Saturday, December 11, 2010

சிறுகதை: சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

1. தவிப்பெனும் கடல்

நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப்பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து ஓடிவந்த முதல் நடுநிசி அது. நகரம் செத்து அநேகமாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கக்கூடும்.
“செவன் இலவன் எங்காது இருக்குமா?”

எதிரில் யாரும் இல்லை. கேட்டு விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததில் எப்படிக் கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே நடந்தேன். முதலில் சந்திப்பவரிடம் அதைக் கேட்டுவிட்டு கூடவே ஏதாவது சாப்பிடுவதற்குக் கொஞ்சம் பணமும் கேட்டுத்தான் ஆக
வேண்டும். நகரத்து சாலை இருளுக்குள் ஓடி மறையும்வரை எனது கண்களுக்குள் சூன்யமாக விரிந்து கிடந்தது. கண்கள் வழக்கமாக மாயையை உருவாக்கி அனுமானங்களின் மூலம் கிளர்ச்சியுறுவதில் பழகி போனதாயிற்றே. யாரோ வருகிறார்கள், வந்து விடுவார்கள், ஒரு வயதான பெண்மணி வருகிறாள் எனத் தொடர்ந்து தூரத்தைப் பற்றிய கனவை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. எங்காவது களைத்து மயங்கிவிட்டால் என்கிற உடல் குறித்த பயமும் தொடர்ந்து ஒட்டிக் கொண்டது.

எத்துனைத் தூரம் நடக்க வேண்டும் என்பதில் ஒரு தயக்கம். சாலையில் நெளிந்து கொண்டிருந்த மஞ்சள் ஒளி நனைந்திருந்தது. ஒரு பெரிய கட்டிடத்தின் பின்புறமாக நடந்து செல்லலாம் எனப் புகுந்தேன். அது நகரத்தின் பழைய ஆற்றைச் சந்திக்கும் நெடும்பாதை. அங்கு இதுவரை 5 தற்கொலைகள் நடந்துள்ளன. எப்பொழுதோ வசதியாக இருந்தபோது கேட்ட செய்திகள். கையில் பணமும் வசதியும் இருக்கும்போது மட்டுமே என்னைச் சுற்றி நிகழும் அனைத்திலுமே கவனம் இருந்தது. குறைந்தபட்சம் அதையெல்லாம் ஒரு செய்தியாகக் கேட்டுத் தொலைத்துவிடுவேன். இன்று நான் நகரத்தில் எந்தக் கணத்திலும் தொலைந்துவிடக்கூடும் என்கிற அச்சம் உடல் முழுக்க பரவியிருந்தது. அது எந்தச் சாலையில், எத்துனை மணிக்கு எவ்விதம் நிகழப் போகிறது என்பதில் மட்டுமே ஆச்சர்யம் காத்திருந்தது.

“தனியாவா போறிங்க?”

சட்டெனத் திரும்பினேன். இருள். இருமாடி கட்டிடமான அந்தச் சுவரில் வெறுமை. ஒரு பெரிய ஓவியம் வரையப்பட்டிருந்தது. சரியாக உடைந்த பாலத்தை நோக்கி ஓடும் குறுக்குப் பாதைக்கு அருகாமையிலுள்ள சுவர். காரணமில்லாமல் அந்த அழைப்பு அங்கு நடந்திருக்காது. சுவரில் ஒட்டிக் கொண்டிருந்த அந்த ஓவியத்தை நெருங்கினேன். கலர் சாயத்தால் பூசப்பட்ட நேர்த்தியற்ற கிறுக்கல் போலவே தெரிந்தது. ஓவியத்தை உற்றுக் கவனிப்பதில் எனக்குக் கல்லூரி காலக்கட்டத்திலேயே எந்த ஆர்வமும் இல்லை. மேலோட்டமாக என் கவனத்தை அந்த ஓவியம் படர்ந்திருக்கும் எல்லைவரை அலையவிட்டேன். மெல்ல ஒரு பிடிமானம் கிடைக்கத் துவங்கியது. அதற்குப் பக்கத்திலும் சில ஓவியங்களும் சொற்களும் பெரிது பெரிதாக எழுதப்பட்டிருந்தன. “fuck you” என்கிற சொல் மட்டும் எங்கும் பரவியிருந்தன.

“தனியாவா இருக்கீங்க?”

அந்த ஓவியத்திலிருந்துதான் அந்தக் குரல் ஒலிப்பதை உணர்ந்தபோது உடல் நடுங்கியது. தற்கொலை செய்துகொண்டவர்களில் யாரோ ஒருவரின் குரலாகவும் இருக்கக்கூடும். இல்லை. எனக்கெப்படி இந்த மாதிரியான நம்பிக்கைகள்? முடியாது. இது முன்பு யாரோ பேசிவிட்டுச் சென்ற குரலின் எதிரொலி. அதைத்தவிர இந்த இடத்தில் வேறு இருக்க வாய்ப்பில்லை. இது சபிக்கப்பட்ட இடம் போல தெரிந்தது. ஆங்காங்கே சுவர்களில் நடு விரலை அழுத்தமாக வரைந்திருந்தார்கள்.

“தனியாதான் இருக்கீங்க”

சுற்றிலும் அடர்ந்திருந்த இருள் திடீரென பயத்தை மூட்டியது. அங்கிருந்து தப்பித்து ஓடிவிடலாம் என கால்கள் துடித்தன. உடலின் பலத்தைத் திரட்டி வேகத்தை அதிகப்படுத்தினால் கருமையான நிறத்தில் அசைந்து கரையிலிருந்து நழுவி ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் விழக்கூடும். ஆகையால் சற்றே நிதானித்துவிட்டு மீண்டும் அந்த ஓவியத்தைப் பார்த்தேன். இந்தமுறை ஓவியத்தின் மீது விழுந்துகிடந்த இருள் விலகியிருந்தது போல பட்டது. ஓவியங்கள் மீது எனக்கென்ன வெறுப்பு? அது அசையாமல் இருப்பதால்கூட இருக்கலாம்.

நேர்த்தியற்ற அலைகள் பாய்ந்துகொண்டிருக்கிறது. அதன் கரங்கள் உச்சத்தை நோக்கி விரிகிறது. எந்தக் கனத்திலும் மாபெரும் அந்தக் கடல் ஓவியத்திலிருந்து தவறி கீழே விழக்கூடும். திடீரென ஓர் அச்சம். சுவரிடமிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கிறேன். அந்த ஓவியம் வெறும் நீல வர்ணத்தால் மட்டுமே பூசப்பட்டிருக்கிறது. கோடுகள் இல்லை. யாரோ சுவரில் அனுமதியில்லாமல் கிறுக்கி வைத்த ஓவியம் அது. மோட்டார் கார்களுக்கு அடிக்கும் ஸ்ப்ரேய் வகையிலான சாயத்தைக் கொண்டு பூசப்பட்டிருக்கிறது. நகரத்திலிருந்து விலக்கப்பட்ட எவனோ ஒரு நாடோடி தனது கோபத்தை இங்கே வரைந்துவிட்டுப் போயிருக்கிறான்.

“தனிமையாதான் இருக்கீங்க”

மீண்டும் ஓவியத்திலிருந்து அதே குரல். அது விநோதமான அதிர்வைக் கொண்டிருக்கிறது. அதன் வாய் எங்கிருக்கிறது எனத் தேடினேன். துணிச்சலுடன் அந்த ஓவியத்தைத் தடவினேன். சுவரின் சொரசொரப்பு உள்ளங்கையைத் தீண்டியது. கடல் அலைகள் என் கையைப் பிடித்து உள்ளிளுப்பதைப் போல இருந்தது. அலைகளின் காலுக்குக் கீழ் சமிக்ஞை விளக்குகளும் கார்களும் இருப்பதைப் பார்த்தேன். கண்களில் படாதமாதிரி சிறியதாக வரையப்பட்டிருந்தது. அலைகள் உயரமாக எழும்போது மற்றவை எல்லாம் சிறியதாக சுருங்கிவிடும் எனும் இந்தப் புரிதலைக் கல்லூரியில் யாரோ ஒருவருடைய கவிதையில் வாசித்ததைப் போல இருந்தது. பசி நேரத்தில் என்ன மயிருக்கு இந்தக் கவிதை ஞாபகம்? சட்டென உதறிவிட்டு அந்த ஓவியத்திலிருந்து கையை எடுத்தேன்.

அந்த ஓவியத்தின் அடியிலிருந்த சிறு நகரம் வேறு மாதிரிதான் இருந்தது. இதற்கு முன் நான் அந்த மாதிரியான நகரத்தைப் பார்த்ததில்லை. கடைத்தெருக்களின் ஒரு பகுதி மட்டுமே தெளிவாக இருந்தது. இன்னும் விரிவாக ஓவியத்தை அணுகும்போது, கடைத்தெருக்களில் மனித கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அது மனிதர்களின் கூட்டமா அல்லது யாரோ ஒரு மருத்துவரின் கையெழுத்தா எனக் குழப்பம் தட்டியது. இல்லை மனிதர்கள்தான் அப்படி வரையப்பட்டிருக்கிறார்கள்.

பசி மேலும் என் உடலைப் பலவீனப்படுத்திக் கொண்டே இருந்தது. மீண்டும் ஓவியத்திலிருந்து பார்வையை நழுவவிட்ட பிறகு சுற்றிலும் பார்த்தேன். மஞ்சள் ஒளி ஆங்காங்கே தூக்கி எறியப்பட்டிருந்தது. அகால சூன்யம். நகரத்தில் யாரும் இல்லாததை அந்தச் சிட்டுக்குருவியின் துல்லியமான ஓசை ஞாபகப்படுத்தியது. கனிவேலு மாமாவின் முகம் போல இருள் எங்கும் பரப்பப்பட்டிருந்தது. அவர் மட்டும் என்னை அடித்துத் துரத்தாமல் இருந்திருந்தால் இங்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்பில்லை. யாரையாவது பார்த்து வாழ்வதற்கான வாய்ப்பை ஒரு பிச்சை போல கேட்கலாம்தான். மண்டியிட்டு வேண்டி அவர்கள் போடும் மிக கொடூரமான உதவியைப் பெற்றிருக்கலாம்தான். கனிவேல் மாமா போட்ட பிச்சை போதாதா? அதுவே பிறவிக்கடன்.

மீண்டும் ஓவியத்தைப் பார்த்தேன். எனக்காக ஏதோ ஒரு தகவலை இங்கு ஓவியமாக எவனோ விட்டுச் சென்றிருக்கிறான். ஆகக் கடைசியாக ஏதோ ஒரு நகரத்தில் யாரோ ஒருவன் மிச்சமாகச் சேமித்து வைத்த வெறுப்பாக இது இருக்கக்கூடும். இந்தப் படித்த முட்டாள் இங்கு வரக்கூடும் என்கிற அவனுடைய அக்கறை மெய்சிலிர்க்க வைத்தது. இருளுக்குள் ஒளிந்திருந்த அந்தச் சாலையின் பெயரைப் பார்த்தேன். “ஜாலான் பெலக்காங் மார்க்கேட்” என எழுதியிருந்தது. சந்தைக்குப் பின்னாலுள்ள சாலை. முன்னால் இருப்பதோ வெறும் நகைக்கடைகளும் மருந்தகங்களும்தான். என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.

கனிவேலு மாமா வீட்டிலுள்ள எதைக் கொண்டு என்னை அடித்தார் எனச் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தண்ணீர் கித்தவாக இருக்கலாம். அல்லது கிழங்குச் செடியின் தண்டாக இருக்கலாம். வீட்டின் ஓரம் அடர்த்தியான கிழங்கு செடிகள் இருக்கின்றன. சுற்றிலும் இரவில் வந்து சேரும் இருள், மாமாவிற்கு வசதியைப் பெருக்கிவிட்டிருக்கும். கண்முன் தெரியாமல் என்னை அடிப்பதாகவே நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் நாசப்படுத்திவிட்டார்.

“வெளியெ போய் தொலைடா புடுங்கி” என்பது அவர் கடைசியாக உதிர்த்த வார்த்தை. எதைப் பிடுங்க வேண்டும் என அவர் சொல்ல மறுத்துவிட்டார். எதையோ தேடி கிளம்புவது போல அவசரமாக வீட்டைவிட்டு வந்துவிட்டேன். கையில் ஒன்றுமில்லை. வெறுமை மட்டும். வெறுமை ஒரு பூதமாக வளர்ந்து என்னை இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது. மீண்டும் தலையைத் தூக்கி அந்த ஓவியத்தைப் பார்த்தேன். சட்டென அதில் ஒருவனுடைய முகம் தெரிந்தது. அலைகளுக்கு நடுவே நீல வர்ணத்தில் மறைந்திருந்த அழுத்தமான நீல நிறத்தில் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் இருந்த இடத்தில் வெறும் குழியாக இருந்தது. வாய் இருக்க வேண்டிய இடத்தில் பெரிய ஓட்டை. காற்றின் சுழற்சி அவனுக்குள் நுழைவது போல தெரிந்தது. மீண்டும் பார்க்கையில் அவன் எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்திருக்கிறான். அது சாலைக்கு நடுவில்கூட இருக்கக்கூடும், அல்லது கடைத்தெருக்களின் ஓரமாகக்கூட இருக்கக்கூடும். காலகளைப் பரப்பிக் காட்டியபடி அவன் அமர்ந்திருப்பது விநோதமாக இருந்தது.

அவன் ஒரு சாத்தியமான உருவம். யாருடைய உறுப்புகளைக் கொண்டும் அவனை நிரப்பிக் கொள்ளலாம் போல. அவனைப் பார்த்ததும் எனக்கு வெறுமையும் வெறுப்பும் கோபமும் கூடியது. ஓவியம் இருந்த சுவரை ஓங்கிக் குத்தினேன். விரல்களால் அதைப் பிராண்டினேன். நகங்கள் உடைந்தன. பசி மறந்து அங்கிருந்து வேகத்தை அதிகப்படுத்தி ஓடினேன். கனிவேலு மாமா கையைப் பிடித்து இழுத்தார். கால்கள் எங்கோ நழுவின. இருளை நோக்கி பாய்ந்தேன்.

2. சுவரின் கோபம்

ஜாலான் கீரி கானான்லெ நின்றுகொண்டு சாக்கடையில் மூத்திரம் பெய்வது சுகமாக இருந்தது. வெயிலுக்கு மூத்திரத்தின் பளபளப்பு ஒரு பாம்பின் தோலுக்கு நிகரான மினுமினுப்பில் ஓடிக் கொண்டிருந்தது. மூத்திரம் பெய்துவிட்டு அதை யாராவது பார்த்துவிட்டால் அவர்களைப் பார்த்து கைத்தட்டி சிரிப்பேன். இன்றென்னவோ நீல நிற கழுத்துப்பட்டையை அணிந்த ஒரு கோமாளியைப் பார்த்துவிட்டேன். கையில் அழகான தங்க கடிகாரத்தை மாட்டிக்கொண்டு அவசரமாக எங்கேயோ போய்க்கொண்டிருந்தவன் நான் மூத்திரம் பெய்வதை அதிசயமாகப் பார்த்துவிட்டு முகத்தைச் சலித்துக் கொண்டான்.

“டேய்... மச்சான்... என்னா பாத்துட்டியா? உன்னெ மாதிரிதாண்டா”

வேகத்தைக் கூட்டி அங்கிருந்து தப்பித்து வேகமாக ஓடினான். பெரும்பாலும் என்னைச் சந்திக்கும் மனிதர்கள் இப்படித்தான் கோமாளி சேட்டைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். கோமாளி சேட்டை செய்பவன் எல்லாமே கண்டிப்பாகக் கழுத்தில் கழுத்துப்பட்டை அணிந்திருப்பார்கள். என்னிடம்கூட முன்பு ஒரு கழுத்துப்பட்டை இருந்தது. நான் அதை அணிவதில் மிகுந்த சிரத்தையை எடுத்துக் கொள்வேன். மிகவும் கவனமாக அதைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு கணமும் அதன் அழகைக் கண்டு வியப்படைவேன்.

புலி தலை போட்ட வங்கியின் அருகில் வந்தபோது ஒரு இளம் பெண் என்னைக் கடந்து போனாள். அதெப்படி என்னைக் கடக்கும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான முகப்பாவனை? முகத்தைச் சுளிக்கும் மனிதர்களைப் பார்த்து பார்த்து சலிப்படைந்துவிட்டது. எங்காவது ஓடிவிடலாம் எனக்கூட தோன்றியது. பணமில்லமால் இலவசமாக உணவு கிடைக்கும் ஏதாவது ஒரு நகரம் இருக்குமாயின் அங்கே சென்றுவிட்டாலும் வயிறுக்குப் போராட்டமிருக்காது. அந்த வங்கியின் வெண்சுவரில் கையில் கிடைத்த ஒரு கல்லை எடுத்து எதையோ கிறுக்கினேன். எனக்குப் பிடிக்காத முகங்கள் எல்லாவற்றையும் அலங்கோலமாகக் கிறுக்கிவிட்டுப் பார்த்தேன். ஓவியங்களில் அப்படி ஒன்றும் வசீகரம் கிடையாது எனத் தோன்றியது.

“சட்டெ கிழிஞ்சிருச்சி போட்டு தைச்சிக்கிடறென், என் மனசு கிழிஞ்சிருச்சே”

பிறகு பாடிக்கொண்டே அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தேன். முதலில் என்னைப் பார்த்தால் பிறருக்குப் பயம் வரவேண்டும். அப்படியொரு பயம்தான் என்னைக் காப்பாற்றும். கொஞ்ச தூரம் சென்றதும் அவளுக்குப் பயம் அதிகரித்துவிட்டது.

“யேன்மா, ஒரு ரெண்டு வெள்ளி கொடு பசிக்குது”

சிறிது நேரம் நிதானித்தவள் இரண்டு வெள்ளி நோட்டுகளைக் கீழே வீசிவிட்டு வேகமாக ஓடிவிட்டாள். இன்று ஆப்பேங் கடையில் ஒரு சூடான கொய்த்தியோ அடிக்கலாம் என்பது உறுதியாகிவிட்டது. உடலில் தெம்பு வந்தது போல வீரநடையுடன் கிளம்பினேன். என் வீரநடையைப் பார்ப்பவர்கள் இது ஒரு கோமாளியில் அல்லது பைத்தியக்காரனின் நடை என அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகக் கால்களைப் பரப்பி காட்டி தாவி ஓடுவேன். சிரித்தவர்கள் அந்த நகரத்திற்கு அடிக்கடி வந்துவிட்டுப் போகக்கூடியவர்கள் என்பதால் அவர்களின் முகத்தை நினைவில் நிறுத்திக் கொள்வேன். அடுத்தமுறை அவர்கள் தென்பட்டால் மீண்டும் கால்களைப் பரப்பிக் காட்டிவிட்டு அவர்கள் சிரித்ததும், சட்டென முகப்பாவனையை மாற்றிவிட்டு பசிக்கிறது என்பேன். கோமாளிகள் திடீரென் சோகத்தைக் காட்டினால் யாராக இருந்தாலும் அழுதுவிடுவார்கள் என்கிற தந்திரத்தை இந்த நகரத்தில்தான் கற்றுக் கொண்டேன்.

ஆப்பேங் கடைக்குச் சென்றதும் கொய்த்தியோ சொல்லிவிட்டு கடைக்கு வெளியே நின்றேன். அங்கு வரும் மற்றவர்களைவிட நான் மலாய்மொழியில் நன்றாகப் பேசுவதாக ஆப்பே சொல்வார். நான் கல்லூரியில் படித்தவன் என்று சொன்னதும் அவருக்கு கண்கள் விரியும்.

“ஆப்பே. . அம்மா சுடா லாரி, பப்பா சுடா மத்தி, சயா சுடா கீலா” என்று சொன்னதும் குப்பென்று சிரித்து வைப்பார். அவர் என்னைப் பார்த்து வியப்படைந்து ஒவ்வொருமுறையும் நான் இப்படி ஆனதற்கான காரணத்தைக் கேட்கும்போதெல்லாம் நானும் அதே பதிலைச் சொல்லிவிடுவேன். அவர் மட்டுமே என்னிடம் காரணம் கேட்கக்கூடியவர். ஆகையால் அவரைச் சமாளிப்பதற்கு இதைவிட ஒரு நகைச்சுவையான வாழ்க்கை வேறு இருக்காது.

கீலாக்காரன் என்பார்கள். நான் சில சமயங்களில் செய்யும் சேட்டைகளைப் பார்த்துவிட்டு அடிக்கவும் செய்திருக்கிறார்கள். அனுதாபமும் வன்முறையும் எப்பொழுதும் இங்கு தாராளமாக இருக்கின்றன. எத்துனை வருடங்கள் ஒரு கோமாளி போல நடித்தும் மனம் அப்படியே ஒரு அனுபவ மூட்டையாகத் தேங்கி நிற்கிறது. சுற்றி நிகழ்த்தப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளே பலவீனமடைந்து கிடக்கும் தர்க்கப்புத்தி எக்கிப் பார்க்கும். கால்களைப் பரப்பிக் காட்டி அணிந்திருக்கும் சட்டையை முகத்தோடு மூடிக் கொண்டு ஓடி என ஏதாவது ஒரு சேட்டையைச் செய்துகொண்டு நான் பைத்தியம் என்பதை நானே உறுதிப்படுத்திக்கொள்வேன். தெளிவாக இருக்கும் ஒவ்வொரு கணமும் இந்த நகரத்தில் எனக்கு வாழத்தகுதியில்லை என்பதை அறிவேன்.

கொய்த்தியோ சாப்பிட்டு முடித்ததும் கடைத்தெருவிற்கு வந்தேன். வெயில் விரிந்து படுத்துக் கிடந்தது. கையில் கணிதப் புத்தகத்துடன் துணிக்கடைக்கு வெளியே நின்றிருந்த ஒரு பையனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. “உங்காப்பன் அல்ஜிப்ரா. . .தெரியுமா?” என ஒரு சீன பையனிடம் கேட்டதும் அவன் ஆச்சர்யமாய் பார்த்தான். நான் கணிதம் படித்த பைத்தியமாக இருக்க வேண்டும் என அவன் நினைத்திருக்கக்கூடும். என்னைப் பார்க்க பார்க்க அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. எப்பொழுதும் எதையாவது பேசும் போது உடல்மொழியுடன் செய்து காட்டுவேன். அக்குளில் கையை வைத்து அமுக்கி அமுக்கி காட்டும்போது வேடிக்கையாக இருக்கும். அப்படியே சாலையில் ஓடியவாறு அக்குளில் கை வைத்துவிட்டு அமுக்கினேன். அந்தப் பையன் வாய்விட்டு சிரித்துவிட்டான். பிறகு பேருந்து வந்ததும் அவனைப் பார்த்து சிரித்தேன். பதிலுக்குச் சிரித்துவிட்டு பேருந்தில் ஏறிவிட்டான் படுபாவி. பேருந்து செல்லும்வரை கூடவே ஓடிச் சென்று முடிந்தவரை எச்சிலைத் துப்பினேன். அது யார் முகத்தில் பட்டதோ என்பது பற்றி சற்றும் கவலை இல்லை.

“ப்ரியா கொடுத்தா எதா இருந்தாலும் வாங்கிக்குவானுங்க, ஓசில பொறந்தவனுங்க” ஒரு கையின் விரல்களை ஒன்றாகக் குவித்து மற்றொரு உள்ளங்கையை அதில் வைத்து அடித்துக் காட்டினேன்.

“இந்தா தக்கெ தக்கெ”

அங்கே இருந்தவர்கள் தள்ளி நின்றார்கள். அவர்களையும் பார்த்து எச்சில் துப்ப வேண்டும் என்பது போல இருந்தது. பிறகு அவர்கள் எல்லாமும்கூட எனது வாடிக்கையாளர்களாக எதிர்காலத்தில் வரக்கூடும் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன். பின்பக்கம் திரும்பி பிட்டத்தை ஆட்டிக் கொண்டே அடுத்தக் கடைத்தெருவிற்குள் நுழைந்தேன். அங்கே இருந்த சுவருல் என்னன்னமோ வரையப்பட்டிருந்தது. அநேகமாகக் காலிப் பையல்கள் வரைந்துவிட்டது போனதாக இருக்கும். பெரும்பாலும் மலாய் சொற்கள். ஆங்கில கெட்ட வார்த்தைகள்.

“மெத்தாலிக்கா . . fஉcக் யொஉ. . .கொந் டரெ உ. . . பொப் Mஅர்லெய். . . நெ ரொcக் உ” என பற்பல சொற்கள் சுவர் முழுக்க இருந்தது. அதைப் பார்க்கும்போது தலை சுற்றியது. இவர்களின் உடலில் இருந்த எல்லாம் உணர்வுகளையும் இங்கே ஒரு செய்தியாக வரைந்துவிட்டு போயிருக்கிறார்கள். கையில் கிடைத்த கருங்கல்லை எடுத்து பெரிய நடுவிரலை மட்டும் கிறுக்கிவிட்டு ஆச்சர்ய குறிகளை அதனைச் சுற்றி வரைந்தேன். அதை யாரும் கவனிக்கவில்லை. பிறகு அதன் மேல் மூத்திரம் பெய்துவிட்டு வெளியேறிவிட்டேன்.

மெல்ல இருளத் துவங்கியதும் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் சாலைக்குச் சென்றேன். ஒரு சிலர் என்னைப் போல அங்கே படுத்துறங்குவது உண்டு. இன்று திடீரென மழை பெய்துவிட்டதால் அங்கே படுக்க முடியவில்லை. முன்பு படக்கொட்டகையாக இருந்து இப்பொழுது பழைய கட்டிடமாக மாறிவிட்ட கெப்பிட்டல் பக்கமாகப் போய் நின்று கொண்டேன். அங்கே பயங்கர இருள் கவ்வியிருந்தது. இருளைக் கண்டாலே எனக்கொரு பயம் இருக்கிறது. அது என் மனதை நான் பார்க்கும் விதமாக என்னமோ செய்கிறது. பல கேள்விகளை என்னக்குள்ளிருந்து உந்தி தள்ளும் தருணமாக மாறிவிடும். அதனால்தான் வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் மட்டுமே படுத்துக் கொள்வேன். மழை நகரத்தின் தனிமையை விரட்டிக் கொண்டிருந்தது.

எப்பொழுது நான் இந்த நகரத்தில் வந்து சேர்ந்திருப்பேன்? அம்மா ஓடிப்போன தினத்திலா? அல்லது அப்பா இறந்து போன நாளிலா? அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்த தினத்திலா? யாருமே கண்டுகொள்ளாத ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதில் ஏன் இப்படியொரு தேர்ச்சி எனக்கு? மழையிலிருந்து நனையாமல் இருக்க என்னுடன் நின்று கொண்டிருந்த ஒருவனும் வேகமாக வேறு இடத்திற்கு ஓடிவிட்டான். என்னால் மட்டும் அங்கிருந்து நகர முடியவில்லை. கெப்பிட்டல் கட்டிடத்தின் சுவரில் ஏதோ வரையப்பட்டிருந்தது. உற்றுக் கவனித்தேன். அது ஒரு கிறுக்கலான ஓவியம்.

“தனியாதான் இருக்கீங்களா?”

சுற்றிலும் அந்தக் குரல் கேட்ட திசையைத் தேடினேன். அப்படி யாரும் அங்கில்லை. “யாருடா அது?” எனக் கேட்டதும் என் குரல் எனக்கே எதிரொலித்தது. பிறகு எங்கிருந்து ஒலித்தது அந்தக் கேள்வி? மீண்டும் அந்த சுவர் ஓவியத்தைக் கவனமாகப் பார்த்தேன். அது ஒரு நகரத்தின் ஓவியம். ஆங்காங்கே மஞ்சள் விளக்குகளும், மின்சார கம்பத்தில் சிட்டுக்குருவிகளும் என அமைதியாக இருக்கும் ஒரு நகரம். அப்படி ஒரு நகரத்தை நான் பார்த்தது இல்லை. இந்த நகரத்தில் மின்சாரம் கம்பங்கள் வெறிச்சோடித்தான் இருக்கும். மஞ்சள் விளக்குக்கூட தெருக்கோடியில் ஒன்றும் சாலை திருப்பங்களில் ஒன்றும் மட்டுமே.

கண்கள் இருட்டுவது போல இருந்தது. தூக்கமாக இருக்கக்கூடும். மீண்டும் அந்த ஓவியத்தைப் பார்த்தேன். இரத்தத் தெறிப்புகள் போல அந்த நகரத்தின் மீது சிவப்பு சாயம் தெளிக்கப்பட்டிருந்தது. அது யாருடைய இரத்தமாக இருக்கும்? தடவிப் பார்த்தேன். இன்னும் காயாத இரத்தம் போல உணர்ந்தேன். ஓவியத்தில் சில மரங்களும் ஒரு இருள் பாதையும் அங்கே ஒரு ஆற்றின் பாலமும் தெரிந்தது. அந்தப் பாலத்திற்குக் கீழ் கருமையான ஆறு. மிகவும் விசித்திரமான தோற்றம். ஏதோ ஓர் இரகசியத்தை விழுங்கிக் கொண்டு ஓடும் மர்மம் அதில் தெரிந்தது. இப்படியொரு ஆறு எங்கே இருக்கக்கூடும்? எனக்குத் தெரிந்து அருகாமையில்கூட குட்டி ஆறுதானே ஓடிக் கொண்டிருக்கிறது.

“தனியாதான் இருக்கீங்க”

மீண்டும் அதே குரல். கொஞ்சம் நடுக்கத்துடன் வெளிப்பட்ட குரல். என்னை ஏதோ செய்வது போல இருந்தது. அந்த ஓவியத்திலிருந்த ஆற்றில் குதித்துவிட வேண்டும் எனக்கூட தோன்றியது. உடலைக் கெட்டியாக நிலத்தோடு இருக்க வைத்துக் கொண்டேன். எங்கேயோ பறந்துவிடும் உணர்வு மேலிட்டது. நான் வெறும் காற்று. நான் ஒன்றுமே இல்லாத ஒன்று எனக்கூட கலக்கம் ஏற்பட்டது.

ஓவியத்தில் அந்த ஆற்றை நோக்கி யாரோ ஓடிக்கொண்டிருப்பது போல தெரிந்தது. ஓவியம் அதனைக் காட்டிக் கொடுக்க கொஞ்ச நேரம் ஆகும் போல. அது ஒரு இளைஞனின் உருவமாக தெரிந்தது. உடல் மெலிந்திருந்து காணப்பட்டது. அவன் ஆற்றை நோக்கி ஓடுவதில் ஏதோ சொல்ல முடியாத விரக்தியும் இருந்தது. உற்றுக் கவனித்தேன். அவனிடம் சொல்வதற்கு ஏதோ செய்தி இருக்கிறது.

“வந்துரு. . . தனிமைலெதான் இருக்கெ”

அந்தச் சுவரில் ஓடிக் கொண்டிருந்த அவனை எக்கிப் பிடித்தேன். அவன் நழுவி நழுவி தாவத் துவங்கினான். எத்துனை உயரம் சென்றாலும் விடப்போவதில்லை என என் கைகளை அந்தச் சுவரின் உயரத்திற்கு நிகராக உயரமாக நீட்டினேன். மழைத்துளிகள் பட்டு கைகள் நனைந்தன. மின்னல் வெளிச்சத்தில் அப்படியே ஒரு கடலுக்குள் தத்தளிப்பது போல மூச்சு திணறியது. தவறி ஒரு அலைக்குள் சிக்கினேன். அவன் ஆற்றை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். எனக்கு மேலும் மூச்சி திணறியது. உள்ளுக்குள் ஏதோ அடைப்பு ஏற்படுவது போல. எனக்குத் தெரிந்த பிடிக்காத பெயர்களையெல்லாம் அழைத்துப் பார்த்தேன்.

“கலா அக்கா, சேகர் மாமா. . முனியாண்டி”

இவர்கள் எல்லாம் என்னைத் தூக்கி எறிந்தவர்கள். வரமாட்டார்கள். மீண்டும் தெளிவு மங்கியது. ஒரு மாபெரும் மயக்கம் வரப்போகிறது எனத் தெரிந்து கொண்டேன். அவன் ஆற்றில் குதித்துவிட்டான். அப்படியே மயங்கி விழும்போது தலையில் கூர்மையாக ஏதோ இறங்கியது.

நன்றி: வல்லினம் நவம்பர் இதழ்

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


No comments: