இன்று (08.01.2011) சனிக்கிழமை கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் தமிழிழக்கிய கருத்தரங்கம் சுங்கைப்பட்டாணியில் நடைப்பெற்றது. சிறுகதை சார்ந்து மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியும், கவிதை துறை சார்ந்து மூத்தக் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களும், எ.ம்.இளஞ்செல்வன் அவர்களின் இலக்கிய பார்வை என்கிற தலைப்பில் கோலாலம்பூர் எழுத்தாளர் மு.அன்பு செல்வனும் கருத்தரங்கத்தை வழிநடத்தினார்கள். காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாகவும் விவாத அரங்கமும் என மாலை மணி 4.30 வரை நீடித்து முடிவுற்றது.
எழுத்தாளர் சீ.முத்துசாமி தன் உரையில் இலக்கிய பிரக்ஞை இல்லாமல் போய்விட்ட தமிழாசிரியர்கள் குறித்து தனது எதிர்வினையைக் கடுமையாக முன்வைத்தார். பல நூறு தமிழாசிரியர்கள் உள்ள கடாரத்தில், இன்றைய நிகழ்விற்கு 3 பேர் கூட வராதது பெரிய தேக்கமாகவும், இலக்கியத்தில் ஆர்வமில்லாமல் போய்விட்ட ஆசிரியர்களை அடையாளம் காட்டுகிறது எனவும் கூறினார். மேலும் தற்போதைய சில இளம் படைப்பாளர்களுக்கு வரலாறு சார்ந்த ஆர்வமும் பிரக்ஞையும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இந்த இலக்கியம் பற்றியும் இலக்கிய வரலாறு பற்றியும் தகவல்களும் ஆர்வமும் குறைவாக இருப்பதற்கு முக்கியக்காரணமாக சீ.முத்துசாமி முன்வைத்தது, கல்விதுறையில் தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லை, மேலும் இலக்கியத்தைப் பற்றிய அறிமுகமும் இருப்பதில்லை எனச் சாடினார். மொழி சார்ந்து அடிப்படை அறிவைப் பெற வேண்டுமென்றால் அந்த மொழி சார்ந்து மண்ணில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என அழுத்தமாகக் கூறினார்.
1930 தொடக்கம் மலேசியாவில் உருவாகிய சிறுகதை சார்ந்த வரலாற்றை மிகவும் துல்லியமாக பல்வேறு தகவல்களை உள்ளிட்டு பேசினார். 1930களிலேயே இங்கொரு சிறுகதை புத்தகம் போடப்பட்டிருப்பதை நினைவுக்கூர்ந்து, அப்பொழுதே மலேசியாவில் சிறுகதை தொடர்பாக உருவாகிவிட்ட உழைப்பையும் தியாகத்தையும் மீட்டுணர்ந்தார். தமிழகத்தில் சிறுகதை வரலாறு தொடங்கும் அதே காலக்கட்டத்தில் மலேசியாவிலும் சிறுகதை எழுதப்பட்டிருப்பதை முக்கியமான விசயமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் தனது இந்தச் சிறுகதை ஆய்விற்கு பால பாஸ்கரனின் முழுமையான மலேசிய சிறுகதை ஆய்வு துணையாக இருந்ததைக் குறிப்பிட்டார். பால பாஸ்கரனின் ஆய்வில் அவர் மலேசிய சிறுகதையில் முக்கியமானவர்களாக மூன்று எழுத்தாளரைக் குறிப்பிடுவதாகவும், அவர்கள் சி.வடிவேலு, ரெ.கார்த்திகேசு மற்றும் எம்.ஏ.இளஞ்செல்வன் எனவும் சீ.முத்துசாமி கூறினார். தொடர்ந்து 1950களில் மலேசிய இலக்கியத்தில் பெரும் திருப்புமுனையாக பத்திரிக்கை உலகம் நுழைந்து முக்கியமான பல எழுத்தாளர்களை ஊக்குவித்து அடையாளப்படுத்தியிருக்கிறது. அவற்றுள் தமிழ் நேசனும் தமிழ் முரசும் போட்டி போட்டுக் கொண்டு இலக்கியத்தை வளர்க்க நல்லதொரு நோக்கங்களைக் கொண்டிருந்ததாக முத்துசாமி அவர்கள் தெரிவித்தார். இன்றைய பத்திரிக்கை முதலாளிகளின் நோக்கம் பொருளாதாரம் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருப்பினும், மலேசிய இலக்கிய வளர்ச்சியில் முந்தைய பத்திரிக்கை ஆசிரியர்களின் உழைப்பும் சேவையும் மதிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டார். அந்தக் காலக்கட்டத்திலேயே பத்திரிக்கை துறையில் இருந்த முருகு சுப்ரமணியம் அவர்கள் பத்திரிக்கையில் பிரசுரமான ஒவ்வொரு கதைக்கும் ரி.ம 5 கொடுத்ததாகவும், இன்றைய காலக்கட்டம் இவ்வளவு தூரம் கடந்த வந்த பின்பும் இன்னமும் எழுத்தாளர்களுக்கு 50 வெள்ளிதான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.
2000க்குப் பிறகு உருவான இளம் படைப்பாளர்களின் வருகை மலேசிய தமிழ் இலக்கியத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை ஆழமாக அவதானித்து பேசினார். சிறுகதை உலகில் அடுத்த தலைமுறைகளாக மஹாத்மன், ம.நவீன், கே.பாலமுருகன், பா.அ.சிவம் மற்றும் சு.யுவராஜன் ஆகிய ஐவரையும் முன்னிறுத்தி அடையாளப்படுத்தினார். இவர்கள்தான் இந்தக் காலக்கட்டத்தின் அடுத்த பாய்ச்சலாக தீவிரமாக இயங்கி வருவதாகவும் கூறினார். மஹாத்மன் , கே.பாலமுருகன் ஆகிய இருவரின் சிறுகதைகளும் எனக்கு முக்கியமானதாகப் படுவதாகத் தெரிவித்துவிட்டு அதன் காரணங்களையும் முன்வைத்தார். ம.நவீன் யுவராஜன் போன்றவர்களின் கதை, மனித மனங்களின் விகாரங்களையும் உளவியலையும் தொட்டுப் பேசுவதாகக் கூறினார். பெண் இளம் இலக்கியவாதிகள் கவிதை துறையில் இருக்கக்கூடும் எனவும், சிறுகதையில் ஒரு வாசகனாக அப்படி யாரையும் சொல்ல முடியவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும் பல தகவல்களையும் வரலாறு குறித்த தெளிவையும் தனதுரையில் அவர் முன்னெடுத்தார். சீ.முத்துசாமியின் இந்த ஆய்வை எழுத்தாளர் இயக்கம் நூலாக அல்லது சிறு தொகுப்பாக வெளியிட்டால் நல்ல ஆவணமாக இருக்கும்.
நிகழ்வில் அடுத்ததாக மூத்த கவிஞர் சீனி நைனா அவர்களும் மு.அன்புசெல்வன் அவர்களும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். கவிஞர் சீனி நைனா அவர்கள் இலக்கியத்தின் தேவை என்ன, கவிதை என்கிற முழுமையான செவ்வியல் வடிவம் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார். மு. அன்புசெல்வன் அவர்கள் எம்.ஏ இளஞ்செல்வனின் சிறுகதைகளைக் குறிப்பிட்டு அந்தக் கதைகளைப் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். விவாத அரங்கில் பார்வையாளர்களால் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக மு..அன்புசெல்வன் அதிகமான கேள்விகளை எழுப்பினார்.
இப்படியொரு நல்ல களத்தை ஏற்படுத்தி இந்தக் கருத்தரங்கத்தை நடத்திய கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்திற்கும் அதன் தலைவரான மூத்த இலக்கியவாதி க.பாக்கியம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த நிகழ்வில் பிஅனாங்கிலிருந்து எழுத்தாளர் பாவையும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
கே.பாலமுருகன்
மலேசியா
No comments:
Post a Comment