1
கைத்தொலைப்பேசியின் நேற்றைய இரவு வந்து சேர்ந்திருந்த குரல் பதிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பனி மூட்டம் அடர்ந்திருந்த கேமரன்மலை பிரதேசத்தில் காரணமே இல்லாமல் ஒருவன் தூங்கி வழிவது மிகவும் நிதர்சனம். அதுவும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் தொல்லைகளை நிராகரிக்க அதனை முடக்கிவிட்டு அரைமயக்கத்தில் தொலைவது மேலும் வசதி.
“கடன் அட்டை பாக்கி கட்டனும் மறந்திறாதீங்க” தம்பியின் குரல்.
“மாமா. . .அவுங்கலாம் வெளிலயே நிக்கறாங்க. யாரு அவுங்கலாம்?” குமரனின் குரல். நேற்று அதிகாலை 2 மணி போல அழைப்பு வந்திருக்கிறது. சற்று நிதானித்துவிட்டு மீண்டும் அவனுடைய குரல் பதிவைக் கேட்டேன்.
“மாமா. . அம்மா ரூம்புலேந்து எதோ சத்தம் கேக்குது” மீண்டும் அவனுடைய குரல்தான். 3.05க்கு அழைப்பு வந்திருக்கிறது. அவன் குரலில் ஏன் இப்படியொரு நடுக்கம்? பதற்றம் அதிகரித்தது.மீண்டும் அவன் குரல் ஒலித்தது.
“நீங்க யேன் இங்க வந்தீங்க? மாமா. . இவங்களாம் யேன் இங்க வந்தாங்க. மாமா உடனெ வாங்க. . இல்லன்னா. . .சுகுமாறன் வந்திருக்கான் தெரியுமா?” சட்டென ஒரு குழந்தையின் சத்தம் வளர்கிறது, நீடிக்கிறது. மீண்டும் அந்த அழுகை துண்டிக்கப்படுகிறது. அதன் பிறகு எந்தக் குரல் பதிவும் இல்லை. கேமரனிலிருந்து இப்பொழுது புறப்பட்டாலும் அங்குப் போய்ச்சேர எப்படியும் 5 மணி நேரம் ஆகும். என்ன செய்வதென தெரியாமல் உடனேயே குமரனின் வீட்டுத் தொலைப்பேசிக்கு அழைப்புக் கொடுத்தேன். முதல் இரண்டுமுறைக்கு எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தேன். சந்தேகமும் பயமும் அடர்ந்து என்னை வலுவிழக்கச் செய்தன.
கேமரனிலிருந்து அடிவாரத்திற்கு இறங்கும்போது மணி மதியம் 1 ஆகியிருந்தது. கார் கண்ணாடியிலிருந்து ஒழுகிக் கொண்டிருந்த வெயிலின் தகிப்பு மேலும் பதற்றத்தைக் கூட்டியது. 10 நிமிடத்திற்குப் பிறகு மாரிமுத்து அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. காரை ஓர் ஒரமாக நிறுத்திவிட்டு கைத்தொலைப்பேசியை எடுத்தேன். அவருக்கும் குரலில் பதற்றம் இருந்தது.
“தம்பி! குமரன் வீட்டுலெ என்னமோ நடந்துருக்கு. அவுங்க அம்மா, ரெண்டு அக்காங்களும், அஞ்சலை, ஜோனி, பெரிய தாத்தா. . எல்லாம் செத்துட்டாங்க. குமரனுக்கு என்னமோ ஆச்சு. ஒன்னும் பேச மாட்டறான். ஆஸ்பித்திரிலெ சேர்த்துருக்காங்க. உடனே வாங்க தம்பி!”
அருகாமையைக் கடந்து போன எல்லாம் வாகனங்களிலிருந்தும் ஒரு துயர ஓசை கேட்பது போல இருந்தது. அந்த ஒலி காதுக்குள் புகுந்து சடசடவென அதிர்வை உண்டாக்கியது. சோகங்களைவிட அதிர்ச்சி அசைக்க முடியாத ஒரு காலத்தை நமக்கு முன்னே விரித்துக் காட்டுகிறது. அதில் அசையாத ஒரு புகைப்படம் போல மனம் சிக்கிகொள்கிறது. கைகள் பலவீனமடைந்தது போல இருந்தது. காரை சத்தேதுமின்றி செலுத்தத்தொடங்கினேன். 5 மணி நேரம் ஓட்டம் 7 மணி நேரமாக நீண்டது.
2
குமரனின் வீடு- 2010
கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 1.35
கதவுக்கு வெளியில் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்த குண்டு விளக்கு தவிர எந்த அசைவும் இல்லை. குண்டு விளக்கிலிருந்து வெளியிலுள்ள எல்லாம் பொருள்களிலும் தவறி தவறி விழுந்த ஒளி, எல்லாவற்றையும் அசைப்பது போல இருக்கிறது. கதவிலிருந்து 4 அடி தூரத்தில் அடர்ந்திருக்கும் மூங்கில் தண்டுகளின் பாதி உருவம் மட்டும் தெரிகிறது. வேகமான காற்று. மூங்கில் செடி குலுங்கி ஓய்ந்தது. மீண்டும் வேகமான காற்று. காற்றின் ஓசை ஒரு குழந்தையின் அலறல் போலவும் ஒலிக்கிறது.
கேமரா 2 ( வீட்டின் வரவேற்பறை)
அதிகாலை 1.36
வரவேற்பறையில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருப்பதை அதன் எதிரிலுள்ள கண்ணாடி அலமாரியின் மேற்பரப்பில் படரும் அடர்த்தியான ஒளியின் வழி அறிய முடிகிறது. அசைவு நாற்காலியில் குமரனின் பெரிய தாத்தா சாய்ந்திருக்கிறார். அநேகமாக அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உறங்கியிருக்க வேண்டும். தலை இலேசாகச் சாய்ந்திருக்கிறது. நாற்காலியில் இலேசான அசைவு மட்டுமே. அவரின் தொடர் அமைதி அவர் உறங்கிக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. வரவேற்பறையில் மங்கிய வெளிச்சம் பரவியிருந்ததால் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. பெரிய தாத்தாவை யாரோ அழைப்பது போலவும் இரு முறை சத்தம் கேட்டு ஓய்கிறது. அநேகமாக அந்த அழைப்பு மாடியிலிருந்து வந்திருக்கக்கூடும்.
கேமரா 3 ( வீட்டின் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டு)
அதிகாலை 1.40
படியிலிருந்து ஒரு பந்து மட்டும் உருண்டு கீழே சரிகிறது. வெள்ளை மஞ்சள் கோடுகளைக் கொண்ட பந்து. யாரோ மேல்மாடியிலிருந்து தூக்கி வீசியிருக்க வேண்டும். 4 வினாடிக்குள் பந்து கீழே விழுந்து திரையிலிருந்து மறைகிறது. படிக்கட்டுக்கு மேல் எரிந்துகொண்டிருக்கும் ஒரு மஞ்சள் விளக்கு அவ்வளவு தெளிவில்லை. 6 படிக்கட்டுக்கு மேல் வெறும் இருள். வெளிச்சம் அதற்கு மேல் பாயவில்லை. கேமராவில் முழுவதுமான படிக்கட்டும் தெரியவில்லை. சட்டென ஒன்று கடந்து போகிறது. அஞ்சலையின் உருவமாக இருக்கலாம். 4-5 முறை அந்த நகர்வைப் பார்த்தும் அடையாளம் காண முடியவில்லை. கண்ணாடி பொருள் ஒன்று சட்டென உருள்வது போலவும் சத்தம் கேட்கிறது.
கேமரா 4 ( வீட்டின் மேல்மாடியிலுள்ள அறைகளுக்குச் செல்லும் வழி))
அதிகாலை 1.35
இரண்டு அறைகளின் கதவு திறந்து கிடக்கின்றன. குமரனின் அம்மாவின் அறை மட்டும் சாத்தியிருக்கிறது. முதல் அறையிலிருந்து வெளியே கசியும் வெளிச்சம் கேமராவில் படும் காட்சிக்கு மத்தியில் ஒரு கோட்டைப் போட்டிருந்தது. அது காட்சியின் மீதான பயங்கரத்தை மேலும் அதிகரிப்பது போல இருந்தது. இருளும் வெளிச்சமும் கண்களுக்குச் சோர்வைத் தந்தன. இரண்டாவது அறைக்கதவு மெல்ல திறந்து வெளிச்ச கோட்டை மேலும் பெரியதாக்கியது. நிழல் உருவம் ஏதும் தென்படவில்லை. கதவு அநேகமாகக் காற்றில் திறந்திருக்கக்கூடும்.
கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 1.45
மூங்கில் தண்டுகளிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வந்து திரையைவிட்டு மறைகிறது. அபாரமான வெளிச்சத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய ஒன்றாக அதன் நகர்வின் மர்மம் தென்பட்டது. மீண்டும் மீண்டும் அந்த நகர்தலைக் கவனித்தாக வேண்டும். பிறகு சில விநோதமான சத்தங்களும் தொடர்ந்து கேட்கிறது. 2 நிமிடத்திற்குப் பிறகு ஒரு குழந்தையின் அழுக்குரலும் கேட்கிறது. அந்தச் சப்தத்தின் அதிர்வுகள் நிச்சயம் அருகாமையிலுள்ள ஒருவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எந்தத் திசையிலிருந்து அந்தக் குரல் கேட்கிறது என்பதை அறியமுடியவில்லை. ஆனால் அந்த அழுக்குரல் எங்கேயோ தூரத்திலிருந்து வந்து சோர்ந்து வீழ்வது போலத்தான் இருந்தது.
கேமரா 2 ( வீட்டின் வரவேற்பறை)
அதிகாலை 1.46
பெரிய தாத்தா அமர்ந்திருந்த நாற்காலி காலியாகக் கிடக்கிறது. இலேசான ஆட்டம் மட்டும் நிலைத்திருந்தது. தொலைக்காட்சி இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதை அலமாரியில் விரியும் ஒளியின் வழி தெரிந்துகொள்ள முடிந்தது. திடீரென மாடியிலிருந்து ஏதோ ஒன்று தடதடவென இறங்கி வருகிறது. கூடவே ஒரு அலறல் சத்தமும். சத்தத்தை நோக்கி விரிய முடியாத தடை. சலனமின்றி கிடக்கும் வரவேற்பறை மட்டும்.
கேமரா 3 ( வீட்டின் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டு)
அதிகாலை 1.47
6ஆவது படிக்கட்டு போய் முடியும் ஓர் இருளுக்குள்ளிருந்து வெறும் கால் பகுதி மட்டும் தெரிகிறது. அந்தக் கால் அநேகமாக படியிலிருந்து கீழே இறங்குவதற்கு முன் மாடியிலுள்ள யாருடனோ உரையாடலை முடித்துக்கொள்வதற்கு முன்பான அசைவைக் காட்டுகிறது. 2 வினாடிக்குப் பிறகு உருண்டையான ஒரு பந்து மீண்டும் படிக்கட்டில் சரிந்து விழுகிறது. அந்தக் கால் இப்பொழுது காணவில்லை. மீண்டும் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது விழுந்தது பந்து போல் தெரிய மறுக்கிறது. உருண்டையான ஏதோ ஒன்றாகக்கூட இருக்கலாம்.
கேமரா 4 ( வீட்டின் மேல்மாடியிலுள்ள அறைகளுக்குச் செல்லும் வழி))
அதிகாலை 1.50
ஒரு கதவு மட்டும் திடீரென சாத்தப்பட்டு வெளிச்சம் குறைகிறது. குறைந்த இருளும் காட்சிகளிலிருந்து யாரோ பேசுவதும் கேட்கிறது. அது ஒருவகையான மனதைச் சலனப்படுத்தும் அழுக்குரல். கொடூரமான ஒலியாக மாறி வதைக்கிறது. எந்த அறையிலிருந்து வருகிறது என்பதைச் சரியாக ஊகிக்க முடியவில்லை. திடீரென இன்னொரு அறை திறக்கப்படுவதைக் காட்சிக்குள் வந்து விழும் வெளிச்சக் கோடுகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. மீண்டும் தடதடவென காலடி சத்தம். வலது புறத்திலிருந்து தொடங்கி இடதுபுறத்தின் மூலையில் போய்முடிகிறது. தூரத்தில் ஏதோ கதவு திறக்கப்படும் ஓசையும் அல்லது உடைக்கப்படும் ஓசையும் மாறி மாறி ஒலிக்கின்றது.
கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 2.05
இருள். அடர்த்தியான இருள். ஒரு பெண்ணின் குரல் முணுமுணுப்பது மட்டும் கேட்கிறது. தொடர்ந்து குழந்தையின் அழுக்குரல். மீண்டும் பெண்ணின் பயங்ரமான அலறல். மீண்டும் இருளின் மௌனம்.
கேமரா 2 ( வீட்டின் வரவேற்பறை)
அதிகாலை 2.05
இருள். அடர்த்தியான இருள். தூரத்தில் யாரோ உரையாடும் குரல் மட்டும்.
கேமரா 3 ( வீட்டின் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டு)
அதிகாலை 2.17
இருள். அடர்த்தியான இருள். படிக்கட்டிலிருந்து மீண்டும் ஏதோ உருண்டு நகரும் சத்தம். தடதடவென ஓடும் சத்தமும் அந்த நகர்வைப் பின்தொடர்கிறது. மீண்டும் அமைதி.
கேமரா 4 ( வீட்டின் மேல்மாடியிலுள்ள அறைகளுக்குச் செல்லும் வழி))
அதிகாலை 2.50
இருள். அடர்த்தியான இருள். ஒரு சிறு ஓசையும் இல்லாத தருணத்தில் இதற்கு முன் அழுது கொண்டிருந்த குழந்தை சிதறுண்ட குரலில் பேசுவது போல கேட்கிறது. சொற்களை உடைத்துப் பேசும் மிகவும் தெளிவில்லாத பேச்சு அது. மிரட்டலாக இருக்கிறது. அந்தப் பேச்சு முணுமுணுப்பாக மாறி இருளில் கரைகிறது.
கேமரா 1( வீட்டின் வாசல்)
அதிகாலை 2.55
இருள். அடர்த்தியான இருள். காற்றின் ஓசை ஒரு குழந்தையின் குழந்தையின் அலறல் போல கேட்கிறது.
3
கேமரா பதிவுகளிலிருந்து எதையும் அறியமுடியவில்லை. குமரன் வீட்டில் எந்தக் குழந்தையும் இல்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூறிவிட்டு வந்துவிட்டேன். அதிகாலை 3 மணிக்கு அவர்கள் எல்லோரும் கொலை செய்யப்பட்டு படிக்கட்டின் கீழே ஒரே இடத்தில் விழுந்துகிடந்ததாகத் தகவல் கூறப்பட்டது. வீட்டில் கதவு உடைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. முன்பிருந்தவர்கள் வீட்டில் இலவசமாக விட்டுப்போன கேமராக்களை மட்டும் பெரிய தாத்தா அடிக்கடி விநோதமாக உணர்ந்து தொடர்ந்து அதைக் கவனித்துக் கொள்வதாக மட்டும் ஞாபகம்.
வீட்டிற்கு வந்ததும் கேமராவில் நிலவிய மௌனம் எனக்குள் ஏதோ சலனத்தை உருவாக்கிய வண்ணமே இருந்தது. குமரனின் மீது நினைவுகள் அறுந்து அறுந்து விழுந்தன. 12 வயது. அவனால் சரியாக நடக்க முடியாது. பிடிமானம் தேவை. நாள் முழுக்க மாடியிலேயே இருப்பான். கீழே சென்றுவிட்டவர்களைத் தொடர்ந்து அழைத்து தொல்லை செய்யும் ஒரு பழக்கத்தைத் தவிர அவனிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.
காலையில் 7 மணிக்கு அந்த வீட்டிற்குள் நுழைந்து பார்க்கும்போது, குமரன் மட்டும் மேல்மாடி அறையில் மூடியிருக்கும் சன்னலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. குமரனிடம் ஏதோ ஓர் உண்மை இருக்கிறது. ஆனால் அதைத் தெரிவிக்கும் எந்த மனபாவமும் முதிர்ச்சியும் அவனிடம் இல்லை. களைத்துப்போன உடலுடன் நாற்காலியில் அமர்ந்தேன். மர்மம் என்றால் என்ன? ஒரு கொலைக்குப் பின்னணியில் ஏன் இத்துனை மர்மங்கள் தானாக வந்து ஒளிந்துகொள்கின்றன?
“சுகுமாறன் அண்ணன் வந்திருக்கான் தெரியுமா?”
சட்டென காலையில் கைத்தொலைப்பேசி குரல் பதிவிலிருந்து ஒலித்த குமரனின் இந்த வசனம் ஞாபகத்திற்கு வந்தது. மனம் படப்படத்தது. கைக்கால்களெல்லாம் நடுங்க மீண்டும் கைத்தொலைப்பேசியை எடுத்தேன். குமரனின் குரல் மூன்றுமுறை தெளிவாக ஒலித்தது. குமரன் ‘வாங்க போங்க’ என்பதைக்கூட சிதறுண்டுதான் ஒலிப்பான். அவனுக்கு எந்தச் சொல்லும் சரியாக ஒலிக்க வராது. பேரதிர்ச்சியில் அந்தக் குரலை மீண்டும் கேட்டேன். அது குமரனின் தெளிவான குரல். பதற்றம் உடலெங்கும் பரவி பிரமை பிடித்தது போல இருந்தது. யார் இந்த சுகுமாறன்? அவர்களின் குடும்பாத்தார்களைத் தவிர வேறு யாரும் வீட்டில் இருந்ததாக அறிகுறிகள் இல்லையே. குழப்பத்தின் அதீதமான பிடி எல்லாம் மர்மங்களுக்குள்ளும் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொண்டிருந்தன.
4
2006- சுகுமாறன்
கேமரா 1( வீட்டின் வாசல்)
மதியம் 1.35
பெரிய தாத்தா சுகுமாறனை படியிலிருந்து கீழே தள்ளிவிட்டு அவனுடைய கால் முறிந்துவிட்ட ஒரு மதியம். சிமிண்டு கட்டுடன் அவன் வாசலில் அமர்த்தி வைக்கப்படுகிறான். வீட்டில் தன்னை கோபத்துடன் பார்க்கும் அனைவரையும் பார்த்து கேலியாகச் சிரிக்கிறான். அப்பொழுது அவனுக்கு 12 வயது. குமரனுக்கு 8 வயது. அவனைக் கடுமையான வசைச்சொல்லால் அம்மாச்சி திட்டிவிட்டு ஒரு சில்வர் குவளையை விட்டு எறிகிறது. அது சுகுமாறன் மீது படாமல் விலகி சுவரில் மோதி சுழல்கிறது.
கேமரா 2 ( வீட்டின் வரவேற்பறை)
மதியம் 1.46
சுகுமாறனின் அறையிலுள்ள ஒவ்வொரு பொருளும் தூக்கி வீசப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொன்றும் வரிசையாக படிக்கட்டிலிருந்து சருக்கி விழுந்து கொண்டிருந்தன. அவனுடைய சட்டை துணிகளும் அப்படியே மூட்டையாக உருண்டு வந்து விழுந்தன. தூரத்தில் இருவர் மேல்நோக்கி ஓடுவதும் தெரிகிறது.
கேமரா 3 ( வீட்டின் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டு)
மாலை 2.20
சுகுமாறனின் வெள்ளை மஞ்சள் கோடுகளைக் கொண்ட பந்து மட்டும் படியிலிருந்து உருண்டு கீழே விழுகிறது. அதைத் தூக்கி வீசிய கைகளில் பயங்கரமான கோபமும் அழுத்தமான வெறுப்பும் இருந்திருக்க வேண்டும். அது அப்படியே அந்தப் பொருளின் நகர்வில் பிரதிபலிப்பது போல இருக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு பெரிய தாத்தா சுகுமாறனைத் தரதரவென இழுத்துக் கொண்டு படி ஏறுகிறார். சுகுமாறனின் கால்கள் இரண்டும் படிக்கட்டுகளில் பட்டு உதறப்படுகின்றன. ஒவ்வொரு படிக்கட்டின் இடைவெளியிலும் அவனுடைய கால்கள் டமார் டமார் என இடித்து ஓசை எழுப்புகின்றன.
கேமரா 4 ( வீட்டின் மேல்மாடியிலுள்ள அறைகளுக்குச் செல்லும் வழி))
மாலை 3.05
மூன்று அறைகளின் கதவும் சாத்தப்பட்டுருக்கின்றன. சுகுமாறனின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. யாரோ ஒரு குழந்தையின் அழுக்குரல் சத்தமும் கேட்கிறது. சடாரென அறை கதவு திறக்கப்பட்டு சுகுமாறன் வெளியே வீசப்படுகிறான். அந்தக் குழந்தையின் அழுக்குரல் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எழுந்து திடமாக நடக்க முடியாமல் தரையில் கைகளை வைத்து உடலை நகர்த்த முயற்சி செய்கிறான். தெளிவாகப் பேச முடியாமல் வாயிலிருந்து வாய்நீர் ஒழுகி வழிகின்றது. இரண்டாவது அறையின் கதவைத் திறக்கும்போது குமரன் தரையில் அமர்ந்துகொண்டே சுகுமாறனைப் பார்க்கிறான்.
கேமரா 3 ( வீட்டின் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டு)
மாலை 3.20
தடதடவென உருவாகும் பயங்கரமான சத்தம் படிக்கட்டின் உச்சியிலிருந்து கீழ் நோக்கி வருகிறது. சுகுமாறனின் வாய் படிக்கட்டின் கூர்முனைகளில் பட்டு பற்கள் உடைய வந்து சரிகிறான். தலையை நிமிர்த்தும்போது வாயிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. ஒரு சிறு குழந்தை அடிப்பட்டு அழுவது போல மட்டுமே அவனால் சத்தத்தை எழுப்ப முடிகிறது. தூக்கத்திலிருந்து விழித்துவிட்ட குழந்தை சுதந்திரமாக அசைய முடியாமல் எழுப்பும் நுணுக்கமான முணுமுணுப்பு அளவிற்கே சுகுமாறன் அழுதுகொண்டிருந்தான்.
கேமரா 1( வீட்டின் வாசல்)
மாலை 4.35
வெள்ளை வர்ணத்திலுள்ள ஒரு கார் வீட்டின் வாசலில் வந்து நிற்கிறது. முன்கதவு திறக்கும் சத்தம் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கிறது. பெரிய தாத்தா சுகுமாறனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருகிறார். சுகுமாறனால் நடக்க முடியவில்லை. சிமிண்டு போட்ட ஒரு கால் மட்டும் வலுவிழந்து தரையை உரசிக்கொண்டிருக்கிறது. “எவனோ பெத்துப்போட்ட நாயெ. . . தலைலெ வந்து விடிஞ்சிச்சி பாரு” பெரிய தாத்தா சத்தம் போட்டு கத்தியது கேமராவையும் கடந்து ஒலித்தது.
கேமரா 1( வீட்டின் வாசல்)
மாலை 5.15
அமைதி. வெறும் அமைதி. ஒரு குழந்தையைப் போன்ற முனகலுடன் காற்று வீசிக்கொண்டிருந்தது.
நன்றி: உயிரோசை இணைய இதழ்
இந்தக் கதை உருவானதற்கான தாக்கம்: Paranormal activity 2 சினிமா
இந்தக் கதை உருவானதற்கான தாக்கம்: Paranormal activity 2 சினிமா
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
2 comments:
நல்ல அருமையான பதிவு. நன்றாக எழுதுகிறீர்கள். பாலமுருகனின் எழுத்துகள் மின்னுகின்றன மிளிர்கின்றன. வாழ்த்துகள்.
hi sir... ur story is realy nice... and i really impressd on d way u diffrenciate d sounds and put d time for each camera. so that ppl can u/stand which hapend first and to d flow it comes after. its an xcelent job! keep it up!
*wen i read dis story, d movie 'yavarum nalam' is plays on my mind.
Post a Comment