-எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா- செழியன்
(செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ
அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது.விகடன் வெளியீடாக இவரது சினிமா விமர்சனம் தொகுப்பு இரு பிரிவுகளாக வெளிவந்திருக்கின்றன.)
அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது.விகடன் வெளியீடாக இவரது சினிமா விமர்சனம் தொகுப்பு இரு பிரிவுகளாக வெளிவந்திருக்கின்றன.)
கே.பா: சிறுகதையை அல்லது நாவலைப் படமாக்குதல் போன்ற மேற்கத்திய சினிமா பாணியைத் தமிழ் சூழலுக்குக் கொண்டு வந்தால் வெற்றிப் பெறும் அல்லது இரசனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?
செழியன்: நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் நமது குறும்படங்களும் சினிமாக்களும் இயக்குனரின் கதையாகவும் தயாரிப்பாளரின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற கதையாகவும் தான் இருக்கிறது. நம்மிடையே கதைகளே இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன. குறும்படத்தின் வடிவமே ஒரு மாற்று ஊடகம் அதாவது altanative media என்பதுதான். மாற்று ஊடகம் என்றால் வெகுஜன சினிமா செய்ய முடியாததை இந்த ஊடகம் செய்ய முடிந்தால் அது மாற்று ஊடகம் எனலாம். உதாரணத்திற்குத் தீவிர இதழை வெகுஜன இதழுக்கு எதிரான பண்பாட்டில் நடத்துவது போலத்தான். அதுபோல தீவிரமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்யும் சினிமாத்தான் மாற்று முயற்சிகளை முன்னெடுக்க முடியும். இந்த மாற்று முயற்சியைக் கொண்டு அவரவரின் சொந்தக் கதைகளைப் படமாக்குவதைவிட ஏற்கனவே கண்கானிக்காமல் விடப்பட்ட நமது தமிழ் அடையாளங்களை கலாச்சாரங்களை, வாழ்வைப் படமாக்கினால் தீவிர இரசனை மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எத்துனையோ தமிழ்
கலாச்சாரத்தை முன்னிறுத்தக்கூடிய சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன, அதையெல்லாம் நாம் முறையாகப் படமாக்கினால் கண்டிப்பாக முக்கியமான கவனம் பெறும்.
கலாச்சாரத்தை முன்னிறுத்தக்கூடிய சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன, அதையெல்லாம் நாம் முறையாகப் படமாக்கினால் கண்டிப்பாக முக்கியமான கவனம் பெறும்.
கே.பா: முறையாகப் படமாக்குவது என்பது மிக முக்கியம்.
செழியன்: ஆமாம். சினிமாவிற்கென ஒரு மொழி இருக்கிறது. எப்படி நவீன ஓவியங்கள் வரைவதற்கு சில ஒழுங்குமுறைகளும் பயிற்சிகளும் இருக்கிறதோ அதே போலத்தான் சினிமாவிலும் அம்மாதிரியான ஒழுங்குகளும் பயிற்சிகளும் இருக்கின்றன. அதனைக் கற்று முறையாகப் படமாக்கினால் நிச்சயம் நமது தமிழ் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
கே.பா: தங்கர் பச்சான் அவர்கள் தனது நாவல்களையும் சிறுகதைகளையும் படமாக்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
செழியன்: அது நல்ல முயற்சி என்றுதான் அடையாளப்படுத்துகிறேன். ஆரம்பத்தில் இங்குத் திரைக்கதை என்பது பெரும்பாலும் எழுதப்படுவதில்லை, திரைக்கதைகள் எழுத்து வடிவத்தில் இல்லை. இப்பொழுதுதான் திரைக்கதைகள் சிலரால் முறையாக எழுதப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் ஏற்கனவே நாவலாகவோ சிறுகதையாகவோ எழுதப்பட்ட பிரதிகளைப் படமாக்கும்போது சில திவீரமான அவதானிப்புகளும் கதை சார்ந்த நுணுக்கங்களும் உள்ளிருந்து வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கே.பா: அடுத்த கேள்வி, யதார்த்தம் என்பது பல புனைவுகளால் எழுப்பப்பட்டது, ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் எதார்த்தம் என்பது மாறுப்படக்கூடிய ஒன்று. ஆகையால் எதார்த்தம் என்பதன் மீதான பொது புத்தி சார்ந்த கட்டுமானங்கள் இங்கே உடைப்படுகிறது. சினிமாவில் எதார்த்தம் என்பது எப்படி அணுகப்படுகிறது?
