Saturday, May 28, 2011

தாய்லாந்து சினிமா: Haunted Room "அறையின் தனிமைக்குள் படிந்திருக்கும் மௌனம்"

"ஜப்பானிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநோதமான
ஒரு பழக்கம் தொடங்கியிருந்த காலக்கட்டம்.
ஒரு தனிமையான அறைக்குள் தன்னைச் சுயமாக அடைத்துக்கொண்டு
வீட்டிலுள்ள மனிதர்களைச் சந்திக்காமல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல்
9 வருடத்திற்கு மேலாக சுயவதைக்கு ஆளாகியிருந்தார்கள்.
இவர்களை ஜப்பானிய அரசு Hikikoman என அடையாளப்படுத்தியது."

நாம் அடிக்கடி வீட்டிற்கு வெளியேயும் அல்லது வீட்டிற்குள்ளேயும் பரவலாகக் காணமுடியாத குழந்தைகள் இருக்கவே செய்கிறார்கள். உறவுக்காரர்கள் நண்பர்கள் வீடு தேடி வரும்போது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு நம் பார்வையிலிருந்து நீங்கிவிடும் குழந்தைகளைப் பார்த்ததுண்டா? அவர்கள் எப்பொழுதும் சமூகத்திடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தனித்திருக்கவே விரும்புகிறார்கள்.

Tuesday, May 17, 2011

வானம்-திரைவிமர்சனம் - பின்காலனிய சமூகமும் நடுத்தர வர்க்க மாயையும்

கிரிஸ் இயக்கத்தில் தெலுங்கில் அதிகமான வரவேற்பைப் பெற்ற படத்தைத் தமிழில் “வானம்” என்கிற தலைப்பில் மறு ஆக்கம் செய்து கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இன்றைய சூழலில் தமிழில் வரக்கூடிய எத்தகைய சினிமாவாக இருந்தாலும் கதாநாயகன் கொண்டாட்டமும் கதாநாயகன் மையமும் படத்தில் இருக்கக்கூடிய கதையின் மீதான அத்தனை சாத்தியங்களையும் தகர்க்கக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன. ஆனால் வானம் படத்தில் கதாநாயகத்துவம் கதைக்கு முன்பு தோல்வி அடைந்திருக்கிறது. இதுவே படத்தின் மீதான துல்லியமான கவனம். தமிழ் சினிமாவின் பெரும் சாபமே எந்த வகையான கதையாக இருந்தாலும் அது கதாநாயக பிம்பத்திடம் சரணடைந்து சுருங்கிப் போவதுதான். இயக்குனரின் பங்களிப்பையும் ஒரு படத்தின் மையத்தையும் அப்படியே விழுங்கி ஆக்கிரமிக்கக்கூடிய கொடுய நோய் கதாநாயகத்துவம்.

எம்.ஜி.ஆரில் தொடங்கும் கதாநாகயத்துவத்தின் வீரியமான அரசியல் இன்றைய விஷால் வரை பெரும் பிம்பமாக வளர்ந்திருக்கிறது. இதனை மீறும் நுட்பமான கதை அமைப்பு வானம் திரைப்படத்தில் உருவாக்கப்ப்ட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற கதை தொழிட்நுட்பத்தில் தீவிரமான கவனத்தைச் செலுத்திய உலக சினிமாக்களைப் பார்த்து நுகர்ந்த அனுபவம் இருப்பதால் வானம் படத்தின் கதைச் சொல்லல்முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தமிழுக்கு இது புதிய முயற்சி.

கதை அமைப்பு

ஐந்து வகையான கதை, படம் முழுக்க வெவ்வேறான திசையில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் எந்த வகையிலுமே தொடர்பற்று தனித்தனி இலையில் ஓடிக்கொண்டிருப்பதுதான் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஐந்து முக்கியமான கதையோட்டம் படத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வைத்து சொல்லப்பட்டதே கிடையாது.

Saturday, May 14, 2011

செம்பருத்தி இரு மாத இதழ்-மாற்றம்

மலேசிய அரசியலின் விரிவான அலசலையும் பல நல்ல கட்டுரைகளையும் பிரசுரித்துக்கொண்டிருந்த செம்பருத்தி இதழ் பெரிதும் மாற்றம் கண்டு இப்பொழுது பல வண்ணப் பக்கங்களுடம் விற்பனையில் இருக்கின்றது.

மலேசியாவின் மிக முக்கியமான சிறுகதையாளரும் இளைஞருமான சு.யுவராஜன் செம்பருத்தி இதழின் ஆசிரியராகப் புதியதாகச் சேர்ந்துள்ளார். மேலும், பசுபதி, மா.சண்முகசிவா, ம.நவீன், கே.பாலமுருகன்(நான்) இன்னும் சில இளையோர் கூட்டம் செம்பருத்தியின் ஆலோசகர்களாக அவர்களுடன் கைக்கோர்த்துள்ளோம்.

Monday, May 9, 2011

சிவா பெரியண்ணனின் வாடகை வீடு- தூக்கில் தொங்கிய அறை

கடந்த வாரம் பெத்தாலிங் ஜெயாவிலுள்ள சிவா பெரியண்ணனின் வாடகை வீட்டுக்குப் போயிருந்தேன். சிவாவின் மேல்மாடி அறைக்குள் நுழையும்போதே சட்டென அதன் இருளும் சோர்வும் சிங்கப்பூர் பாலாஜி சொன்ன ஆத்மாநாம் தற்கொலை சட்டென ஞாபகத்திற்கு வந்தது. பாலாஜியின் வீட்டிற்கு மேல்மாடியில்தான் கவிஞர் ஆத்மாநாம் வசித்திருக்கிறார். யாருடனும் பேசாமல் எப்பொழுதும் மௌனமாக வந்து இருக்குமிடம் தெரியாமல் அவ்வப்போது கரையும் நிசப்தமான வெளி ஆத்மாநாமுடையது என அவர் சொன்னார். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்ட பிறகு பாலாஜி அவர் தூக்குப் போட்டுக்கொண்ட அறையில் படுத்திருந்ததாகவும் கூறினார்.

Thursday, May 5, 2011

ஒரு தலைமுறையின் சாபம்

பல நெடுங்காலம்
மிகவும் கவனத்துடன்
கூர்மை மங்கிய பொழுதுகளில்
தனக்கு முன் வந்துபோன
அத்துனைப் பருவங்களையும் வெறித்துக்கொண்டிருந்தார்
முனிமா பாசார் முனியாண்டி.

கவுச்சி வாடையும்
சொருகப்பட்டிருக்கும் கோடாரி சுருட்டுகளும்
தவறுதலாக விட்டுப்போயிருந்த
நாலு நம்பர் தாட்களும்
மம்டி சாராயமும் என
ஒவ்வொரு தலைமுறையும்
சாபத்தில் நீள்கின்றன
முனியாண்டிக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு
இந்தத் தேசம் ஒரு விடுதலைக்குத் தயாராகியிருந்தது.
ஈட்டியையும் கோடாரியையும் கொண்டு வந்தவர்கள்
மெல்ல மெல்ல தகர்த்தனர்.
இருந்த இடம் தெரியாமல்
மறுநாள் காலையில்
முனிமா பாசார் முனியாண்டி
காணாமல் போயிருந்தார்.

சுருட்டு வாசம்
குதிரை காலடி சப்தம்
சாட்டையடி
சாராய வாடை என
அங்கிருந்தவர்களுக்கு
மீதமாக இருந்தது
வெறும் பிரமை.

கே.பாலமுருகன்