Friday, November 19, 2010

பென்சிலும் அழிப்பானும்- ஒரு வரலாறும் முரணான நமது வன்முறையும்

முதல் புரிதல்: பென்சில் ஆக்கங்கள் உருவாவதற்கான குறியீடு என்றால் அழிப்பான் சுய ஒழிப்புக்குரிய குறியீடாகும். இவை இரண்டும் ஒன்றை ஒன்று மிக நெருக்கமாகச் சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆக்கங்களுக்குப் பிண்ணனியில் எத்தனையோ சுய ஒழிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகப் பென்சிலும் அழிப்பானும் அதனுடைய செயல்பாடுகள் சார்ந்து தன்னை இருத்திக் கொண்டிருப்பது ஒருவகையான ஆச்சர்யம் என எல்லோரும் நினைக்கக்கூடும்.

அழிப்பான் இல்லாத பென்சிலின் உழைப்பில் சில தடுமாற்றங்களும் கோளாறுகளும் பிழைகளும் திருத்தப்படாத விடப்பட்ட பகுதிகளும் நிறைந்து அந்தப் படைப்பை அரைகுறையானதாக மாற்றிவிடும் சாத்தியம் உண்டு. பென்சிலின் இருப்பிற்கு மிகச் சிறந்த அர்த்தத்தை ஏற்படுத்துவது அழிப்பான். பென்சிலின் ஒவ்வொரு பிழைகளையும் அழிப்பான் உடனுக்குடன் சரி செய்து அதனை நேர்த்தியாக்கி அழகு சேர்க்கிறது.

நேற்று மின்னஞ்சல் மூலம் நண்பர் மூர்த்தி பென்சில் அழிப்பான் இரண்டுக்கும் இடையில் நிகழும் உரையாடலை அனுப்பியிருந்தார். அந்த உரையாடலை ஒற்றை பார்வையில் பார்க்க நேரும் மனங்களுக்கு ஏற்படும் புரிதல்தான் மேற்கண்ட விளக்கங்கள். ஆங்கிலத்தில் இருந்த அந்த உரையாடலைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளேன்:

பென்சில்: என்னை மன்னித்துவிடு.
அழிப்பான்: ஏன் மன்னிப்பு? நீ எந்தத் தவறையும் செய்யவில்லையே.
பென்சில்: என்னால் நீ அதிகமாகப் புன்படுத்தப்படுகிறாய், அதனால்தான் மன்னித்துவிடு என்கிறேன். நான் பிழைகளையும் தவறுகளையும் செய்யும் ஒவ்வொருமுறையும் நீ அதை அழித்து சரி செய்கிறாய். ஆனால் அப்படி நீ என் பிழைகளை அழிக்கும்போதெல்லாம் உன்னுடைய உடலின் பகுதிகளைச் சிறுக சிறுக இழந்து வருகிறாய். நீ கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துக் கொண்டே போகிறாய்.
அழிப்பான்: ஆமாம். அது உண்மைத்தான். ஆனால் அதில் எனக்கு வருத்தமே இல்லை. நான் அதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறேன். நீ பிழை செய்யும்போதெல்லாம் உனக்கு உதவுவதற்காக மட்டுமே நான்
படைக்கப்பட்டிருக்கிறேன். ஒருநாள் நான் முற்றிலுமாக அழிந்துவிடுவேன் என்பதும் எனக்கு தெரியும். நான் என் கடமையை மகிழ்ச்சியானதாகவே கருதுகிறேன். ஆகையால் வருத்தப்படுவதை நிறுத்திக் கொள். நீ கவலையுறுவதை என்னால் பார்க்க முடியவில்லை.

இரண்டாம் புரிதல்: மேற்காணும் உரையாடலில் இரண்டுவகையான யதார்த்தங்கள் உள்ளன. ஒன்று உறவுகளுக்காக தன்னை இழக்கும் நிலை. இது பெற்றோர்களின் நிலை. குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் தவறுகளுக்கும் வளர்ச்சிக்கும் பின்னால் பெற்றோரின் உழைப்பும், தியாகமும், இழப்பும் எப்பொழுதும் இருக்கின்றன. இந்தத் தியாகம் ஒரு காவியத்தின் நீட்சி போல. எப்பொழுதும் நிகழும். இரவு பகல் தோன்றுவதை எந்த அதிர்ச்சியும் கொண்டு நாம் பார்ப்பதில்லை காரணம் அது நம் வாழ்வின் தினசரி நிகழ்வு. பழக்கமாகிவிட்ட ஒரு அதிசயம். பெற்றோர்களின் இருப்பும் அப்படித்தான். இனி தனியாக அதைச் சொல்லி அதிசயப்படவோ அதிர்ச்சியடையவோ வேண்டியதில்லை. அவர்களின் தியாகத்தின் மகத்துவத்தை உணர்வதே மிகச் சிறப்பு.

மற்றொரு யதார்த்தம், மேற்கண்ட உரையாடலில் அழிப்பான் மட்டுமே தன்னை மெல்ல அழித்துக் கொள்வது போல பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் பென்சிலுக்கும் அதே நிலைத்தானே. பென்சில் எழுத எழுத தன்னை மெல்ல அழித்துக் கொள்கின்றன. எத்தனையோ பென்சில்களைக் குட்டையாகி எழுத முடியாத இயலாமையை அடைந்ததும் நான் தூக்கி வீசியிருக்கிறேன். சில குட்டை பென்சில்களை அப்படியே முடமாக்கி அழகுக்காகப் பத்திரப்படுத்தியும் வைத்துள்ளேன். ஆக அழிப்பானுக்கு நிகழும் அழிவைவிட, முழுவதும் அழிக்கப்படாமல் பாதியிலே குட்டையாகியதும் தூக்கி வீசப்படும் பென்சில்கள் சந்திக்கும் இழப்பு கொடூரமானதுதான். எல்லாம் ஆக்கங்களுக்குப் பின்னால் ஓர் அழிப்பு சாத்தியம் என்றால், எல்லாம் அழிவுக்கும் பின்னால் ஒரு ஆக்கமும் சாத்தியம்தானே. அழிப்பானின் அழிவு என்பது வெறும் தியாகம் என மட்டும் பார்க்க இயலாது. அதற்காக நெகிழ்ந்தும் போக முடியாது. அது இரசிக்கக்கூடிய மிக இயல்பான உண்மை. அழிப்பானின் அழிவுக்குக் காரணமாக இருந்து அதனை உயர்த்திக் காட்ட, பிழைகளைச் செய்து அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, மேலும் மேலும் உழைத்துத் தள்ளும் பென்சில்களின் இருப்பைப் பற்றி உரையாட தயாராக இருக்கிறோமா?

சுரண்டலுக்கு ஆளாகுவது பென்சிலா அல்லது அழிப்பானா? பென்சிலின் கடமை எழுதுவது மட்டுமே. பிழையாக எழுதுவது அல்ல. ஆனால் பென்சில் செய்யும் தவறுக்காகவும் பிழைக்காகவும் மட்டுமே அழிப்பான் படைக்கப்பட்டிருக்கிறது. எது சிறந்த கடமை எனச் சொல்ல முடியுமா? பிறகெப்படி அழிப்பானின் தியாகத்தை மட்டும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் எழுதப்படும் இப்படியொரு உரையாடல்களை நம்மால் இரசிக்க முடிகிறது? பென்சிலின் தியாகத்தைப் புரிந்துகொள்ளாமல் அழிப்பானை எப்படி ஒற்றைத்தன்மையுடன் முன்னிறுத்த முடியும்? இயற்கையின் மிக உன்னதமான செயல்பாட்டின் மீது ஆழமான புரிதல் இருக்குமாயின், நதி கொடுக்கும் தண்ணீரும், மீனும் இரண்டுமே ஒரே நிலையிலான முக்கியத்துவத்தைத்தான் கொண்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ள முடியும்.

அதே உரையாடலை நாம் நமக்கு வசதியான சிந்தனைக்குத் தகுந்தாற்போலவும் மாற்றிக்கொள்ள நேரிடும். பென்சில்கள் தொடர்ந்து எழுதுவதால்தான் அழிப்பானுக்குத் தன் சேவையை ஆற்ற வாய்ப்பளிக்கப்படுகிறது. பென்சில்கள் பிழைகளே செய்யாமல் இயங்கத் துவங்கினால் அழிப்பான்களின் உற்பத்தியில் சரிவு ஏற்படக்கூடும். ஆகையால் அழிப்பான்களை அழிப்பதும் பென்சில்கள்தான் அதனை வாழ வைப்பதும் பென்சில்கள்தான். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என ஒரு கவிஞர் பாடியது போல,’அழிப்பான்கள் ஆவதும் பென்சில்களாலே அழிவதும் பென்சில்களாலே’. ஆனால் அழிவை முன்வைத்து தியாகங்களின் மகத்துவத்தை உணர்த்தும் நம் மனபாவம் ஆக்கத்தைப் பற்றி கவலை கொள்வதே இல்லை என்பதற்கு மேற்கண்ட உரையாடலின் ஒற்றைத்தன்மையே ஆதாரம்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த அதே உரையாடலை இப்படி மாற்றிக் கொள்கிறேன்.

அழிப்பான்: மிக்க நன்றி நண்பா.
பென்சில்: எனக்கு எதற்கு நன்றி சொல்கிறாய்? நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?
அழிப்பான்: உன்னால் நான் பயனுள்ளனவாக ஆகின்றேன். அதனால்தான் இந்த நன்றி. நீ பிழைகளையும் தவறுகளையும் செய்யும் ஒவ்வொருமுறையும் நான் அதை அழித்து சரி செய்கிறேன். ஆனால் அப்படி உன் பிழைகள் அழிக்கப்படும்போதெல்லாம் உன்னுடைய உடலின் பகுதிகளைச் சிறுக சிறுக இழந்து வருகிறாய். நீ கொஞ்சம் கொஞ்சமாய் குட்டையாகி கொண்டே போகிறாய்.
பென்சில்: ஆமாம். அது உண்மைத்தான். ஆனால் அதில் எனக்கு வருத்தமே இல்லை. நான் அதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறேன். நான் பிழை
செய்யும்போதெல்லாம் உனக்கு சேவையை வழங்க நான்
படைக்கப்பட்டிருக்கிறேன். ஒருநாள் நான் முற்றிலுமாக அழிந்துவிடுவேன் என்பதும் எனக்கு தெரியும். நான் என் கடமையை மகிழ்ச்சியானதாகவே கருதுகிறேன். ஆகையால் வருத்தப்படுவதை நிறுத்திக் கொள். என் பிழையாலும் தவறாலும் நீ வாழ்கிறாய் என்பதால் நான் தொடர்ந்து தவறு செய்யவும் பிழை செய்யவும் கடமைப்பட்டுள்ளேன். நீ கவலையுறுவதை என்னால் பார்க்க முடியவில்லை.

இந்த உரையாடலையே நாம் பலவகைகளில் மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. ஒன்றை ஒன்று மிகவும் வலுவாகவும் அர்த்தத்துடனும் சார்ந்திருக்கும் இந்த உலகில், எந்தச் சார்புடைய நிலையை நாம் உயர்த்திக் காட்டி, எதன் முக்கியத்துவத்தைத் தூக்கிக் காட்டப் போகிறோம்? இன்று நம் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு காரணமும் முக்கியத்துவமும் உண்டு. அதன் அதன் முக்கியத்துவமும் செயல்பாடும் வேர்கள் போல நம்முடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டு பிணைந்துள்ளன. எது ஆகச் சிறந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என விளக்குவதற்காக நான் முறபட்டால், ஏதோ ஒரு முக்கியத்துவத்தை முன்னிறுத்தி அதற்கு நிகரான இன்னொரு முக்கியத்துவத்தை ஒளித்துவிட்டுப் பேசுவதாகத்தான் அது இருக்கும். என்ன ஒரு கொடுமை நமக்கு? தன் தலையிலேயே அழிப்பானைச் சுமந்துகொண்டு இயங்கும் பென்சில்கள் பற்றிப் பேசத் துவங்கினால், அழிப்பானின் இருப்பு கேள்விக்குள்ளாகும்தானே? சர்ச்சையைத் தொடங்குங்கள்.

நன்றி: for forwarded email from friends.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.

No comments: