மேடை சடங்குகளில் எங்களுக்கு எப்பொழுதும் உடன்பாடில்லை. அதில் சிக்கிக்கொள்ளும் நம் தமிழ் நிகழ்வுகள் இன்னமும் அலங்காரங்களையே தற்காத்து வைத்திருக்கின்றன. மாற்றுச்சிந்தனையாளர்களுக்கு இம்மாதிரியான மேடை ஒவ்வாத ஒன்றுதான். சமீபத்தில் இத்தனை தமிழ் மக்களைத் தமிழ் சார்ந்து ஒன்றாக இணைத்துச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் எங்களுக்கு இங்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்த வாசுதேவன் அவர்களுக்கும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத்தின் தேவை என்ன? நம் சமூகம் கொண்டிருக்கும் இலக்கியம் என்பதன் அர்த்தம் என்ன? எனும் கேள்வி எப்பொழுதும் எனக்கு எழுவதுண்டு. எதற்காக இலக்கியம் தொடர்ந்து படைக்கப்படுகிறது? காலம் காலமாக இலக்கியத்தின் அவசியத்திற்கு நம் சமூகம் கொண்டிருக்கும் விளக்கம், இலக்கியம் பண்பாட்டு ரீதியில் மனிதனைச் செம்மைப்படுத்துகிறது, அவனுடைய மனதையும் செயலையும் ஒழுக்க ரீதியில் கட்டமைக்கிறது, சிதறுண்டு கிடக்கும் நம் சமூகத்தைச் சீர்ப்படுத்துகிறது என நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் நாம் நினைக்கும் ஒழுக்கம், சீர்த்திருத்தம் என அனைத்திற்கும் எதிரான ஒரு மனிதக் கூட்டம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. பன்பாட்டையும் கலாச்சாரத்தையும் , ஒழுக்கத்தையும் சிதைக்கும் வகையிலான ஒரு சாராரின் வாழ்வு இலக்கியத்தின் தேவையை அவசியத்தைக் கேள்வி எழுப்பும்வகையில் இருக்கிறது.
இப்படியிருந்தும் நம் சமூகம் இலக்கியத்தின் தேவையின் மீது சுமத்தும் விளக்கங்களுக்கு எதிரான இன்னொரு சமூகமும் உருவாகி வருவதற்கு என்ன காரணம்? இலக்கியம் சீர்த்திருத்தம் செய்யும் என நம்பிக் கொண்டிருக்கும் ஒரு தரப்பினரின் நம்பிக்கை பொய்க்கும்வகையில் சமூகம் மேலும் மேலும் தன்னைச் சீர்த்திருத்தத்திற்கு அப்பால் வைக்கிறது. இலக்கியத்தின் அவசியமும் தேவையும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரே மாதிரி இருக்கும் என தீர்க்கமாக நம்புவதிலிருந்து முதலில் நாம் விடுப்பட வேண்டும். இங்கு அமைக்கப்படும் ஒவ்வொரு மேடைகளிலும் நாம் தொடர்ந்து இலக்கிய வரலாற்றைத்தான் பேசிக்கொண்டுருக்கிறோம். இலக்கியத்தின் முந்தைய குறிப்புகளையும் கடந்த காலப் பதிவுகளையும் மட்டுமே மீண்டும் மீண்டும் பேசும் நம் சமூகம் இலக்கியத்தின் மீது கொண்டிருக்கும் பார்வையும் இப்படித்தான் காலாவாதியான நிலையில் இருக்கும். ஆகையால் நம் சமூகம் இலக்கியத்தின் அடுத்தக்கட்ட சவால் என்ன? சமூகத்தின் மாறிவரும் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஆழமாக விவாதிக்கும் ஆற்றலை நம் இலக்கியம் கொண்டிருக்கிறதா என மேலும் தீவிரமாக விவாதிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது நான் எப்படி வலைப்பதிவனானேன் எனப் பார்க்கலாம். வலைப்பதிவில் பதிவிடுவதற்கு முன் கல்லூரி காலத்தில் எழுத்தின் மூலம் கிடைத்த அடையாளத்துடன் பத்திரிக்கையில் எழுதத் துவங்கியிருந்தேன். 