இரவுவரை மின்சார இரயிலின் இரைச்சலிலேயே இன்றைய முதல் நாள் கடந்து சென்றது. அர்ஜுனைட் என்கிற இடத்தில் சொந்தமாக உணவு கடை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வரும் எழுத்தாளர் ஷானவாஸ் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. இரண்டு மணி நேரம் அவர் கடையிலேயே இருந்து உரையாடிக் கொண்டிருந்தோம்.
ஷானவாஸ் அவர்களின் பத்தி தொடர்ந்து உயிரோசை இணைய இதழில் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது. 34 வாரங்களையும் கடந்து உற்சாகமாக அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மலேசியாவில் மஹாத்மன் அவர்களின் அனுபவத் தளம் வித்தியாசமானது என்றால் சிங்கப்பூரில் ஷானவாஸ் அவர்களின் அனுபவம் அத்தகைய வித்தியாசத்தையே கொண்டிருக்கிறது. உணவும் அதன் சார்ந்தும் வாழ்வையும் தனது கட்டுரைகளில் சொல்லக்கூடிய மொழியையும் அனுபவத்தையும் அவர் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் அவரது அந்தப் பத்திகள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கிறது.
அந்த நூல் புதிய தளத்தைப் பற்றி பேசக்கூடிய முக்கியமான நூலாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஷானவாஸ் அவர்களுடன் தொடர்ந்து பல சமயங்களில் தொலைப்பேசியில் உரையாடியிருக்கிறேன். சிங்கப்பூர் சென்றிருந்த சமயங்களில் சில வேளைகளில் குறைவான அளவில் நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன். இன்று ஓரளவிற்கு அவருடன் நெருங்கி உரையாட வாய்ப்புக் கிடைத்தது. 20 வருடத்திற்கும் மேலாக இந்த உணவகத் தொழிலில் பற்பல மனிதர்களையும் சவால்களையும் வித்தியாசமான அனுபவங்களையும் சந்தித்த அவருடன் பேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.
பிறகு மாலையில் ஒரு இசைத்தட்டு வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். பாண்டித்துரையின் நண்பர் ஒருவரின் சொந்த உழைப்பில் தெம்மாங்கு பாடல்களில் ஒலிவடிவத்தின் வெளியீட்டு நிகழ்வு. பாடல்களில் ஒலித்த அவரது குரலில் எப்பொழுதோ கேட்ட கானா பாடல்களின் எதிரொலி கேட்டது. தெம்மாங்கு பாட்டிற்கும் அதன் இசைக்கும் மத்தியில் எப்பொழுதும் ஒரு நெருக்கத்தை உணர முடிகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக அந்த இசையிலிருந்து வெளியே வந்து விழக்கூடிய கிராமியச் சாயலைக் கொண்டிருக்கும் குரல் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. ஒரு பாடல் மட்டுமே கேட்டேன். அவரது குரல் வலம் பாராட்டுதலுக்குரியது.
மீண்டும் மாலையில் நானும் பாண்டித்துரையும் பழைய பொருள்களை குறைந்த விலையில் விற்கும் தெருவோர சந்தைக்குச் சென்றிருந்தோம். நாலாப்பக்கம் பிரிந்து மிக நீளமாகச் செல்லக்கூடிய ஒரு சந்தை அது. ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாமும் முன்பொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருள்கள். 1980களில் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் முதல் அதற்கு முந்தைய காலத்திலும் உபயோகிக்கப்பட்ட பொருள்களும் விற்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மூர்ச்சையாகிவிடும் அளவிற்கு கூட்ட நெரிசல். பெரும்பாலும் அயல் நாட்டுக்காரர்கள். அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாத அளவிற்கு அடர்ந்த கூட்டம்.
இரவு வீடு திரும்பியதும் பாண்டித்துரையும் நானும் லதாமகன் எழுதிய ஒரு கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வெகுநாட்களுக்குப் பிறகு மனதிற்குப் பிடித்தமான ஒரு கவிதையை வாசித்தது போல இருந்தது. இராம கண்ணபிரான் எழுதிய ‘ நவீனவாதம் ஓர் அறிமுகம்’ கட்டுரையை வாசித்தேன். நாளை அவரைச் சந்தித்து சில விசயங்கள் குறித்துப் பேசவிருக்கிறேன்.
தொடரும்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
1 comment:
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
www.ellameytamil.com
Post a Comment