Saturday, September 18, 2010

சினிமாவும் வாழ்வும்

கடந்த வருடத்திலிருந்து சினிமா விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். 40க்கும் மேற்பட்ட சினிமாவை(உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை) விமர்சித்துள்ளேன். பெரும்பாலான விமர்சனக் கட்டுரைகள் என் வலைப்பூவிலும் நயனம் மலேசிய வார இதழிலும் பிரசுரமாகி வருகின்றன.

கல்லூரி காலத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் ஒரு சிலர் சினிமா குறித்த ஆழ்ந்த சிந்தனையும் மதிப்பீடுகளும் இரசனையும் உடையவர்களாக இருந்ததால், எது தீவிரமான சினிமா என்கிற தேடல் எனக்குள் இருந்தது. மேலும் என் பள்ளிக்கால நண்பர்களான சிலருக்குக் குறிப்பாக காளிதாஸ், சுந்தரேஸ் போன்றவர்களுக்கும் ஆஸ்கார் விருது பெற்ற சினிமாவைப் பார்ப்பதில் இருந்த தீவிரம் என்னையும் அதனைத் தேடி நகரச் செய்தன. இன்றைக்கு 60க்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற மாற்று மொழி படங்களைப் பார்த்து சிலாகித்துள்ளேன். ஒரு சில படங்கள் பற்றி எழுத முடியாத தடுமாற்றங்களையும் அடைந்துள்ளேன். அதன் மையமும் கதை ஓட்டமும் என்னைஎங்கேயும் நுழையவிடாதபடிக்கு அசாத்தியமான வேலிகளை உற்பத்தி செய்துவிடுகின்றன. ஆகையால் அந்த மாதிரி படங்களைப் பார்த்து எனக்குள் புதியதாக ஒரு புலன் முளைத்து விடுவதாக ஓர் உணர்வு தோன்றுவதோடு சரி, அதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட எழுத முடியாமல் நான் அடையும் பதற்றத்துடன் அந்தச் சினிமாவுக்குள் காணாமல் போய்விடுகிறேன்.

அண்மையில் சிங்கப்பூரில் நான் சந்தித்த செழியன் தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் வரை எல்லோரும் சினிமாவை ஒரு வாழ்வாகக் கருதுகிறார்கள். அதனுடன் பயணிக்கிறார்கள். சினிமா வெறும் பொழுது போக்குக்குரிய தொலைக்காட்சியோடு நின்றுவிடக்கூடிய ஒரு சாதனமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. படத்தைப் பார்ப்பதோடு நின்றுவிடும் சராசரி நுகர்வாளனாகக்கூட தடைப்பட்டுவிடாமல் அந்தப் படத்தின் ஏதாவது ஒரு திறப்புக்குள் நுழைந்துவிடும் முயற்சிகளைத்தான் ஒரு சினிமா விமர்சகனாகச் செய்து வருகிறேன்.


நான் முதன் முதலில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தைத்தான் அக்காவுடன் திரையரங்கில் பார்த்தேன். அப்பொழுது 7 வயதுதான். குட்டையான கமல் திரையில் தோன்றியவுடன் எல்லோரும் அதைப் பிரமித்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் அமர்ந்திருந்த நாற்காலியின் மீது ஏறி நின்று கைத்தட்டியதாக அக்கா கூறியிருக்கிறார்.

திரையரங்கில் அமர்ந்திருந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் என்னைத் திரும்பி பார்த்து சிரித்ததாகவும் அருகில் அமர்ந்திருந்த சிலர் எனக்கு ஆர்வமுட்டியதாகவும் அறிகிறேன். ஒரு வேளை இந்தச் சிறு சம்பவத்திலிருந்தும் தொடங்கியிருக்கலாம் எனது சினிமாவின் தேடல். அதன் பிறகு திரையரங்கில் போடப்படும் அல்லது நான் விரும்பிப் பார்க்கும் எல்லாம் படங்களையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்துவிடுவேன். ஒரு படத்தை ஒருமுறை பார்த்தால், அது ஏதோ ஒருவித போதாமையை ஏற்படுத்திவிடும், தரிசிக்க முடியாத சினிமாவின் முக்கியமான பக்கங்களிலிருந்து தவறி விழுந்துவிடுவோம் என்கிற எச்சரிக்கை உணர்வு ஒருவேளை அப்பொழுதே எனக்குள் இருந்திருக்கக்கூடும். ஆகையால்தான் குறிப்பிட்ட தேர்வு ஏதும் இல்லாமல் பிடித்தசினிமாவை 5 முறைக்கூட பார்த்ததுண்டு. இப்பொழுதும் ஒரு சினிமாவை ஒருமுறையோடு பார்த்துவிட்டு அதற்குரிய விமர்சனத்தை எழுதிவிடலாம் என்று தோன்றவில்லை. ஆகையால்தான் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்துவிட்ட பிறகுதான் விமர்சனம் எழுதவே அமர்கிறேன்.

அண்மையில் பார்த்த ‘seven pounds” திரைப்படத்தை மூன்று முறை பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஓர் ஆழ்ந்த மனிதநேயத்தையும் வன்முறைக்கு எதிராக மனித மனம் செயல்படும் விதத்தையும் அந்தத் திரைப்படத்தில் தரிசிக்க முடிந்தும் அதை மேலும் ஆழமாக உணர வேண்டும் என்பதற்காக அத்துனைமுறை பார்க்க விருப்பப்பட்டேன்.

சினிமா தன்னுடன் ஒரு கலாச்சாரத்தின் கதையை வைத்திருக்கிறது, ஒரு மானுடத்தின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுருக்கிறது, ஒரு சமூகத்தின் வரலாறை தனக்குள் புனைந்திருக்கிறது, ஒடுக்கப்பட்டவர்களின் முகங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இப்படி இன்னும் பல மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் முன்னிறுத்தக்கூடிய அசலான சினிமாவைத் தேடியே அலைந்து கொண்டிருக்கிறேன்.

அநங்கம் 7

§¸.À¡ÄÓÕ¸ý


1 comment:

Tamilvanan said...

சினிமா மீதான‌ ஆழ்ந்த‌ பிர‌மிப்பு என்னிலும் உண்டு. உல‌கின் முத‌ல் ம‌னித‌ன் முன் ந‌டித்த‌து எதுவாக‌ இருக்கும் எனும் கேள்வியும் அவ‌னின்/அவ‌ளின் நிழ‌லாக‌ இருக்குமோ எனும் ப‌தில் கூட‌ சிந்த‌னையில் உதித்த‌துண்டு.