Saturday, March 19, 2011

பினாங்கு நகரின் மாலையில் – 2


தேவராஜனும் பச்சைபாலனும் அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முன்பக்க இருக்கைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். பறை இதழுக்கு அதற்குள் பணம் வசூலித்துவிட்டு என்னிடம் 10 இதழ்கள் வேண்டும் கேட்ட தேவராஜனின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. பச்சைபாலன் இதழை வாங்கிப் பார்த்துவிட்டு முகப்பில் கவிதைகள் இடத்தில் அவர் பெயரிருப்பதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தொடக்கத்தில் பறை இதழுக்குக் கவிதை அனுப்புவதாகச் சொல்லியிருந்ததால் முகப்பில் அவருடைய பெயரைப் போட்டிருந்தேன். ஆனால் கடைசி நேரம்வரை பச்சைபாலன் ஓய்வில்லாமல் இருந்ததால் கவிதை அனுப்பவில்லை. நானும் முகப்பில் போட்டிருந்த அவருடைய பெயரையும் அப்படியே பிரசுரித்துவிட்டேன். முகப்பில் அவர் பெயர் இருக்கிறது ஆனால் உள்ளே அவர் படைப்பு இல்லையே எனப் பலரும் கேட்டார்கள். அது புதைக்கப்பட்டப் பிரதி எனப் பச்சைபாலனிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன். இதுதான் இதழியல் சார்ந்த பின்நவீனத்துவ முயற்சி எனச் சொன்னபோது பச்சைபாலன் வாய்விட்டுச் சிரித்தார்.

படைப்பாளனின் மீதான நம்பிக்கையின் விளைவுதான் அந்தப் பெயர் விசயத்தில் நடந்த தவறாகும். அழைப்பேசி வாயிலாகக் கேட்டப்போது கவிதை அனுப்பிவிடுகிறேன் எனச் சொன்ன பச்சைபாலனின் மீதான அழுத்தமான நம்பிக்கைத்தான் முன்னமே முகப்பில் அவர் பெயரைப் போடுவதற்கான காரணமாக இருந்தது. பறை இதழை எல்லோரும் ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியபோது மூர்த்தி வந்து சேர்ந்தார். மலேசிய முழுக்கப் பணிக் காரணமாகச் சுற்றி அலைந்துகொண்டிருக்கும் மூர்த்தியின் முகத்தில் நான் சோர்வைப் பார்த்ததே இல்லை என்பதுதான் எப்பொழுதும் ஆச்சர்யமாக இருக்கும். பறை இதழைக் காட்டியதும் அவரிடமிருந்து வந்த முதல் கேள்வி ஏன் இந்தப் பெயர் மாற்றம் எனத்தான். அதற்கான விளக்கங்களைச் சொன்னபோது மூர்த்தி மகிழ்ச்சியுடன் இதழைத் திருப்பிப் பார்த்துக்கொண்டார்.
தேவராஜன் மௌனம் இதழ் நடத்தப்போகும் கவிதை விழா பற்றி விளக்கம் தர ஆரம்பித்தார். பிறகு எல்லோரின் கவனமும் அந்த மௌனம் விழாவின் மீது குவிந்தது. இன்று மலேசியாவில் பதவியில் இருப்பவர்களையும் அதிகாரத்தைச் செயல்படுத்துவர்களையும் கண்டு முதுகு வலைந்து கும்பிடு போட்டு நிகழ்வை அவர்களிடம் ஒப்படைத்துவிடும் போக்கினைப் போன்று எதையும் செய்யாமல், சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைக்காமல் முக்கியமான மூத்த எழுத்தாளர்களை மட்டும் அழைத்து இந்த நிகழ்வை நடத்தும்படி கேட்டுக்கொண்டேன். தேவராஜனும் அதற்கான தயார் மனநிலையில் இருந்தார். மௌனம் மலேசியாவில் கவிதை சார்ந்த புரிதலை உரையாடலை முன்னெடுக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருப்பதால், இந்தச் சந்திப்பும் நிகழ்வும் முக்கியமானதாகக் கருதப்படும் எனக் கூறினேன்.

கவிதை போட்டியில் வெற்றிப்பெற்றவர்களை அழைத்து அவர்களுடன் ஓர் உரையாடலை நடத்தலாம் எனவும் முக்கியமான மூன்று தலைப்புகளில் சிலர் உரையாற்றலாம் எனவும் தெரிவித்தார். பெரும்பாலும் புதுக்கவிதை தொடர்பான வழக்கமான கட்டுரை படைத்தல்தான் இங்கு நடந்திருக்கின்றன. ஆகையால் மௌனத்தின் இந்த நிகழ்வு நடக்குமாயின் கவிதை குறித்தான ஆழமான உரையாடல் களத்தின் தொடக்கமாக அமையும்.

தொடரும்
கே.பாலமுருகன்

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com