Friday, January 13, 2012

தீர்ந்து போகாத வெண்கட்டிகள் நூலின் முன்னுரை



நான் ஒரு கதை உருவாக்கி

எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. என்னுடைய 5 ஆவது வயதில் என் ஞாபக சக்தியைச் சோதிப்பதற்கு அதிகமாகக் கேட்கப்பட்டது சினிமா தொடர்பான கேள்விகள்தான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்பா முன் நின்றாக வேண்டும். எந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள், படக்காட்சியைச் சொல்லிவிட்டு படத்தின் பெயரைக் குறிப்பிடுவது என நான்
சோதிக்கப்பட்டேன். கதைகளைச் சுயமாக உருவாக்கி எல்லா கதாப்பாத்திரங்களாகவும் நடித்திருக்கிறேன். வீட்டிற்குப் பின்னாடியுள்ள மாங்காய் மரத்தினடியில்தான் நான் உருவாக்கிய படங்கள் ஒளிபரப்பாகும். நானே பார்வையாளனாக என்னை நானே மகிழ்விக்க இப்படியொரு பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறேன்.

ரஜினியைப் போல இரண்டு சட்டைகளை மாட்டிக்கொண்டு திரிந்த காலத்தில் நான் ரஜினியாக மட்டுமே வாழ்ந்தேன். கமலைப் போல இரு கால்களையும் மடக்கி முட்டியில் நடந்து சிரமப்பட்டிருக்கிறேன். என்னுடன் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சினிமாவும் வளர்ந்து அடர்ந்துள்ளது. 90களின் தொடக்கம் முதல் இறுதிவரை தமிழில் வெளிவந்த அனைத்துப் படங்களையும் வெறிபிடித்தவன் போல பார்த்து முடித்திருந்தேன்.

கல்லூரிக்குச் சென்ற காலக்காட்டத்தில்தான் எனக்கு உலக சினிமாவே அறிமுகம் ஆனது. முதலில் பார்க்கக்கிடைத்த அகிரா குரோசாவாவின் "ரஷொமோன்" படம் அதன் திரைகதையால் என்னைப் பிரமிக்க வைத்தது. அதன் தொடர்பாக நண்பர்களுடன் ஏற்பட்ட உரையாடல் என் சினிமா பார்வையை மாற்றியமைத்திருந்தது. காளிதாஸ், சுந்தரேஸ்வரன், விநோத் குமார், ஜெப்ரி போன்ற உலக சினிமா பற்றிய பரிட்சயம் இருந்த நண்பர்கள் வட்டத்தினால் தமிழ்ச்சினிமாவின் வணிக உற்பத்திக்குள் சிக்கிக்கிடந்த என் இரசனையை மீட்க முடிந்தது.

அதன் பிறகான என்னுடைய தேடல் உலக சினிமாவைச் சார்ந்திருந்தது. கோலாலம்பூர், பினாங்கு, சிங்கப்பூர் என நல்ல சினிமாவைத் தேடி நகரம் நகரமாக அலைந்திருக்கிறேன். ஒரு சினிமாவைப் பார்த்து முடிக்கும் தருணம் எனக்குள் புதிய கருத்தாக்கங்கள் உருவாகியபடியே இருந்தன. என் எல்லைக்கு அப்பாற்பட்ட ஓர் உலகத்தைப் புரிந்து கொள்ளத் துவங்கியிருந்தேன். சினிமாவின் மூலம் அடையாளம் கண்ட என்னுடைய சிந்தனையின் மையம் இலக்கியத்தில் செயலாற்றவும் படைப்புகளைத் தரவும் காரணமாக இருந்தது எனக்கூறலாம்.

புனைவுகளில் கவனம் செலுத்த நல்ல சினிமாவின் தாக்கம் அவசியம். ஒவ்வொரு சினிமாவும் அந்தப் பிராந்தியத்தின் ஆழ்மனதை வெளிப்படுத்தக்கூடியதாகவே உருவாக்கப்பட வேண்டும். சினிமா ஒரு மாற்றுமுயற்சி, கலை வடிவம். என்னைப் பொறுத்தமட்டிலும் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் கிடையாது. சினிமா அசாதரணமான பதிவு. நீண்டகால சேமிப்பு.

அவ்வகையில் எனது வலைத்தளத்தில் (http://bala-balamurugan.blogspot.com/) தொடர்ந்து நான் ரசிக்கும் சினிமா குறித்து அவ்வப்போது எழுதிவந்துள்ளேன். இந்நிலையில் 'வல்லினம்' அகப்பக்கத்தில் உலகத்திரைப்படங்களில் கனமான பாத்திரங்களை ஏந்தியிருக்கும் சிறுவர்களின் வாழ்க்கை, அக்கதாபாத்திரங்களின் அரசியல், அழகியல், மனோவியல் குறித்து தொடராக எழுத நண்பர் நவீன் கேட்டுக்கொண்டார்.

திரைப்படங்களில் காட்டப்படும் சிறுவர்களின் வாழ்க்கை நமது நுண்ணுணர்வுகளை விழிப்படையச் செய்யக்கூடியது. சட்டென நமது இறந்த காலத்தின் ஏதோ ஒரு பக்கத்தை புரட்டிக்காட்டும் தீவிரத்தை உந்தகூடியது. நாம் அனுபவித்து கவனிக்காத மிக குறுகிய தருணத்தில் கூறிய முள் கொண்டு குத்தி நினைவுகளில் வலியைச் சுமத்தக்கூடியது. இந்தத் தொடரை எழுதியத் தருணங்கள் நான் எனது வாழ்வில் மறந்த பல பகுதிகளைப் புரட்டிப்பார்ப்பதாகவே உணர்ந்தேன். இலக்கியங்கள் போலவே, திரைப்படங்களும் வாழ்வு இன்னும் எத்தனை விசித்திரமானது என்றும், இன்னும் எத்தனை விசாலமானது என்றும் நினைவுபடுத்துகிறது. அதுவே கலை இலக்கியங்களைத் தேடித்திரிய காரணியாகவும் ஆகின்றது.

கே.பாலமுருகன்
For books detail please contact me (016-4806241)

No comments: