Wednesday, July 22, 2009

ஒரு தமிழாசிரியரின் நாட்குறிப்புகள்-1 (பள்ளிக்கூடம் என்கிற மலர்வனம்)



குறிப்பு: மக்கள் ஓசை நாளிதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர் கட்டுரையின் முதல் பாகம் இது.

கல்லூரி படிப்பு முடிந்ததும் கெடா மாநிலத்திலேயே ஒரு தமிழ்ப்பள்ளியில் பணி அமர்வு கிடைத்தது. எங்கிருந்து பார்த்தாலும் கடப்பவர்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு செம்பனை காட்டின் நடுப்பகுதியில் சிக்கிய ஒரு தமிழ்ப்பள்ளிக்கு முதல்நாள் வேலைக்குச் சென்றபோது நகர பிராந்தியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட அதிருப்தியுடன் மனம் இறுகியபடியே இருந்தது. பெரிய சாலையிலிருந்து 1 கிலோ மீட்டர் பிரிந்து செம்பனை நடுவுகளின் இருளைக் கடந்து உள்ளே சென்றால் பள்ளியின் வாசல் வரவேற்றுக் கொண்டிருக்கும். எப்பொழுது வேண்டுமென்றாலும் பாதையின் குறுக்கே ஒரு நீளமான பாம்பு வெளிவரலாம், அல்லது செம்பனை காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் தேடி வந்து முட்டி வைக்கலாம். எல்லாம்விதமான தயார்நிலைகளுடனும் பாதுகாப்புடனும் நடக்க பழகும் குழந்தையைப் போல பள்ளிக்குச் சென்று வருகிறேன்.

கொஞ்ச நாட்களில் உட்புற பள்ளியின் சூழலையும் வாழ்வையும் பழகிக் கொண்டேன். மனிதனின் மகத்தான சாமர்த்தியம், எல்லாம் சூழல்களையும் பழகிக் கொள்ளும் ஒரு சமரசம்தானே. முதல்நாள் பள்ளியின் சுற்றுப்புறத்தை அவதானித்தபோது, எங்கும் அடர்த்தியான கிளைகளைத் தொங்கபோட்டுக் கொண்டு நிற்கும் செம்பனை மரங்களும் தூரத்தில் தெரியும் ஒரு முனியாண்டி சாமி கோவிலும், தவிர 2 கிலோ மீட்டருக்கு அப்பால் எங்கோ இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலையின் சத்தமும் அந்தச் சுற்றுச்சூழலை நிரப்பியிருந்ததை உணர முடிந்தது.

காலையில் பள்ளிக்குச் சென்றதும் முதல் பேருந்துக்குப் பள்ளி வந்து சேர்ந்துவிடும் மாணவர்கள் சிலர் அங்கும் இங்குமாக நடமாடிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் பள்ளியின் வாசலை வந்தடைந்ததும், யார் முதலில் காலை வணக்கம் சொல்லப் போகிறார்கள் என்கிற போட்டி உருவாகிவிடும். மோட்டாரிலிருந்து இறங்குவதற்கு முன்பே வரிசைக்கட்டிக் கொண்டு எங்கிருந்தோ என்னிடம் ஓடி வருவார்கள். காலை பனி அங்குள்ள பொருட்களிலெல்லாம் ஒழுகி கரைந்து கொண்டிருக்கும் தருணத்தின் முதல் தரிசனமே மாணவர்களின் அந்த, காலை வணக்கம் என்கிற மாபெரும் அதிசியம்தான்.

“காலை வணக்கம் ஐயா! ஏய் நாந்தான் முதல்லே சொன்னென். .”

“காலை வணக்கம் சார், காலை வணக்கம் சார். . நான் ரெண்டு வாட்டி சொல்லிட்டனே! இப்பெ என்னா பண்ணுவ?”

“சார். . நாளைக்கு நான் சொல்றெ வணக்கத்தைத்தான் நீங்க கேக்கனும் சொல்லிட்டேன்”

வாசலில் எனக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் இருக்கும் ஒரு பள்ளிக்குப் போவதென்பது கடவுளின் வீட்டிற்கு விருந்தாடியாகச் செல்வது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவர்களின் குதுகலத்தில் பங்குபெறும் எனது முதல் காலை பொழுதுகள் அன்று முழுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கும். மாணவர்கள் அவ்வளவு உரிமையுடன் உதிர்த்துவிடும் வணக்கங்கள் என்னை நெருங்கத் துடிக்கும் அவர்களின் போராட்டங்களை அல்லது பிரயத்தனங்களை அடையாளப்படுத்துகிறது என்றே சொல்லலாம். அந்த இடத்தில் வணக்கமோ அல்லது காலை பொழுதோ அவசியம் இல்லை, அதைச் சொல்லத்துடிக்கும் அவர்களின் நெருக்கங்களைத்தான் ஒவ்வொரு ஆசிரியர்களும் கொண்டாடியாக வேண்டும்.

மறுநாள் எனக்காக அவர்கள் ஒரு மாபெரும் வணக்கத்தை மனதில் வைத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பனி கொட்டும் ஒரு காட்டில் காத்திருப்பார்கள். செம்பனை மரங்களிருந்து ஒழுகி சாலையில் இறங்கிக் கொண்டிருக்கும் கூட்டம் கூட்டமான பனி பொழுதை உடைத்துக் கொண்டு வரும் என் மோட்டார் வெளிச்சத்தில், மாணவர்களின் முதல் காலை பல நம்பிக்கைகளுடன் பிறக்கிறது. “வணக்கம் சார்” என்று தூரத்திலிருந்தே எனக்கான அவர்களின் நேசத்தை தூக்கி எறியும் போது, அதை மிக கவனமாகப் பிடித்துக் கொண்டு சிரித்து மகிழ்வதைத் தவிர வேறென்றும் எனக்குத் தெரியவில்லை.

அன்று முழுவதும் என்னைப் பார்க்கும் இடங்களில்லெல்லாம் ஒரு நட்பு பாராட்டும் சினேகம் மாணவர்களின் சொற்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு உட்புற பள்ளி எனக்கு முதலில் கற்றுக் கொடுத்த விஷயம் மாணவர்களுடன் எப்படி அன்பாகப் பழகுவது என்பதைப் பற்றித்தான். எல்லாம் நேரங்களிம் இறுக்கமான தோற்றத்துடனும் பரபரக்கும் ஆவேசத்துடனும் கோபத்தை மாணவர்களிடத்தில் வெளிப்படுத்தும் ஒரு ஆசிரியர் முதலில் தொலைப்பது மாணவர்களின் அன்பையும் நெருக்கத்தையும்தான். மாணவர்கள் அது போன்ற ஆசிரியரை அணுகுவது கிடையாது, அவர்கள் பயந்து நடுங்கி அந்த மாதிரியான ஆசிரியர்களின் பார்வையிலிருந்து விலகியிருக்கவே நினைக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள் போல மாறிவிடக்கூடாது. அல்லது குழந்தைகளைக் கடத்தும் ஒற்றைக் கண் வில்லன் போல நடந்துகொள்ளக்கூடாது. மாணவர்கள் நம்மை வெறுப்பதோடு நாம் கற்பிக்கும் அந்தப் பாடத்தையும் வெறுத்துவிடுவார்கள் என்கிற நிதர்சனத்தையும் ஒப்பிட்டு அளவில் அந்தப் பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.

“சார். . சாப்டீங்களா?”

“ஐயா. . எப்படி இருக்கீங்க?”

“ஐயா. . சார். . “ இப்படி ஒவ்வொரு சந்திப்பிலும் சிறுபள்ளியாக இருந்தபோதும் மாணவர்களின் அக்கறையான வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறேன். அவர்களுடனான சினேகம் மாணவர்களை நம் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்களை அணுக்கமாக நெருங்கி அவர்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. பள்ளிக்கூடம் என்பது காட்டுப் பகுதியில் அல்லது நகர் பகுதியில் அமைவது குறித்து ஆச்சர்யப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றுமில்லை, நமக்காகக் காலையில் பள்ளியின் வாசலில் ஒரு ”வணக்கத்திற்காகக்” காத்திருக்கும் மாணவர்களின் அன்பும் அவர்களின் நெருக்கமுதான் உண்மையான திருப்தி என்பதை ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறேன். அந்த மலர்வனத்தில் ஒவ்வொரு காலை பனியிலும் பல பூக்கள் முளைத்து செம்பனை காடுகளின் இருளைத் தோற்கடிக்கிறது என்றே மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
-நாட்குறிப்புகள் தொடரும்-

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
நன்றி: மக்கள் ஓசை நாளிதழ் (11.07.2009)

5 comments:

Tamilvanan said...

வணக்கம் சார்...
வாழும் தமி்ழில்

வணக்கம் ஆசிரியர் ஐயா...
மரபுத் தமி்ழில்

எப்ப பள்ளிக்கு போன முதல் நாள்.. இது என்ன மெகா தொடரா

Dr.Sintok said...

//“காலை வணக்கம் ஐயா! ஏய் நாந்தான் முதல்லே சொன்னென். .”

“காலை வணக்கம் சார், காலை வணக்கம் சார். . நான் ரெண்டு வாட்டி சொல்லிட்டனே! இப்பெ என்னா பண்ணுவ?”

“சார். . நாளைக்கு நான் சொல்றெ வணக்கத்தைத்தான் நீங்க கேக்கனும் சொல்லிட்டேன்”

//

என் பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது.....
வகுப்பு டீச்சரின் பையை யார் முதலில் தூக்கிவருவது என்ற போட்டியில் அவர் வீடுவரை சென்று காத்திருந்தது..மறக்கத்தான் முடியுமா???

nesan@edu. said...

vanakam. palliyil neengkalthan sirantha aasiriyar enndru ninaikka vaikum oru mega thodar.

pls write something helpfull to student

Unknown said...

Anbu endra moondrelutil maanavarkal unggel manethil koodi kondirukirargal. Anbay kondu etaiyum saatikelam nambikaiyudan todarungal unggel aasiriyar paniyai.

அன்புடன் அருணா said...

//எல்லாம் நேரங்களிம் இறுக்கமான தோற்றத்துடனும் பரபரக்கும் ஆவேசத்துடனும் கோபத்தை மாணவர்களிடத்தில் வெளிப்படுத்தும் ஒரு ஆசிரியர் முதலில் தொலைப்பது மாணவர்களின் அன்பையும் நெருக்கத்தையும்தான்//
ரொம்ப சரி.....அழகான பதிவு...பூங்கொத்து....