சந்திப்பு &நேர்காணல்: கே.பாலமுருகன்
வாணி ஜெயம் மலேசிய பெண் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர். அண்மையில் மிக ஆர்வமாக நவீன சிற்றிதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் எழுதத் தொடங்கி தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மௌனம் இதழ் மூலம் மீராவாணி எனும் புனைப்பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார். இவருடைய சிறுகதைகள் உயிர் எழுத்து, வல்லினம், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் போன்ற இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து வெளிவருகின்றன. அநங்கம் இதழுக்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது.
1) கே.பா: இரண்டாம் தலைமுறை பெண் படைப்பாளிகள் இலக்கிய வெளியில் தீவீரமாக வெளிப்படுவதாக நினைக்கிறீர்களா? விளக்கவும்.
1) கே.பா: இரண்டாம் தலைமுறை பெண் படைப்பாளிகள் இலக்கிய வெளியில் தீவீரமாக வெளிப்படுவதாக நினைக்கிறீர்களா? விளக்கவும்.
வாணிஜெயம்: எனது பார்வையில் இரண்டாம் தலைமுறை படைப்பாளிகள் இரண்டு பிரிவுகளாக தெரிகிறார்கள்.
முதல் பிரிவினர் இணையம், சிற்றிதழ்கள் என நவீன இலக்கியத் தளத்தில் கால் தடம் பதித்தும் அதை நோக்கிய அவர்களின் நகர்வு தீவிரமாகவும் இருக்கின்றது. அது சிறு வட்டமாக இருந்த போதிலும் அவர்களுக்குள் ஆரோக்கியமான இலக்கிய புரிதல்களை ஒவ்வொரு சந்திப்பின் போதும் வெளிப்படுதிக் கொள்கிறார்கள். மற்றொர் பிரிவினர்
வார, மாத ஞாயிறு பதிப்புகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்களின் பெரும்பாலோரின் படைப்பில் தீவீரம் இருந்தாலும் அது வெளிப்படும் முறையில் ஆளுமையும் இலக்கிய குறித்தான விரிவான பார்வையும் பெற்றிருக்கவில்லை என நினைக்கிறேன்.
2) கே.பா: சிறுகதை & கவிதை துறையில் பெண் படைப்பாளிகளின் ஈடுப்பாடு வெறும் படைப்பு ரீதியில் இருக்கிறது. விமர்சன முனைப்பும் பகிர்தலும் பலவீனமாக இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து..?
வாணிஜெயம்: உண்மை! படைப்பையும் பகிர்தலையும் ஒப்பிடுகையில் பகிர்தலில் பலவீனமான போக்கே காணப்படுகிறது. ஒரு சிறந்த படைப்பு வெளிவருகையிலும் குறைகள் நிறைந்த படைப்பு பிரசுரம் காணுகையிலும் அதுக்குறித்தான விமர்சனமும் பகிர்தலும் வெளிப்படுவது மிக குறைவு. அதற்கு இலக்கிய வளர்ச்சி மீதான பொறுப்பற்றதனமும் அலட்சிய போக்கும் மட்டும் காரணமாக இருக்க முடியாது, தமிழகத்தைப் போன்று இங்கு பெண்களிடையே வாசிப்பும் ஆழமான இலக்கியத்
தேடலும் குறைவாக இருப்பதுவும் முக்கிய காரணம் எனலாம்.
3) கே.பா: குடும்ப அரசியல்,இலக்கிய அரசியல்..இவை இரண்டும் ஒரு பெண் படைப்பாளியின் இருப்பை கடுமையான புறக்கணிப்பால் தொலைக்க முற்படுவதாக நினைக்கிறீகளா?
வாணிஜெயம்: மலேசிய பெண் சுதந்திரமாகவே வளர்க்கப்படுகிறாள். இங்கு கல்வியும் பிற சலுகையும் ஆணைப் போல தான் பெணுக்கும் வழங்கப்படுகின்றது. பெரும்பாலும் எந்தவிதமான அடக்குமுறையும் இருப்பதில்லை. அவர் விருப்பப்ட்ட துறையைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. இப்படியான சூழலில் இலக்கிய துறையில் ஈடுப்படுகிறவர் திருமணதிற்கு பின் புதிய சுழலுக்குத் தள்ளப்படுவதால் இலக்கியதில் தனது இருப்பை தளர்த்திக் கொள்கிறார் அல்லது தன்னை விடுவித்துக் கொள்கிறார். அவரது வாழ்க்கை துணை இலக்கிய ஈடுபாடு உள்ளவராக இருந்துவிட்டால் அவரது இலக்கிய பணம் தொடர்வதில் தடையிருப்பதில்லை. இலக்கிய அரசியல் எனப் பார்த்தோமானால் பெண் படைப்பாளி மரபு மீறி எழுதுவது இங்கு வரவேற்கப்படுவதில்லை. தாய்மை, கற்பு என்ற ரீதியில் பெண் இருப்புக் குறித்துப் போலித்தனமான படைப்பே போற்றப்படுகின்றது. பெண்மையின் நியாமான மறுதலிப்பையும் சீரிப்பாயும் பெண்ணிய உணர்வையும் சார்ந்தப் படைப்புகள் ஒரு வித அலுப்புடனே பார்க்கப்படுகின்றது. கணவன், குடும்பம், பணி என்று பன்முகம் கொண்ட படைப்பாளிகள் இதனால் சோர்ந்து சுணங்கிப் போகிறார்கள்.
4) கே.பா: நவீன பெண் படைப்பாளிகள் என்னும் அடையாளத்தை எந்த வகையில் கொடுக்கிரீகள்? இரண்டாம் தலைமுறை படைப்பாளின் இலக்கியத்தில் நீங்கள் காணும் நவீனத்தை குறிப்பிடவும்.
வாணிஜெயம்: நவீனம் என்பது மரபுகளை உடைத்துக் கொண்டு வெளிப்படுவது தானே? அது பெண் எழுதுகோளை ஏந்திய போதே தோன்றிவிட்டது. பெண் பொருளாதார அடிமைத் தனத்திலிருந்து வெளிப்பட்டு தனது சுயத் தேவையை தானே பூர்த்திசெய்துக்கொண்ட போதே அவர்களின் குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது. இலக்கியத்தில் மரபை உடைத்துக்கொண்டு பெண் சார்ந்த கொடுமைகளையும் அவலங்களையும் மூத்த பெண்படைப்பாளிகள் என்றோ இங்கு வடித்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய இரண்டாம் தலைமுறையினரின் படைப்புகளில், குறிப்பாக நவீன கவிதைகளில் தெரிகின்ற உலக தரமும் இலக்கிய வடிவமைப்பும் திருப்திப்படும் வகையில் இருக்கின்றது. அவர்களின் பாடும் பொருள் வழக்கத்திலிருந்து மாறுப்படிருக்கிறது. பெண் சார்ந்த வாழ்வில் புகட்டப்பட்ட, திணிக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட விசயங்களை அழகிய சொல்லாடல்களில் முகம் சுளிக்காதவாறு வெளிப்படுத்துகிறார்கள்.
5) கே.பா: நவீன பெண் படைப்பாளிகள் தீவீரமாக ஈடுப்படுவதாக குறிப்பிடுகிறீர்கள். அவர்களின் இலக்கிய பகிர்தலும் வாசிப்பும் எப்படி இருக்கிறது?
வாணிஜெயம்: அவர்களிடையே ஆழமான இலக்கிய தேடல்கள் இருப்பதால் தான் தொடர்ந்து எழுதுகிறார்கள். குடும்பம், உத்தியோகம், பரப்பரப்பான நவீன சூழலிலான வாழ்க்கை போன்றவற்றுக்கு இடையிலும் அவர்களால் எழுத முடிகின்றது. இலக்கியம் படைப்பதால் ஒரு படைப்பாளி இங்குப் பொருள் ஈட்ட முடியாது என்பதை நாமறிவோம். அப்படிப்பட்ட பரபரப்பான சூழலிலும் அவர்கள் நேரத்தை ஒதுக்கி வாசிக்கிறார்கள், இலக்கிய சந்திப்புகளில் தங்களது இலக்கிய தாகத்தை தணித்துக் கொள்கிறார்கள்.
6)’ கே.பா: ஒவ்வொரு சந்திப்பின் போதும் வெளிப்படுத்துகிறார்கள்’ –அது என்ன சந்திப்பு? எதும் இலக்கிய சார்ந்த நிகழ்வுகளா?
வாணிஜெயம்: ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு நாளை நிர்ணயித்து அவர்களுக்குள் இலக்கியக் குறித்த பரிமாற்றங்களைச் செய்து வருவதை அறிகிறேன். இவர்களைப் பின்பற்றி நானும் என் தோழிகளுடன் இதுப்போன்ற சந்திப்புகள் நிகழ்தியுள்ளேன். இங்கு எழுத்து ஊடகங்கள் பெறுகிக்கொண்டு வந்தாலும் படைப்பாளிகளின் படைப்புகளுக்கு போதிய ஊக்கமும் வழிக்காட்டலும் வாசிப்பு உபகரணங்கள் போதிய அளவு இருப்பதாக சொல்லிவிட முடியாது. அதற்கு இதுப்போன்ற சந்திப்புகள் அவசியமே..
7) கே.பா: உலக தரம் இருப்பதாக இவ்வளவு பெரிய விசயத்தை சாதாரணமாக சொல்லி விட்டீர்களே ? அந்த உலக தரப் படைப்புகளை அடையாளப் படுத்தவும்.
வாணிஜெயம்:உலக தரம் என்று நான் சொன்னது இன்றைய தமிழகப் படைப்புக்கு நிகராக இவர்களாலும் கவிதையை படைக்க முடிந்திருப்பதை! தற்கால கவிதைகளை குறித்து எனது புரிதலை வைத்தும் மலேசிய புதுக்கவிதைகளை எண்பதுகளிலிருந்து ஒரு வாசகியாக வாசித்தும் சேகரித்தும் வந்திருப்பதால், தற்போதய கவிதையின் இருத்தலை என்னால் நிறம் காண முடிகின்றது என நம்புகிறேன்.
8) கே.பா: மலேசிய சூழலில் வெளிப்படும் ஆணாதிக்கத்தை பற்றி சொல்லவும். ஒரு பெண் படைப்பாளி அதை உடைப்பது சரியா அல்லது சமாளிப்பது சரியா?
வாணிஜெயம்: எந்த நாட்டுச் சுழலிலும் ஆணாதிக்கம் ஒரே மாதிரிதான் இருந்துவருகிறது. வளரும் போதும், கல்விச்சாலையிலும், பணிமணையிலும் பின் தனக்கென்று அமையும் குடும்பத்திலும் பெண் இரண்டாந்தாரப் பிரஜையாகவே நடத்தப்படுகிறாள். ஒரு படைப்பாளி என்கின்ற பொறுப்பில் அதை உடைப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.
9) கே.பா: மலேசியாவில் இலக்கிய விமர்சனங்கள் பெண் படைப்பாளிகளை வளப்படுத்தி உள்ளதா? உங்கள் அளவில் விமர்சனங்கள் உங்களை எப்படி வளப்படுத்தின அல்லது பலவீனப்படுத்தின?
வாணிஜெயம்: விமர்சனங்கள் படைப்பை அடையாளக்காட்டக் கூடியவை. அத்தகைய தரமான விமர்சனங்கள் இங்குப் பெண் படைப்பாளியை வளப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. ‘இது என் தாய் மண்ணின் படைப்பாளிகளுடையது’ என்ற ரீதியில் மலேசியப் படைப்பின் மீது ஈர்ப்பும் அதன் இலக்கணம் பிறழாத வடிவத்தில் கர்வமும் எப்போதும் என்னிடம் உள்ளதால் மலேசிய விமர்சனங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். மூத்த எழுத்தாளர்களும் சகப் பெண் படைப்பாளியை கௌரப் படுத்தியும் அடுத்த தலைமுறையை ஊக்கப்படுத்தியும் வருவதை மறுக்க முடியாது. என்னையும் அவை வளப்படுத்தியே வருகின்றது.
10) கே.பா: பெண்ணியம் குறித்தான பரப்பிலிருந்து ஒரு பெண் படைப்பாளி விடுப்பட்டு சுயத்துடன் எழுதுவதை, escape from social மனநிலை என சொல்லலாமா அல்லது அது சுதந்திரம் என சொல்லலாமா?
வாணிஜெயம்: சுதந்திரம் என்றே சொல்லலாம். ஆனால் மலேசிய பெண் படைப்பாளிகள் சுதந்திரமாக எழுதுவதை இலக்கிய கண்ணோட்டத்துடன் பார்க்கப் படுகின்றதா என ஐயம் எழுகின்றது. காரணம் இங்கு பெண் படைப்பாளி மரபை உடைத்து எழுதும்போது அது அவரின் சொந்த அனுபவங்களாகவே பார்க்கப்படுகின்றது.. அப்படைப்பாளியின் கற்பனை வளத்தையும் இலக்கிய உணர்வையும் சந்தேகிப்பது வருத்ததைத் தருகிறது. தமிழக பெண் படைப்பாளிகளுக்கு இணையாக இவர்களால் எழுத இயலாது என குறைத்து மதிப்பிடுவது வேதனைக்குரிய விசயம்! பிறப்பில், வளர்ப்பில் கலாச்சாரப் பின்னனியில் இருவேறு படைப்பாளிகள் தாங்களின் படைப்பின் வழி வேறுப்படுவதைத் தவிர்க்க முடியாதது.
11) கே.பா: ஒரு சராசரி ஆணுக்கும், ஆண் இலக்கியவாதிக்கும் உள்ள ஆதிகார வேற்றுமை என்ன? ஒரு ஆண் தனது அதிகாரத்தை குடும்பத்திலும் இலக்கியத்திலும் எங்கிருந்து நிறுவுகிறான்?
வாணிஜெயம்: இது எனக்கான கேள்வியா? இருப்பினும் பதிலளிக்க முயல்கிறேன். காலந்தோட்டே சமூகம், அதிகாரத்தை ஆணுக்கு வழங்கியிருப்பதால் ஒரு சராசரி மனிதன் தனது ஆதிக்கத்தை குடும்பத்தில் முழுமையாக செலுத்தவே முனைகிறான். ஒரு இலக்கியவாதி படைப்பின் வழியும் வாசிப்பின் மூலமும் பெண் வலிகளை புரிந்திருப்பதால் முடிந்தவரை அதிலிருந்து மாறுப்பட்டு தனது ஆதிக்கத்தை தளர்த்திக்கொள்ள முயல்கிறான்.. பொதுவாக பெண்ணுக்கு ஆண் சார்ந்து வாழும் நிலை என்பதாலும் சமுதாய மரபோ விதியோ பாட்டனார், தந்தை வழி நிர்ணிக்கப்பட்டிருப்பதாலும் குடும்பத்திலோ இலக்கியத்திலோ அல்லது தான் சார்ந்த துறையிலோ தனது அதிகாரத்தை மிக எளிதாக ஓர் ஆணால் நிறுவிக்கொள்ள முடிகின்றது.
நன்றி: அநங்கம் இதழ் மார்ச் 2010
2 comments:
பாஸ் பேட்டி நல்லாருக்கு
லே அவுட்டை கரெக்ட் பண்ணுங்க.. ரைட் சைடுல ஓவர் லேப் ஆகுது கவனிங்க..
Post a Comment