விமர்சனம்: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்)
பட்டணப்பிரவேசம் செய்யும் தோட்டப்புறக் குடும்பமொன்றின் சீர்கெட்ட கதையைக் காட்டும் படைப்பு இது. இந்நாவலின் கதை வழக்கமாகத் தோட்டப்புறக் குடும்பங்களில் காணப்படும் சாதாரண நடைமுறைச் சித்திரமாக இருப்பினும், கதாசிரியரின் கதைகூறும் திறானல் நாவலின் கதை சிறப்படைந்துள்ளது. கதைகூறுவதில் நனவோடை உத்தியின் கூறுகளும் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் இப்படைப்பு சிறப்பிற்குரியதாகக் காணப்படுகின்றது. கதாசிரியர் கதை கூறுவதற்குத் தற்கூற்றுமுறையைப் (அகநோக்குநிலை) பயன்படுத்தியுள்ளார். இப்படைப்பு இக்கதாசிரியரின் முதல் நாவல் படைப்பு முயற்சியாகும். எனினும், முதல் முயற்சி என்று தெரியாத அளவிற்குப் பண்பட்ட தன்மையும் முதிர்ச்சியும் எழுத்தில் காணப்படுகின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள் தங்களின் கதையைக் கூறிச் செல்கின்றனர்.
தாய், தந்தை, இரு பிள்ளைகள் என ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மாறிமாறிப் பிரமையில்(மனப்போராட்டம்) ஆழ்வதும் அதன்வழி கதை வளர்த்துச் செல்லப்படுதலும் பின்னர் அவர்கள் அப்பிரமையிலிருந்து மீள்வதும் தொடர்ந்து மற்றொருவர் பிரமையில் ஆழ்ந்து கதை சொல்லத் தொடங்குதலும் எனக் கதை படிப்படியாக வளர்த்துச் செல்லப்பட்டுள்ளது. தவிர, கதாசிரியர் நாவலின் கதைச்சம்பவங்களை நிரல்படி அமைக்காமல் மனவோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப இயல்பாகக் கலந்து வரும் வகையில் அமைத்துள்ளார். வாசகர்கள் அச்சம்பவங்களைத் தாங்களே மனத்தால் நிரல்படுத்தி உணர்ந்து கொள்ளும் வகையில் இருண்மைபாணியில் கதை சொல்லிச் சென்றுள்ளார். இது மலேசியத் தமிழ் நாவல் இலக்கியத்தில் கதைகூறும் உத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதுமையாகக் கொள்வதில் தவறிருக்க முடியாது. தோட்டத்தைவிட்டுப் புதுவாழ்வுதேடிப் பட்டணத்திற்குக் குடியேறும் ஒரு குடும்பம் நகரவாழ்க்கையின் சூழல்களையும் சவால்களையும் சமாளிக்க முயன்று, அம்முயற்சியில் தோற்றுக் கடனில் மூழ்கி, அதிலேயே கரைந்துபோகும் அவலம் இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது. தோட்டப்புற வாழ்வில் பணம் புரளவில்லையென்றாலும் ஏதோ ஒருவகையில் நிம்மதி நிலவியது. குடும்பம் ஒரு கட்டமைப்புக்குள் அடங்கியிருந்தது. ஆனால், பணத்தையே மையமாகக் கொண்ட நகர்ப்புற வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்தும், குடும்பத்தைச் சிதைத்தும் உள்ளநிலையே காணப்படுகின்றது. நகரத்தில் இவர்கள் விளிம்புநிலை மக்களாகி, பணத்துக்காக ஆளுக்கு ஒரு பக்கமாக நகரத் தொடங்கி விடுகின்றனர். இறுதியில் கணவன் சீதாம்பரமும் மனைவி சாரதாவும் கடைசி மகன் செல்வத்தைச் சீதாம்பரத்தின் தம்பியிடம் விட்டுவிட்டுப் பிழைப்புக்காகக் கோலாலும்பூர் செல்கின்றனர். மகள் அஞ்சலி கட்டிய கணவனின் போக்குச் சரியில்லாததால் அவளும் பிழைப்புத்தேடி கோலாலும்பூருக்குத் தனியாகச் செல்கிறாள். மூத்தமகன் கணேசன் பெற்றோரைப் பிடிக்காமல் நண்பரின் பேச்சைக்கேட்டு வேலைக்காகச் சிங்கப்பூர் செல்கிறான். இவ்வாறாகத் தோட்டப்புறத்திலிருந்து வெளியேறிய கட்டுக்கோப்பான குடும்பமொன்று நகரத்தில் சிதறி, சின்னாபின்னமாகிப் போகிறது. இவ்வாறு அமையும் இந்நாவலின் கதையில் தோட்டப்புற வாழ்க்கை அப்படியே உயிர்ப்புடன் வெளிப்பட்டு, எதார்த்தப்போக்கும் நம்பகத்தன்மையும் இழையையோடி நாவலுக்குச் சிறப்பினைச் சேர்த்துள்ளது எனலாம்.
தோட்டப்புறங்களில் துன்பங்கள் பொருளாதார ரீதியாகத் தொடர்கதையாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களிடையே ஓர் இறுக்கமும் நெருக்கமும் காணப்பட்டன. அதனால் குடும்பங்கள் கட்டுக்கோப்போடு திகழ்ந்து கண்ணியமாக வாழ்ந்திருந்தன. ஆனால், நகரப் பெயர்ச்சிக்கு ஆளான குடும்பங்களில் பொருளாதாரத் துன்பங்கள் மட்டுமல்லாமல், பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் சீர்கேடுகள் மலிந்துபோய், குடும்ப உறவுகளிடையே விரிசலும் சிதைவும் சீர்கேடும் ஏற்பட்டுச் செல்லரித்துப்போன மோசமான வாழ்வில் உள்ளனர் என்பதனைக் கதாசிரியர் கதையின்வழி உணர்த்திச் சென்றுள்ளார். எனவே, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் பழமொழிக்கொப்ப ஒரு குடும்பத்தைக்கொண்டு தோட்டப்புற, நகர்ப்புற வாழ்வை ஒப்பீடு செய்து, தோட்டப்புற வாழ்வு எவ்வளவோ தேவலாம் என்று காட்டுவதுபோன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை உணர்த்தும் வகையில்தான் நாவலுக்குத் தலைப்பும் இடப்பட்டுள்ளது. தோட்டத்திலிருந்து நகரத்திற்கு நகர்ந்துபோன குடும்பத்தின் வாசல் நிலையாக இல்லாமல் அங்குப் பல்வேறு அலைகழிப்புகளுக்கு ஆளாகி நகர்ந்துகொண்டே இருக்கின்றது என்று பொருள்படும்படி தலைப்பிடப்பட்டுள்ளதானது நாவலுக்குச் சிறப்பினைச் சேர்த்துள்ளது
நன்றி: வெ.சபாபதி
பின்குறிப்பு: இந்த நாவல் 2010ஆம் ஆண்டுக்கான கரிகாற் சோழன் விருதையும் வென்றது. ஆனால் சங்கத்தால் இன்னமும் வெளியீடு செய்ய முடியாமல் இருக்கிறது. ஏப்ரல் மாதம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
பின்குறிப்பு: இந்த நாவல் 2010ஆம் ஆண்டுக்கான கரிகாற் சோழன் விருதையும் வென்றது. ஆனால் சங்கத்தால் இன்னமும் வெளியீடு செய்ய முடியாமல் இருக்கிறது. ஏப்ரல் மாதம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
No comments:
Post a Comment