3 வருடம் தமிழ் பத்திரிக்கையியுடனான தொடர்பு எனக்குள் பலவிதமான முரண்களை வளர்த்துவிட்டிருந்தன. அந்த முரண்களுக்கு எதிராக என்னை அவர்களின் அரசியலிலிருந்து விடுவித்துக்கொள்ளும் வகையில்தான் அங்கு எழுதுவதை நிறுத்திக்கொண்டு வலைப்பதிவில் 2008 தொடக்கம் எழுதத் துவங்கினேன். தமிழ் பத்திரிக்கைகள் என் மீது சுமத்திய/திணித்த இரண்டு விசயங்கள் முக்கியமானவையாகும். ஒன்று, அனைவருக்கும் புரியும்படி எழுத வேண்டும் எனும் நிபந்தனை. அதெப்படி பல்வேறு நிலையில் வேறுப்பட்டு இருக்கும் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் புரியும்படி எழுதுவது? மொழிப்பரிச்சியம், வாசிப்புப் பயிற்சி, சிந்தனை எனப் பலவகைகளில் வித்தியாசப்பட்டிருக்கும் ஒரு ஒட்டு மொத்த சமூகத்திற்கும் புரியும்படி எழுத ஒரு படைப்பாளனால் சாத்தியப்படுமா? அடுத்ததாக எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தும்படி எழுத வேண்டும் என்கிற நிபந்தனை. அதெப்படி எல்லோரும் ஒரே இசனையுடன் இருப்பார்கள் என இவர்களால் சொல்ல முடிகிறது? அபத்தமாக இல்லையா? இதுவெல்லாமும்தான் என்னை முரண்பட வைத்திருந்தது.
வலைப்பதிவதன் மூலம் தமிழ் பத்திரிக்கைகளும் அச்சி இதழ்களும் உருவாக்கி வைத்திருக்கும் பல்வேறான தடைகளைக் கடக்க முடியும். வலைப்பதிவுகளில் எந்தத் தலைமை பீடத்தின் கட்டுபாடுகளும் இருப்பதில்லை. ஆனால் பத்திரிக்கைகளில் ஏதோ ஒரு தலைமைப்பீடத்தின் ஆதிக்கமும் அதிகாரமும் இருந்துகொண்டே இருக்கும். இது ஒரு படைப்பாளனைக் கட்டுப்படுத்தும் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியது. அடுத்ததாக வலைப்பதிவாளனுக்கு தன் படைப்பின் மீது முழு சுதந்திரமும் இருக்கும். எந்தக் கணத்திலும் தன் படைப்பைப் பிரசுரிக்கும் சுதந்திரம் அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால் பத்திரிக்கையில் யாரோ ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ சார்ந்திருக்கும் நிலைமை இருக்கிறது. தன் படைப்பை அனுப்பிவிட்டு எப்பொழுது பிரசுரமாகும் என ஏங்கித் தவிக்கும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். சில சமயங்களில் பிரசுரம் ஆகாமலும் போன படைப்புகள் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடாமல் பத்திரிக்கை காட்டும் அமைதியும் மிகவும் அலட்சியமானதாகும். இது போன்ற அலட்சியப்போக்கு நிரம்பிய பத்திரிக்கை சூழலில் சிக்கிக் கொண்டு தவிக்கும் மூத்த படைப்பாளிகளின் படைப்புகளை வலைப்பதிவில் சேகரிக்கும் எதிர்க்காலத் திட்டம் எங்களுக்குண்டு. நவீன் சண்முக சிவா சிறுகதைகளைச் சேகரித்து வலைப்பதிவேற்றும் முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கைகள் சில சமயம் படைப்புச் சுரண்டலை செய்து வருவதும் முக்கியமான தடை. அவர்களுக்கு வேண்டியது 2 பக்கம்தான் என்றால் மூன்று பக்கத்துடன் வரும் படைப்பைச் சுருக்கிப் போடவும் தயங்கமாட்டார்கள். ஆனால் வலைப்பதிவில் அப்படியொரு சூழல் இல்லை. அடுத்ததாக பத்திரிக்கை ஆசிரியர்களின் அதிகாரப் போக்கு ஒட்டு மொத்த வாசகர்களின் தரத்தையே நிர்ணயிக்கும் அளவிற்குக் கொடூரமானதாக இருக்கிறது. தனக்கு ஒரு கதை புரியவில்லை என்றால் அது தன் பத்திரிக்கையை வாசிக்கும் ஒரு லட்சம் வாசகர்களுக்கும் புரியாது என்கிற ஒரு முடிவை எடுக்கும் அளவிற்கு வன்முறையான ஆக்கிரமிப்புகள் பத்திரிக்கைகளில் நடந்து வருகின்றன. இதிலெல்லாம் சிக்கிக் கொள்ளாமல் நான் வந்து சேர்ந்த இடம்தான் வலைப்பதிவு. இது எனக்கான அனைத்து வசதிகளையும் சவால்களையும் பெரிய வாசகப் பரப்பையும் கொடுக்கும்வகையில் இருந்தது. ஒவ்வொருநாளும் வெளிநாடுகளிலிருந்து பல வாசகர்கள் என் வலைப்பதிவையும் படைப்புகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். நம் மலேசியப் படைப்புகளை வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் கொண்டு செல்ல வலைப்பதிவுகளும் இணைய இதழ்களும் பெரிதும் பங்காற்றுகின்றன.