செழியன்: சினிமாவின் யதார்த்தம் என்பதே புனையப்பட்டதுதான். ஏற்கனவே பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்டு, நகலெடுக்கப்படுவதான் சினிமாவின் எதார்த்தம். உலகில் எடுக்கப்படும் எந்தச் சினிமாவாக இருந்தாலும், அதில் வரக்கூடிய காட்சி முதல் வசனம்வரை ஏற்கனவே எழுதப்பட்டு அதை பலமுறை சரிப்பார்க்கப்பட்டு, பலமுறை திருத்தி எடுக்கப்படும் விதம்தான் கையாளப்படுகின்றன. ஆகையால் சினிமாவில் எதார்த்தம் என்பது எதார்த்தத்தைப் பார்த்து நகலெடுத்து, அதன் எதார்த்தங்களின் அளவீடுகளை மீறிவிடாமல் மிக நுட்பமாக எதார்த்தத்தைப் போலவே பதிவு செய்வதுதான் சினிமாவில் இருக்கக்கூடிய எதார்த்தம் என்பது.
கே.பா: அண்மையில் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஒரு நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. அவர் “கலை சினிமா வணிக சினிமா என்கிற வேறுபாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லாம் சினிமாக்களும் தயாளிப்பாளர்களுக்கும் ஏனைய திரைப்பட கலைஞர்களுக்கும் இலாபத்தை ஈட்டித் தர வேண்டும் என்றே சினிமா எடுக்கப்படுகிறது என நான் நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார். அது பற்றி தங்களின் பார்வை?
செழியன்: சரியான ஒரு பார்வைத்தான் அது. அவரைப் பொறுத்தவரையில் வணிக சினிமா கலை சினிமா என்பது கிடையாது என்று சொல்வது போல என்னைப் பொறுத்தவரை சினிமாவில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்கிற இருவகை மட்டும்தான் இருக்கிறது.
கே.பா: அதென்ன நல்ல சினிமா கெட்ட சினிமா?
செழியன்: தயாளிப்பாளர்களுக்கு இலாபத்தை ஈட்டித் தரக்கூடிய சினிமா, அவர்களுக்கு நல்ல சினிமாகாக் கருதப்படும் ஆனால் சினிமாவைத் தீவிரமாக அணுகக்கூடிய ஒரு பார்வையாளனுக்கு, சொல்ல வந்த கருத்திற்கும் சொல்ல வந்த வாழ்விற்கு மிக நேர்மையாகவும் உண்மையகவும் எந்தக் கீழ்த்தரமான சமரசத்திற்கும் ஆளாகாமல் எடுக்கப்படும் சினிமாதான் நல்ல சினிமா எனப் புரிந்துகொள்ளப்படும் எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வது நல்ல சினிமாவிற்கான முதல் அடிப்படை கூறாகும்.
மற்றொன்று நல்ல சினிமா என்பது உலகில் இருக்கக்கூடிய எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட வேண்டுமென்பது நடக்காத காரியம், அப்படி அந்த மாதிரி எடுக்கப்பட்டால் அது நல்ல சினிமா என்றும் சொல்ல முடியாது. ஆகையால் எப்படித் தீவிர இதழ் என்றால் அது ஒரு 150 தீவிரமான வாசகர்களை நோக்கியே அச்சிடப்படும் என்றால், அதே போல நல்ல சினிமாவை 1-2 லட்சம் மக்கள் பார்த்தால் அதிலிருந்து இலாபம் கிடைக்கும், வணிக ரீதியில் தோல்வியடைய வேண்டிய தேவையில்லை என்ற இதுபோன்ற கட்டாயமான முன் தீர்மானம் அவசியம் இருக்க வேண்டும். மேலும் கலை படம் என்றாலே சோம்பலை ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கும், காட்சிகளில் வரக்கூடிய அசைவுகள் தாமதமானவையாக இருக்கும் அறுவையாக இருக்கும் என்றெல்லாம் ஒரு பொதுவான புரிதல் இருக்கிறது. அது அப்படி அல்ல. சொற்கத்தின் குழந்தைகள் எனும் ஈரானிய படத்தை எடுத்துக் கொண்டால், அன்றாட வாழ்வில் இருக்கக்கூடிய ஒரு வறுமையின் உக்கிரத்தைக்கூட பலரும் இரசிக்கும்படியாக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் கலைப்படத்திற்கான மதிப்பீடுகள்தான். கலைப்படம் என்பதால் அது வணிக ரீதியில் தோல்வியடைய வேண்டும் என்பதற்கில்லை. எத்தனையோ உலக கலைப்படங்கள் பல ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படங்கள் அந்தந்த நாட்டில் வணிக ரீதியில் பல வெற்றிகளைக் குவித்திருக்கின்றன.
அதாவது நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதற்கான மிக எளிமையான ஒப்பீடு என்னவென்றால், மக்களின் பணத்தைப் பறிப்பதற்காகப் பெண்களின் உடலை ஆபாசமாகவும், தேவையில்லாத வக்கிரங்களையும் வன்மங்களையும், வன்முறைகளையும் காட்டுவது கெட்ட சினிமா ஆகும். போட்ட பணத்தை மீட்டுவதற்காகச் செய்யப்படும் கெட்ட வியாபாரம் சார்ந்தவை கெட்ட சினிமா என்பது.
கே.பா: மேற்கத்திய பாணியைப் போல கலை சினிமாவை தமிழ் சூழலுக்கு அதிகமாகக் கொண்டு வந்தால், அதற்கான இரசிகர்கள்/பார்வையாளர்கள் உருவாக வாய்ப்புண்டா? காரணம் தமிழ் சினிமா என்பது பாட்டாளிசத்தை முன்வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது அதாவது உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களைச் சினிமா திருப்திப்படுத்த வேண்டும் எனவும், அவர்களைத் திருப்திப்படுத்தாத எந்த அம்சமும் இல்லாத கலை சினிமா, தமிழ் சூழலுக்கு அனாவசியம் எனவும் மதிப்பீடப்படுவதைச் சிலருடன் ஏற்பட்ட உரையாடல்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
செழியன்: இல்லை, அது தவறான ஒரு புரிதல். எந்தச் சினிமாவும் பட்டாளி மக்களை மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்படுவதில்லை. மேலும் திரையரங்குகளில் சினிமாவைப் பார்க்க வருபவர்களில் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையே. வறுமை கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் பெரும்பாலும் திருட்டு வீசிடியில் சினிமாவையே பார்க்கிறார்கள்.
கே.பா: ஆமாம். உண்மையில் அவர்கள் திருப்தியடைவது திருட்டு வீசிடியில் படம் பார்ப்பதன் மூலமே. அதுதான் அவர்களுக்குப் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தாது போல.
செழியன்: பாட்டாளிகளுக்காத்தான் சினிமா எடுக்கிறோம், களைப்பாக வரும் அவர்களுக்கு, வாழ்வின் எதார்த்தங்களை மீறிய கனவுத்தன்மைகளினால் சினிமாவைத் தருகிறோம் என்று சொல்வதெல்லாம் ஒரு போலித்தனம். ஏமாற்று வேலை. கலை சினிமாவைக்கூட பல அற்புதமான சுவாரிசயங்களைக் கொடுத்து எல்லோரும் இரசிக்கும்படி எடுக்க முடியும் என்கிற பரிசோதனை முயற்சி தமிழில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கே.பா: தற்பொழுது இருக்கும் சினிமா குறித்த பாரம்பரியமான புரிதலை மாற்ற வேண்டும். பொது புத்தி சார்ந்து நிலவி வரும் புரிதல்களை உடைக்கும் வகையிலான துணிச்சலான நல்ல சினிமாக்கள் எடுக்கப்பட வேண்டும்.
செழியன்: ஆமாம். ஒரு நல்ல சினிமா மக்களைப் போய் அடைய வேண்டுமென்றால், வணிகம் தொடர்பான அம்சங்களை முற்றிலும் நீக்கிவிட்டு, நமக்கு மத்தியிலேயே இருக்கக்கூடிய பல சுவார்ஷ்யமான சம்பவங்களை எந்த ஒப்பனையும் இல்லாமல் சினிமாவின் எதார்த்தற்கொப்ப தருவதில் இயக்குனர்கள் முன்வரவேண்டும். வெற்றிப்பெற்ற பல திரைப்பட ஆளுமைகள் வாழ்வின் பல எளிமையான கொண்டாட்டங்களை, மகிழ்ச்சிகளை சந்தர்ப்பங்களைப் படமாக்கியவர்கள்தான். எடுத்துக்காட்டாக சத்ய ஜித்ரே பதேர் பஞ்சாலி என்கிற படத்தை எடுத்தார். இன்றும் இந்திய திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த அடையாளமாகக் கருதப்படும் அந்தப் படத்தில் எந்தவொரு அதீதமான காட்சிகளும் இல்லை, மாறாக யதார்த்தத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்திக்கக்கூடிய மழை, காற்று, மிட்டாய் விற்பவன் என எல்லாமே வாழ்வின் தருனங்களைத்தான் ஜித்ரே படமாக்கியுள்ளார். ஒரு நல்ல சினிமாவிற்கான புரிதல் இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.
கே.பா: ஜப்பானிய நிலப்பரப்பின் மறுமலர்ச்சிக்கு கலாச்சார ரீதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அகிரா குரோசவா என்பவரின் படங்களும்கூட வணிக ரீதியில் வெற்றியடைந்திருக்கின்றன.
