Sunday, December 19, 2010

தும்பி: மாணவர்அறிவியல் இதழ்

மாணவர்கள் அறிவியல் என்பதை எப்பொழுதிலிருந்து அறியத் துவங்குகிறார்கள்? இந்த ஒரு கேள்வி ஒவ்வொருவரின் வாழ்வின் அறிதல் முறைகளை நோக்கியும் மிக வேகமாகப் பாயக்கூடியது. ஒரு கல்லை எடுத்து ஆற்றில் வீசியதும் மூழ்கிவிட்ட கல்லின் தன்மையை உணர்வதிலிருந்தும் எட்டுக் கால் பூச்சிக்கு எட்டுக்கால் எனச் சொல்வதிலிருந்தும்கூட நம்முடைய முதல் அறிவியல் சிந்தனை உருவாகியிருக்கக்கூடும். அறிவியல் நம் அன்றாட வாழ்வின் மிக நெருக்கமான ஒன்று. நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவற்றையும் தெரிந்துகொள்வதில் நமக்குக் கிடைக்கும் கூடுதலான புலனே அறிவியல்.

அறிவியல் குறித்த கவனம் சமீபத்தில் இந்தியர்கள் மத்தியில்  அதிகமாகவே குவிந்துள்ளது என்றே சொல்லலாம். பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வரும் பெற்றோர்களின் அக்கறை அறிவியல் பக்கம் திரும்பியிருப்பதை உணர முடிந்தது. இனி அறிவியல் பாடம் அடுத்த வருடம் முதல் தமிழ் மொழியிலேயே போதிக்கப்படும்.  இந்த ஆண்டு முதல் "தும்பி" எனும் அறிவியல் காலாண்டிதழ் சு.யவராஜனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தூவங்கியிருக்கிறது.

தும்பி அறிவியல் இதழ் மாணவர்களுக்காகப் பல சிறப்பு அம்சங்களுடன் பல அரிய தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் காலாண்டிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துகொண்டிருக்கும் தும்பியை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்.(yuvatozhi@gmail.com)
விண்வெளி, பசுமை அறிவியல் என ஒவ்வொரு இதழிலும் ஒரு தனிச் சிறப்பான தலைப்புகளுடன் எளிமையான ஆய்வுகளுடன் அறிவியல் மீதான மாணவர்களின் இடைவெளியையும் பயத்தையும் நீக்கும் விதத்தில் உங்களை நாடி வருகிறது “தும்பி”.

சிறப்பான தாளில் முழு வண்ணப் பக்கங்களுடன் வெளிவரும் தும்பியின் விலை வெறும் ரி.ம 2.50 மட்டுமே. இதுவரை தும்பி 2010 ஆம் ஆண்டின் சிறப்பிதழாக இரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. 

கே.பாலமுருகன்.
மலேசியா

4 comments:

Yuvarajan subramaniam said...

தும்பி இதழைப் பற்றிய உங்கள் அறிமுகத்திற்கு நன்றி..உங்களை ஆசிரியர்களின் ஆர்வமும் ஊக்கமும் இதழை பல சிரமங்களிடையே தொடர்ந்து கொண்டு வரும் நம்பிக்கை அளிக்கிறது, நன்றிகள் பல,

அன்புடன்
சு.யுவராஜன்

மு.வேலன் said...

மலேசியாவில் தமிழ் அறிவியல் இதழ் என்று ஒன்று எதுவும் இதற்குமுன் வெளிவந்ததில்லை. மாணவர்கள் மட்டும் அல்ல பொதுவாக அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெறக்கூடிய இதழ் இந்த 'தும்பி'. இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்கள் அனைவரும் தும்பிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன். நன்றி _/\_

கே.பாலமுருகன் said...

@யுவா
ஆசிரியர்கள் அனைவரும் இனி அறிவு சார்ந்து வேகமாக தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டிய சவாலைக் கொண்டிருக்கிறார்கள், காரணம் இன்றைய மாணவர்கள் கூடுதலான தேடலுடனும் ஆர்வத்துடனும் காணப்படுகிறார்கள். தும்பி அந்தத் தேடலுக்கு உகந்தது.

கே.பாலமுருகன் said...

@மு.வேலன்

ஆமாம் நண்பரே. தும்பி நல்ல தொடக்கம். அறிவியல் பக்கம் மாணவர்களைத் திருப்புவதற்கு. மிக்க நன்றி.