Monday, July 20, 2009

தமிழ் மொழியின் சிதைவும் சிறு சிறு சமரசங்களும் அதனுள் ஒளிந்திருக்கும் துரோகங்களும்

செய்திகள் வாசிப்பது நவீன படைப்பாளி என்கிற பைத்தியக்காரன்.

வணக்கம். அன்மைய காலமாக தமிழுக்கு கேடு தமிழுக்கு கேடு என்று அலறுகின்ற ஒருசிலர் அவர்களை அறியாமலேயே சிறு சிறு சமரசங்களின் மூலம் தமிழுக்குச் சிதைவைக் கொண்டு வருவதாக “தமிழ் நெறி மையக் பூலோக குழுமத்தின் தலைமைகத்திலிருந்து” இரு புகார்கள் வந்திருக்கின்றன.

புகார் 1: அல்லது சிறு சமரசம் 1
தமிழ் மரபிலக்கணத்தைப் பற்றி ஆழமாக விவாதிக்கும் சிலர், தமிழின் தொன்மத்தை ஏன் சிதைக்கிறாய் என கேட்கும் சிலர், தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கொள்ள வேண்டி தமிழைச் சிதைத்துள்ளார்கள். எப்படி?

திருத்தமிழ் என்ற வலைப்பூவின் பெயரை “thirutamil.blogspot” அல்லது karutthumedai.blogspot என்றும் எழுதி தமிழைக் களங்கப்படுத்தியுள்ளார்கள்.

ஐயோ பதறுகிறது மனம். தமிழ் தொன்மத்தைக் கேலி செய்துள்ளார்கள். தமிழை மாற்று மொழியில் எழுதுவதா? அடப்பாவிகளே! தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இப்படி ஒரு சமரசமா? வலைப்பூவை மலாயிலோ ஆங்கிலத்திலோ எழுதினால்தான் அனுமதி கிடைக்கும் என்பதற்காக தமிழ் பெயரை மாற்று மொழியில் எழுதிவிட்டு, பிறகு அதே வலைப்பூவில் தமிழ் தொன்மம், தமிழ் மரபு என்று வாய் கிழியும் துரோகிகளே உங்களை எப்படி மன்னிப்பது? என்று “தமிழ் நெறி மையக் பூலோக குழுமத்தின் தலைமைகத்திலிருந்து” தலைவர் தமிழரண் கண்ணன் அவர்கள் கோபத்தோடு கத்துகிறார்.

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து “தொழில்நுட்ப ஆசான் மகாலிங்க பூபதி: தமிழில் புளோக்கை வைத்துக் கொள்ள தமிழில் முகவரியை வைத்துக் கொள்வதில் சிரமம் உண்டு. கூகள் புளோக் வசதியைக் கொடுக்கிறது, ஆகையால் கூகளின் அதிகாரப்பூர்வ முகவரியைத் தமிழில் வைத்துக் கொள்வதால் கூகள் தேடலில் எல்லோரும் தமிழில் தட்டி தேடுவதென்பது சாத்தியம் குறைவு என்பதால், தொழில்நுட்பத்தைச் சரிகட்ட ஒருசிலர் தமிழை விட்டுக் கொடுத்துள்ளார்கள். இதில் தவறென்ன, தமிழை “thamilz” என்று எழுதுவதினால் என்ன தப்பு என்று மானமிக்க தமிழ் பற்றாளர்கள் தனக்குள்ளே கேட்டுக் கொண்டு சிறு சமரசத்தில் தமிழைத் தொழில்நுட்ப வசதிக்காக விட்டுக் கொடுத்துள்ளார்கள்.

புகார் 2: சமரசம் 2

தமிழில் வைத்த பெயரை, மதிவாணன் என்கிற பெயரை “mathivaanan” என்றும் வேறு மொழியில் எழுதுகிறார்கள். ஐயகோ! மனம் பதைக்கிறதே! அது என்ன மொழி? புரியவில்லையே. ஏன் தமிழ் என்கிற மரபின் தொன்மத்தைப் பழிக்கிறார்கள். கலப்படத்தை வெறுக்கும் இவர்களா தனது தமிழ்ப்பெயரை இப்படிக் கொச்சைப்படுத்தி வேறு மொழியில் எழுதுகிறார்கள்?

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து சுகுமாறன்: எங்கெல்லாம் இவர்கள் இப்படித் தமிழ்ப்பெயர்களை வேறு மொழியில் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியுமா?
1. தனக்கான தேசிய அடையாள அட்டையில்
2. வங்கியில் கடன் பெறும் பாரத்தில்
3. வீட்டில் ஆஸ்ட்ரோ விண்ணப்பப்பாரத்தில்
4. தொலைப்பேசி அழைப்பு கணக்கின் பாரத்தில்


ஐயையோ போய்விட்டதே மானம். சோற்றுக்காகவும் பணத்திற்காகவும் வசதிக்காகவும் தமிழை விற்றுவிட்டானே வேறு மொழிக்கு, இந்த மரபு தமிழன். என்று அழுது கொண்டிருந்தார் தமிழ் நெறி தொன்ம கழகத்தின் செயலாளர்.

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து வியாழக்கிழமை குமாரசாமி: தேசிய அடையாள அட்டையில் எங்கள் பெயர் வேறு மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. அதனால் என்ன, நாங்கள் இந்த நாட்டுப் பிரஜை அதனால் தேசிய மொழியான அந்த மொழியில்தான் எழுத வேண்டியுள்ளது. யாருக்கு என்ன சிரமம்? தமிழ் மரபு தமிழ் இலக்கணம் என்றெல்லாம் நாங்கள் நவீன படைப்பாளிகளின் ஆபாசங்களைப் பார்த்துதான் கத்துவோம் ஆனால் நாங்கள் ஏற்றுக் கொள்ளும் அடையாளங்களில் எங்களுக்கு தமிழ் முக்கியமல்ல. நாங்களாம் வாய் சொல்லில் வீரரடி பாப்பா!

தமிழ் நெறி தொன்ம கழகத்திலிருந்து தலைவர் அறைக்கூவல்:

தமிழ் பாவிகளே, நவீன படைப்பாளிகளை முட்டாள்கள் எனவும் பைத்தியம் என்றும் கதைக்கும் நீங்கள் இப்படிச் சிறு சிறு சமரசத்தில் தமிழ் துரோகிகளாக இருந்துள்ளதை இதுவரை யாரும் வெளிச்சத்திற்குக் காட்டவில்லையே! மொழிக்கு இழிவு என்று கத்திவிட்டு நீங்களே மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக சுயலாபத்திற்காக விற்றுவிட்டிர்களே! என்ன ஒரு கொடுமை.

நவீன படைப்பாளி 1: உங்களுக்கு தேவையென்றால் எதையும் செய்வீர்களா? நாங்கள் மொழியைச் சிதைக்கவில்லை, எங்கள் வாழ்வையும் எங்கள் மனிதர்களையும் எங்களுக்கான நவீன தமிழ் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம். உலக இலக்கியங்களையும் தமிழில் மொழிப்பெயர்த்து தமிழுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழை இறுக்கமாக்கவில்லை. ஆனால் நீங்கள், படைப்பிலும் இல்லை, தமிழையும் உலக அளவிற்குக் கொண்டு செல்லவில்லை.

தைரியமிருந்தால், தமிழ் மொழியின் தனித்துவத்தைக் காப்பது உண்மையென்றால், உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் தமிழ் மானம் உண்மையென்றால், முதலில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் மாற்றான் மொழியை முற்றிலுமாக துறந்து பாருங்கள். முடியுமா? என்ன முடியாதா? நாட்டிலிருந்து துரட்டியடிக்கப்படுவீர்களா?
அப்படியென்றால் சமரசம் நியாயமானதா? என்ன? தொழில்நுட்பத்தைப் பழகவும், தொழில்நுட்பத்தில் ஈடுபடவும் ஆங்கிலம் ஒரு துணையாகியிருப்பதால் “உஷ் ! உஷ்! சத்தம் போடாதே” என்று கிசுகிசுக்கிறீர்களா? ஐயையோ. . அப்ப கதைப்பதை நிறுத்திவிட்டு தகுதி பெற்றதும் வாருங்கள். எப்படியெல்லாம் தமிழைத் தளர்த்தி மாற்றான் மொழியில் மொழிப்பெயர்த்து தள்ளுகிறீர்கள். எத்துனைப் பெரிய முரண்பாடுகளில் இருந்துகொண்டு அறியாமைகளுடன் பேசி வந்துள்ளீர்கள்?

இன்னும் புகார்கள் நிரம்பிக் கொண்டே இருக்கின்றன.

பின்குறிப்பு: இது ஒரு கற்பனை கதை: உயிருடன் வாழும் யாரையும் குறிப்பிடுபவை அல்ல.

6 comments:

Thiru said...

ha ha ha ha nice., mintamilil sorry kanini tamilil ithellam sagajam ayya.,

Mahesh said...

இம்புட்டு அழகா எழுதறீங்க.... சிங்கை பதிவர்கள் கருத்தாய்வு போட்டியில கலந்துக்கோங்க....

சுப.நற்குணன்,மலேசியா. said...

நல்ல கற்பனை படைப்பு. பாராட்டுகள்.

என்ன, நீங்கள் வடித்துக்கொட்டியுள்ள கற்பனைகள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை படித்து.. படித்து.. புளித்துப் போனவையாக உள்ளன.

-திருக்குறளைப் படித்தவன் புலால் உண்ணலாமா?

-அடையாள அட்டையில் பெயரைத் தமிழில் எழுதலாமா?

-வலைப்பதிவு முகவரியை ஆங்கிலத்தில் எழுதலாமா?

-மின்னஞ்சல் முகவரியை 'ரோமனைசு' தமிழில் எழுதலாமா?

எல்லாமே பழைய கற்பனைகள்! புதிய கற்பனைகளை ஏதாவது கண்டுபிடித்து எழுதினால் நன்று.

Tamilvanan said...

வித்தியாசமான பதிவு, படைக்கும் விதத்திலே புதுமை.

அதெப்படி சிலர் புதிய கற்பனைகளில் எழுத சொல்கிறார்கள். தமி்ழில் புதுமை மற்றும் நவீனம் இவர்களுக்கு ஆகாதே. அப்படியே நாம் சுயமாக சிந்தித்து எழுதினாலும், இது ஏற்கனவே எங்கள் மரபில் சொல்லப்பட்டதுதான் என்று ஆதாரம் காட்டுவார்கள்.

நான் படிவம் 5 வரை மட்டுமே தமி்ழ் படித்தேன். படிவம் 6 சுயமாக படித்து தேர்வு எழுதினேன் ( ஆண்டு 1990). எனக்கு இலக்கண பற்றிய அறிவு குறைவே. ஆகையால் சில சின்ன கேள்விகள்?

//
என்ன, நீங்கள் வடித்துக்கொட்டியுள்ள கற்பனைகள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை படித்து.. படித்து.. புளித்துப் போனவையாக உள்ளன.//

தமி்ழ் இலக்கண மரபுப்படி முடிவடையாத வாக்கியத்தில் புள்ளிகள் சேர்க்கலாமா? அதுவும் இரு புள்ளிகள் இடை இடையே சேர்க்கலாமா?

தொல்காப்பியர் இலக்கண மரபிலே இவை ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லை அதற்கு முன் அல்லது பின் வந்த தமி்ழ் இலக்கண மரபிலே அங்கிகரிக்கப்பட்டதா?

ஆம் என்றால் விளக்கம் அளித்தால் நன்று.

இல்லையென்றால் இதை படிக்கும் தமி்ழர்கள் தமி்ழ் மாணவர்கள் தவறான தமி்ழ் இலக்கண அறிவு பெற்று விட மாட்டார்களா?

இல்லை கணினி பதிவுக்காக மரபை சற்று கைவிட்டு விட்டு நவினத்தை ஏற்றுக் கொண்டோம் என்று கூறப் போகிறார்களா?

தமி்ழ் மரபு காக்கும் எழுத்துச் சொல் வீரர்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

மறுபடியும் சொல்கிறேன், ஆம் என்றால் நான் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்

தமி்ழ்வாணன்

** உலக மக்கள் யாவரும் பேசிட , படித்திட , கருத்திட என்றும் நவீனமாய் எளிமையாய் தமி்ழ் மலரட்டும் உலாவட்டும்.

கே.பாலமுருகன் said...

// உலக மக்கள் யாவரும் பேசிட , படித்திட , கருத்திட என்றும் நவீனமாய் எளிமையாய் தமி்ழ் மலரட்டும் உலாவட்டும்//

வாங்க தமிழ்வாணன், மிக்க நன்றி பதிவுக்கு. மிகவும் நாகரிகமாக எதிர்வினைகளை எதிர்க்கொள்வது எழுத்தனுபவம் கொடுக்கும் முதிர்ச்சி. அந்த முதிர்ச்சி இல்லாதவர்களுடன் இனி பேசி என்ன இருக்கிறது? "நாய்- பத்தியம்-மடையன்" இப்படிப் பேசத்தான் அவர்களின் மானமிக்க தமிழுணர்வு கற்றுக் கொடுத்திருந்தால், அவர்களுக்காக நாம் வ்ருத்துவோம்

சுப.நற்குணன்,மலேசியா. said...

//தமி்ழ் இலக்கண மரபுப்படி முடிவடையாத வாக்கியத்தில் புள்ளிகள் சேர்க்கலாமா? அதுவும் இரு புள்ளிகள் இடை இடையே சேர்க்கலாமா?//

நிறுத்தக்குறிகள் உரைநடை இலக்கியக் காலத்தில் தமிழுக்குள் புகுந்தவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், அவை தமிழைச் சிதைத்துள்ளன என்பதைக் காட்டுங்கள்.

புதியவரவாகிய எதுவானாலும் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு ஒதுக்கித்தள்ளாமல், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் மரபுகளோடு ஒத்துப்பார்த்து வேண்டியதை கொள்ளவும் ஆகாததைத் தள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்; அதற்குக் கொஞ்சம் மரபியல் சார்ந்த அறிவும் வேண்டும்.

மேலும், புத்திலக்கியவாணர்கள் தமிழியலை முன்படுத்தி அன்னிய வடிவங்களைக் கையாள வேண்டுமே - சிந்திக்க வேண்டுமே தவிர, அன்னிய வடிவங்களுக்காக ஏற்றமிகு தமிழ் மரபியலை வெட்டிக் குத்திக் குதறிப்போடும் குரோதங்களைக் கொஞ்சம் கைவிட வேண்டும்.

//இல்லையென்றால் இதை படிக்கும் தமி்ழர்கள் தமி்ழ் மாணவர்கள் தவறான தமி்ழ் இலக்கண அறிவு பெற்று விட மாட்டார்களா?//

புள்ளிகளால் தமிழ் மாணவர்கள் தவறான பாடம் படித்துவிடுவார்களே என்று வெதும்பும் தாங்கள், புத்திலக்கியப் பரவெளியில் 'பாலியல்' என்ற புள்ளியில் மட்டும் நின்றுகொண்டிருக்கும் படைப்புகள் ஏற்படுத்தும் பண்பாட்டு உடைப்புகளுக்கும் சேர்த்து வருத்தப்பட்டால் மகிழ்வேன்.

//அந்த முதிர்ச்சி இல்லாதவர்களுடன் இனி பேசி என்ன இருக்கிறது?//

???????????????????????????!