Thursday, January 20, 2011

ஆட்டக்காரர்கள் குறைந்துவிட்ட தைப்பூசம்

தைப்பூசத்திற்குச் செல்வதை விட்டு 4 வருடம் ஆகியிருந்தது. இன்று மீண்டும் சென்றிருந்தேன். 4 வருடத்திற்கு முன் தைப்பூசத்தின் மூன்றாவது நாளின் இரவில் எந்தக் காரணமுமில்லாமல் ஆட்கள் நிரம்பி வழிந்த சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, அப்பொழுது அங்குக் காவடிகளோ அல்லது இரதமோ எதுவும் இல்லை. எல்லோரும் வெறுமனே எதற்காகவோ நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர முடிந்தது.

உடனே அருகில் இருந்த நண்பனிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன் பிறகு தைப்பூசம் என்றால் நகரம் அடையும் பரப்பரப்பான ஒரு விழா என மட்டும் ஞாபகப்படுத்திக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடுவேன். எங்கோ மூலைக்குள் தப்பு சத்தமும் காவடி குலுங்கி ஆடும் சத்தமும் கேட்கத் துவங்கும். இரண்டாம் படிவம் படித்தக் காலக்கட்டத்தில் தைப்பூசம் எனக்காகவே நடத்தப்படுகிறதென ஒரு கொண்டாட்ட உணர்வு மேலோங்கி கிடந்தது. காலையில் சுங்கைப்பட்டாணி தலைவெட்டி கோயிலில் துவங்கும் ஆட்டம் இரவு 12மணியைக் கடந்தும் சற்றும் பலவீனப்படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

தலைவெட்டி கோயில்தான் தைப்பூச விழாவில் காணிக்கையைச் செலுத்தும் பக்தர்களின் ஆற்றங்கறை ஆகும். இங்கிருந்து காவடிகள், பால் குடம், அலவு என எல்லாம்வகையான காணிக்கைகளும் தொடங்கும். தலைவெட்டி கோவிலிலிருந்து புறப்படும் பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம்வரை நடந்து சுப்ரமண்ய ஆலயத்தை வந்தடைந்து தனது காணிக்கையைச் செலுத்துவார்கள். ஒவ்வொரு காவடிக்கும் பின்னால் ஆடி கொண்டே செல்வதென்பது மிகவும் சவாலான விசயமாகும். தொடர்ந்து அந்தக் காவடியை விடாமல் பின்தொடர வேண்டும். இதுதான் ஆட்டக்காரர்களின் பங்களிப்பு. காவடி சுமப்பவர் யார் என்பதைப் பற்றி கூட கவலையில்லாமல் அவருடன் ஆடிக்கொண்டே வருவதில் ஒரு அதீதமான அக்கறை இருந்தது.

காவடியைச் சுமப்பவருக்கும் அவருடன் ஆடி கொண்டு வருபவர்களுக்கும் வழியில் எங்குமே சலிப்போ களைப்போ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தப்பு, உருமி மேளம் போன்றவற்றை தயார் செய்திருப்பார்கள். உடல் வியர்த்து வடிய காலத்தைப் பற்றிய எந்தக் குறிப்புகளையும் அறியாமல் வித விதமான ஆட்டம் உச்சத்தை அடைய சோர்ந்து நிமிரும்போது மீண்டும் ஒரு உற்சாகம் பிறந்திருக்கும். வடிந்து விழுவதற்குத் தயாராகவிருக்கும் நெற்றி வியர்வையை விரலால் வழித்து அள்ளி வெளியே இறைந்துவிட்டு மீண்டும் ஆட்டம் தொடரும். நம்மை ஒரு பத்து பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிய வரும்போது எங்களுக்கு ஆட்டத்தின் மீது இன்னும் விருப்பம் கூடியிருக்கும். உடலின் எந்த அசௌகரிகத்தைப் பற்றியும் கவலையில்லாமல் ஆடிகொண்டே இருப்போம்.

கையில் தலைக்கவசத்தைப் பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பவர்கள்தான் அந்த ஆட்டத்தின் கதைநாயகர்கள். அந்தக் காவடியின் மொத்த கண்கானிப்பும் அவர்களிடமே இருக்கும். அவர்கள் தனது பொறுப்புணர்ச்சியைக் காட்டுவதற்காகவே கையில் தலைக்கவசம் வைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் அது போன்றவர்களை இப்பொழுது நினைக்கும்போது அவர்கள் கையில் வைத்திருக்கும் தலைக்கவசம் என்பது ஒரு கலாச்சாரமாக உருவாகியிருந்த நிலையின் குறியீடாக எனக்கு தோன்றுகிறது. தனது ஆட்டத்தில் முழுமையான திறமையைக் காட்ட முடியாதவர்கள் கையில் வைத்திருக்கும் தலைக்கவசத்தின் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அந்தக் கவசத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஆட்டுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு நடன வகை கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் அப்பொழுது கதைநாயகர்களாக தன்னைக் காட்டிக்கொள்பவர்கள் ஒரு மோட்டாரோட்டியாகவே இருந்திருக்கிறார்கள். மோட்டாரில் சாகசத்தை நிகழ்த்தக்கூடியவனே உண்மையான கதைநாயகன் என்கிற வரையறை அப்பொழுது இருந்திருக்கக்கூடும். ஆகையால் தன்னை மோட்டாரோட்டி என அறிவித்துக் கொள்வதற்காகக் கையுடன் தலைக்கவசத்தையும் எடுத்து வந்துவிடுகிறார்கள். இது ஒரு வகையான வாழ்வு.

இன்று இரவு 11மணிக்கு மேல் கோவிலின் வாசலை வந்தடைந்த எந்தக் காவடியுடனும் அந்த ஆட்டக்காரர்களைப் பார்க்க முடியவில்லை. காவடி சுமப்பவர் மட்டும் உற்சாகம் குறையாமல் ஆடிக்கொண்டிருக்க எல்லோரும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தலைக்கவசத்தை வைத்திருப்பவர்கள் ஒருவர் இருவர் தவிர மற்றவர்களைப் பார்க்க முடியவில்லை.

இப்பொழுது என்னிடமும் ஒரு கவசம் இருக்கிறது. வெளிப்படையாக சுற்றி நிற்பவர்களின் கவனத்தைப் பற்றி துளியும் பொருட்படுத்தாமல் ஆட்டம்போட பெரும் தடையாக இருக்கும் ஒரு கவசம்தான் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. ஆகையால் எல்லோரையும் போல அதையெல்லாம் ஒரு நிகழ்வாகத் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திறமையான ஆட்டக்காரர்கள் இல்லாத தைப்பூசத்தில் ஏனோ உற்சாகம் இருப்பதில்லை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

1 comment:

Tamilvanan said...

//கையில் தலைக்கவசத்தைப் பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்பவர்கள்தான் அந்த ஆட்டத்தின் கதைநாயகர்கள். அந்தக் காவடியின் மொத்த கண்கானிப்பும் அவர்களிடமே இருக்கும்.//

இதுபோன்ற‌ திருவிழாக்களில் பேச‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் பேச‌வேண்டிய‌ விச‌ய‌ங்க‌ள் எவ்வ‌ள‌வோ இருக்க‌ , ஆட்ட‌த்தின் க‌தை நாய‌க‌ர்க‌ளை ப‌ற்றி எழுதியிருப்ப‌து சுவார‌ஸ்ய‌மாக‌வும் ம‌ற்றும் எந்த‌ அள‌வுக்கு உங்க‌ளின் பார்வை விரிந்துருக்கிற‌து என்ப‌து தெரிகின்ற‌து.