Tuesday, January 11, 2011

சிறுகதை விமர்சனம்: சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசிய பத்திரிக்கைகளில் இதழ்களில் பிரசுரமாகும் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பரிசுக் கொடுப்பதோடு, அந்தச் சிறுகதைகளை நூலாகத் தொகுத்தும் வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டு மலேசிய தினசரி பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் வந்த கதைகளிலிருந்து 20 கதைகள் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கதைகளில் மார்க்ரெட் செல்லதுரை எழுதிய ‘சில நேரங்களில் சில ஏவாள்கள்’ கதை 2009-க்கான சிறந்த கதையாக எழுத்தாளர் பிரபஞ்சனால் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

மார்கரெட் செல்லதுரையின் சில சிறுகதைகளைப் பத்திரிகையில் வாசித்த அனுபவம் உண்டு. இவருடைய இந்தச் சிறுகதை அவருடைய கடந்தகால கதைகளைவிட கொஞ்சம் தரமானதாகவே கருத வாய்ப்புண்டு. இந்தச் சிறுகதை இங்கு விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் 2009-க்கான சிறந்த சிறுகதையை ஒரு பொதுவான வாசிப்பிற்கும் அதன் மூலம் பெறப்படும் பலவகையான வாசிப்பு அனுபவத்தையும் முன்வைக்க வேண்டும் என்கிற நோக்கமே ஆகும்.

அடர்ந்து தூறும் ஒரு மழைப்பொழுதில் பேரங்காடியினோரமாக ஒதுங்கி நிற்கும் ஏவாளிடமிருந்து சிறுகதை தொடங்குகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் தனக்கு மிகப் பழக்கமான ஒருவனை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்துவிடுகிறாள். கதையில் அவன் ‘சாத்தானாக’ கருதப்படுகிறான். வீட்டிற்கு வந்ததும் கதையினூடே அவன் ஏவாளின் உடலையும் அழகையும் இரசித்தப்படியே இருக்கிறான்.

1. கலை தொடர்பற்ற தாவுதலும் பிரச்சாரத்தன்மையும்

இதற்கிடையில் கதை மிகவும் வலுவாக நடைமுறை யதார்த்தத்திலிருந்து ஒரு பிரச்சார பிரதிக்குள் நுழைகிறது. சாத்தான் உங்கள் உலகம் எப்படி இருக்கிறது என ஏவாளிடம் வினவ, உடனே ஏவாள் உலகில் நிகழும் கொடுமைகள் பற்றி பிரசங்கம் செய்யத் துவங்குகிறாள். இன்றுதான் அவள் புதியதாக உலகக் கொடுமைகளைத் தரிசித்தவள் போல மிகவும் போலியாகப் பதற்றமும் வெறுப்பும் அடைகிறாள். வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரு நண்பர்கள் என்கிற தோரணையில் நம்மை இழுத்துக் கொண்டு போகும் கதை திடீரென தொடர்பற்ற நிலையில் பெரும் குறியீடுகளுக்குள் தாவுகிறது. அவன் சாத்தானாகவும் அவள் உலகில் தோன்றிய முதல் பெண்ணாகவும் மாறிவிடுகிறார்கள். இயற்கை பேரிடர், புயல் வெள்ளம் என அரைப்பக்கத்திற்குச் செய்திகள் போல விவாதம் நீள்கிறது.

ஏவாளின் வீட்டிற்கு வந்திருக்கும் அவன் தொலைஇயக்கியைக் கொண்டு தொலைக்காட்சியில் உலக அழகிகள் போட்டியைப் பார்க்கிறான், ஆனால் திடீரென ஏவாளால் சாத்தான் என அழைக்கப்படுகிறான். யதார்த்தத்தில் சராசரியாக ஒருவன் செய்யக்கூடியதைச் செய்யும் அவன் கதையில் அடிக்கடி ஏற்புடைய தொடர்பேதுமின்றி திடிரென சாத்தானின் குறியீட்டுக்குள் நுழைக்கப்படுவதே கதையின் அடர்த்தியின் மீது பலவீனத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை அவன் சாத்தானுக்கு நிகரான குணங்களைக் கொண்ட மனிதனாக இருக்கக்கூடும், அல்லது மனித குணங்கள் நிரம்பிய சாத்தானாக இருக்கக்கூடும். இவை இரண்டையும் முறையாக அனுமானிக்கும் அனுபவத்தைக் கதைக் கொடுக்கத் தவறியிருக்கிறது. அவன் வெறும் பிரச்சாரம் மட்டுமே செய்கிறான், உலக நடப்புகளை விவாதிக்கின்றான், கடவுள் குறித்து பழைய கருத்தாக்கங்களைப் பேசுகிறான், அவ்வப்போது சபலமடைகிறான்.

கதையின் இடையில் ஆதாம் வருகிறான். இவர்கள் யாவரும் கதையில் இடம்பெறும் சாதாரண மனிதர்களாக வந்து போனாலும் அவர்கள் மீது கதையாசிரியர் மிகத் தொன்ம குறியீடுகளான ஆதாம் ஏவாள், சாத்தான் போன்றவற்றைப் பிரயோகித்திருக்கிறார். ஆனால் இவையாவும் கதையில் ஒலிக்கும் பிரச்சாரத் தொனியிலும் வழக்கமான விவாத்தத்திலும் வலுவிழந்து போகின்றன. ஒரு தொன்ம குறியீட்டை எப்படிக் கதைக்குள் புகுத்த வேண்டும் என்பதை பின்நவீனத்துவ சிந்தனைவாதிகளான எழுத்தாளர்கள் பிரேம் – ரமேஸ் போன்றவர்கள் வடித்த பிரதிகளைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் கதையாசிரியர் பெற முடியும் என நினைக்கிறேன். குறிப்பாக முழுக்கவும் தொன்மத்தை முன்வைத்து புனையப்பட்ட பிரேம்-ரமேஸின் நாவலான ‘சொல் என்கிற சொல்” மிக முக்கியமான நாவல்.

குறிப்பு: “கதையாசிரியர் கதையின் மூலம் நன்னெறித்தனமான வாதங்களை பிரச்சாரமாக முன் வைக்கிறார்”

2. கடவுளின் புனித கட்டமைப்பு

கடவுளின் இருப்பு குறித்தும் கடவுளின்பால் உருவாக்கப்பட்ட புனித கட்டமைப்புகள் குறித்தும் இன்று பற்பல ஆழமான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், இந்தக் கதையில் இரு முக்கியமான குறியீடுகளான ஏவாளும் சாத்தானும் கடவுள் மனிதனைப் படைத்தார், கூடவே ஆசைகளையும் துன்பம் வரும்போதெல்லாம் இறைவனை நாடி வரும் மனதையும் படைத்திருக்கிறார் என விவாதிக்கின்றன. 2009-இல் இந்தக் கருத்தாக்கத்தைப் பேச முனையும் இந்தச் சிறுகதையைவிட 1950களில் ஒலித்த, “பகவானே மௌனம் ஏனோ? இவையாவும் உன் லீலைதானோ?” பாடல் வரி இன்னும் சுருக்கமாகக் கையாளப்பட்டிருக்கிறதே.

சாத்தான் தன் விவாதத்தில் தொடர்ந்து ஏவாளுக்குள் கடவுளின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்த முயல்வதாகக் காட்டப்பட்டுருக்கிறது. ஆனால் ஏவாள் கடவுளைத் தக்க வைப்பதற்காகத் தொடர்ந்து நியாயப்படுத்த தன் தர்க்க புரிதல்களை முன் வைக்கிறாள். கடவுளின் படைப்புகளான மனிதர்களின் மீது அனைத்து தவறுகளையும் சுமத்திவிட்டு, கடவுளின் புனிதத்தைக் காப்பாற்றுகிறாள். கடைசிவரை மதத்தின்பால் உருவான கற்பிதங்களை அவர் கேள்வி எழுப்பவில்லை. அதன் மீது மீண்டும் கடவுளின் உன்னதத்தைத் தட்டையான கடவுள் குறித்த நியாயப்பாடுகளைக் கட்டியெழுப்பும் முயற்சியைத்தான் மேற்கொண்டுள்ளார்.

பைபிள் பழைய ஏற்பாட்டில் இறைவன் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் படைத்துவிட்ட பிறகு அங்குள்ள ஒரு மரத்தின் கனியைச் சாப்பிடவேண்டாமென எச்சரிக்கிறார். அவரின் கட்டளையையும் மீறி அந்தக் கனியைச் சாப்பிட்டுவிட்ட பிறகு ஆதாமிற்கும் ஏவாளுக்கும் மனித உணர்வுகள் தோன்றிவிடுகிறது. கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டுகிறார். மரணம், மூப்பு, பிணி, வெட்கம் என ஏதுமில்லாத புனித ஏதேன் தோட்டம் சாத்தானால் கட்டுண்ட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கடவுளின் முதல் படைப்பைச் சாத்தான் கவர்ந்து கடவுளிடமிருந்து மனிதர்களைப் பிரிக்கிறது. அதே தொனியில்தான் இந்தச் சிறுகதையில் இடம்பெறும் இந்தச் சாத்தானும் கடவுள் மீது முரணான புகார்களைச் சொல்லிக் கொண்டே போகிறது.

பைபிளில் சாத்தான் வெற்றிப்பெருகிறது. ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் பிரிக்கிறது. ஆனால் இந்தக் கதையில் சாத்தான் விவாதத்தில் தோல்வியுற்று காணாமல் போய்விடுகிறது. ஏவாள் கடவுளைக் காப்பாற்றிவிடுகிறாள். ஆக இந்தச் சிறுகதை மதத்தின் புனிதத்தை எந்தவகையிலும் மறுக்காமல் மீள் உருவாக்கம் என்கிற முயற்சியைச் செய்து பார்த்திருக்கிறது எனவும் அடையாளப்படுத்தலாம்.

குறிப்பு: “கதையாசிரியர் மதத்தின் மீது நம்பிக்கையுடைய குரலைக் கதையில் ஒலிக்கவிட்டிருக்கிறார்.”

3. பைபிள் குறித்து இரண்டு முரணான கற்பிதம்

ஆதாம் ஏவாள் சாத்தான் என பைபிளின் குறியீடுகளைக் கதையாசிரியர் சிறுகதையில் பாவித்துள்ளார் என்கிற காரணத்திற்காக இந்தக் கதை உருவானதற்குப் பின்னனியில் பைபிளின் பாதிப்பும் கதையாசிருக்கு இருக்கக்கூடிய சமய அறிவும் அடங்கியுள்ளது என அனுமானிக்கலாம். ஏவாளும் சாத்தானும் உரையாடும் இடங்களில் இதை உறுதிப்படுத்த முடிகிறது. ஆகவே இரண்டு இடங்களில் கதையாசிரியர் பைபிளுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதை உணர முடிகிறது.

அ. “ஆதாமை உண்டாக்க பிடி மண் கிடைத்த அத்தனை பெரிய ஏதேன் தோட்டத்தில், உன்னை உருவாக்க வேறு மண்ணா கிடைக்கவில்லை?” என சாத்தானால் கேட்கப்படும் பைபிளுக்கு எதிரான கூற்றைச் சற்றும் பொருட்படுத்தாமல் ஏவாள் வேறு என்னவோ பேசிக் கொண்டிருக்கிறாள். உண்மையில் ஏவாள் வேறு மண்ணால்தான் உருவாக்கப்படுகிறாள். அதே ஏதேன் தோட்டத்திலுள்ள வேறு பிடி மண்ணைக் கொண்டு ஆதாமின் விழா எலும்பை எடுத்து, அதன் மூலம் ஏவாளை உருவாக்குகிறார் கடவுள்.(பழைய ஏற்பாடு 2 ஆவது அதிகாரம்). இந்த விசயத்தைக் கதையிலிருந்து மறைப்பதற்கு என்ன காரணம்? அல்லது ஏன் தொன்ம குறியீடான ஏவாளால் இதை மறுக்க முடியவில்லை? ஒருவேளை பைபிளின் இந்தக் கூற்றைக் கதையாசிரியர் மறுப்பதாக எடுத்துக் கொண்டாலும், பைபிளின் உண்மையான கருத்தாக்கங்களைச் சொல்லாமல் நழுவுவது சரியான அணுகுமுறை கிடையாது.

ஆ. “இல்லை... கடவுள் அனைவரையும் சமமாகத்தான் படைத்தார்” என ஏவாள் கூறுகிறார். இதுதான் பைபிளின் மூலம் அறிய வரும் படைப்பு தர்மத்திற்கு மிகவும் எதிரான கூற்றாகக் கருத முடிகிறது. பைபிளை நன்றாகப் படித்தவர்களுக்கு இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடும். பைபிள் பழைய ஏற்பாட்டின் வழி, கடவுள் ஆணையும் பெண்னையும் சமமாகப் படைக்கவில்லை எனத் தெரிய வருகிறது. கடவுள் முதலில் தன்னைப் போல ஆதாமைப் படைக்கிறார். தான் தனிமையில் இருப்பதால் கடவுள் ஆதாமையும் தனிமையாகப் படைக்கிறார். பிறகு ஏழு நாட்களில் உலகத்தைப் படைக்கிறார். ஆதாமிடம் அந்தப் படைப்புகளுக்குப் பெயரிடப் பணிக்கிறார். ஆதாம் அவனைச் சுற்றி இருக்கும் அனைத்திற்கும் துணை இருப்பதை உணரும் போது தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தனிமையைக் கண்டு வருத்தமடைகிறான். அவனுடைய வருத்தத்தை உணர்ந்த கடவுள் அவனுக்குத் துணையாக ஏவாளைப் படைக்கிறார். ஆதாமிற்குச் சமமாக ஏவாள் படைக்கப்படவில்லை, அவனுக்குத் துணையாகத்தான் ஏவாள் உருவாக்கப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கதையாசிரியர் இந்தக் கூற்றை மறுக்க முயன்றிருந்தாள், முதலில் இந்தப் பைபிளின் கூற்றைத் தெளிவாகச் சொல்லிவிட்டு அதனிலிருந்து முரண்பட்டிருக்கலாம். ஆனால் உண்மையை அப்படியே தனது பிரதியிலிருந்து நீக்குவது பைபிளுக்குச் செய்யும் குற்றமா அல்லது மதத்திற்கு எதிரான புரட்சியா?

ஒருவேளை இதை வாசிக்கும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏவாள் என்கிற கிறிஸ்த்துவத்தின் தொன்ம குறியீட்டின் உபயோகம் கதையாசிரியர் பைபிள் குறித்து தெளிவான அறிவுடையவர் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிடும். ஆனால் கதைக்குள் இருக்கும் இந்த இரண்டு மிக மிக தொடக்கமான புரிதலில் நிகழ்ந்திருக்கும் முரணும் அல்லது பிழையும் கதையாசிரியரின் மேலோட்டமான பைபிள் வாசிப்பை உணர்த்தக்கூடும்.

குறிப்பு: “கதையாசிரியர் கதையின் மூலம் பலவீனமான மத அறிவை வடித்துள்ளார்.”

4. ஏவாளின் தனிமையும் அக உலகமும்

இப்படியாக நகரும் கதை திடீரென ஒரு திருப்பத்தை முன் வைக்கிறது. அதுதான் ஏவாளின் அக உலகம். இங்கிருந்து ஏவாள் தொன்ம குறியீடு என்கிற அடையாளத்திலிருந்து தகர்க்கப்படுகிறாள். ஒரு சாதாரண பெண் தனிமையின் காரணமாக அக ரீதியில் எப்படி ஒடுக்கப்படுகிறாள் என்பதைப் பற்றிய பெண்ணிய கருத்தாக்கங்களை முன்வைத்து கதையின் அடுத்த பகுதி வளர்ச்சியடைகிறது. இத்துனைப் பெருய வீட்டில் நாள் முழுக்க தனிமையில் கழிக்கும் அவளது கொடுமை விவரிக்கப்படுவதன் மூலம் கதை மெல்ல ஒரு உளவியல் யதார்த்தத்தை நாடுகிறது. கதையில் ஓர் இடத்தில் ஏவாள் சொல்கிறாள்’ “எத்தனை நேரம்தான் தொலைக்காட்சியையும் புத்தகங்களையும் வெற்றுச் சுவற்றையும் வெறித்துக் கிடப்பது?” என.

மேற்குறிப்பிட்ட குறிப்புகள் தனிமையை மேலும் கொடூரமானதாக ஆக்கக்கூடிய விடயங்கள். தன் உணர்வுகளைப் பகிர்வதற்கு ஆட்களே இல்லாத வீட்டில் புத்தகங்கள் தொலைக்காட்சி சுவர் என இதற்கு மத்தியில் போராடும் ஒரு பெண்ணின் மனம் மிகவும் பயங்கரமான சிதைவுக்கு ஆளாகுவதோடு அவள் அகம் சுருங்கி அனுபவம் வெறுக்கத்தக்க நிகழ்வுகளாக மாறியிருக்கும். ஆக இப்படிப்பட்ட சூழலில் வாழும் ஏவாள் என்கிற சராசரி பெண் மனச்சிதைவுக்கு ஆளாகி தன்னை பல குறியீடுகளாக உடைத்து தனிமையை நிரப்பிக் கொள்ளக்கூடும், அல்லது பைத்தியம் பிடித்து சொற்களை இழக்கக்கூடும். ஒருவேளை அதிகமாகப் புத்தகம் படித்திருப்பதால் புத்தகத்தில் இடம்பெறும் ஏதாவது ஒரு கதைமாந்தர்களை தானே உருவாக்கி அவர்களுடன் உரையாடக்கூடும்.

ஆனால் மார்கரெட் எழுதிய இந்தச் சிறுகதையில் வரும் ஏவாள் என்கிற பெண் உலக நடப்புகள் தொடங்கி பைபிள் வரை மிகவும் கறாராக விவரிக்கும் மன ஆற்றல் உடைய பெண்ணாகக் காட்டப்படுகிறாள். பிறகெப்படி திடீரென கதையில் இறுதியில் காணாமல் போகும் அந்தச் சாத்தானும் கதையில் இடம்பெறும் தொன்மங்களும் சாத்தியமாகிறது? ஏவாளை உடனடியாக தனிமைக்குள் தன்னைத் தொலைத்த அகநெருக்கடியுள்ள பெண் என்கிற பிம்பத்திலிருந்து நீக்க வேண்டியுள்ளது. தனிமையைத் தவிர்க்க நினைத்து பெரும் சலனத்திற்குள்ளாகும் தன் அகத்தின் இருளைத்தான் அவள் பற்பல பாத்திரங்களாக வெளிப்படுத்தியிருப்பினும், அவளுக்குள்ளிருந்து வெளிப்படும் அந்த வெவ்வேறான ஆளுமைகள் காப்பி கடையில் உட்கார்ந்து உலக நியாயம் பேசுபவர்கள் போலவே வந்துவிட்டுப் போகிறார்கள்.

அவளும் சாத்தானும் ஆதாமும், ஆப்பிளும் மனித தோன்றியதன் தத்துவத்தையும் இப்பொழுது அறத்தை இழந்து மிகவும் மோசமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனித குலத்தின் நாசங்களையும் பெண்ணின் தனிமை மிகவும் ஆபத்தானவை என்பதையும் சுட்டிக்காட்ட திடீரென தோன்றி வரும் குறியீடுகளாகவே நிறுத்த வேண்டியிருக்கிறது. இது என் வாசக பார்வையின் ஓர் உணர்வு மட்டுமே. கதை எழுதிய பிறகு அதைத் தீர்மானிக்கும் சக்தியும் சுதந்திரமும் ஒவ்வொரு வாசகனுக்கும் உண்டு. ஆகையால் மார்கரெட் எழுதிய இந்தச் சிறுகதை, மொழிநடையில் தனித்துத் தெரிந்தாலும், புனையப்பட்ட விதத்தில் ஒரு கோர்வையும் புனைவுக்கேயுரிய அமைப்பையும் இழந்து, தொன்ம குறியீடுகளைக் கதைக்குள் பாவித்த விதத்தில் ஏதோ ஒரு நெருடலை ஏற்படுத்திச் செல்கிறது. இதையெல்லாம் நீக்கிவிட்டு கதைக்குள் எக்கிப் பார்த்தால் பயங்கரமான பிரச்சாரமும் செய்யப்பட்டுருக்கிறது. அறத்தைப் பற்றிய செய்தியை எத்துனைப் புனைவுகள் செய்து பார்த்தும் செய்தியாகவே கொடுத்துவிட்டுப் போகும் விதத்தை அவதானிக்கும் போது இது பொழுதுபோக்குக்குரிய கதை என்பதில் சந்தேகம் இல்லை.

குறிப்பு: “கதையாசிரியர் உளவியல் குறித்து நம்பகத்தன்மையற்ற/சாத்தியமற்ற சம்பவங்களைச் சொல்லி செல்கிறார்.”

5. பெண்ணிய கட்டுமானம்

இதே சிறுகதையை இன்னொரு கோணத்தில் வைத்தும் புரிந்துகொள்ளலாம். மார்கரெட் செல்லதுரை கதையின் ஆன்மாவாகப் பெண்ணிய உணர்வைத்தான் முன் வைக்க முயன்றுள்ளார். இதற்கு முன் உருவான அனைத்து கதை அனுமாங்களையும் புறம்தள்ளிவிட்டு அல்லது பொருட்படுத்தாமல் பெண்ணியத்தை முன் வைத்து எழுதப்பட்ட சிறுகதை என இதை அடையாளப்படுத்தக்கூடும். அநேகமாக எழுத்தாளர் பிரபஞ்சன் இந்தச் சிறுகதைக்குச் சிறந்த கதைக்கான பரிசைக் கொடுத்ததற்கும் கதைக்குள் ஒலிக்கும் இந்தப் பெண்ணிய குரலே காரணமாக இருக்கலாம்.

“கடவுள் அனைவரையும் சமமாகத்தான் படைத்தார்” எனச் சாத்தானின் கூற்றை மறுக்கும் கதையாசிரியர், பைபிளின் கட்டமைப்பிற்கு எதிராக முரணாக சமத்துவத்தைப் பேசுகிறார். பைபிளில் கடவுளின் முதண்மை படைப்பான ஆதாம்தான் அதிகம் கவனம் பெறுகிறான். அந்தக் கடவுளின் கவனத்தை அப்படியே ஏவாள் பக்கம் திருப்ப முனையும் பெண்ணிய கருத்துகளை உள்ளடக்கிய சிறுகதைத்தான் இது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விசயங்களைக் கதையாசிரியர் மறுத்துப் பேசுகிறார்.

அ. ஆணையும் பெண்ணையும் கடவுள் சமமாகத்தான் படைத்தார்

கடந்த சில வருடங்களாக படைப்பிலக்கியத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைச் சாடும் வகையிலும் விமர்சிக்கும்வகையிலும் பெண்ணிய எழுத்து உருவாகி வந்திருப்பதை அறிகிறோம். இது முழுக்க முழுக்க பெண்களின் விடுதலையையும் இருப்பையும் பற்றி ஆழமாக மிதமாக மேலோட்டமாகப் பேசும் வகையில் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தச் சிறுகதையில் மிகவும் மேலோட்டமான பெண்ணிய கருத்துகளே பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் மதத்தின்பால் உருவான பெண் அடக்குமுறையை மதத்தை மறுத்து எதிர் விமர்சனமாகப் பெண்ணியத்தை முன்வைக்கிறார்.

அவர் மதத்திற்கு எதிராக முன்வைத்த கருத்துகளை கதையில் சொல்லிய விதம் ஏற்புடையதாக அமைந்துள்ளனவா என்பதும் ஒரு கேள்வியாக நிற்கிறது. மேலும் பல இடங்களில் தன்னை மதவாதியாகவும் சில இடங்களில் மதத்திற்கு எதிரான புரட்சியாளராகவும், சில இடங்களில் மதத்தைப் பற்றிய செய்தியைப் பிழையாக தருபவராகவும் தன்னை முன்னிறுத்துகிறார். உண்மையில் இவர் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளராக வருவதற்குப் பல வாய்ப்புகள் உண்டு.
ஆ. ஆதியில் தோற்றுப்போன ஏவாள்

பைபிளின் பழைய ஏற்பாட்டின் மூலம், ஏவாள் சாத்தானின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அந்தப் பாவப்பட்ட மரத்திலிருந்து கனியைப் பறித்து சாப்பிட்டுவிடுகிறாள். ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் விரட்டப்படும் சாபத்திற்குக் காரணமே ஏவாள்தான் எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதை முழுவதுமாக மறுத்து ஏவாளை ஒரு வெற்றிப்பெற்றவளாக மறு உருவாக்கம் செய்கிறார் மார்கரெட் செல்லதுரை.

இந்தச் சிறுகதையின் இறுதிவரை சாத்தானின் ஆசை வார்த்தைகளுக்குச் சற்றும் பிடிக்கொடுக்காமல் தொடர்ந்து விவாதித்துச் சாத்தனையே விரட்டிவிடுகிறாள். ஆதியில் தோற்றுப்போன ஏவாள், நவீன காலச்சூழலில் வெற்றியடைகிறாள். கிருத்துவ மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் பைபிளின் தொன்ம கற்பிதங்களைத் துணிச்சலாக மறுத்து எழுதி தன்னை ஒரு நாத்திக பின்புலமுடைய பெண்ணியவாதி எனக் காட்ட முயன்றிருகிறார் கதையாசிரியர். இவருடைய இந்தத் துணிச்சலைத் தாராளமாப் பாராட்டலாம். மேலோட்டமான முற்போக்குத்தனமமாக இருந்தும்கூட இந்தக் கதை செய்யும் மதத்தின் அடக்குமுறைக்கு எதிரான வாதம் போற்றத்தக்கவை.

குறிப்பு: “கதையாசிரியர் மதத்தின் உன்னதங்களிலிருந்து வடியும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் பின்நவீனத்துவ பெண்ணியவாதி”

கதை வெறும் சம்பவங்களாகச் சில இடங்களில் தேக்கமடைவதற்குக் காரணம் கதையில் கையாளப்பட்டிருக்கும் அதிகமான பிரச்சாரம்தான். கதையின் யதார்த்தத்தை அது கதை நெடுகிலும் வீணடித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஒரு முக்கியமான விசயம், கதையைப் படித்து முடித்தவுடன் சில தகவல்கள் கிடைக்கிறது, கதைக்குள் இருக்கும் புரட்சி தென்படுகிறது, ஆனால் இவை அனைத்தையும் மீறி கதை மனதைத் தொடவில்லை என்றே ஒரு வாசகனாக உணர்கிறேன். பைபிளை இன்னும் ஆழமாகக் கலை எழுச்சியுடன் கதைக்குள் புதைத்திருந்திருக்கலாம்.

இருப்பினும் நல்ல முயற்சிக்கு எனது பாராட்டுகள். தொடர்ந்து யதார்த்தத்தையும் புனைவையும் எந்த நெருடலும் இல்லாமல் நவீன உத்திகளுடன் பாவிக்கும் அனுபவத்தை பற்பல வாசிப்பின் மூலமே பெற முடியும், அப்படியொரு தீவிரமான வாசிப்பிற்குத் தன்னை உட்படுத்தினால் மார்கரெட் அவர்களால் வித்தியாசமான சிறுகதைகளைத் தர முடியும்.

நன்றி: வல்லினம் டிசம்பர் இதழ்
கே.பாலமுருகன்
மலேசியா

No comments: