Tuesday, January 4, 2011

கரிகாற்சோழன் விருதளிப்பு நிகழ்வு 2010

ஜனவரி முதலாம் நாள் சிங்கப்பூரில் மிகவும் ஆடம்பரமான ஓர் அரங்கில் கரிகாற் சோழன் விருதளிப்பு விழா தொடங்கியது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு.இராசேந்திரன் அவர்களும் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். செயலாளர் சுப.அருணாச்சலம் அவர்கள் வழிநடத்த நிகழ்வு வரையறுக்கப்பட்ட நேரத்தின்படி நடைப்பெற்றது.

மண்டபத்தினுள் நுழைந்ததுமே சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்காக நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது. கரிகாற் சோழன் விருது மூலம் புலம் பெயர் இலக்கியங்களின் மீது உலகப் பார்வையை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் முஸ்தப்பா அறக்கட்டளையின் இந்த முயற்சி பாராட்டத்தக்கவையாகும் எனக் குறிப்பிட்டேன்.

துணைவேந்தர் திரு.இராசேந்திரன் உரையாற்றும்போது இந்தாண்டிற்கான விருதுகள் வழங்கப்படுவதிலிருக்கும் தகுதிகளை மேலோட்டமாகக் கூறினார். மலேசியாவின் தொழிலாளர்களின் வாழ்வையும் நகர்ச்சையையும் அவர்களின் விளிம்பு நிலையையும் காட்டும் வகையில் எழுதப்பட்ட நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் ஒரு அருமையான நாவல் எனவும் குறிப்பிட்டார். ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் நடக்கும் மனச்சிதைவுகளை மையமாகக் கொண்டு பட்டணத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதைக் காட்டும் நல்ல நாவல் எனவும் குறிப்பிட்டார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் வாழ்த்துரை நிகழ்த்தியபோது முஸ்தப்பா அறக்கட்டளைக்கும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துக் கொண்டார். மேலும் மலேசிய இளம் படைப்பாளிக்கு இந்த விருது அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்குப் பெரிதும் உற்சாகமாகவும் காரணமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டார். மலேசிய எழுத்தாளர் பாலமுருகனின் சாதனை போற்றத்தக்கது எனவும் இது எங்களின் சாதனையாக நாங்கள் கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.

பிறகு தகுதி உரை வாசிக்கப்பட்டது. துணைவேந்தர் திரு.இராசேந்திரன் அவர்களும் முஸ்த்தப்பா அறக்கட்டளையின் நிறுவனர் முஸ்த்தப்பா அவர்களும் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் எனும் நாவலுக்காக கே.பாலமுருகனுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தனர். மலேசிய எழுத்தாளர் சங்கமும் அவர்களின் சார்பில் மேடையில் அவரைச் சிறப்பித்தனர்.

கே.பாலமுருகனின் ஏற்புரையின் சாரம்:

அதிகார தரகர்காளாலும் உள்நாட்டு முதலாளிகளாலும் சுரண்டப்பட்ட ஒரு பின்காலணிய சமூகத்தின் கதைத்தான் இந்த நாவல். எங்கள் தோட்டத்தில் இரண்டு வகையான பாலங்கள் உண்டு. ஒன்று கோணக்கழுத்துப் பாலம். மக்களின் அன்றாட வழிப்பாதை. இது சுரண்டப்பட்டவர்களின் குறியீடு. மற்றொரு பாலம், மேட்டுப்பாலம். முன்பு துறை பங்களா இருந்த இடத்திற்குச் செல்லும் பாலம் எனச் சொல்லப்பட்டது. இது அதிகாரத்தின் குறியீடு. இந்தக் குறியீடுகள் நாவல் முழுக்க ஒரு பயணியாக வந்துகொண்டிருக்கும். கடன் கட்ட முடியாமல் எங்கள் தோட்டத்திலிருந்து தொலைந்துபோனவர்கள் ஏராளம் இருக்கிறார்கள்.

அவர்களின் தோற்றுப்போன வாழ்க்கையைத்தான் இந்த நாவல் காட்டுகிறது. 24 ஆவது வயதில் ஒரு முனைப்புடன் மட்டுமே எழுதப்பட்ட இந்த நாவலில் குறைகளும் பலவீனங்களும் இருக்கக்கூடும். வாசிப்பின் மூலமும் விமர்சனத்தின் மூலமும் நாவலின் அடுத்த தளத்தை அடையாளங்கண்டு முன்னகரவும், பலவீனங்களைக் களையவும் உதவியாக இருக்கும். அதற்கு நான் தயாராகவும் இருக்கிறேன்.


விருதளிப்பு நிகழ்வு முடிவடைந்த பிறகு நா.முத்துகுமார் அவர்களுடன் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேச முடிந்தது. தனது எளிமையான கவிதைகளின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து , அந்த எளிமையான கவிதைக்குள் இருக்கும் வாழ்வையும் காட்டி சிந்திக்கச் செய்தார். மலேசியாவிலிருந்து வருகையளித்திருந்த 32க்கும் மேற்பட்ட ஆர்வளர்கள் அனைவரும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர்களாக இருந்தனர். இலக்கியத்திற்கு வெளியேயும் அன்பான மனிதர்களைச் சந்திக்க முடிந்தது.

ஜொகூரிலிருந்து தமிழர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். குறிப்பாக அதன் தலைவரும் நண்பர் வாசுதேவன் அவர்களும் ஆவர். சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் கண்ணபிரான் அவர்களும் நண்பர் பாண்டித்துரை, முனைவர் லஷ்மி,செ.ப.பண்ணீர்செல்வம், எம்.கே.குமார், சித்ரா ரமேஸ், ஷானவாஸ், இராம வைரவன், கடாரம் குமரன், நூலக அதிகாரி புஷ்பலதா, மோகன் ராஜ் போன்ற பல நண்பர்களும் வந்திருந்தனர்.

விருதுகள் ஒரு காலக்கட்டத்தின் அங்கீகாரமும் ஊக்கமும் மட்டுமே. அது ஏற்படுத்தும் அதீதமான நம்பிக்கையையும் புகழ் எனும் கோபுரத்தையும் கடப்பதற்கான சவால்கள்தான் ஒரு படைப்பாளிக்கு மிக முக்கியமானதென கருதுகிறேன். இந்த விருதின் மூலம் ஒரு மலேசிய நாவல் கவனிக்கப்படுகிறது மேலும் அதனோடு ஒரு காலக்கட்டத்தின் மலேசிய வாழ்வும் ஒரு பொது பார்வைக்குச் செல்கிறது.

கே.பாலமுருகன்
மலேசியா

8 comments:

மு.வேலன் said...

மலேசியத் தமிழ் எழுத்துலகில் உங்கள் பணிக்குக் கிடைத்த பெருமை. வாழ்த்துகள்!

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி வேலன் உங்கள் வாழ்த்துக்கு.

Mohan Raj Gopal said...

வாழ்த்துக்கள் நண்பரே.

manathu.com said...

இனிய வாழ்த்துகள் உங்கள் எழுத்துப்பணி தொடர வேண்டும் விருதுகள் வெல்ல வேண்டும் - மனஹரன்

மனோவியம் said...

ஓயாமல் எழுத்துலகில் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு தகுதியான ஒரு விருந்துதான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்.வாழ்த்துக்கள் நண்பரே.

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி நண்பர்களே வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

Dr. முனீஸ்வரன் குமார் said...

வாழ்த்துகள்!!!

Unknown said...

:)......