக எழுதி வரும் நவீன எழுத்தாளரும் தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களை புதிய உத்திகளிலும், புதிய முறைகளிலும் சொல்லி வரும் கவனிக்கத்தகுந்த கரிகாற்சோழன் 2011’ விருதை வென்ற மலேசியாவின் இளம் நாவலாசிரியரான கடாரத்தைச் சேர்ந்தச் கே.பாலமுருகனின் ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்எனும் நாவலும், சிறுவர் மர்மத் தொடர் நாவலின் இரண்டாம் பாகமான மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும் வெளியீடு காணவிருக்கின்றன. அந்த நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி, 2.00மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன், தான்சிறி சோமா அரங்கத்தில் மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனரும் சமூக சேவையாளருமான திரு.சி.பசுபதி அவர்களின் தலைமையில் வெளியீடு காணவிருக்கின்றன.




மேலும், வழக்கறிஞரும் கட்டுரையாளருமான திரு.கா.ஆறுமுகம் அவர்களின் வாழ்த்துரையும், நாடறிந்த மூத்த எழுத்தாளர் டாக்டர் மா.சண்முகசிவா அவர்களின் மலேசிய நாவல்கள் தொடர்பான இலக்கிய உரையும், எழுத்தாளர் .பச்சைபாலன், யோகி, இலக்கியகத்தைச் சேர்ந்த திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் நாவல் விமர்சனங்களும் இடம் பெறவிருக்கின்றன. 1980களுக்குப் பிறகு தோட்டத்துண்டாடல்கள் காரணமாகவும் வேலை இழப்புகள் காரணமாகவும் தோட்டங்களைவிட்டு ஓடிவந்து கம்பங்களிலும் ஆற்றோரங்களிலும் அடுக்குமாடிகளிலும் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கையில் நுழைந்த வன்முறையின் வரலாற்றை பேசும் கே.பாலமுருகனின் இந்த நாவல் சமூகத்தில் நாம் கண்டுக்கொள்ளாத குற்றவாளிகளின் உருவாக்கங்களைக் கேள்வி எழுப்புகிறது. அதுபோன்ற இந்திய சமூகத்தின் இருண்ட வரலாற்றைப் பேசும் இந்த நாவலின் வெளியீட்டுக்கு வருகையளித்து ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் மலேசியாவின் முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவலின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்துமோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்என்கிற மலேசிய இந்திய சிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல் இரண்டாம் பாகமும் இந்த நூல் வெளியீட்டில் வெளியீடு காணவிருப்பதால் இலக்கியவாதிகள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினர்களையும் நாவல்கள் வெளியீட்டுக்கு வருகையளித்து ஆதரவு நல்கும்படி எழுத்தாளர் கே.பாலமுருகன் கேட்டுக்கொண்டார். மேல் விவரங்களுக்குத் தொடர்புக்கொள்ளவும். கே.பாலமுருகன் 0164806241.

Tuesday, April 21, 2015

திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்

மணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒளிப்பதிவு

மும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

லீலா

இந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.