Monday, December 12, 2011

இந்தியப் பயணம் – அறிமுகங்கள் (1)



இலக்கியப் பயணம் எனச் சொல்லிவிட்டுச் சென்றதெல்லாம் ஒரு பாவனைத்தான். இங்கிருந்துதான் ஆண்டுதோறும் பல ‘எழுத்தாளர்கள்’ இலக்கியப் பயணம் செல்கிறார்களே. அவர்கள் போதாதா மலேசிய இலக்கியத்தைக் கடல் கடந்து சென்று வளர்க்க? கவிஞர் செல்மா அவர்களுடன் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயணம் இது. அங்குள்ள எழுத்தாளர் நண்பர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்வதே முதண்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி சென்ற முதல்நாள் முதல் இறுதிநாள் வரை பல சமயங்களில் கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் யவனிகாவும் உடன் இருந்து என்னுடன் பயணித்தார்கள்.


மதுரையில் நாவலாசிரியர் சௌளபா தோட்ட வீட்டில் துவங்கிய என் பயணம் சென்னையிலுள்ள கவிஞரும் சினிமா இயக்குனருமான சூரியதாஸ் வீட்டில் நிறைவுப்பெற்றது. முதல் நாள் இரண்டாவது நாள் எனப் பயண விவரங்களைத் தொகுத்து எழுதும் எண்ணம் இல்லை. ஆகையால் எங்கிருந்து எப்படியும் தொடங்கப்படலாம். சில உண்மைகளைச் சொல்லவும் அவசியமில்லை எனத் தோன்றுகிறது. அது வெற்றுப் புலம்பல்களாக மாறக்கூடும். ஒரு சில சந்திப்புகள் மட்டுமே நல்ல உரையாடலாக மாறியிருந்தது. சில சந்திப்புகள் கொண்டாட்டங்களாகவும், மௌனங்களாகவும், கரைந்துவிட்டிருந்தன.

முதல் நாள் சென்னை வந்து இறங்கியதும் தற்செயலாக இருவரைச் சந்திக்க நேர்ந்தது. முதலாவதாக எழுத்தாளர் ஷோபா சக்தி. சென்னையிலிருந்து திரைப்படவிழாவிற்காகக் கோவா செல்லவிருந்தார். அரைமணி நேரம் என்னுடன் இருந்தார். விமான நிலைய வளாகத்திலேயே தோசையும் காப்பியும் வாங்கித் தந்தார். என்னைப் பார்த்ததும் ஷோபாவுக்கு அடையாளம் தெரியவில்லை. இரண்டு வருடத்திற்கு முன் அவர் என்னை மலேசியாவில் சந்தித்தபோது நான் மெலிந்திருந்தேன். ஆகையால் சற்று உப்பியிருந்த என்னைப் பார்த்ததும் கட்டியணைத்துக்கொண்டார். 

ஷோபா சக்தி தமிழ் இலக்கியச் சூழலில் மிக முக்கியமான ஒரு படைப்பாளி. அவருடைய ‘ம்’ நாவலின் வழியே அவரை மீண்டும் அடையாளப்படுத்திச் சொல்ல நேர்கிறது. அந்த அளவிற்கு தமிழில் அந்த நாவல் ஏற்படுத்திய பாதிப்பு ஆழமானவை. 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் நவீன இலக்கியங்கள் சார்ந்து வாசிக்கத் துவங்கியக் காலக்கட்டத்தில் நான் முதலில் வாசித்த நாவல் அவருடைய கொரில்லாத்தான். யாரும் அதைச் சிபாரிசு செய்யவில்லை. நூலகத்திலேயே என் பொழுதுகளைக் கடத்திய அந்த நாட்களில் தேடிப் பிடித்துப் படித்து முடித்தேன். ஆனால் அந்தச் சமயம் இலங்கையின் போர் குறித்தும் இயக்கங்கள் குறித்தும் எந்த அறிமுகமும் இல்லாததால் அதை ஒரு புனைவாக மட்டுமே நினைத்திருந்தேன்.

சர்வதேச அரசியல் உணர்வுடன் இலங்கையின் ஒட்டுமொத்த போரின் பின்புலத்தைப் பல தரப்பிலிருந்து அணுகக்கூடிய ஒரு மனநிலைக்கு வந்த பிறகு ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ நாவலை வாசிக்கும் போது அது வேறொரு அடர்த்தியான ஒரு அனுபவத்தையும் வரலாற்றையும் நம் பார்வைக்குக் கட்டாயம் கொண்டு வரும். அதிக நேரம் உரையாட வாய்ப்புக்கிடைக்கவில்லை. செங்கடல் படம் கோவாவின் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருப்பதாகக் கூறினார். லீனா மணிமேகலை ஏற்கனவே அங்குச் சென்றுவிட்டதாகவும் உடல்நலக் குறைவால் தான் தாமதமாக அங்குச் செல்வதாகச் சொன்னார். அத்திரைப்படவிழாவில் ஒளிப்பரப்பப்படும் ஒரே தமிழ்ப்படம் ‘செங்கடல்’தான். மேலும் நோர்வே திரைப்பட விழாவைப் பற்றி தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தயக்கத்துடன் நான் சாப்பிட்ட முதல் இந்திய உணவான தோசையின் சூடு தொண்டைக்குழிக்குள்ளிருந்து மறைவதற்குள் ஷோபா விடைப்பெற்றுச் சென்றிருந்தார். ஏனோ அவரை மீண்டும் சந்தித்து நெருக்கமாக உரையாட வேண்டும் என்ற ஏக்கம் மிச்சமாக இருந்தது.

(ஷோபா சக்தி - வல்லினம் கேள்வி – பதில் அங்கத்தில் கடந்த 6 மாதங்கள் பங்கேற்றிருந்தார். அவருடைய இணையத்தளத்திலேயே தொடர்ந்து எழுதி வருகிறார். பல படைப்புகள் அங்கேயே வாசிக்கக்கிடைக்கும்)

-தொடரும்-

கே.பாலமுருகன்

No comments: