2008 ஆம் ஆண்டு மலேசிய மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் பிறகு கெடாவில் ஒரு சிற்றிதழ் தொடங்கினால் அது ஒரு முக்கியமான பதிவாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு அதைப் பற்றி தொடர்ச்சியான சிந்தனைக்கு ஆளாகவில்லை. மீண்டும் கோலாலம்பூரில் வல்லினம் ஆசிரியர் ம.நவீனைச் சந்தித்தபோது அவரும் என்னிடம் கெடா மாநிலத்தில் சீ.முத்துசாமி யுவராஜன் போன்றவர்களின் உதவியுடன் ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்கு ஆலோசனையைத் தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகம் என்னை இயங்க வைத்தது. அதன்படி கெடா மாநிலம் திரும்பியதும் உடனடியாக அநங்கம் தயாரிப்பு வேலையில் இறங்கினேன்.
அநங்கம் இதழ் வடிவமைப்பிலும் இதழ் சார்ந்த வெளியீடு, சட்ட ரீதியிலான விளக்கங்கள் வரை என்னுடன் பகிர்ந்து கொண்ட ம.நவீனுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அநங்கம் பெயரைக்கூட நாங்கள் இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்துதான் உருவாக்கினோம். அநங்கம் இதழின் ஆரம்பக்கால ஆலோசகராகவும் நவீன் தனது அனுபவத்தின் வழி பங்காற்றினார். மஹாத்மானின் நீண்ட கடிதம், தொடர்ச்சியாக அநங்கத்தைச் செல்லுமிடத்திலெல்லாம் தயங்காமல் விற்பனை செய்து கொடுத்த கோ.புண்ணியவான், இதழ் தயாரிப்பில் என்னுடன் சேர்ந்து அங்குமிங்கும் அலைந்த நண்பர் ப.மணிஜெகதீசன், அவ்வப்போது அலைப்பேசியின் வாயிலாக அநங்கம் தொடர்பான வாசகப் பார்வையை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் பாண்டித்துரை, இதுநாள்வரையில் அநங்கம் இதழுக்கு ஓவியங்கள் வரைந்து தரும் நவீன ஓவியர் சந்துரு என அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். விரிவான கட்டுரை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு பாலம் தொகுப்பு இதழில் வெளிவரும்.
2011 தொடக்கம் அநங்கம் புதிய பெயருடன் புதிய அடையாளத்துடன்:
இந்தாண்டு தொடக்கம் அநங்கம் புதிய மாற்றங்களுடன் மலரவிருக்கின்றது. குரலற்றவர்களின் குரல் என்கிற அடையாளத்துடன் கலை. இலக்கியம், அரசியல், சமூகம் என எல்லாம் தளத்திலும் மாற்றுப்பார்வையை முன்வைக்கக்கூடிய இதழாக அநங்கம் இனி , “பறை” எனும் இதழாக வெளிவரவிருக்கின்றது. பறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் கருவி எனும் கற்பிதம் சமூக தளத்தில் உருவாகியிருக்கிறது. பறையைப் போன்றுதான் இன்றளவும் பலவகைகளில் சுரண்டப்பட்டு அடையாளமில்லாமல் ஒடுக்கப்படும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அது போன்ற குரலற்றவர்களின் குரலாக மாற்றுப்பார்வையுடன் இனி பறை இதழ் பிரசுரம் காணும்.
என்னுடன் ஆசிரியர் குழுவிலும் ஆலோசனை குழுவிலும் ம.நவீன், ஏ.தேவராஜன், ப.மணிஜெகதீசன், கோ.புண்ணியவான் போன்றவர்கள் தொடர்ந்து பங்காற்றுவார்கள். பறை இணைய இதழாகவும் ம.நவீன் அவர்களின் முயற்சியில் வெளிவரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்ந்து பறை இதழையும் அதன் களத்தையும் விரிவிப்படுத்தும் வகையிலான பங்களிப்புகள் இதன் மூலம் முன்னெடுக்கப்படும். விரைவில் மார்ச் 8 ஆம் நாள் அன்று மலேசியாவில் நிகழ்ந்த ஒரு முக்கியம் வாய்ந்த வரலாற்று சம்பவத்தை முன்னிட்டு அதனைச் சிறப்பிக்கும் வகையில் காத்திரத்துடன் பறை இணைய இதழ் வெளிவரும்.
அநங்கத்திற்கு அளிக்கப்பட்ட அதே வரவேற்பும் ஆதரவும் இனி பறை இதழுக்கும் கிடைக்குமென நம்புகின்றேன். இதுநாள் வரையில் அநங்கம் இதழுக்கு எல்லாம் வகையிலும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி