“கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் - ஆனால்
மனிதர்கள் உருவாக்கிய நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை”
- வில்லியம் ஜேம்ஸ்
மனிதர்கள் உருவாக்கிய நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை”
- வில்லியம் ஜேம்ஸ்
ஒரு ஒதுக்குப்புறமான உணவகம். அரை இருள் எங்கும் பரவியிருக்கிறது. எந்தப் போலியான ஒப்பனையும் இல்லாத உண்மையான இரு மனிதர்கள். மது அருந்தி கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து காட்சிகள் இன்னொரு வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு போகின்றன. இன்னும் சொல்லப்போனால் இது உரையாடல் வழியே வாழ்வை அறிமுகப்படுத்தும் குறும்படம் வசனங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து நகர்த்தப்பட்டுள்ளது.
1) தனியனின் உரையாடல்
எது குற்றம் என்பதைப் புரிந்துகொள்வதைவிட யார் அதைச் செய்தார்கள் என அடையாளம் காட்டுவதிலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் பழக்கமாகிவிட்ட சமூகத்தின் நியதிகளுக்கு முன், வைக்கப்படும் ஓர் உரையாடல்தான் சஞ்சய் பெருமாளின் இந்த “ஜகாட்”
கலைப்படைப்பின் உச்சம். உண்மை மிகவும் அந்தரங்கமானது. உண்மையின் எந்தத் தரிசனத்தையும் கண்டடைய முடியாதவர்கள் தனது தோல்வியை நம்பிக்கைகளாகவும் தத்துவங்களாகவும் மாற்றி வாழ்நாள் முழுக்க மனக்குழப்பத்திலேயே இருக்கிறார்கள் (Sub Acute Brain Syndrome). அவர்களின் ஆழ்மனதின் அரைபிரக்ஞை தன்னால் தீர்க்கமாக உணர முடியாத உண்மையை நோக்கி பிதற்றிக்கொண்டே இருக்கும். தன் கடந்தகால வாழ்வின் எல்லாம் செயல்களையும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். தனது வாழ்வின் அனைத்து பகுதியையும் தன்னால் கண்டறிய முடியாத உண்மையுடன் சேர்ப்பதற்கு நடத்தும் போராட்டம் கடைசியில் நியதி எனும் தீர்க்கமான சொல்லில் முடிவடைந்துவிடுகிறது. 1) தனியனின் உரையாடல்
எது குற்றம் என்பதைப் புரிந்துகொள்வதைவிட யார் அதைச் செய்தார்கள் என அடையாளம் காட்டுவதிலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் பழக்கமாகிவிட்ட சமூகத்தின் நியதிகளுக்கு முன், வைக்கப்படும் ஓர் உரையாடல்தான் சஞ்சய் பெருமாளின் இந்த “ஜகாட்”
இதன் மூலம் அவர்கள் புதியதாக சில தீர்ப்புகளையும் வாழ்வின் நியாயங்களையும் உருவாக்கி தருகிறார்கள். “நான் பாவிதான் எனச் சொல்லிக்கொள்வதில் கொஞ்சம்கூட வெட்கப்படக்கூடாது” எனும் இடத்தில் அவர் தன்னைப் பாவி எனவும் தன்னுடைய அனைத்துச் செயல்களும் பாவங்கள் எனவும் இவை யாவையும் செய்வதில் செய்துவிட்டதில் தனக்கு எந்தக் குற்றமும் தெரியவில்லை எனவும் வாதிட்டு தன்னுடைய செயல்களை சமூகத்தின் ஓர் அங்கமாக மாற்றுகிறார். இதுநாள்வரை சமூகம் நிறுவி நடைமுறையில் இருக்கும் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை அப்படியே இன்னொரு முரணுக்குள் வைத்து வேறுவிதமாகப் புனைகிறார். “இன்று நீ உண்மையாக நினைத்துக்கொண்டிருப்பது நாளை பொய்யாகலாம், இன்று நீ பொய்யென நினைத்துக்கொண்டிருப்பது நாளையே உண்மையாகிவிடக்கூடும். ஒரு நொடியில் நீ வாழ்ந்த வாழ்க்கையே பொய்யாகிவிடும்” என்பதன் மூலம் சமூகத்திற்கு முன்பான ஒருவனுடைய இருப்பையே கலைத்துப் போடுகிறார். இந்த வசனம் மிகவும் பயங்கரமானதும் நிதர்சனமானதும்கூட. எது நிரந்தர உண்மை எது நிரந்தர பொய் என்பதை ஆராயாமல் தனக்கு பிடித்தமான வாழ்வை வாழ்வதன் மூலமே ஒருவனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்கிற ஒரு கட்டமைப்பை தருகிறார்.
“ஒருவனைக் கெட்டவன் என அடையாளம் காட்டிவிட்டுத்தான் இன்று பலர் தங்களை நல்லவர்கள் எனச் சொல்லித் திரிகிறார்கள். அவர்கள் வெள்ளையாகத் தெரிவதற்கு நம்மைப் போன்ற கருப்பர்கள் தேவை” என்கிற உரையாடலின் வழி சமூகம் விதித்து வைத்திருக்கும் நல்லவர்களுக்கான புனிதங்களின் பின்னணியில் அழுத்தமாகப் புகுத்தப்பட்டிருக்கும் அடையாள அரசியலைத் தகர்த்துவிட்டு, மாற்று புனிதத்தை மீட்டெடுக்கிறார். கெட்டவர்களின் வலுவான இருப்பும் செயலும் பிறர் தங்களை ஒழுக்கவாதிகளாகக் காட்டிக்கொள்வதற்கு அவசியமாகத் தேவைப்படும் அபத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இது சமூகத்தின் செயல்பாடுகளை கருப்பு வெள்ளை என்கிற இரு வேறுபாட்டில் வைத்துப் பார்க்கும் மனநிலையைச் சார்ந்தது. கருப்பின் அனைத்து செயலையும் தண்டிக்க முற்படுபவர்கள் அவர்களுக்குத் தண்டனையை வழங்கிவிட்டு அவர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பவைகளை புனிதம் ஒழுக்கம் எனத் தீர்மானிக்கும் மிகவும் பலவீனமான ஒன்றை தனது உரையாடலின் வழி மறுத்துவிட்டுப் போகிறார்.
'ஜகாட்' படைப்பில் வரும் அந்த வயதானவர் தொடர்ந்து தனக்கு முன் இருப்பவனுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறார். உண்மையில் அவர் நடத்தும் அந்த உரையாடல், மனக்குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் தனக்கும் தன்னைப் புரிந்துகொள்ளாமல் எதை எதையோ தேடி அலைந்த தனது கடந்தகாலத்திற்கும் இடையில் நடைப்பெறும் உரையாடலாகவே பார்க்க முடிகிறது. இந்த மனிதன் வாழ்வெனும் வெளியில் நிகழ்ந்து முடிந்துவிட்ட தன்னை மீண்டும் மறுபரிசீலனை செய்து பார்க்கிறான். “இந்த உலகத்தில் யார்தான் பாவம் செய்யவில்லை? எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் பாவம் செய்துகொண்டுத்தான் இருக்கிறார்கள்” என்கிற வரியில் அவனது எல்லா செயல்களுக்கும் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றான். பாவம் என ஒன்று மிக வலுவாக எல்லா மனிதர்களுக்குள்ளும் இருப்பதாக நிறுவுகிறான். இது அவனுக்குள்ளிருந்து இந்த உலகின் மீது வைக்கும் மதிப்பீடு. ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் தன் செயல் சார்ந்து எந்த ஆழமான புரிதலும் இல்லாமல் உடனடியாகத் தப்பித்துக்கொள்கிறார்கள். அந்தத் தப்பித்தலின் வடிவம்தான் இது போன்ற மதிப்பீடுகள் என நினைக்கிறேன்.