செழியன்: ஆமாம். உலகில் எடுக்கப்பட்ட பல கலைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றியடைந்தவைகள்தான். இந்த வணிக ரீதியிலான வெற்றி என்பது வெள்ளி விழா கொண்டாட்டம், கட் அவுட் வைப்பது திரையரங்குகளில் பார்வையாளர்கள் நிரம்பி வழிவது போன்ற வெற்றிகள் அல்ல, மாறாக பல சிந்தனையாளர்களை அடைந்து, தீவிரமாக விவாதிக்கப்பட்டு, பலமுறை பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, போட்ட பணத்தை மீண்டும் பெறுவது என்கிற வெற்றியாகும். இதுதான் அந்தப் படத்தின் குழுவை மீண்டுமொருமுறை நல்ல சினிமாவை எடுக்க ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.
கே.பா: அண்மையில் தமிழில் படமாக்கப்பட்ட காஞ்சிபுரம் சினிமா நெசவாளிகளின் வரலாற்றை மீள்பார்வை செய்வது போன்று அமைந்திருந்தது. ஆனால் பலர் அப்படத்தைப் புறகணித்ததன் காரணம் அப்படம் சோம்பலையும் வெறுமையையும் ஏற்படுத்தியிருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
செழியன்: இது இயக்குனர் தொடர்பான பிரச்சனை. ஒரு சிலர் நான் கலை படம் எடுக்கிறேன் என்கிற அறிவிப்புகளுடன் படம் எடுக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், நான் இலக்கியவாதி எனக் காட்டிக் கொள்வதற்காக ஜோல்னா பையும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து கொண்டு ஒரு போலி அறிவுஜீவியாக உலா வருவது போல நான் கலை படம் எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு போலியான படங்களைத்தான் சிலர் எடுக்கிறார்கள். இது போன்ற படத்தைப் பார்ப்பவர்கள், இதில் சண்டை காட்சிகள் கிடையாது, பாடல்கள் கிடையாது, நடிகைகளின் ஆட்டங்கள் கிடையாது, ஆகையால் இது யதார்த்த சினிமா, அதனால்தான் இவ்வளவு அறுவையாகவும் வெறுமையாகவும் மெதுவாகவும் இருக்கிறது என நம்பிவிடுவார்கள். இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால், அந்தத் தனிப்பட்ட இயக்குனரின் புரிதல் சிக்கலும், நல்ல சினிமா குறித்த ஆழமான பரிச்சியமின்மையும் மேலும் விருதுக்காகவே படங்களை எடுக்கிறேன் என்ற தன்மையும்தான். விருதுக்காகவே படங்கள் எடுக்க வேண்டும் என உலக சினிமாக்களைப் பார்த்து நகலெடுப்பது போலித்தனம் ஆகும். அண்மையில் தமிழ் சூழலில் இத்தகையதொரு போலித்தனங்கள், யதார்த்த சினிமா எடுக்கிறேன் என்கிற அறிவிப்புகளுடன் பலரிடம் காணப்படுகிறது.
கே.பா: காஞ்சிபுரம் படம் குறித்து உங்களின் மதிப்பீடு இவ்வளவுதானா?
செழியன்: அப்படியில்லை. அது வரவேற்கக்கூடிய முயற்சிதான். தமிழில் இது போன்ற புதிய முயற்சிகள் வரவேற்கப்படுவது ஆரோக்கியமாகும். ஆனால் உடனடியாக விமர்சித்து அந்தப் படத்தைப் புறக்கணிக்க அல்லது தகர்க்க நினைப்பது ஆரோக்கியமல்ல. காஞ்சிபுரம் படத்தைப் போல இன்னும் ஒரு 5-6 படங்கள் வரட்டும். அதன் பிறகு இந்த மாதிரி படங்கள் எத்தகையதொரு அலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என மிக ஆழமாக அவதானிக்க இயலும். பரிசோதனை செய்தால்தான் அது நமது இரசனை மாற்றங்களை ஏற்படுத்துமா என மதிப்பீட முடியும். பரிசோதனை முயற்சிகளையே வேண்டாம் தேவையில்லை என நினைப்பது அபத்தமாகும்.
கே.பா: இனி வரும் காலங்களில் யதார்த்தம் என்கிற பெயரில் பாசாங்குகளை முன்வைக்கும் சினிமாக்களையும் வெறும் வணிகத் தேவைகளுக்காக எடுக்கப்படும் படங்களையும் பார்வையாளர்களால் அடையாளங்காணப்பட்டு விமர்சிக்கப்படும் என நம்புவோம். மிக்க நன்றி.
சந்திப்பு & நேர்காணல்: கே.பாலமுருகன்
நன்றி: அநங்கம் இதழ் ஆகஸ்டு 2010
No comments:
Post a Comment