Friday, July 1, 2011

Part 1: நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா?

பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப்போம். அப்பொழுது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பெண் ஒருவர் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்த குழந்தையைக் கொண்டு வந்து எங்களுடன் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருப்பார். அந்தத் தருணத்தில்தான் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற அந்தக் கவிதையை எழுதியிருந்தேன்.


ஒருநாள் எனது வீட்டில் இருந்து அந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருந்த பொழுது மீண்டும் விமானங்கள் வந்து தாக்கத் தொடங்கின. மீண்டும் பதுங்கு குழிக்குள் ஓடிப் பதுங்கிய பொழுது அந்தக் கவிதையை எழுதாமல் கொல்லப்படுவேனோ என்றும் அஞ்சியிருந்தேன். மீண்டும் விமானம் அழிவுகளை நிகழ்த்திச் சென்ற பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்திருந்தேன். எனக்கு அந்தக் குழந்தையைப் போன்ற குழந்தைகளின் பிறப்புச் சூழலும் பதுங்கு குழி வாழ்க்கையும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ‘பதுங்குகுழி வாழ்வு’ என்று எழுதப்பட்ட கவிதை ஒன்றும் அதே நாட்களில் அந்த அனுபவங்களின் பின்னணியிலேயே எழுதப்பட்டது.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதையை எழுதிய தருணத்தில் திண்ணை இணையத்தில் வெளியிட்டிருந்தேன். ஜெயபாலன், கருணாகரன், பொன்காந்தன் எல்லோரும் அந்தக் கவிதை மிகவும் சரியாக எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அந்தக் கவிதை பதற்றமான அதிர்ச்சியான சூழலில் எழுதப்பட்டிருந்தது. வாழ்கிற சூழலின் நெருக்கடிகளை எழுத உந்தப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்தக் கவிதையில் குழந்தைகளின் சூழலை ஓரளவு பதிவு செய்ய நிர்பந்திக்கபட்டிருக்கிறேன். போர் முழுக்கவும் எனக்கு குழந்தைகள் பற்றிய ஏக்கமே அதிகமாகியிருந்தது. அதனால் குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

விமானங்களையும் செல்களையும் கண்டு வெறுந்தரைகளில் விழுந்து பதுங்குமளவுக்கு ஒரு சில வயதுக் குழந்தைகளே பழக்கப்பட்டிருந்தனர். சின்னச் சின்னச் சத்தங்களுக்கும் குழந்தைகள் பதுங்குளமவில் போர்ச் சத்தங்கள் அவர்களைப் பாதித்திருந்தன. வானத்தைப் பார்க்க அவர்கள் அஞ்சினார்கள். இன்று கூட பட்டாசுச் சத்தங்களையும் இரைச்சல்களையும் கண்டு நாங்களே திடுக்கிடுகிற அளவில் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு அவை எவ்வளவு அச்சத்தை உருவாக்கியிருக்கும்? அவர்களின் முகங்களில் அதன் கொடுமையான அதிர்வுகளைப் பார்த்திருக்கிறேன்.

பதுங்கு குழிகளில் இருந்து துடிக்கிற குழந்தைகளில் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் என்னைப் பாதித்தது. அவர்கள் வீட்டிலிருந்து தூரத்தில் பாடசாலையில் இருக்கையில் வீட்டாரையும் தங்களையும் நினைத்து விமானங்களின் குண்டுகளுக்கு அஞ்சி துடிப்பார்கள். நான் பள்ளிச் சிறுவனாக இருக்கிற பொழுது விமானங்கள் குண்டு வீசுகையில் அந்தக் குண்டுகளிடமிருந்து தப்பிக்கொள்ள பற்றைகள் என்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அஞ்சியபடி பற்றைகளுக்குள் ஒளிந்திருப்பேன். பதுங்கு குழியும் விமானங்களும் குழந்தைப் பருவம் முதல் என்னைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. அச்சமும் பதற்றமும் பயங்கரமும் நிறைந்த தருணங்களாகக் குழந்தைகளின் வாழ்வை அது பாதிக்கிறது.

பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதுடன் சமையல், சாப்பாடு, வேலை என்று முழு நாட்களும் முழுக்காலமும் பதுங்கு குழிக்குள், நிலத்தின் கீழாய் முடிந்து போயிருக்கிறது. யுத்தம் தொடங்கிய சூழலில் கிளிநொச்சியில் பலர் பதுங்கு குழிகளை வீடுகளைப் போல நிலத்தின் கீழ் அமைத்திருந்தார்கள். மின்குமிழ்கள் பொருத்தி கதிரைகள் வைத்து படிக்கட்டுக்கள் செதுக்கி செய்திருந்தார்கள். வன்னியில் செயற்பட்ட சில அலுவலகங்களின் முக்கிய வேலைகள் பதுங்கு குழிக்குள்ளேயே நடந்தது. பின்னர் வெறும் தரையில் வரம்பளவுக்கு மண்ணை அணைத்துக் கொண்டு பதுங்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெளியில் தலை காட்ட முடியாத வானத்தை பாதுகாக்க முடியாத அந்த நாட்களில் மண்ணுக்கடியில் குழிகளில் வாழ வேண்டியிருந்தது. யுத்தத்தால் அலைக்கப்பட்ட ஒவ்வொருவரும் இறுதிவரை இருபதுக்கு மேற்பட்ட பதுங்குகுழிகளை உயிரைப் பாதுகாப்பதற்காய் வெட்டியிருக்கிறார்கள்.

கேள்வி: கிளிநொச்சி நகர வாழ்க்கை போர் சமயத்திலும் போருக்கு பிந்தைய நிலையிலும் அடைந்திருக்கும் அடையாள மாற்றங்கள் என்ன? இப்பொழுது அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?

பதில்: கிளிநொச்சி பல தடவைகள் போருக்கு முகம் கொடுத்த நகரம். அதேவேளை எப்பொழுதும் கனவுகளை உருவாக்கிற நகரம். தமிழ் நகரம் என்கிற வகையில் தமிழ்ப்பெயர்களும் அதன் சிறப்புக்களும் கிளிநொச்சியின் அடையாளம். இன்று அதன் நிலமை மிகவும் கவலை தரும் நிலையிலிருக்கிறது. ஒரு சாமாதான நகரமாக, வெள்ளை நகரமாக, பூக்களின் நகரமாக பிரகாசித்திருந்தது. போரினால் ஏற்பட்ட அழிவுகள் அந்த நரகத்தை தரையுடன் அழித்திருந்தது. அதன் கட்டிடங்களில் எல்லாம் போரின் காயங்கள் ஆறாதிருக்கின்றன. சாம்பலும் சிதைவுகளும் நிறைந்திருக்கின்றன. 1980களின் இறுதியில் கிளிநொச்சி நகரம் தாக்குதல்களுக்கு உட்படும் பொழுது அம்மா மற்றும் அண்ணாவுடன் பதுங்கு குழிகளிலும் மண்சுவர்கரைகளிலும் பதுங்கியிருப்பேன். 1996இல் கிளிநொச்சி நகரத்தை விட்டு சிறுவனாக இடம்பெயர்ந்து அலைந்த பொழுதுதான் கிளிநொச்சி நகரம் பற்றி அதிகமதிகம் கனவுகள் ஏற்பட்டன. கிளிநொச்சிக்கு நாங்கள் திரும்புவோமா என்றெல்லாம் நினைந்திருந்தேன்.

மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பிய பொழுது யுத்தமும் ஆக்கரிமிப்பும் நகரத்தின் கோலத்தைப் பயங்கரமாக்கியிருந்தது. திரும்பும் இடமெல்லாம் நகரம் கோரத்திற்கு உள்ளாகியிருந்தது. மீண்டும் கிளிநொச்சியை மூடியிருந்த அழிவுகள் அழிக்கப்பட்டு வியப்பைத் தரும் நகரமாகப் பிரகாசித்தது. போராளிகளும் மக்களும் கிளிநொச்சி நகரத்தை உயிரூட்டினார்கள். 2002 களில் கிளிநொச்சி சமாதான நகரமாகவும் புன்னகை நகரமாகவும் முக்கியத்துவம் பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசு நடைபெற்ற நிழல் தலைநகரமாகவும் விளங்கியது. சமாதானம் என்ற பெயரில் கிளிநொச்சிக்கு வந்தவர்களே அந்த நகரத்தின் அழிவுக்கும் கிளிநொச்சி மக்களின் பெயர்வுக்கும் காரணமானவர்கள். அவர்கள் வந்தமர்ந்த கண்ணாடி அறைகளும் கதிரைகளும் தேநீர்க் கோப்பைகளும் குண்டுகள் வீசி அழிக்கப்பட்டன.

கிளிநொச்சி நகரத்தில் சுற்றித்திரிவதைப்போல எனக்கு ஆறுதல் தருகிற ஒரு பொழுதும் இருந்ததில்லை. வன்னி யுத்தம் 2006 இல் தொடங்கிய பொழுதும் அந்த நகரம் விமானத் தாக்குதல்களின் பயங்கரங்களுக்குள்ளும் தனது உயிரை இழக்காமல் கலகலப்பாக இருக்கும். நானும் எனது நண்பர்களும் பதுங்கு குழிகளில் பதுங்கியிருக்கிற சமயங்களைத்தவிர நகரத்தைக் கொண்டாடியபடி திரிவோம். கிளிநொச்சி நகரம் என்றதும் அந்த நகர வாழ்க்கையுடன் இணைந்த எனது நண்பர்கள் பலர் நினைவுக்கு வருகிறார்கள். இன்று அவர்களில் பலர் இல்லை. பல இடங்கள் நண்பர்களற்று வெறித்துப் போயிருக்கிறது. நகரத்தைச் சுற்றும் பொழுதெல்லாம் அந்த ஞாபகங்களே மனதைச் சுற்றுகின்றன.

இன்று சிங்கள பௌத்த நகரத்தைப்போல மாற்றப்படுகிறது. பல இடங்களில் சிங்களப் பெயர்ப்பலகைகள், எங்கும் இராணுவத்தின் விசாலமான முகாம்கள், நெருக்கமான காவரண்கள், துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர், புத்தர்சிலைகள் என்று கிளிநொச்சி அடையாள நெருக்கடிகளை இன்று எதிர்க்கொள்கிறது. நகரின் மத்தியில் பெரும் புத்தவிகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டிபபோ சந்தி என்கிற இடத்தில் யுத்த வெற்றியை நினைவுகூரவும் ஈழத்தின் தகர்வை வெளிப்படுத்தவும் பெரும் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. வீழ்த்தப்பட்ட தண்ணீர் தாங்கி கிளிநொச்சியின் வீழ்ச்சியின் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஒரு சமதான நகரத்திற்கு இந்தக் கதிதான் நடந்திருக்கிறது. கிளிநொச்சி நகரம் போர் முடிந்த பிறகே திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் அடையாளங்களை அழித்து புதிய அடையாளங்களை ஏற்படுத்தவே அப்படி அழிக்கப்பட்டிருந்தது.

கேள்வி: இன்றைய ஈழம் என்பதை நாம் போர் முடிந்த பிறகு எஞ்சியிருக்கும் போர்க் கைதிகளாக இருக்கும் மக்களை மட்டும் குறிப்பிடலாமா அல்லது அகதிகளாக உலகம் முழுக்கவும் பரவியிருக்கும் அனைவரையும் அடையாளப்படுத்தளாமா?

பதில்: ஈழத்து மக்கள் போர்க்கைதிகள்தான். வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் அவர்கள் போர்க் கைதிகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஈழப்போர் முள்ளி வாய்க்கால் பேரழிவுடன் முடிவுபடுத்தப்பட்ட சூழலில் மீட்க முடியாத போர்க் கைதிகளாக ஒட்டுமொத்த ஈழத்து மக்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்புமுகாம் என்ற திறந்த வெளிச் சிறைகளில் மக்கள் கைதிகளாக அவல விலங்கு மாட்டியவர்களாகத் தடுத்து வைக்கப்பட்டார்கள். இன்றும் ஒரு லட்சம் மக்கள் அப்படி கைதிகளாக இருக்கிறார்கள். முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

போர் நடந்த நிலத்திலும் அதற்கு வெளியிலான இராணுவ நிலத்திலும் எமது மக்கள் கைதிகளாக நடத்தப்படுகிறார்கள். அந்த அச்சத்தையும் பதற்றத்தையும் நான் அதிகமதிகமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்கிற சூழல் தொடர்ந்தும் பதற்றத்தை உருவாக்குகின்றன. போர் நடந்த வன்னி நிலத்தில் சுகந்திரமாக எதையும் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும். எனது வீட்டுக்குப் போவதற்கும் தினமும் நான் இராணுவத்திடம் அனுமதி பெற்றுச் செல்கிறேன். எனது ஊரில் நிலப்பிரச்சினை வெடித்த பொழுது மக்களுடன் நான் பேசியதற்காக அனுமதியில்லாமல் தடை செய்யப்பட்ட கருத்துக்களைப் பேசினேன் என்று என்னை இராணுவம் எச்சரிப்புடன் தேடியது.

போருக்குப் பிந்திய சூழல் என்பது நிலத்தைப் பொறுத்தவரை நடமாடுகிற பேசுகிற உறவாடுகிற சுகந்திரம் இல்லாத போர்க் கைதிகளின் சூழலாகவே விரிந்திருக்கிறது. வடக்கு கிழக்கு என்கிற ஈழம் முழுவதிலும் இந்த நிலைமை நீடிக்கிறது. ஈழம் என்கிற வகையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அலைச்சல், எதிர்ப்பார்ப்பு, அர்ப்பணிப்பு, கனவு, உழைப்பு, தியாகம் என்பன மிகவும் அவலமானது. அவர்கள் போர் நிலத்திலிருந்து வாழ முடியாமல் நெருக்கடிகளால் இடம்பெயர்ந்து கடல் கடந்து புலம்பெயர்ந்தவர்கள். ஈழப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தின் தோல்வி அல்லது சிதைப்பு என்பது புலம்பெயர்ந்த தமிழர்களை உலகத்தின் நிரந்தர அகதிகளாக்கியிருக்கிறது. ஈழத்துயரங்களில் நாடற்று அலையும் எங்கள் மக்களின் துயரம் என்பது நிலத்தை பிரிந்த, வேரறுந்த வலியைக் கொண்டிருக்கிறது.

யுத்தம் முடிந்து சமாதானம் வந்து விட்டது என்றும் அய்க்கிய இலங்கைத் திரு நாட்டுக்கு வாருங்கள் என்றும் ஜனாதிபதி மகிந்த அழைக்கிறார். எங்கள் நிலைமையை நாளும் பொழுதும் பார்ப்பவர்களுக்கு இங்கு என்ன நிலமை இருக்கிறது என்பது புரியும். இன்று தாயகத் தமிழர்களின் அசைக்க முடியாத சக்தியாக உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் பலத்தை அழிக்கவே அப்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. நிலத்திற்காகவும் நிலத்திலிருக்கும் மக்களுக்காகவும் நடக்கிற புலப்போராட்டம் என்பது அடக்கி வைத்திருக்கும் நிலத்தின் வெளிப்பாடுதான். ஈழம் என்கிற பொழுது தமிழகத்து மக்கள் முதல் நாடற்ற ஒடுக்கப்படுகிற ஈழம்மீது பற்றுக்கொண்ட அனைத்துத் தமிழர்களையும் இணைத்தே பார்க்கிறேன். அனைவரிடத்திலும் ஈழம் பற்றிய கனவு தகித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கொடுமையான அழிவுகளால் எச்சரிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் உலகத் தமிழர்களின் குரல் இப்படி விரிந்த தளங்களிலிருந்தே ஒலிக்கிறது.

கேள்வி: தற்சமயம் தாய் தங்கையுடன் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம் செய்துள்ளதாக அறிகிறேன். இன்னமும் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் உங்கள் மக்களுக்கு மீள்குடியேற்றம் பற்றி சொல்லி வருகிறீர்கள். மீள்குடியேற்றத்தின் சாத்தியங்கள் எப்படியுள்ளன? இலங்கை அரசு தமிழர்களின் மீள்குடியேற்றத்தை எப்படிக் கையாளுகிறது? அரசு ரீதியில் தடைகள், கட்டுபாடுகள் ஏதேனும் உண்டா?

பதில்: மீள்குடியேற்றம் என்பது மிகவும் துயரத்தைத் தருகிறது. யுத்தத்தின் வாயிலாக எமது மக்கள் எப்படி வதைக்கப்பட்டார்களோ அப்படியே மீள்குடியேற்றத்தின் பொழுதும் வதைக்கப்படுகிறார்கள். தடுப்புமுகாம் எப்படி மூடுண்ட சிறைச்சாலைகளாகக் கட்டுப்பாடுகளைச் செலுத்தி உணர்வுகளைக் காயப்படுத்தினவோ அப்படியே மீள்குடியேற்றப்பட்ட நிலமும் காயத்திற்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதைகளைச் சுமக்கிறது. வன்னியில் நடக்கிற மீள்குடியேற்றத்தின் விசித்திரங்களைப் பற்றி பல பதிவுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பதிவு செய்து வருகிறேன்.

வன்னியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களும் மீள்குடியேற்றத்தின் பொழுது எப்படிக் கையாளப்படுகிறது என்பது துயர வித்தியாசங்களைக் கொண்டது. ஒன்றுமற்று அழிந்த நிலத்தில் மீள வாழுகின்ற ஆசையுடன் வருகின்ற மக்கள்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். தடுப்பு முகாமிலிருந்து ஏற்றியதோடு பல விசாரணைகளையும் பதிவுகளையும் புகைப்படப் பிடிப்புக்களையும் மேற்கொள்வார்கள். பின்னர் தெளிவாகப் பதிவு செய்து இலக்கத்தகடுகள் கட்டப்பட்டு போர்க்கைதிகள் போல சொந்த மண்ணில் விடப்படுகிறார்கள். தறப்பாள் கூடார நிலமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எமது நிலத்தை மாற்றிவிட்டது. சரியான நிவாரணங்கள் எதுவும் இல்லாமல் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்கள் மீள நிலத்தில் விடப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு மீள்குடியேறியாகிய என்னை மீள்குடியேற்றம் பெரும் விரக்திக்கும் அவலத்திற்கும் தள்ளியிருக்கிறது. எனது அம்மாவும் தங்கையையும் ஒரு ஆண்டுவரை தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சொந்த நிலத்திற்கு மீள்குடியேற்றத்தில் அனுப்பட்டவர்கள். என்னையும் அம்மாவையும் தங்கையையும் ஒன்றாக நிறுத்தி இராணுவப் பதிவிலக்கத்தைக் கைகளில் பிடிக்கச்சொல்லி புகைப்படம் எடுத்தார்கள். பின்னர் தறப்பாள் ஒன்றைத் தந்து கூடாரம் அமைத்திருக்கும்படி எங்கள் காணிக்குக் கொண்டு வந்து விட்டார்கள். தறப்பாள் கூடாரம் ஒன்றில்தான் வாழ்க்கை கழிகிறது. எங்களுக்கு பன்னிரண்டு தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அழிந்த வீட்டை கட்டித் தருவார்கள் என்று காத்திருந்து காத்திருந்து வெயிலிலும் மழையிலும் சித்திரவதைப்படுகிறோம். வீட்டை மீளக் கட்டித்தருவார்கள் என்று எதிர்பார்த்த தருணத்தில் எங்கள் காணி நிலங்களை அபகரிக்க நின்றார்கள். நிலப்பிரச்சினை பெரும் போராட்டமாகவே எங்கள் கிராமத்தில் வெடித்தது. அதனால் எங்கள் மக்கள் அடைந்த அவலம் மிகவும் கொடுமையானது.

இன்றுவரை எங்கள் கிராம மக்கள் எல்லோரும் தறப்பாள் கூடாரத்திலேயே வாழ்கிறார்கள். கிளிநொச்சி நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கிற இந்த நடவடிக்கையை மீள்குடியேற்றத்திற்கு ஒரு உதாரணமாக அதை சாட்சியாக நின்று குறிப்பிட விரும்புகிறேன். அரசு மீள்குடியேற்றம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் காணிநிலங்களை அபகரிக்கிறது. புத்தர் சிலைகளை பெருக்குகிறது. இராணுவ முகாம்களையும் காவலரண்களையும் பெருக்குகிறது. எங்கள் நிலத்தை வந்து பாருங்கள்! என்ன குடியேறியிருக்கிறது என்று. இராணுவ நினைவுத்தூபிகளும் இராணுவங்களும்தான் குடியேறியிருக்கின்றன. மக்களின் மீள்குடியேற்றம் தறப்பாள் கூடாரங்களில் அரசாங்கத்தின் வெற்றிகர நடவடிக்கையாக நடத்தப்படுகிறது.

மீள்குடியேற்றம் பற்றிய தகவல்களையும் அந்த மக்களின் நிலவரங்களை அறிவதிலும் வெளியிடுவதிலும் தடைகள் உள்ளன. உறவினர்கள் அல்லது புதியவர்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்கள் இராணுவத்தின் அனுமதி பெற்ற பின்னரே தங்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சாப்பாட்டுப் பொதியைக் கொடுப்பதாக இருந்தாலும் அதற்கு இராணுவத்தின் அனுமதி பெற வேண்டும். அல்லது அதையும் இராணுவம் வந்து தடுத்து நிறுத்தி விடும். அதற்காக விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்.

கேள்வி: புலிகளின் தமிழீழ தொலைக்காட்சியில் பணியாற்றியிருப்பதாக அறிகிறேன். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு ஊடகவியலளராக புலிகளுடன் இணைந்து எப்படிப் பணியாற்றினீர்கள்? என்ன துறையில் பணியாற்றினீர்கள்?

பதில்: நான் முதன் முதலில் தேசியத் தொலைக்காட்சி என்ற ஊடகத்திலேயே பணியாற்றியிருக்கிறேன். எனக்கிருந்த எழுத்து ஈடுபாடுகளின் நிமித்தம் அந்தத் தொலைக்காட்சியில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. செய்மதி ஊடக அந்தத் தொலைக்காட்சி அய்ரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. போர் அவலங்களையும் மக்களின் இடப்பெயர்வுகளையும் மக்களற்ற கிராமங்களையும் போராளிகளின் சமர்களையும் பதிவு செய்து வீடியோ சஞ்சிகையை மாதம் தோறும் வெளியிட்டு வந்த நிதர்சனம் என்கிற பிரிவு ஒரு தொலைக்காட்சிச் சேவையை நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது.

ஊடகம் தொடர்பிலும் காட்சி ஊடகமான தொலைக்காட்சி தொடர்பிலும் முன் அனுபவங்களும் பயிற்சிகளும் இல்லாத நிலையில் அங்குப் பணியாற்றி இணைந்த பொழுது பெற்ற அனுபவங்களும் பயிற்சிகளும் எனக்கு பலமான தளத்தைத் தந்தது. அங்கு நான் பிரதிகளை எழுதுகிற பங்கைத் தொடக்கத்தில் வகித்த பொழுதும் பின்னர் இயக்கம், வீடியோ, படத்தொகுப்பு போன்ற விடயங்களையும் கற்றுக் கொண்டேன். வன்னியில் இருந்த சூழலில் அதுவரை இருந்த சூழலில் அப்படி ஒரு அனுபவம் எனக்கு கிடைத்ததைச் சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறேன். மிக இளம் வயதில் பாடசாலைப் படிப்பில் இடைவிலகியவர்கள்கூட தொலைக்காட்சித்துறையில் மிகுந்த ஆளுமையைக் கொண்டவர்களாக வளர்ந்தார்கள். வடக்கு கிழக்கை சேர்ந்த பல கலைஞர்கள் பணியாற்றினார்கள்.

நான் ‘அறிவுத்தேடல்’ என்ற கல்வி நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தேன். அந்த நிகழ்ச்சி வன்னியின் பாடசாலைகள் பற்றிய விடயங்களை ஆவணப்படுத்துவதுடன் போர்ச் சூழலில் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் மனப்பதிவுகள், நெருக்கடிகள், போராட்டங்களைப் பதிவு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாகப் பதுங்கு குழிகளில் கல்வி கற்கிற அச்சமான காலத்தில் மாணவர்களின் கல்வி குறித்த நிலைகளையும் ஆர்வத்தையும் நெருக்கடிகளையும் அது வெளிப்படுத்தியிருந்தது. பாடசாலைகளின் வரலாற்றை ஆவணப்படுத்துவதுடன் போர்ச் சூழலில் இயங்கும் பாடசாலை மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குரிய கருத்துக்களும் பகிரப்பட்டன. அத்தோடு கணினி, சுயதொழிற் பயிற்சிக் கல்வி போன்ற வௌவ்வேறு துறைகள் பற்றியும் தயாரிக்கப்பட்டன.

அந்தத் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றிய போராளிக் கலைஞர்கள், படைப்பாளிகள் பலர் கடந்த காலம் போர்க்களங்களில் போரிட்டு அங்கங்களை இழந்து நலிவுற்றவர்கள். காட்சியூடகத் துறையில் அவர்களின் ஆளுமை மிகவும் பிரமிப்பாக இருந்தது. அவர்களிடம் பெற்ற அனுபவங்கள் பயிற்சிகள் எனக்கு மிகப் பெரியளவில் உதவின. நமது போராட்டச் சூழலில் அவசியமான துறையில் பணியாற்றுவதையும் உணர்ந்தேன். அங்கு இணைந்து பணியாற்றிய பல போராளிகள் மறக்க முடியாதவர்கள். எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

எங்கள் ஒவ்வொருவரது சுய தளங்களிலிருந்தும் அடிப்படைகளிலிருந்தும் தேசிய காட்சி ஊடகம் ஒன்று எதிர்பார்க்கிற படைப்புக்களை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருந்த எனக்கு மாணவர்களின் பிரச்சினைகள் அதை வெளிக் கொணரும் தன்மைகளில் ஈடுபாடு இருக்கலாம் என்ற அடிப்படையில் என்னை முக்கியமான காலத்தின் பதிவுகளைச் செய்கிற விவரணப் படைப்பாக்கத்துறையில் பணியாற்ற இடமளித்தார்கள். அந்த வீடியோப் பிரதிகள் எல்லாமே யுத்தத்தில் அழிந்து விட்டன என்பதுதான் தாங்க முடியாத சோகம்.

கேள்வி: இன்று ஈழத்து மக்கள் எதிர்க்கொள்ளும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எழுதி வருகிறீர்கள். இந்தப் பிரச்சனையைப் போர்க் காலத்திலும் போருக்குப் பிந்தைய இந்தக் காலக் கட்டத்திலும் உங்கள் பார்வையிலிருந்து எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்? அவர்களின் வாழ்விலும் போராட்டத்திலும் இந்த நிலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?

பதில்: நிலக் கொள்ளைத்தனம் மிக்க போரை நடத்திய இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்தின்மீதும் தனது குறியை வைத்திருக்கிறது. போரால் முழு நிலத்தையும் சுற்றி வளைத்துள்ள பொழுதும் நிலத்தின் அடையாளங்களை அழித்து அதனையும் அதன் அதிகாரத்தையும் கையகப்படுத்த துடித்துக் கொண்டு சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. நில விடயத்தில் எமது மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது முக்கியமான விடயம் என்று கருதுகிறேன். நிலத்திற்காகப் போராடி வருகிற மக்கள் அந்த நிலத்தின்மீது எத்தகைய பிரக்ஞையை வைத்திருக்கிறார்கள் என்பதும் இன்று அரசுக்கு புரியவைக்கப்படுகிறது.

வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களில் நிலங்களைக் கொள்ளையடிக்கிற திட்டங்களைப் பல விதமாக அரசு திணிக்கிறது. அதற்குரிய வகையில் நடவடிக்கைகளையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. கிழக்கில் திருமலை நிலம் என்கிற தமிழர்களின் தலைநிலம் பல கிராமங்களையும் பிரதேசங்களையும் இன்று சிங்களவர்களிடம் இழந்திருக்கிறது. மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இந்த அபாயங்கள் தலைமுறைகளை அச்சுறுத்துகின்றன.

வன்னியில் நிலங்களை ஆக்கிரமிக்க அரசின் சட்டங்களும் தந்திரங்களும் முனைந்த பொழுது அது தொடர்பில் மக்களின் வாக்குமூலங்களையும் கதைகளையும் தொடர்ச்சியாக எழுதியிருந்தேன். அவை முழுக்க முழுக்க மக்களிடமிருந்து வெளிப்பட்ட கதைகளும் போராட்டமும்தான். அதை அப்படியே ஊடகங்களில் வெளியிட்டு மக்களின் நிலவரங்களை அறிய வைக்க வேண்டியது ஒரு ஊடகவியலாளனின் கடமையாகிறது. அதற்காகப் பல சவால்களையும் நான் கடக்க வேண்டியிருந்தது.

சாந்தபுரம், இந்துபுரம், வசந்தநகர், பொன்னகர், இரத்தினபுரம் போன்ற பல கிராமங்கள் நிலக்கொள்ளைக்காகக் குறி வைக்கப்படிருந்த நிலங்கள் இன்று மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதற்குப் பிரக்ஞையுடன் மக்கள் போராடியதே காரணம். நம்பிக்கையும் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் மிக்க அந்தப் பிரக்ஞையை வெளிக் கொணர்வதே எனது பணியாக இருந்தது. குறித்த விடயத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள் மத்தியில் பல ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மக்களின் நிலவரங்களை வெளிக் கொணர்ந்திருந்தன என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

நிலம் வாழ்வுக்கு அடிப்படையானது. நிலமற்ற வாழ்வு எத்தகைய கொடியது என்பதை நிலம் வாழும் உயிரினங்கள் எல்லாமே புரிந்து கொள்ளும். ஈழப்போராட்டத்தில் எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்கிற வலிமையான கோரிக்கை அடங்கியிருக்கிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் வெறும் நிலத்தை நம்பி வாழ வேண்டிய குழந்தைகளுக்காகவே, வாழ வேண்டிய தலைமுறைகளுக்காகவே மக்கள் திரும்பினார்கள். அனுபவத்தையும நிலத்தையும்தான் இன்று தலைமுறைகளுக்காகச் சேகரிக்கிறோம். அந்த நிலத்தை கொள்ளையடித்து ஆக்கிரமித்து அதிகாரக் குறியைத் திணிக்கும் பொழுது போராட வேண்டியது நிலத்து மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. நிலத்தில் கையை வைக்கும் பொழுது அது பிரக்ஞை மிக்க பெரிய போராட்டமாக எழும்புகிறது.

கேள்வி: இத்தனை வன்மமான போர்ச்சூழலில் பிறந்து வளர்ந்த உங்களுக்குப் புகைப்படத்துறையில் ஆர்வம் வந்ததற்குப் பின்னணியில் போர்ச்சூழல்தான் காரணமாக இருக்கிறதா? இரத்தமும் சதையும் மரணத்தின் நீண்ட வரலாறையும் கொண்ட வன்னி நிலப்பரப்பைப் புகைப்படங்களாக்கும்போது நீங்கள் அடைந்த மனநிலை என்ன? மரணித்த உயிர்களின் சோகத்தையும் போரின் உக்கிரத்தையும் புகைப்படங்களின் தொகுப்பு மூலம் காட்ட முடியும் என்கிற புரிதல் எப்படி வந்தது?

பதில்: புகைப்படங்கள் துயரங்களை அப்படியே பதிவாக்குகிற படைப்பு. புகைப்படங்களைப் பிடிக்கிற ஈடுபாடு, தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய பொழுதே ஏற்பட்டது. அப்பொழுது விவரணப்படங்களை எடுக்கச் செல்லும் பொழுது பிடிக்கப்பட்ட படங்கள் யுத்தத்தில் அழிந்து விட்டன. நான் யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை அதற்காக அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளைப் புகைப்படமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தத் துறையில் ஈடுபடுகிறேன். சாதாரணமான டிஜிட்டல் கேமரா ஒன்றுதான் என்னிடம் இருக்கிறது. அதனை வைத்து இயற்கை ஒளியையும் இருட்டையும் சாதகமாக்கி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறேன். மொழிகளைக் கடந்து வாழ்க்கைச் சித்திரங்களைக் காவிச் செல்கிற ஊடகம் என்கிற வகையில் புகைப்பட ஊடகத்தின் வாயிலாக மக்களின் பிரச்சனைகள் சென்றடையும் பரப்பை விரிவடைய வைக்கலாம்.

சிறிய வயதிலிருந்து வாழ்க்கையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களைச் சேகரித்து வந்துள்ளேன். முக்கியமாக அண்ணா வீரமரணம் எய்திய பொழுதில் அவன் வளர்ந்த பிறகு எடுத்த புகைப்படங்கள் எங்களிடம் இருக்கவில்லை. எங்கோ ஒரு ஸ்டுடியோவில் அண்ணா புகைப்படம் பிடித்ததை அறிந்து அங்கு போய் புகைப்படச் சுருள்களை பல நாட்களாகத் தேடி அந்தப் புகைப்படங்களை மீட்டிருந்தேன். அந்தச் சுருள்களைக் கழுவி அண்ணாவின் நிறைய புகைப்படங்களைச் சேகரித்திருந்தேன்.

அண்ணாவின் குழந்தைப் பருவம் முதல் அவன் வீரமரணம் எய்தும் வரையான படங்கள், அடிக்கடி பார்த்துக்கொள்ளும் எனது பள்ளிப்படங்கள் என்று பல புகைப்படங்களை யுத்தத்தில் இழந்தது தீராத சோகத்தைத் தருகிறது. அண்ணாவை இழந்த பொழுது ஏற்பட்ட அதே வலி அவனின் புகைப்படத்தை இழந்த பொழுதும் ஏறபட்டது. அண்ணாவின் முகத்தை அழிவுக்குக் கொடுத்து விட்டோம். இனி அந்த முகத்தை எப்படிப் பார்க்க முடியும்? எங்களிடமிருந்த சகல புகைப்படங்களும் அழிந்து விட்டன. இதைப்போல பலரின் வீடுகளில் நடந்திருக்கிறது.

புகைப்படங்கள் முக்கியமான ஆவணங்கள். ஒரு சந்தர்ப்பம் அல்லது காட்சி புகைப்படமாகிற பொழுதே அது மீண்டும் நிகழ்கிற சாத்தியத்தை இழந்து விடுகிறது. ஒவ்வொரு நெருக்கடிகளும் துயரங்களும் அப்படியே பதிவு செய்து அவற்றை உடனடியான நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காலத்தைப் படிக்கும் பதிவாக்கும் சித்திரங்களாக ஆவணப்படுத்துவதற்கும் அவசியமானது. ஈழத்து மக்கள்மீது நடத்தப்பட்ட கொடும் போரும் அதற்குப் பிறகான தடுப்புச்சிறைகளும் அதற்குப் பிறகான வெறும் நிலத்தில் மீள் குடியேற்ற வாழ்க்கை துயரங்களும் ஈழப்போராட்ட வரலாற்றில் பதிவாக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் என்ற வகையில் புகைப்படத்துறையை அவசியமானதாகக் கருதுகிறேன்.

கேள்வி: போர்க்காலத்தில் புகைப்படக்காரராக நீங்கள் எதிர்க்கொண்ட ஆபத்தான, சவாலான ஒரு பயணத்தைக் குறிப்பிடுங்கள்?

பதில் : புகைப்பட ஊடகத்துறையில் வாயிலாக மக்களின் பிரச்சனைகளையும் வாழ்க்கை நெருக்கடிகளையும் வெளிக்கொணரும் பொழுது அது மிகுந்த தாக்கத்தை எளிதாக ஏற்படுத்துகிறது. நான் வன்னி மக்களின் நெருக்கடிகள் இழப்புக்கள் குறித்து பிடித்த புகைப்படங்கள் பல உள்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. மக்களின் பிரச்சனைகளை அரசுக்கும் உள்நாட்டு அதிகாரிகளுக்கும் இடித்துரைக்க வேண்டிய அவசியத்தில் பிரச்சினைகளை எதிர் கொண்ட நிலங்களுக்குச் சென்று புகைப்படங்களைப் பிடித்து வெளியிட்டிருந்தேன். முக்கியமாகத் தினக்குரல் என்ற உள்நாட்டுப் பத்திரிகை ஒன்று எனது புகைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பத்திரிகையின் முன் பக்கத்தில் பிரசுரித்திருந்தது. அவற்றை பிரிசுரித்து பிரச்சனைகளையும் மக்களின் நிலவரங்களையும் கவனப்படுத்தியிருந்தது. 'இருக்கிறோம்' என்ற பத்திரிகை தொடர்ச்சியாக எனது புகைப்படங்களை முகப்புப்படங்களாக வெளியிட்டு வருகின்றது.

படங்கள் சார்பான குறிப்புகளும் அந்தப் புகைப்படத்தில் வெளியாகியிருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகள் நிலைமைகளை அந்தப் புகைப்படங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தன என்று கருதுகிறேன். நிலப்பிரச்சினைகளையும் நிவாரணப் பிரச்சினைகளையும் எதிர் கொண்ட மக்கள், போரின் பின்னரான நிலத்தில் குழந்தைகளின் வாழ்க்கை, அவர்களின் மனநிலைகள், பாடசாலைகளின் நிலைமைகள், மாணவர்களின் நிலைமைகள் முதலியவற்றை சித்திரிக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன். உள்நாட்டுப் பத்திரிகைகள் பலவும் எனது புகைப்படங்களை வெளியிட்டிருந்தன.

வன்னியில் போர் நடந்த இடங்கள் எல்லாமே கடுமையான இராணுவக் கண்காணிப்பில் இருக்கின்றன. அந்த இடங்களில் நாம் செய்தி சேகரிக்கவோ புகைப்படங்களைப் பிடிக்கவோ பாதுகாப்பு அமைச்சால் அனுமதி இல்லை. செய்திகளைச் சேகரிக்க ஏதோ ஒரு வகையில் மக்களுடன் உரையாடி விடலாம். புகைப்படம் பிடிப்பதுதான் மிகுந்த நெருக்கடி மிக்கது. எனது உயிரை பணையமாக வைத்தே பல படங்கள் பிடிக்கப்பட்டன. மறைந்தும் அச்சமான சூழலிலும்தான் பல புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. ஒவ்வொரு புகைப்படங்களின் பின்னாலும் இப்படி நிறையக் கதைகள் உள்ளன.

நெடுங்காலப் போரால் பாதிக்கப்பட்ட கடற்கரை பிரதேசமான வடமராட்சிக் கிழக்குப் பகுதிக்கு சென்று அந்தக் கடல் நிலத்தைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று கருதி அந்தப் பகுதிக்குச் சென்று புகைப்படங்களைப் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இராணுவ உளவாளிகள் வந்து என்னையும் சில ஊடக மாணவர்களையும் கடுமையாக எச்சரித்து விசாரித்தார்கள். அன்றைய நாள் முழுவதும் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டதோடு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முழுவதும் அழிக்கப்பட்டது.

இதைப்போல கிளிநொச்சி நகரத்தில் உள்ள ஓர் ஆற்றை படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இராணுவம் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது. புகைப்படம் பிடிக்கப்பட்டதால் தங்களின் முகாமுக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டு என்னைப் பற்றிய சகல விபரங்களைப் பதிவு செய்தது. இதைப்போல கிளிநொச்சி நகரத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது விசாரணை செய்த இராணுவம் என்னைப் பயங்கரவாதி என்று குறிப்பிட்டு எச்சரித்தது. இவர்களுக்கு மிக உறுதியாக ‘இது எனது நகரம்’ என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன்.

வன்னி மக்களின் உண்மையான நிலவரங்கள் புகைப்படங்களாக வெளியிடப்பட்டு அரசுக்கும் படைகளுக்கும் அழுத்தங்கள் ஏற்படும் என்று படைத்தரப்பினர் அஞ்சியிருந்தார்கள். அதனால் மக்களின் வாழ்வு, ஊடகங்களில் கசியாத வகையில் கண்காணிக்க அரசு கட்டளைகளை இட்டிருக்கிறது. பதற்றங்களையும் பரபரப்புக்களையும்விட, புகைப்படங்களின் வாயிலாகப் பதிவு செய்வதுதான் முக்கியமான வேலை என்று நான் கருதுகிறேன். அதனால் பல்வேறு சவால்களின் மத்தியிலும் தொடர்ந்தும் பயணிக்கிறேன்.

நேர்காணல்: கே.பாலமுருகன் 
- thanks vallinam.com (June issue)

1 comment:

நாகேந்திரன் said...

ஈழத்து மக்களின் துயரத்தை கண்டு மனம் வலிக்கிறது.அந்த பதுங்கு குழி கவிதையை பிரசுரிக்கவே இல்லையே ஏன்?
உங்களின் வலை தலம் மிக்க அருமை வாழ்துக்கள் உங்களின் பனி தொடர்தும்.