“ஆக மொத்தத்தில் எல்லோரும் பாவிகள்தான்” உரையாடலின் அடுத்தக்கட்டமாக இந்த வசனம் ஒலிக்கிறது. இது முழுக்க ஒரு சுயநலத்தை நியாயப்படுத்தும் தொனி. தான் வாழ்ந்து முடித்துவிட்ட வாழ்க்கை தனக்களித்த மனநிலையையொட்டி உருவாகும் உரையாடல் இது. தனது முந்தைய செயல்களை மதிப்பீட தொடங்கும் ஒருவர் முதலில் தீவிரமான உணர்ச்சியை அடைந்து பிறகு பதற்றம் கொள்கிறார். இந்தப் பதற்றம் தன்னுடைய கடந்தகால வாழ்வின் மீது சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும். அப்படியொரு பதற்றத்தின் உச்சமாகத்தான் அந்த வயதானவர் தன்னால் இயன்ற தத்துவங்களை உருவாக்கிக் கொண்டே போகிறார். 1980களில் ஒரு பெரிய கடத்தல் கும்பலின் தலைவராகவும் சண்டியர்த்தனம் செய்துகொண்டும் வாழ்ந்தவர்தான் அவர். மலேசியா இந்தோனேசியா கடல் எல்லைகளில் ஆயுதம் கடத்தும் தொழிலையும் செய்து பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். இப்படியொரு சட்டத்திற்கு எதிரான கும்பலாக வளர்ந்து நிற்பதால், எல்லா சூழ்நிலையும் தனக்கு முரணாகத்தான் இயங்குகிறது என்கிற பதற்றம் உருவாகிவிடுகிறது. இதுவே எல்லாரின் மீதும் சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடும். அந்தச் சந்தேகம் அவரை கொலைக்காரனாக மாற்றிவிடுகிறது. தன் மனநிலை சார்ந்தே அவர் தனக்கான உலகை உற்பத்தி செய்துகொள்கிறான். இப்பொழுது வயதாகிவிட்டவர் அந்த உலகத்திலிருந்தே பேசிக்கொண்டிருக்கிறார். ஆகையால் இது முற்றிலும் ஒரு தனியனின் உரையாடல்.
2) தொழில் சார்ந்த மனநிலை
இந்தக் கலை படைப்பில் வரும் அந்த முதியவரின் பேச்சும் செய்கையும் அவரது முந்தைய தொழிலைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது. இதை ஆங்கிலத்தில் Occupational Delirium என்பார்கள். தொழில் சார்நது உருவாகிவிட்ட அதீதமான மனநிலை எண்ணங்களை அதனைச் சார்ந்தே தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். அந்தத் தொழிலுக்குட்பட்ட அறங்களைக் கட்டமைப்பவனாக இருப்பான். எடுத்துக்காட்டாக உடல்வழியில் பழக்கமாகிவிட்ட சில தொழில் தொடர்பான செய்கைகள் உடலோடு எப்பொழுமே ஒட்டிக்கொண்டிருக்கும். காலம் முழுக்க அதனை உதறவே முடியாது. வெகுகாலம் பேருந்து ஓட்டுனராக இருந்தவர் வயதாகி வேலையை நிறுத்திவிட்டப்பிறகும் இரவில் அவர் படுத்துறங்கும்போது கால்கள் பிரேக் கட்டையை அழுத்துவது போல் எப்பொழுதாவது செய்து கொள்ள நேரிடும். உறக்கத்தில் வெளிச்சங்களைக் கடந்துபோவது போலவே திடீரென வந்து போகும் காட்சிகள் என ஒரு பேருந்து ஓட்டுனரின் பிந்தையகால அனுபவங்கள் இவை.
தனது வாழ்நாளில் முக்கியமான பகுதிகளை ஒன்றை மட்டும் செய்வதற்குச் செலவழித்த அத்தனை மனிதர்களுக்கும் அதன் மீது பயங்கரமான சலிப்பும் வெறுமையும் இருக்கவே செய்யும். அந்த வெறுப்பையும் தினசரியின் சலிப்பையும் அவர்கள் எதை எதையோ வைத்து சரிப்படுத்துக்கொண்டே இருப்பதும் மிகவும் மோசமான பாவனையாகும். குறிப்பாக தொழிற்சாலையில் ஒரே வேலையைக் காலம் முழுக்க செய்தவர்களின் மனநிலையை யோசித்துப் பாருங்கள்? காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிவரை நீடித்து ஓயும்போது அன்று ஒன்றை மட்டுமே தொடர்ந்து செய்துவிட்ட தேக்கமான மனநிலையும் சலிப்பும் மறுத்துப்போன அவர்களின் உடலிலும் மனதிலும் தீராமல் அப்பிக்கொண்டிருக்கும். வீடு திரும்பும் அவர்களின் முகத்திலுள்ள வெறுமை கொடூரமானது. நாம்தான் அவற்றை கவனிப்பதில்லை. அல்லது கவனிக்கும் அளவிற்கு நுண்ணர்வு இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு கடத்தல்-குண்டர் கும்பல் தொழிலில் வைத்து அழுத்தப்பட்டவர்தான் அந்த முதியவர். 1980களில் தனி அடையாளமாக இருந்து இப்பொழுது ஓய்ந்துபோன நிலையில் கால்கள் இரண்டும் செயலிழந்து சக்கர நாற்காலியில் கிடக்கிறார். ஆனால் அவர் மனம் தன் கடந்தகால வாழ்வின் உக்கிரமான பகுதியாகக் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த 'ஜகாட்' குறும்படத்தில் நடத்தப்படும் உரையாடல்கள் யாவும் பெரும் தத்துவ வெளியை நோக்கி பயணிப்பது போல தெரிந்தாலும் அவை யாவும் ஒரு தொழில் சார்ந்த அந்தக் கிழவர் அடைந்த மனநிலையின் நோய்க்குறி வெளிப்பாடுகள்தான். அது உலகப் பொதுவிற்கு ஏற்புடைய தத்துவமாகப் பிரச்சாரிக்கப்படுவது போல தெரிந்தாலும் மிகவும் தனிமையான அனுபவத்தை சார்ந்ததாக ஒலிக்கிறது. உலகின் பெரும்பாலான உரையாடல்களிலும் தத்துவ சாரங்கள் இருந்தாலும் அதனுள் மிகவும் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டிருப்பது ஒரு தனிமனிதனின் தனிமையின் சேகரிப்பாகத்தான் இருக்கும். நா.முத்துகுமாரின் ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது, “தீயோடு போகும்வரையில் தீராது இந்தத் தனிமை”. அந்தத் தீராத தனிமைக்குள்ளிருந்துதான் அவன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிறான். “வெளிச்சத்திற்குப் பின்னாடி இருக்கும் இருளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”
இந்த உலகம் நம்மை ஒன்றும் செய்துவிடக்கூடாது என்பதற்கான ஒரு தப்பித்தலைச் சாத்தியப்படுத்துவதே தன்னுணர்வின் சக்திதான். தன்னை முழுமையாக உணர்வதன் மூலம் ஒரு மனிதன் தன்னைச் சார்ந்த அனைத்தையும் நியாயப்படுத்தும் நிலைக்கு வந்துவிடுகிறான். தன்னை எல்லாம் வகையிலும் நியாயப்படுத்துவதன் மூலம் உலகம் விதித்து வைத்திருக்கும் நியதிகளிலிருந்து தப்பித்து புதியதாக ஒன்றை நிறுவுகிறான்.
“இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வு அமையும் – ஓஷோ”. ஜகாட் உரையாடலில் இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் இருளில் சூரியன் தற்காலிகமான இருளை மட்டுமே கொடுக்கிறது என்கிற வசனம் வரும். பிரபஞ்சம் இருளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு வெளிச்சமாக சூரியனின் பங்கு பிரபஞ்சத்தை முழுமைப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் பூமி சூரியனிடமிருந்து வெளிச்சத்தைப் பிடுங்கிக்கொண்டு இயங்குகிறது. மனிதன் கொள்ளும் நிரந்திரமான தனிமைக்கு முன் அவனைச் சார்ந்து தற்காலிகமாக வந்து முளைக்கின்றன பல்வேறான உறவுகள். ஒவ்வொரு உறவின் மூலமும் அவன் கொள்ளும் அன்பும் பகிர்வும் அவனுக்கான தனிமையை மறைத்து வைக்கின்ற முயற்சியை மட்டுமே செய்கிறது. ஆனால் மீண்டும் ஒரு காலக்கட்டத்தில் அந்தத் தனிமை நிரந்திரமான இருளைப் போல வந்து கவ்விக்கொள்கிறது. எல்லா வசனங்களுக்கும் பின்னாளும் ஏதோ ஒரு தத்துவத்தின் தாக்கத்தைச் சொல்லிக் கொண்டே போயிருக்கிரார் இயக்குநர்.
3) இயக்குநரின் சிந்தனை
சஞ்சய் பெருமாளின் சிந்தனையும் இயக்கமும் எனக்கு யஸ்மின் அமாட்டின் ஆளுமையை ஞாபகப்படுத்துகிறது. சில காட்சி அமைப்புகளில் அபாரமான ஆற்றல் வெளிப்பட்டுள்ளது. மலேசிய குறும்படத்துறையில் நல்ல ஆழமான அடையாளத்தை ஏற்படுத்தும் வல்லமை இவரிடம் இருக்கிறது. குறிப்பாக 1980களின் குண்டர் கும்பலிலும் கடத்தல் தொழிலிலும் ஈடுப்பட்ட மனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளைப் பதிவு செய்திருப்பது. உடல்மொழி, உடைகள் என எல்லாமும் அந்தக் காலக்கட்டத்தின் சாயலை ஒத்திருந்தது. இம்மாதிரியான முயற்சிகள் அதுவும் குறும்படத்தில் நிகழ்த்தி காட்டுவதென்பது வித்தியாசமான கலை முயற்சியாகும்.
என்னைக் கவர்ந்த இந்தக் கலைப்படைப்பிலுள்ள சில வசனங்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன். இவை யாவும் நம்மை வேறொரு சிந்தனை தளத்திற்கு அழைத்துச் செல்லும் தன்மையுடையது. நமக்குள் உருவாகியிருக்கும் ஒழுக்கம் சார்ந்த அத்தனை புரிதல்களையும் அசைத்துப் பார்க்கும் வசனங்கள். இயக்குநர் தத்துவம் சார்ந்த வாசிப்பை முன்னெடுக்கக்கூடியவர் என்பதை நன்கு உணர முடிகிறது.
1. தன்னை அறிய தனக்கொரு கேடில்லை, தன்னை அறியாமலே கெடுவான், தன்னை முழுமையாக அறிந்தவனை ஏமாற்ற சிரமம், அறியாதவனை ஏமாற்றத்தான் வேண்டும். அதான் நியதி”
2. “குழப்பம்தான் ஞானத்திற்கான முதல் படி”
3. “உன்னை மட்டும் நம்பு, உன் மனசுக்கு எது சரியென படுகிறதோ அதை மட்டும் செய்”
4. உனக்கு என்ன வேண்டுமோ அது கட்டாயம் கிடைக்கும் ஆனால் முதலில் உனக்கு என்ன வேண்டும் என்பது உனக்கு தெரிய வேண்டும். பாவத்திலேயே பெரிய பாவம், தன்னைத் தானே அறியாததுதான்”
முரண்: உரையாடலின் தொடக்கத்தில் பாவத்தில் ஏது பெரிய பாவம் சிறிய பாவம் எனக் கூறும் அவரே இன்னொரு இடத்தில் பாவத்தில் பெரிய பாவம் தன்னை அறியாததுதான் என பாவத்தின் அளவை நிறுவுகிறார். ஆகையால்தான் உரையாடல் என்பது தத்துவத்தை நோக்கி பாய்வதாகத் தெரிந்தாலும் இது மனக்குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு தனியனின் பிதற்றல் என்றே சொல்ல முடிகிறது. இறுதியில் தன் மரணத்தைத் தான் பார்க்க வேண்டும் எனச் சொல்லும் இடத்தில் அவருக்கு தன் வாழ்வின் மீது அதீதமான மன எழுச்சி ஏற்படுகிறது. இது சில சமயங்களில் அசாத்தியமான துணிவை உருவாக்கும். மனக்குழப்பங்களின் வழியே தொடர்ந்து தப்பிக்க முயன்ற உரையாடலின் உச்சத்தில் அவர் தனக்கு தண்டனை அழித்துக்கொள்ளும் மனநிலைக்கு வந்து நிற்கிறார். சுய ஒழிப்பை முன்வைப்பதன் மூலம் தன்னுடைய வாழ்வை நியாயப்படுத்திக்கொள்ளும் ஒரு பாவனை இதில் தெரிந்தாலும், அந்த உரையாடல் கொள்ளும் இந்த உச்சம் விசித்திரமானது.
பாவப்புண்ணியக் கோட்பாடுகள் சமூகத்திற்கு சமூகம் மதத்திற்கு மதம், சூழ்நிலைக்கு ஏற்ப, காலத்திற்குக் காலம் தேவைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். அது போல ஒழுக்க நியதிகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகம் ஒழுங்கு என நிர்ணயிப்பதை இன்னொரு சமூகம் சமக்காலத்திலேயே மீறிக்கொண்டிருக்கிறது. இதுவே ஒரு தனிமனிதனுக்குள்ளும் நடந்துகொண்டிருக்கிறது.
நன்றி: வல்லினம் இணைய இதழ் (பிப்ரவரி 2011)
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
No comments:
Post a Comment