Monday, March 7, 2011

நாங்கள் தொலைத்துவிட்ட ஞாயிற்றுக்கிழமைகள்

"வீட்டில் மாணவர்களும் சிறுவர்களும் இல்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் பார்ப்பதற்கு யாருமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது தொலைக்காட்சி கார்ட்டூன்கள்."

உலகமே ஞாயிறுக்கிழமையன்று விடுமுறையில் ஓய்வாக இருக்க, கெடா, திரங்காணு மற்றும் கிளாந்தான் மாநிலம் மட்டும் அரசு துறையில் வேலை செய்பவர்களையும் பள்ளி மாணவர்களையும் காலையிலேயே எழுப்பி  துரத்துகிறது. ஓய்வில்லாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சிந்திக்கத் துவங்கினேன். எத்தனை அபத்தமான ஒரு காரியத்தை உலகத்திற்கு எதிராகச் செய்துகொண்டிருக்கிறேன் எனும் குரல் சட்டென ஒலித்தது.


முன்பெல்லாம் நான் காலையில் எழுந்திருக்கும் முன்பே அப்பா வேலைக்குச் சென்றிருப்பார். அதிகாலை 5.45 போல அவருடைய மோட்டார் வீட்டிலிருந்து புறப்படும்போது எனது அலாரம் என்னை எழுப்பிவிடும். எப்பொழுதும் வேலை இடத்தில் கதியாய் கிடக்கும் அப்பா ஞாயிறு மட்டுமே அவருடைய ஓய்வான ஒரு காலைப்பொழுதில் எனக்கு பிடித்த அத்தனையையும் தனியாகச் செய்துகொண்டிருப்பார். வீட்டில் வளர்ந்த நாய்களை அழைத்துக்கொண்டு வெளியே சென்று வருவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாராளமாக நாற்காலியில் சாய்ந்துகொண்டு பார்ப்பது,கலோய் சபா மீன்களுக்கு உணவிட்ட பிறகு சொடுக்கு போட்டு அவைகளுடன் விளையாடுவது, ஞாயிறு நாளிதழிலுள்ள செய்திகளை மேலோட்டமாக வாசிப்பது என  நான் வீட்டில் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா மட்டுமே வீடு முழுக்க நிரம்பியிருப்பார்.

பள்ளி முடிந்து வீடு வந்து சேரும் நேரம் அப்பா சாப்பிட்டுவிட்டு மதிய உறக்கத்தில் இருப்பார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொண்டு எந்தப் பொருளையாவது கொஞ்சம் சத்தமாகக் கீழே தட்டிவிட்டு அப்பாவை எழுப்பும் என் முயற்சியின் இறுதியில் நானும் உறங்கிப் போயிருப்பேன். மீதி ஞாயிறு சத்தமில்லாமல் கடந்து போய்விட்டிருக்கும். அப்பாவுடன் நான் அதிகமாகக் கொண்டாடிய ஞாயிறு, மாலையில் அவருடன் காப்பி அருந்துவது மட்டுமே. அதற்குள் அவரைப் பார்க்க யாராவது நண்பர்கள் அல்லது சாமி பார்ப்பவர்கள் வந்திருப்பார்கள். சேமிக்கப்பட்டு கணத்துக் கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமையின் மாலை இது போன்ற மனிதர்களின் வருகையால் படாரென வெடித்துவிட்டு சுருங்கிப் போன பலூன் போல என் பக்கத்தில் கிடக்கும்.

பிறகொரு சமயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அப்பா எங்கோ செல்ல ஆரம்பித்திருந்தார். பள்ளி முடிந்து வீடு வரும் களைப்பில் அங்கும் இங்குமாக அப்பாவைத் தேடிவிட்டு, அல்லது அவரது மோட்டார் இல்லாததைத் தூரத்திலேயே பார்த்துவிட்டு சோர்வுடன் அமர்ந்து வீட்டின் மௌனத்தையும் மதியத்தின் சோர்வையும் தரிசித்துக் கொண்டிருப்பேன். வாழ்நாளில் ரொம்ப சிறு வயதிலேயே நான் பல சமயங்களில் மௌனமாக எனக்கு வெளியில் நடக்கும் அனைத்தையும் பார்க்கப் பழகியிருந்தேன். இது போன்ற பழக்கம் எனக்குள் கூர்மையாக ஒன்றைப் பார்க்கும் பயிற்சியை வழங்கியிருந்தது.ஆக அப்பா ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் இல்லாத தனிமையைக் கூர்மையாகப் பார்த்துப் பழகிய அனுபவம் நிறையவே இருக்கிறது.இப்படிக் கிடைக்க வாய்ப்பில்லாத ஞாயிற்றுக்கிழமையின் காலையையும் மதியத்தையும் வீட்டில் சிறுவர்கள் இல்லாத சூன்யத்தோடு தூங்கி மட்டுமே கழிக்கும் எத்தனையோ மனிதர்கள் எங்கள் கெடா மாநிலத்தில் இருக்கிறார்கள்.

கெடா மற்றும் இரு மாநிலங்களில் பிள்ளைகள் தொலைக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமையின் அற்புதங்கள்தான் எத்தனை? எல்லாம் நாளையும்விட ஞாயிற்றுக்கிழமைகளில்தான் தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கின்றன. தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுப்பதைப் பற்றி காலம் காலமாகப் பேசிக்கொண்டிருக்கும் நாம் உலக நடைமுறை பிரக்ஞையோடு ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கச் சொல்லி மாநில அரசிடம் போராடியுள்ளோமா?

இன்றும் உலகத்திலேயே வேலைக்குச் செல்லும் அப்பா அம்மாவுடன் கழிக்க முடியாமல் போகும் ஒரு காலைப்பொழுது குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் மட்டுமே விடிகிறது. என்ன ஒரு கொடுமையான விடியல்? இனி யாராவது கெடா மாநிலத்தின் பள்ளிகளில் வேலை செய்யும் தலைமை ஆசிரியர்களோ அல்லது ஆசிரியர்களோ பெற்றோர்களைப் பார்த்து உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் நேரம் செலவழிப்பதில்லையா எனக் கேட்டால், அவர்களை என்ன செய்யலாம் என யோசித்துப் பாருங்கள்.

ஏன் இந்த மூன்று மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை எனக் கேட்டுவிடாதீர்கள். அந்தக் கேவலத்தை மேலாதிக்க சூட்சமத்தை என் மயிர் துடிக்காமல் சொல்ல முடிவதில்லை.
(உலகிலேயே இங்கு மட்டும் நிகழும் இந்த வன்முறையை நான் எதிர்க்கின்றேன்)


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, கெடா

No comments: