Friday, July 15, 2011

சினிமா விமர்சனம்: 127 hours : பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்த பாறை


நேற்று Donny Boyle இயக்கி .ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த '127 hours' படத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. இதற்கு முன்பாக 'buried' படம் பார்த்து இலேசான மன உளைச்சலுக்கு ஆளான மனம் நேற்று மீண்டும் அதை உணர்ந்தது. இப்படத்தின் கதை நகர்ச்சியின் மூலம்  மெல்ல மெல்ல மனநெருக்கடிக்கு ஆளாகிய நான் படத்தின் கடைசி 15 நிமிடக் காட்சிகளில் இறுகி உறைந்து போனேன். இயற்கை மனிதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவன் ஆளுமையை வேரறுக்கும் ஒரு கொலை முயற்சிதான் இப்படம்.

படத்தில் அதிகமான கதைமாந்தர்கள் கிடையாது. படத்தின் மையமாக ஒரு மாபெரும் மலைப்பிரதேசமும்  அதனூடாக அலையும் வெயிலும் மலை இடுக்குகளில் குவிந்து கிடக்கும் இருளும் எனப் பரவியிருக்கின்றன. உத்தா தேசிய பூங்காவிலிருந்து 45 நிமிடங்கள் பயணித்து ஓங்கி உயர்ந்திருக்கும் மலையின் மேற்பரப்பில் தாவிக் குதித்து ஏறும் அரோன் ஒரு மலை ஏறும் திறனுடையவர். ஆரம்பக்காலத்தில் அப்பாவுடன் மலைப்பயணங்கள் செய்து மலைகளுடன் ஈர்ப்புக்கொண்டவராகவும் மலை ஏறுவதில் அனுபவமுடையவராகவும் இருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு மலை ஏறுவதற்காகப் போகும் அரோன் என்பவர் இரண்டு நீண்ட மலைக்கு நடுவில் விழுந்துவிடுகிறார். கால் இடறி மலைக்கு இடையில் சரியும்போது நடுவில் சிக்கிக் கொண்டிருந்த பாறை ஒன்றும் அவர் மீது விழுகிறது. அவருடைய வலது கை பாறைக்கும் மலையின் சுவருக்கும் மத்தியில் சிக்கிக்கொள்கிறது. கதை இங்கிருந்துதான் துவங்குகிறது. எந்தப் பரப்பரப்புமின்றி முன்னேற்பாடுகளுமின்றி சட்டென நிகழும் விபத்து தன்னை அழுத்தமான மௌனத்தில் சுதாரித்துக்கொள்ளும் இடத்தில் படத்தின் பயங்கரத்துடன் நாமும் இணைத்துக்கொள்ளப்படுகிறோம்.

பாறை தன் கை மீது விழுந்ததும் உடலைச் சிறிது நேரத்திற்கு அசைக்காமல் பாறையையும் தான் விழுந்திருப்பதையும் அரோன் உணரும் துவக்கமே மிரட்டல். அடுத்து மாட்டிக்கொண்டிருக்கும் தன் கையை இழுக்க முயல்கிறார். எவ்வளவு முயன்றும் பாறையை அசைக்க முடியாத தோல்வியை ஒப்புக்கொள்ளும் அரோன் அடுத்தடுத்து அதனைத் தகர்ப்பதற்காக நின்ற இடத்திலேயே செய்யும் முயற்சிகள்தான் மீதி கதை. முதலில் தான் கொண்டு வந்திருந்த கயிறின் மூலம் பாறையின் சுற்றளவில் அதனைக் கட்டி மேலே இழுக்க முயற்சிக்கிறார். பாறை ஒரு பெரிய மலை போல அசைந்துகொடுக்காமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தன்னுடைய சிறிய கத்தியால் பாறையின் ஒரு ஓரத்தைச் சரிக்க முயல்கிறார். மலையின் சுவரோடு ஒட்டிக்கிடக்கும் பாறையின் ஒரு பகுதியைச் சுரண்டிவிடுவதன் மூலம் கையை வெளியே எடுத்துவிடலாம் என நம்புகிறார். ஆனால் கத்தி சிறியதாக இருப்பதாலும் கூர்மையாக இல்லாததாலும் அம்முயற்சியும் தோல்வியடைகிறது.

மனம் சோர்ந்துபோகும் அரோன் தன்னைச் சுயமாக உற்சாகப்படுத்திக்கொள்ளும் காட்சிகள் நெகிழ்ச்சியாக இருக்கின்றன. தன் குடும்ப உறவுகளையும் தன்னால் புன்படுத்தப்பட்ட பெற்றோர்களையும் தன் சோர்ந்துபோன மலை இடுக்கின் இருளுக்குள் கொண்டு வர முயல்வதன் மூலம் தனது தனிமையைத் தவிர்க்கச் செய்கிறார். பாறையில் சிக்கிக்கொண்ட தன் கையை எந்த முயற்சியும் கொண்டு வெளியேற்ற முடியாத ஒரு தருணத்தில் மனமுடைந்து உறங்கிவிடும் அரோனுக்குத் தொடர்ந்து மலை நடுவில் தான் விழுந்த காட்சியே வந்துகொண்டிருக்கின்றது. திடீரென பாறை நழுவி கீழே விழுவது போலவும் தன் கையை அவர் விடுவித்துக்கொண்டு மேலேறி வெளியே ஓடித் தப்பிப்பது போலவும் ஒரு பிரமை அவனைச் சுற்றி மேய்ந்துகொண்டிருக்கிறது. 

5 நாட்களுக்குப் போதுமானதாக இருக்கக்கூடிய தன் தண்ணீர் போத்தலில் இருக்கும் தண்ணீர் பற்றி அவன் தொடர்ந்து பேசுவது ஒரு வரட்சியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருமுறையும் தண்ணீரை அருந்திவிட்டு அதனை வைக்கும்போது சிறுக சிறுக குறைந்து வரும் அதன் அளவைக் கண்டு மிரள்கிறார். இன்னும் எத்தனை நாட்கள் தன்னால் உயிர் வாழ முடியும் என்கிற அனுமானத்தை மீதமிருக்கும் அந்தத் தண்ணீரை முன்வைத்தே தீர்மானிக்கிறார். போத்தலில் தண்ணீர் முடியும் தருணம், உடலில் உருவாகும் உஷ்ணத்தின் வழி தாகம் அவருடைய உடல் முழுக்க வியாபிக்கின்றது. ஆகையால் தன் மூத்திரத்தையே குழாயின் வழி மேலிழுத்துக் குடிக்க முயல்கிறார். ஒரு கொடூரமான வதை நம் கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் அடர்த்தியான ஒரு பிரக்ஞைக்கு வந்து சேர்ந்திருப்போம்.

இறுதியில் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தனக்குத் தெரிந்த கடைசி வழிமுறையை முயற்சிக்கும்போது பெரும் அதிர்வு உண்டாகிறது. கத்தியின் மூலம் பாறையில் சிக்கியிருக்கும் தன் வலது கையின் பாதியை வெட்டி அறுக்க முயல்கிறார். தன் கையைத் தானே சிதைக்கும் இந்தக் காட்சிக்கு முன் மனம் பீதியடைந்து திணறுகிறது. இதனைப் பார்க்க முதலில் மனத்திடம் தேவைப்படுகிறது. நரம்புகளை கத்தி முனையில் அறுத்தெறிவதும், எலும்பை மெல்ல அறுப்பதும் என அவர் அடையும் வலியின் கதறல் மலை இடுக்கிலிருந்து தப்பி வெளியே போகமுடியாமல் உள்ளுக்குள்ளேயே எதிரொலிக்கிறது. வெட்டப்பட்டு மீதி கை பாறையிலேயே ஒட்டிக்கிடக்க பாதி கையுடன் அரோன் கீழே விழுகிறார். அங்கிருந்து போராடித் தப்பித்து தன் உயிரை அபாரமான இயற்கையின் முன்பாகக் காப்பாற்றிக்கொள்ளும் அரோனின் இந்தப் பயணம் பிரமிப்பை அளிக்கிறது.

      3 ஆவது நாளுக்குப் பிறகு அரோனின் மனம் மெல்ல சிதைவுக்குள்ளாகுவதையும் தொடர்ந்து தனக்கு நெருக்கமான மனிதர்கள் தன்னைச் சுற்றி இருப்பதைப் போல கற்பனை செய்துகொண்டு அவர்களுடன் உரையாடுவதையும் பார்க்கும்போது தனிமைப்படுத்தப்பட்டு வதைக்கப்படும் ஓர் உயிரின் வலியை நெருக்கமாகத் தரிசிக்க முடிகிறது. கலை வடிவம் மனிதனுக்குத் தரும் மிக உயர்ந்த விளைவு என்பது அனுபவம் மட்டுமே என நம்புகிறேன். இதுவும்கூட அந்தக் கலையின் வெற்றியாகவும் கருதுகிறேன். ஆக இப்படம் அப்படியொரு அனுபவத்தால் நம்மை நிரப்ப முயல்வதே கலையின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது. மேலும் தன்னை மரணம் நெருங்கி வருவதை முற்றிலுமாக நம்பத் தொடங்கும் அரோன் உடனேயே தான் கொண்டு வந்திருக்கும் கேமராவின் மூலம் தன்னைப் பதிவு செய்யத் துவங்குகிறார்.

படத்தின் பாதிவரை கேமராவின் வழியே நாம் அரோனின் துயரத்தையும் மனம் அடையும் பரிணாமங்களையும் பார்க்க முடிகிறது. தாகம் ஏற்படுத்தும் அதீதமான வெறுப்பு சில்லென்ற குளிர்பானங்களைக் கற்பனை செய்துகொள்ள வைக்கிறது. அரோன் தான் தொலைக்காட்சிகளில் பார்த்த குளிர்பான விளம்பரங்களை நினைவுப்படுத்தி தன் உடலில் எரியும் தாகத்தை அடக்க முயல்கிறார். கேமராவுடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் கவனிக்க வைக்கும் இடங்கள். தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்பது, தன் காதலியைப் பற்றி சொல்வது, தன்னைச் சுற்றியிருக்கும் மலையின் மீது தனக்கு உண்டாகும் வெறுப்பு, கோபம், கவர்ச்சி எனப் பகிர்ந்துகொள்வது என அரோன் தன் தனிமையுடன் உரையாடவே முயற்சிக்கிறார். ஒரு காட்சியில் அரோன் தன்னை மலை ஏறுவதில் சாதனை படைத்த ஒரு வீரராக நினைத்துக்கொண்டு தன்னை கேமராவில் நேர்காணல் செய்வது போல தனக்கு தானே பல குரலில் பேசி நடிப்பதே அவ்வப்போது தடுமாறி சிதையும் அரோனின் உளவியல் நிலையைக் காட்டுகிறது.

மலையின் மீதும் படரும் சூரிய ஒளியைப் படம் முழுவதும் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும். தூரம் குறைந்த இரு மலையின் நடுவைத் தாண்டிச் செல்லும் குதிரைகளும் மனிதர்களும் இடம்பெறும் காட்சியை மலை இடுக்கின் இருளுக்குள்ளிருந்து காட்டியிருப்பதும் தேர்ந்த ஒளிப்பதிவின் ஆதாரமாகும். பல முக்கியமான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இப்படம் அரோன் மலை இடுக்கில் சிக்கிக்கொண்ட பிறகு அவன் தனிமையில் கடக்கும் 127 மணிநேரத்தை மிகவும் உயிர்ப்புடன் பதிவு செய்கிறது.

அரை பிரக்ஞையில் தன் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பாறையை மிக நெருக்கத்தில் கவனிக்கும் அரோனின் மனம், தனக்காக இந்தப் பாறை பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்ததாகச் சொல்கிறார். தனது பிறப்பு முதல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன் வளர்ச்சிக்கேற்ப இந்தப் பாறையும் வளர்ந்திருக்கிறது என நினைக்கிறார். இப்பொழுது நானும் இந்தப் பாறையும் இங்கே சந்தித்துக்கொண்டிருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் போகும் என் மரணமும் இந்தப் பாறையின் இருப்பும் ஒரு அபூர்மனான நிகழ்வு எனக் கற்பித்துக்கொள்கிறார். ஒரு மனிதனுக்கு நீரும் வெயிலும் காற்றும் எத்துனை மகத்தான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதை நேரடியாக அரோனின் துயரத்தின் வழி அறிய முடிகிறது.

“ மலையில் சிக்கிக்கொண்ட எனக்கு, இந்த 5 நாட்களில் ஒவ்வொருநாளும் காலையில் 15 நிமிடம் மட்டுமே வெயில் கிடைக்கிறது. மலை சுவரின் பகுதிகளை ஊடறுத்து என்னைத் தேடி வந்து பரவும் வெயிலுக்குக் கால்களை நீட்டுகிறேன்”. ஒவ்வொரு தருணமும் நெருக்கடியான சூழலில் ஒரு மனிதனின் மனம் கொள்ளும் விகாரமான பகுதிகள் தனியாக இயங்கத் துடிக்கிறது. அரோன் கடக்கும் 127 மணிநேரம் பல நூற்றாண்டுகளுக்கு அவனுக்காகக் காத்திருந்த ஒரு பாறையின் தியானத்தையும் கொலை முயற்சியையும் ஞாபகப்படுத்துகிறது.

கே.பாலமுருகன்
thanks Teeranathi india magazine (june issue 2011)

No comments: