நவீன மொழி என்று சொல்லும்போது இது ஒரு சாராரோ அல்லது ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்கள் பயன்படுத்திய மொழியோ என்றெல்லாம் கிடையாது. பொதுபுத்தி சார்ந்து சிந்திப்பவர்களுக்கு எளிமையாக இதன் அர்த்தம் புரிந்துவிடும்.
முதல் உலக நாடுகளின் வளர்ச்சியும் மேம்பாடுகளும் இரண்டாம் மூன்றாம் நாடுகளில் இறக்குமதி பொருளென வந்திறங்கி அதை ஒரு நுகர்வு பொருளாக சந்தைக்குள் விற்று, அதை ஒரு வசதியாக கருதி பயன்படுத்துவது நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் நவீனம். நமது மரபு வாழ்வில் உள்புகும் நவீனமென்று இதைக் குறிப்பிடலாம். இன்று எல்லாம் தமிழர்களின் வீட்டிலும் அதிநவீன வசதி கொண்ட ஏதாவது ஒர் இறக்குமதி பொருள் இயங்கிக் கொண்டிருக்கும்.
எனக்குத் தெரிந்து இன்னமும் தோட்டப்புற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பர்வர்களின் வீட்டில்கூட “ஆஸ்ட்ரோ – அரைக்கும் இயந்திரம்” என்று வந்துவிட்டன.
நவீன கருவிகள் என்று சொன்னால் அது என்ன துணி துவைக்கும் பொருளை மட்டுமா குறிப்பது? மொத்த அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் அந்த “நவீன கருவிகள்” என்பதில் அடங்கிவிடும்.
“நவீன மொழி” என்பது அது தமிழாகவும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மலாய்மொழியாகவும் எடுத்துக் கொள்ளலாம், காரணம் காலத்திற்குக் காலம் எல்லாம் மொழிகளிலும் நவீனம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது நிதர்சனம். மொழியில் மட்டுமில்லாது எல்லாம்வகையான துறைகளிலும் வாழ்விலும் இந்த நவீன மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பவர்களும் ஏற்காதவர்களும் நிராகரிப்பவர்களும் இருக்கவே செய்தாலும் அந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
“நவீன மொழி” என்று சொல்லும்போது அது மாற்றங்கள் அடைகிற மாற்றங்கள் அடைந்து தனக்கென ஒரு புதிய வடிவத்தை உருவாக்கிக் கொண்டு சமக்காலத்து பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் பொருள் கொள்ளலாம். நவீன கருவி என்றதும் அது யார் பயன்படுத்திய கருவி, அவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்றெல்லாம் கேட்பது அறியாமை.
தமிழில் – தமிழிலக்கியத்தில் ஏற்படாத மாற்றங்களா? பாரதி உரைநடையை அறிமுகப்படுத்தும்போது பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இப்பொழுது அது வழக்கத்தில் உள்ளன. இதுவும் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கே இப்பொழுது இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டுவிட்டன. மேலும் சிறுகதை- நாவல் போன்ற வடிவங்கள் தமிழுக்குள் புதிய வடிவத்தில் நுழைந்தவை. அதையும் காலம் ஏற்றுக் கொண்டு இப்பொழுது உலக அளவில் எழுதுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.
புதுக்கவிதை உருவாகியபோதும் பல எதிர்ப்புகள் கிளம்பின. மரபு கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் சண்டைகள் நடந்தன. ஆனால் இன்றோ புதுக்கவிதைகள் தொகுப்புகள் அச்சிட்டு வெளியீடு செய்யும் அளவிற்கும் மேலும் நாளிதழ்களில் புதுக்கவிதை பிரசுரம் பெறும் அளவிற்கும் அங்கீகாரங்கள் பெற்றுவிட்டன. ஆகையால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழியில் (எந்த மொழியாக இருந்தாலும்) மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுத்தான் இருக்கின்றன.
குடும்ப உரையாடல்களைக் கூர்ந்து அவதானித்தால், எல்லோரும் அல்லது பெரும்பான்மையானவர்கள் தமிழைச் சிதைத்துத்தான் பேசுகிறார்கள். பேச்சு மொழி அல்லது வட்டார மொழியென புரிந்துகொள்ளப்படும் அவை, ஒவ்வொரு குடும்பங்களிலும் வட்டாரங்களுக்கும் மாறுபட்டே பேசப்படுகின்றன. தோட்டப்ப்ய்ற சமூகம் ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியைச் சிதைத்து வட்டார மொழியென சூழல் அரசியலுக்கேற்ப புரிந்துகொண்டு அதன் பிரக்ஞையுடன் பேசினார்கள். மேலும் அதை வெறுமனே சிதைந்துவிட்ட மொழி என்றும் குறிப்பிட முடியுமா என்பதும் கேள்வியே. ஆனால் இன்று நகரத்திற்குப் புலர்பெயர்ந்துவிட்ட தமிழர்களின் பேச்சு மொழி வேறு மாதிரியாக மாற்றம்கொண்டு விட்டது.
மாணவர்களுக்குப் போதிக்கப்படும் படைப்பிலக்கியத்தின் ஒரு வடிவமான சிறுகதைகளில் உரையாடல்களின்போது பேச்சு மொழிகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் பிரிவு சி-யில் படைப்பிலக்கிய பகுதியில் வரும் சிறுகதைகளில் பிறமொழி பயன்பாடுகளும் பேச்சு மொழியும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பேச்சு மொழியை வெறும் சிதைந்த மொழி என்றால் ஏன் சோதனைகளிலும் பாடங்களிலும் அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாவிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றன? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தமிழில் நிகழ்ந்த மாற்றமென்றால் வட்டார வழக்கின் பயன்பாட்டையும் அங்கீகரிக்க முயல்வதற்கான ஒரு முயற்சிகள்தான் இது.
மேலும் இதையெல்லாம் அல்லது இப்படிச் சிதைந்துவிட்ட மொழியை “நவீன மொழி” என்று அடையாளப்படுத்த முடியாது. சிதைதல் என்பதிலிருந்து நவீனம் உருவாகவில்லை, மாற்றம் என்பதிலிருந்துதான் அதன் நுண்பயன்பாடுகள் பெறப்படுகின்றன.
//தமிழில் இரண்டே மொழித்தான் உண்டு, பேச்சு மொழி செந்தமிழ்// என்பது தவறான கூற்று. அப்படியென்றால் சமக்காலத்து பேச்சு மொழி எல்லாம் தமிழைச் சிதைத்துதான் பேசுகிறார்கள். மேலேயுள்ள கூற்றுபடி பார்த்தால், தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு ஒன்று செந்தமிழ் மற்றொன்று சிதைந்த மொழி (பேச்சு மொழி). இப்படிச் சொல்வதால் பேச்சு மொழியையும் (சிதைந்த மொழியையும்) அங்கீகரித்து தமிழில் ஒருவகையென சேர்ப்பது போலல்லவா உள்ளது சிலரின் வாதம்/கூற்று.
தற்பொழுது எழுதுபவர்கள், தூயத்தமிழில் அல்லது மனிதர்கள் உரையாடும் காட்சிகளில் வழக்குத் தமிழில் அல்லது புதிய சொற்பிரயோகங்களுடனும் அதன் கட்டமைப்புகளுடனும் எழுதப்படும் தமிழில் என்று வகைப்படும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.. இது தமிழில் ஏற்பட்ட மாற்றம். கண்களை இறுக மூடிக் கொண்டு இது இல்லை என்றால் தர்க்கமாகாது. இது தமிழில் ஏற்பட்ட மாற்றம் என்கிற நிதர்சனத்திலிருந்து விவாதத்தைத் தொடங்கினால் நலம்.
மேலும் துறை சார்ந்த சொல்லாடல்கள் தமிழுக்குள் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சுஜாதா கணினி சார்ந்த சொல்லாடல்களைக் கதைகளின் மூலமும் கட்டுரைகளின் மூலமும் தமிழுக்குள் கொண்டு வந்தார். அறிவியல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல பல தமிழ் சொற்கள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. உயிரியல் கூறுகளை விளக்கும் பல தமிழ் சொற்கள் தமிழ் எழுத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவெல்லாமும் தமிழில் நிகழ்ந்த நவீன மாற்றங்கள். இன்று இணையம் அல்லது கணினி என்று சொல்லும் நாம் சங்க இலக்கியங்களில் இதுபோன்ற வார்த்தைகள் உள்ளனவா என்று பார்த்துச் சொல்லவும். ஒரு மொழி எப்படியெல்லாம் மாற்றமடைகிறது என்பதற்குப் பல விளக்கங்கள் சான்றுகளுடன் சமக்காலத்து வளர்ச்சிகளை முன்னிறுத்தி சுட்டிக் காட்டலாம். சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டுள்ளன.
குறிப்பு: பாலியல் சொல்லாடல்களை அல்லது பாலியல் உறுப்புகளை எழுதிவிட்டால் காமம் கிளர்ந்துவிடும் பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று சொல்பவர்களுக்குத்தான் மனோத்துவ அணுகுமுறைகளும் உளவியல் பயிற்சிகளும் மிக அவசியமாகத் தேவைபடுகின்றன.
இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களும் அவரின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஜெயந்தி சங்கர்: இவ்வாறான கேள்விகளுக்கு விடையென்று சொல்வதென்றால் பக்கம் பக்கமாக ஆய்ந்து எழுதலாம்/சொல்லாம். இருப்பினும், இப்போதைக்கு சுருக்கமாகவும் எளிமையாகவும் விடைகாண முயல்வோம்.
நவீனம் என்றால் புதுமை என்று சொல்லவே தேவையில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த எவரும் நவீன தமிழைப் பேசவில்லை; எழுதவில்லை; உருவாக்கவுமில்லை. தமிழ் மொழிக்கு என்றில்லாமல் எந்தவொரு மொழிக்கும் நிகழ்வது தான் இந்த நவீனமடைதல். சமீபமாக எழுதப்படும் தமிழ் மற்றும் வேற்று மொழிப் படைப்புகளைப் பரிச்சயம் கொள்ளாதிருப்போர், தாம் அவ்வாறு பரிச்சயமற்று இருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கும் போது இவ்வாறெல்லாம் கேட்பது இயல்பு தான். பிரக்ஞையோடு இருந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறான கேள்விகள் கேட்பவர்களை நாம் கணக்கிலெடுக்கத் தேவையில்லை.
பேச்சு மொழியும் எழுத்து மொழியும் முற்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாகவா இருந்து வருகிறது? கண்டிப்பாக இல்லை. பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழி என்றறியப்படும் செந்தமிழ் ஆகிய இரண்டையும் சொல்லும் போது நாம் ஒன்றைக் கவனித்தல் வேண்டும். லிபி என்றறியப்படும் எழுத்து முறையிலேயே பல மாற்றங்கள் காலந்தோறும் நிகழ்ந்து வந்துள்ளது ஒருபுறமிருக்க அந்தச் சங்ககாலத் தமிழைப் பதம் பிரித்துப் புரிந்து கொள்பவர்கள் கூட அம்மொழியில் தானா எழுதுகிறார்கள்? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் பேசிய மொழியை நாம் இன்று பேசுகிறோமா? அதே போல சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாம் எழுதிய மொழியிலா இன்றும் நாம் எழுதுகிறோம்? எதில் எதுவுமே இல்லையே. சங்க காலத் தமிழைப் புரிந்து கொள்ள நம்மில் பெரும்பாலோர் பொழிப்புரையை இன்றைய தமிழில் தானே படிக்கிறோம்.
கலாசாரம் மாற்றமடைந்தோறும் தமிழென்று இல்லை, வேறு எந்தவொரு மொழியுமே மாறுகிறது. சமூகம், வாழ்வு, கலாசாரம் எல்லாம் தொடர்ச்சியாக ஒரு நிறுத்தலற்ற மாற்றங்கள்/வளர்ச்சிகள் கண்டு நவீனமடையும் போது புழக்கத்திலிருக்கும் எந்தவொரு மொழியும் மாற்றங்களடைந்து நவீனம் கொள்வது இயல்பு தான். தவிர்க்கவியலாததும் கூட. சிலர் அஞ்சுவது போல மொழிக்கு இதொன்றும் கெடுதலுமில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். முற்காலத்தில் 'நாற்றம்' என்றால் நறுமணம். இன்றோ நாற்றம் என்றால் மனதிற்கிசைவற்ற ஒரு மணம். எப்படி மாறியது இது? இன்றைக்கு நறுமணத்தைக் குறிக்க நாற்றம் என்ற சொல்லையா பாவிக்கிறார்கள்? கணிப்பொறியையும் கணினி என்ற சொல்லை எற்றுக் கொள்வில்லையா நாம்? அதுபோலத் தான் காலமாற்றத்துக்கேற்ப புதிய சொற்களும் பிரயோகங்களும் மாறிக் கொண்டே வருகின்றன.
எடுத்தாளப்படும் கருப்பொருளைப் பொருத்தும் பல வேளைகளில் மொழியானது தன்னியல்பில் நவீனம் கொள்ளும். தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு புனைவுகளின் மொழி மிகத் தெளிவாகவும் வேகமாகவும் மாற்றமடைந்தது என்றே சொல்ல வேண்டும். தமிழின் முதல் நாவல் என்றறியப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் க.நா.சுவின் 'பொய்த்தேவு'க்கும் மொழியிலுள்ள வேறுபாட்டையும் பிறகு வந்த சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், லா.ச.ரா போன்றவர்களைத் தொடர்ந்து எளிய எதார்த்த நடையில் பேசிய ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றோரைச் சொல்லலாம். அடுத்த கட்ட நவீன மொழியைக் கையாண்ட சுந்தரராமசாமி, கோணங்கி மற்றும் பலரைச் சொல்ல முடியும். மொழியில் இவ்வாறு நிகழ்ந்த தொடர் மாற்றங்களை பரவலாக வாசித்தவர்களால் அனுமானிக்க முடியும். கவிதை என்றெடுத்துக் கொண்டாலும் வானம்பாடி காலந்தொட்டும் இன்றைய நவீன கவிதை காலகட்டம் வரை படிப்படியான மாற்றங்களை உணரலாம்.
ஆகவே, புதுமைப்பித்தன் காலத்துக்கு நவீன மொழி இன்றைக்கு பழைய மொழி. இன்றைய நவீன மொழி நாளைக்குப் பழையதாகத் தெரியும். இதான் நிதர்சனம். மு.வவை மட்டுமே வாசித்தவர்கள் புதுமைப்பித்தனை நவீனம் என்றே தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆகவே, அடுத்த அடுத்த கட்ட எழுத்துக்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு மட்டுமே மொழி கொள்ளும் நவீனம் குறித்து புரிந்து கொள்ள முடியும். சொல்லும் விஷயங்களிலும் சொல்லும் முறையிலும் தற்காலத்துக்கேற்ப எழுதுபவர்களில் சிலருக்கு தாம் நவீனமாக எழுதுவதே கூட அறியாமலிருக்கிறது. அவர்கள் அறியவில்லை என்பதால் அவர்கள் படைப்புகள் நவீனமில்லை என்றாகிவிடாது. சமீபத்திய போக்குகளை நன்றாகவே அவதானித்து வருவோரில் எல்லோருமே நவீனமாக எழுதுவார்களா என்றால் இல்லை.
பொதுவாகவே படைப்பாளி எல்லோருக்கும் புரியும் மொழியில் எழுதினால் நல்லதென்று நினைக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். பாத்திரங்களை இலட்சியவாதம் பேச வைத்தல், கதாப்பாத்திரங்களை விதந்தோதுதல், உணர்ச்சிகள் மற்றும் வர்ணனைகளை மிகைப்படுத்துதல், திரும்பத் திரும்ப கேட்டும் படித்தும் பழக்கப்பட்ட உவமைகள், சொல்லாடல்கள் போன்றவற்றையும் இவ்வகையான சராசரி வாசகன் எளிதில் ஏற்கிறான். கதாநாயகன் எதிர்மறையாகப் பேசினாலோ நடந்தாலோ அல்லது கதாசிரியர் கதை சொல்லலில் வெளிப்படையாக இருந்தாலோ ஏற்கும் பக்குவம் எல்லா வாசகனுக்கும் இருந்து விடுவதில்லை. அவரவர் வளர்ந்த சூழல் பார்க்கும் பார்வை போன்றவையும் ஒருவரது வாசகப் பார்வையைத் தீர்மானிக்கும் தான். எனினும், பலருக்கு தொடர்ந்த வாசிப்பின் வழி அந்தப் பக்குவம் வரக் கூடும். அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை வாசிக்கும் இவ்வாசகர்கள் மனம் குழம்புகிறது. இவ்வளவு வெளிப்படை அவசியந்தானா என்று? அவ்வாறானவற்றில் மொழிக்கும் சொற்களுக்கும் அதைத் தாண்டிய வேலையுமிருக்காது. பாலியல் மற்றும் பாலியல் சொற்களூடாக நல்லதொரு படைப்பாளி சொல்ல வருவது என்னென்ன என்று யோசிக்கும் முன்னரே பெரும்பான்மையான வாசகர்கள் அதிர்ச்சியோ கிளர்ச்சியோ அடைந்து விடுகிறார்கள். அதான் இங்கு பிரச்சனையே. பிரதியை வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வகைப்படுத்தவும் தான். –ஜெயந்தி சங்கர்
ஆக்கம்
கே.பாலமுருகன்