வலைப்பதிவுகளில் அதிகமான கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக பின்நவீனத்துவக் கலந்துரையாடலைச் சொல்லலாம். மலேசியாவில் இந்தப் பின்நவீனத்துவ உரையாடலை முன்னெடுக்கும் வகையிலான முயற்சிகளைச் செய்துள்ளேன். இருந்தும் அது பயனளிக்கவில்லை. முதலில் ஒரு பின்நவீனத்துவ பிரதி இங்கு உருவாக்கப்படுவதற்கு முன்பு கோட்பாடுகள் குறித்தான உரையாடல்கள் இங்கு நடைப்பெற்றிருக்க வேண்டும். இவையாவும் நடக்காமல் எப்படி அது போன்ற பிரதிகளைப் புரிந்துகொள்ளும் வாசக சூழல் உருவாகியிருக்க முடியும்? ஆகையால் அடிப்படையில் விவாதிப்பதிலும் கலந்துரையாடுவதிலும் நம்மிடையே சுணங்கிப் போயிருக்கும் பழக்கத்தை வலைப்பதிவுகள் தீவிரப்படுத்துகின்றன. யாருடைய மேலாதிக்க கவனிப்பும் குறுக்கிடலும் இல்லாமல் நம்முடைய சித்தாந்தங்களையும் புரிதல்களையும் முன்வைத்து கலந்துரையாடும் சூழல் வலைப்பதிவில் இருக்கிறது.
மலேசியாவில் தீவிரமாக இயங்கி வரும் வலைப்பதிவுகள் சொற்பம்தான். அதில் திருத்தமிழ், ம.நவீன் பக்கம், வாழ்க்கை பயணம், கே.பாலமுருகன், அகிலன் எனும் சில வலைப்பதிவுகளைக் குறிப்பிடலாம். தொடர்ந்து வலைப்பதிவுகள் கொடுக்கும் சுதந்திரத்தை அக்கறையுடன் பாவித்து அதனை படைப்பிலக்கியத்தை முன்னெடுக்கும் சிந்தனைகளை முன்னெடுக்கும் விதமாக அனைவரும் பாவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கல்லூரி மாணவர்கள் வலைப்பதிவு தொடர்பான விளக்கங்களுக்கு எங்களை நாடலாம். எல்லாமும் போய்விட்ட பிறகு இறுதி நம்பிக்கையாக இருப்பது எழுத்து மட்டுமே. நன்றி.
கே.பாலமுருகன்
3 comments:
எனக்கு வலைப்பதிவில் வலம் வர ஆசையாக உள்ளது. தயவு செய்து எனக்கு உதவ முடியுமா சார்?
சிக்கி சீர்யளியும் நம் சமுதாயத்தை எப்படி காப்பாற்றுவது பாலா? சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடப்பாடு நாம் அனைவருக்கும் உண்டு. 40% சதவிகித மக்கள் எதை பற்றியும் கவலை படாதவர்கள். இவர்களுக்கு என்ன செய்வது?
nermai@ உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. என்னைத் தொடர்புக் கொள்ளவும். கட்டாயம் உதவி செய்கிறேன். எனக்கு மின்னஞ்சல் செய்யவும். bkbala82@gmail.com
Post a Comment