Sunday, November 27, 2011

திரைப்படம்: மயக்கம் என்ன? குரூரமான சினிமா பார்வையாளர்கள்


செல்வராகவனின் படம் என்பதால் அதில் வழக்கமாக இருக்கப் போவது மனச்சிதைவு தொடர்பான அதீதமான பதிவுகள். ஒரு தமிழனுக்கு மனச்சிதைவு வந்தால் அவனை அது அதீதமான மன எழுச்சிக்கு உட்படுத்தும் என்பதைப் போல தன் படத்தின் வழி மனக்கோளாறுகளின் பல எல்லைகளைத் தொட முயன்றவர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மையைத் தழுவி நின்றது என்பது விமர்சனத்திற்குரியது. ஆனால் செல்வராகவனின் படங்களில் வெறும் காதலால் மட்டும் மனச்சிதைவின் சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுவது தொடரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. மயக்கம் என்ன அதற்கு மாறான ஒன்றைக் காட்டிச் செல்கிறது.

அங்கீகாரம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் விசாரணை செய்கிறது. அவனுடைய ஆழங்களைச் சென்றடைந்து அவனை அர்த்தமுள்ளவனாக மாற்றுகிறது. இன்றும் நாம் பலரை அங்கீகரிக்காமலேயே இருக்கிறோம். அப்படி அங்கீகரிக்காமல் மேலாதிக்கக் கலைஞர்களால் சுரண்டப்பட்டு பாதிப்புக்குள்ளாகும் ஒரு சாதாரணப் புகைப்படக் கலைஞனின் கதைத்தான் இது. விருப்பப்படி வாழ நினைக்கக்கும் மனிதனின் போதாமைகளைக் கட்டியெழுப்பது எது? அவனை ஏற்றுக்கொள்ளாத சமூகம், குடும்பம், அரசு என அந்தப் பட்டியல் விரியும். காலத்திற்கும் தன் முதலாளியத்துவ வயிறுகளை நிரப்பிக்கொள்ளவே ஒரு சாமான்யனின் உழைப்பு பல காரணங்களைக் காட்டிச் சுரண்டப்படுகிறது. ஒரு தேசம் வெறும் கலைகளால் மட்டும் தன் இறையியல் தன்மையை அடைந்துவிடும் என்பதற்கு அல்ல. இங்கு இறைத்தன்மை என்பதே முதலீட்டு நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்கி அவர்களைக் குளிர்ச்சியடைய செய்வதே ஆகும். மற்றபடி புகைப்படக்கலை, சினிமா, இலக்கியம் என்பதெல்லாம் கொசுறு போல சிறுபான்மை கூட்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன் கலை ஆளுமையை எப்படி விநியோகம் செய்யலாம் என்பதே இன்றைய தொழில் முனைப்புச் சிந்தனையாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட சூழலில் சுரண்டலும், ஆக்கிரமிப்பும், போதாமையுமாகக் கிடக்கிறது கலை உலகம். 


மேலும் ஒரு ஆறுதல். படத்தில் புகைப்படக் கலையைப் பற்றி ஆங்காங்கே காட்டியிருக்கிறார்கள். ஒரு வனத்தையும் வன விலங்குகளையும் ஆவணப்படுத்த ஒரு புகைப்படக் கலைஞன் என்னவெல்லாம் செய்ய முடியும் என மேலோட்டமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த உலகைத் தரிசிக்க ஒரு கண் தேவை. நமக்கொரு வித்தியாசமான frame தேவை. அதை இப்படத்தில் காட்டுகிறார்கள். மற்றப்படி அங்குள்ள உறவு சிக்கல்கள், நண்பனின் காதலி மீது ஆசைப்படுதல் போன்ற விசயங்கள் எதிர்வினைக்குரியது. அதை மேலும் விவாதிக்க நாட்டம் இல்லை.

கார்த்திக் எடுத்த வனப்பறவைகள் புகைப்படங்களைத் தன்னுடையதாக்கிக் கொண்டு அதன் மூலம் உலகப் புகழ் அடைகிறார் ஒரு கைத்தேர்ந்த புகைப்படக் கலைஞர். இன்னமும் உலகமே அறியாத ஒரு இளம் புகைப்படக் கலைஞனின் ஆளுமையும் உழைப்பும் இன்னொரு (நிறுவன) அதிகாரமிக்க புகைப்பட கலைஞரால் திருடப்படுகிறது. அதைக் கண்டு அவன் மிரள்கிறான். தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைச் சகிக்காமல் மாடியிலிருந்து கீழே விழுந்து தன் ஆளுமையை அழித்துக்கொள்ள முற்படுகிறான். அவன் வாழ்க்கை இதன் மூலம் பாதிப்படைகிறது. அர்த்தம் இழந்து போகிறான். படம் இப்படியாக சுரண்டப்பட்ட ஒரு புகைப்படக் கலைஞனின் அகத்தையும் அவன் மனப் பாதிப்பையும் மிதமாக அலசுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிகக்கொடூரமான விசயம் என்னவென்றால் இப்படியொரு படத்தைச் சுங்கைப்பட்டாணியில் (மலேசியா- கெடா மாநிலத்தின் ஒரு சிறு நகரம்) மிகவும் மனச்சிதைவுக்குள்ளான ஒரு கூட்டத்துடன் அமர்ந்து பார்த்ததுதான். பயங்கர எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு முக்கியமான காட்சியின் வழி அங்குப் படம் பார்க்க வந்திருந்தவர்கள் எத்தனை கொடூரமானவர்கள் என்பதைச் சொல்கிறேன். கார்த்திக் மனக்கொந்தளிப்பால் தன் கர்ப்பமான மனைவியைக் கீழே தள்ளிவிடுகிறான். அவளுடைய கர்ப்பக் குடம் உடைந்து இரத்தம் வடிகிறது. அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ஆனால் கார்த்திக் அந்தப் பாதிப்பு தாங்காமல் அந்த இரத்தக் கறைக்குப் பக்கத்திலேயே படுத்துக்கிடக்கிறான். அது இறந்து போன தன் குழந்தையென அவன் உள்ளுக்குள் சிதைகிறான். வீடு திரும்பும் அவனுடைய மனைவி, தன் இரத்தக் கறையை அவளே சுத்தப்படுத்துகிறாள். அப்படி அவள் செய்கையில் அவள் மனம் அவளுக்குள் பெரும் அதிர்வை உண்டாக்குகிறது. குழந்தையைக் கர்ப்பத்திலேயே இழந்தவள், அவளுடைய இரத்தத்தை அவளே சுத்தப்படுத்தும் காட்சியைப் பார்த்து ஒரு மக்கள் கூட்டம் சிரிக்கிறது என்றால் இது எத்தனை கொடூரமான விசயம்? என்னால் அங்கு இருக்கவே முடியவில்லை, குரூரமானவர்களுக்கு மத்தியில் எப்படி அமர்ந்திருப்பது?

வழக்கமாக இங்குள்ள மக்கள் கூட்டத்திற்கு ஒவ்வாத ஒரு திரைபடம்தான் ‘மயக்கம் என்ன’. இப்படத்தைப் பார்க்கும்போது எனக்கு அசோகமித்ரனின் ‘புலி கலைஞன்’ சிறுகதைத்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒவ்வொருநாளும் சினிமாவில் வாய்ப்புத்தேடி பல அடித்தட்டு கலைஞர்கள், இளைஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அங்கீகரிக்கப்படாமலும் கவனிக்கப்படாமலும் தொடர்ந்து தன்னைவிட்டுத் தொலைந்துகொண்டே இருக்கிறார்கள். இது கலை உலகில் இருப்பவர்களின் இழப்பு. வலி. கவனிக்கப்படாமல் அங்கீகரிக்கப்படாமல் சிதையும் ஒரு சூழலில் எப்படி தன்னை ஒருவன் மீட்டுக்கொள்கிறான் அல்லது அவனுடைய உறவுகள் எப்படி அவனை மீட்கிறது , சகித்துக்கொள்கிறது என்பதை மிக நிதானமான மிதமாகக் காட்டியிருக்கிறார் செல்வராகவன். கதைக்குள் பல முரண்கள் இருந்தாலும், இப்படம் இன்னமும் வளராத சில மோசமான சினிமா இரசிகர்களின் கொடூரமான ஆழ்மனதைக் காட்டியிருக்கிறது. நன்றி செல்வராகவன்.
note: camera technique more awsome. creative angels shots. Mostly potrait style shots. well done cinematographer.

கே.பாலமுருகன்

3 comments:

Unknown said...

சரியான விமர்சனம். நன்றாக விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள்.

ஷாநவாஸ் said...

சினிமா விமர்சனங்கள்
இயக்கு நர்களின் ஆளுமை குறித்த மேல் அதிக மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு தங்கள் விமர்சனங்கள் அமைகின்றன என் ப்து என் கருத்து....
தியேட்டரில் இரு ந்த கூட்டம் மாதிரியே
சில இலக்கிய கூட்டங்களில் மாட்டிக்கொள்ளும் அனுபவம் இன்னும் வேத்னை தரும் நிகழ்வு

vazeerali said...

பார்க்கும் படி இருக்கு .
சரியான விமர்சனம்
http://vazeerali.blogspot.com