“இந்தச் சமூகத்தில் ஆளுமைகளுக்கு இரண்டு வகையான தண்டனைகள் மட்டுமே தரப்படுகின்றன. ஒன்று அரசியலுக்கு அவர்களை அடிமையாக்கி அவர்களின் அறிவை அடகு வைப்பது அல்லது அதிகம் படித்தப் பைத்தியம் என மனநோயாளியாகச் சித்தரிப்பது”
மனநோய் என்பது எப்படிப்பட்டது? அதன் உக்கிரம் என்ன? அதை இந்தச் சமூகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படிக் கையாண்டு வருகிறது? மனநோய் பற்றிய விசயங்களைச் சினிமாவும் மற்ற கலை வடிவங்களும் எப்படிப் பதிவு செய்திருக்கின்றன? என்ற கேள்விகளுடன் இப்படத்தை அணுக வேண்டியுள்ளது. இதன் மூலமே போராளி படத்தின் முக்கியத்துவம் பலவீனம் என உரையாடலை நீடிக்க வாய்ப்பாக இருக்கும்.
சமீபக் காலமாக சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணி தமிழ் சினிமா சூழலில் உருவாகி நிலைக்கொள்கின்றன. சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பதும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பதும் என அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. இருவருமே அந்தந்தப் படங்களில் கச்சிதமாகப் பொருந்துவதால் அதை ஒரு முரணாகவும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா சூழலில்
ஒரு சில கூட்டணிகள் இப்படி உருவாகி பல படங்களைத் தந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வெங்கட் பிரபு குழுவை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இருப்பினும் இவர்களின் கூட்டணியில் உருவான சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்கள் அரசியல் சமூகத்தின் அதிகார முனைகளைச் கீறிப் பார்க்கவே செய்கின்றன. சுப்ரமணியபுரம் படம் 80களின் அரசியல் வாழ்க்கையையும் அரசியல் அதிகாரங்களுக்குப் பலியான அக்காலக்கட்ட இளைஞர்களின் வாழக்கையையும் பதிவு செய்கின்றது. ஈசன் எப்படி ஒரு சமூகம் அரசியல் சமூகமாக மாறி அதிகாரத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்பதையும் சாமான்யன் எப்படி அந்த அதிகாரத்தை எதிர்க்கொள்கிறான் என்பதையும் சொல்லிச் சென்றது.சமீபக் காலமாக சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணி தமிழ் சினிமா சூழலில் உருவாகி நிலைக்கொள்கின்றன. சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பதும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பதும் என அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. இருவருமே அந்தந்தப் படங்களில் கச்சிதமாகப் பொருந்துவதால் அதை ஒரு முரணாகவும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா சூழலில்
மனநோயும் வெகுசனமும்
போராளி படம் மனநோய் பற்றிய விரிவான ஆய்வாக இல்லாமல் அதனைச் சார்ந்த ஒரு வெகுசன பார்வையைக் களைத்துப் போடும் அளவிற்கே முயற்சி செய்துள்ளது. பெரும்பாலும் இப்போதைக்கான மனநோய் பற்றிய விமர்சனங்கள் அல்லது மதிப்பீடு என்பது நகரம் சார்ந்ததாகவும், அறிவாளிகளின் மனப்பிரச்சனையாகவும், மேல்தட்டு குடும்பச் சிதைவின் மூலம் உருவாகக்கூடியதாகவும் எனப் பொதுவில் கவனப்படுத்தப்படுகிறது. மனநோய் என்பது அதிகம் கற்றவன் அடையும் மனம் சார்ந்த சிக்கலாகவும், குடும்ப அமைப்பு தோல்வியடையும்போது எழும் மன உளைச்சலாகவும் பார்க்கப்படும் ஒரு சூழல் பரவிவரும் சமக்காலத்தில் அதை ஒரு கிராமப் பின்புலத்தில் வைத்து அங்கிருந்து வளர்த்து ஒரு கருத்தாக்கமாக முன்வைக்கும் பணியைப் போராளி படம் செய்துள்ளது.
கிராம வாழ்க்கை என்பதை இருவகைகளில் சினிமாவில் அவதானிக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்கலாம். ஒன்று, முதலாளியத்துவத்திற்குக் கீழ் அடிமையான சமூகம் எப்படி அடிமைகளை உற்பத்தி செய்து அதனை வாழ்க்கையாக மாற்றி வெகுசனத்திற்குள் திணித்தது என்பதாகும். எஜமான் படம் தொடங்கி சின்ன ஜெமின் படம் வரை, மேலும் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதலாளித்துவத்தை ஒரு புனிதமாகக் கொண்டாடியதில் எஜமான் படம் முக்கியத்துவம் பெற்றதென்றால் கடைசிவரை போராடி முதலாளித்துவத்தை அழித்ததில், ‘சின்ன ஜெமின்’ படத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
இப்படி முதலாளித்துவக் கொள்கைகளைப் பரப்புவதிலும் அதனை எதிர்ப்பதிலும் பல படங்கள் கவனம் செலுத்தியதைப் பார்க்கலாம். ஆனால் இது போன்ற படங்களில் ஏதோ ஒரு கதைப்பாத்திரம் கோமாளியாகவும், மனப்பிரச்சனை உடையதாகவும், பைத்தியக்காரனாகவும் காண்பிக்கப்பட்டிருக்கும். மனைவி செத்ததால், தாலியைக் கையில் வைத்துக்கொண்டு “எனக்குக் கல்யாணம் எனக்குக் கல்யாணம்” எனக் கத்தும் பைத்தியம் முதல் வீட்டின் அறை இருளுக்குள் தலைவிரித்தாற்கோலமாய் பயங்கரமாக முறைத்துப் பார்க்கும் பைத்தியம்வரை தமிழ் சினிமாவில் காட்டப்பட்டிருக்கும். இவர்கள் யாவரும் ஓர் ஊனமான கதைப்பாத்திரமாக மட்டுமே படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் அகச் சிக்கல்கள் குறித்து ஒரு சமூகமும் அந்தச் சமூகத்தின் அரசியல் கட்டமைப்பு, சாதியக் கட்டமைப்பு, போன்ற விசயங்கள் எப்படிப் பெரும்பாதிப்பாக மாறுகின்றன என விரிவான ஆய்வு இல்லாததை உணர முடியும். எதிர்பாராத ஓர் இழப்பின் வழியும், அல்லது கீழே விழுந்து தலை அடிப்பட்டதன் வழியும் உருவான ஒன்றாகவே மனப்பிரச்சனைகளைக் காட்டி வந்திருக்கின்றன. உளவியல் சார்ந்து ஒரு மிகப்பெரிய ஆரம்பக்கால தேக்கநிலை இது.
அடுத்ததாக, சாதியப் பிரச்சனையும் அதன் பால் உருவாகும் போராட்டமும் கிராம வாழ்க்கையின் முக்கிய அங்கமாகப் பல படங்களில் காட்டப்பட்டிருக்கின்றன. சாதிய பிரச்சனையை மையமாக வைத்துப் பேசுவதற்கு அப்பொழுது காதல் மட்டுமே பேசும்பொருளாகப் பாவிக்கப்பட்டது. காதலைப் பிரிப்பதிலிருந்து ஒரு சாதிய சமூகம் தன்னையும் தன் சாதிய செயல்பாடுகளையும் உக்கிரமாக நடைமுறைப்படுத்துவது போல பாவனைகள் செய்யப்பட்டிருக்கும். ஆக சமூகத்தின் ஒரு தீவிரமான விசயத்தைப் பற்றி பேசுவதற்குச் சினிமாவில் காதல் மட்டுமே காலம் முழுக்க மையப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் கிராமம் மட்டுமே சாதிய அமைப்பால் வேறுன்றி இருப்பதைப் போல ஒரு பொதுவான பார்வையும் தமிழ் சினிமாவின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது.
சாதியப் பிரச்சனைகளுக்கு நடுவே அதனால் பாதிக்கப்படாமல், சாதியத்தின் உச்சத்தைக் காட்ட உபயோகப்படுத்தப்பட்ட காதலின் வழி பாதிப்புற்று மனச்சிதைவானவர்களையே தமிழ் சினிமாவில் நம்மால் பார்க்க முடியும். அப்படியென்றால் ஒரு சமூகத்தைப் பிரித்தாளும் சாதியத்தின் பாதிப்புகள் அதனால் உருவாகும் மனப்பிரச்சனைகள் தீவிரமாக எங்கும் பதிவுச் செய்யப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்திரா படம் கொஞ்சம் விதிவிலக்காக சாதிய பிரச்சனைகளை வேறு வழியில் பார்த்தது. ஆனால் அதுவும் இரு வேறு நிலங்கள் சாதிய வித்தியாசத்தால் பிளவுக் கண்டு போனதால் அங்கு வசித்தவர்களின் மனநிலையையும் அவர்களின் மனப்பாதிப்புகளையும் மேலோட்டமாகக்கூட பதிவு செய்யவில்லை. இதுதான் தமிழ் சினிமாவில் மனச்சிதைவுக்குள்ளானர்களின் மீதான போதாமை.
செல்வராகவன் படம் பற்றி பெரியதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. காதலை மையப்படுத்தியே உலகில் மனம் சிதைகிறார்கள் என்பது போல உளவியல் சிக்கலைச் சுருக்கிக் காட்டக்கூடியவர். இன்றைய சூழலில் மனநோய் என்பதை ஒரு வெகுசன கிளுகிளுப்புக்காக மட்டுமே அல்லது பரிதாபத்தைக் கூட்டிக் காட்டுவதற்காக மட்டுமே தமிழ் சினிமாவில் திணிக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஆக போராளி படம் மனச்சிதைவு என்பது நகர் பின்புலத்தில் அறிவாளி குழுக்களிடையே பரவும் ஒரு நோய்க்கூறு மட்டும் அல்ல, கிராமத்திலும் மனநோய்கள் பலத்தரப்பட்ட நிலையில் உருவாக்கப்படுகிறது என்பதன் அரசியலைக் காட்டிச் செல்கிறது. அதைக் காட்டுவதில் வழக்கமான காதலையோ காவியத்தையோ துணையாக எடுத்துக்கொள்ளாமல் வேறொரு முறையில் அதனை நேர்மையாகப் பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
குடும்ப அமைப்புகளும் மனநோய்களும்
பெரும்பாலான மனநோய் பிரச்சனைகளைக் குடும்ப அமைப்பே உற்பத்தி செய்வதாக சமூக ஆய்வுகள் கூறுகின்றன. வெறுமனே சூழல் பாதிப்பும் பரம்பரை மனப்பதிவுகளும் இதற்குக் காரணம் என்பதைவிட குடும்பத்தில் ஒரு உயிர் வளர்க்கப்படும் விதத்திலிருந்தும் இந்தப் பிரச்சனை உருவாக்கப்படலாம். மனநோய்க்கு மருத்துவ ரீதியிலும் உளவியல் ரீதியிலும் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. சிந்தனைத்திறனைக் கட்டுப்படுத்தும் தலைமையகமான மூளைக்குள் நரம்பு பாதிப்புகள் உருவாவதன் மூலம் மனச்சிதைவு ஏற்படலாம் என்றும்,
2. மன அழுத்தம் அதீதமாக உருவாகும்போது சிந்தனை பாதிக்கப்பட்டும் மனநோய் உண்டாகலாம் என்றும்
3. தூக்கமின்மை காரணமாகவோ அல்லது போதைப்பொருள் மூலம் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டோ மனநோய் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
உளவியல் ரீதியில் மனநோய் உருவாவதற்கான பல காரணங்கள் கொடுக்கப்பட்டிருப்பினும் அதை மேலும் மேலும் வெவ்வேறு மாதிரி விவாதிக்கவோ கலந்துரையாடவோ முடியும். நம் நினைவுகளின் அடுக்கில் நமக்கு உச்சமான அதிர்ச்சையையும் கோடுரமான சம்பவத்தைப் பார்த்த பாதிப்பும் கொண்ட நினைவுகள் தனியாகத் துண்டிக்கப்பட்டு சுயேச்சையாக இயங்குவதன் மூலம் , அவை நனவு மனதில் ஊடுருவி நோய்க்குறிகளை வெளிப்படுத்தும். இந்த நோய்க்குறி அதாவது மனச்சிதைவு என்பது சாலையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடும் பைத்தியநிலை அல்ல. அதிர்ச்சிகரமான அந்தச் சமபவம் நனவு மனதிலிருந்து மறக்கப்பட்டும்கூட திடீரென ஒருநாள் அந்த மறக்கப்பட்ட பகுதி மையம் கொண்டு நனவு மனதிற்குள் நுழைந்து நினைவுவெளியைச் சிதைக்கும் என உளவியல் கூறுகிறது.
அது ஒரு மனிதனின் ஆளுமையை இரண்டாகப் பிளந்து, ஒன்று அன்றாட கடமைக்கு உட்பட்ட ஒருவனையும், இன்னொன்று சுயேச்சையாக இயங்கும் சிதைந்த பகுதியிலிருந்து வெளிப்படும் நோய்க்குறிகளுக்கு உட்பட்ட ஒருவனையும் ஒரே சமயத்தில் சாமர்த்தியமாக இயங்க வைக்கும். இதுதான் மனச்சிதைவு. இப்படி மனச்சிதைவிற்கு ஆழமான விளக்கங்களும் உதாரணங்களும் அடையாளங்களும் இருக்க, இன்னமும் எதிரில் ஒருவர் இருப்பதைப் போல கற்பனை செய்து உரையாடும் ஒரேவகை நோய்குறியைக் கையாண்டு இப்படிப்பட்ட படங்களை எடுப்பது சலிப்பை ஏற்படுத்தாதா? இதைதான் செல்வராகவன் தன் படங்களில் அதிகமாகப் பாவிக்கிறார். மனநோய் என்பது எங்கிருந்து உருவாகிறது என்பதன் பின்னணியை முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பின் அந்தக் கருவைச் சினிமாவில் கையாள்வது மிகவும் முக்கியமாகும். அப்படியொரு முயற்சியும் தேடலும் தமிழ் சினிமாவில் குறைந்து காணப்படுவதால்தான் மனச்சிதவையும் பைத்தியநிலையையும் ஒன்றாகக் கற்பித்து பெரிய குழப்பத்தையும் வேடிக்கையையும் உருவாக்குகிறார்கள்.
ஆக மனநோய்க்கான பல சாத்தியங்கள் இருப்பினும் அதனுடைய பின்புலத்தை வலுவாக ஆராயாமல் அல்லது முன்வைக்காமல் மிகவும் தட்டையான காரணங்களை மட்டும் முன்வைத்து மனநோயைச் சினிமாவில் காட்டுவது அபத்தமாகும். மனநோயாளிகளைப் பேய்ப்பிடித்தவர்கள் போல காட்டி வெகுசன மக்களை ஏமாற்றியது போதும். போராளி படம் எப்படி ஒரு மனநோய் குடும்பத்தின் வழி ஒரு சிறுவனுக்குள் திணிக்கப்படுகிறது என்ற விசயத்தை மேலோட்டமாகப் பேசுகிறது.
ஒருவன் முதலில் வன்முறையைக் குடும்பத்திலிருந்துதான் கற்றுக்கொள்கிறான். முதலில் தன் அதிகாரத்தை தன் அக்காவிடமும், தங்கையிடமும், மனைவியிடமும் எனப் பரிசோதித்துவிட்டப் பிறகே சமூகத்திற்குள் அதைப் பயன்படுத்தி வன்முறைகள் நிகழ்த்துகிறான். எப்படி வன்முறையையும் பிறரைக் காயப்படுத்தும் செயலையும் குடும்பம் என்ற நிறுவனத்திலிருந்து பழகிக் கொள்கிறானோ அதே போல மனப்பிரச்சனைகளுக்கான சாத்தியங்களையும் அங்கிருந்துதான் பெறத் துவங்குகிறான். அது உக்கிரத்தையும் உச்சத்தையும் அடைவது வேண்டுமென்றால் சமூகமும் அரசியல் சூழலும் அடுத்தக்கட்ட காரணமாக இருக்கக்கூடும்.
பாலியல் சித்ரவதைகள் மூலம் மனதையும் சிந்தனையையும் சிதறடிப்பது, பயத்தின் மூலம் மனதை ஒடுக்குவது, உடலின் மீதான வன்முறையின் மூலம் எண்ணங்களைச் சாகடிப்பது என இது போன்ற கொடுமைகளின் மூலம் மனம் சிதறுண்டவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் குடும்ப அமைப்பு பாதிப்புக்குள்ளாகும்போது அந்தக் குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் மனம் சிதைவதை எந்தச் சினிமாவும் இதுவரை தீர்க்கமாகச் சொல்லியதில்லை. அடூர் கோபாலகிருஷ்ணனின் ஒரு முக்கியமான படம்(பெயர் ஞாபகத்தில் இல்லை) இதைப் பற்றி மிகத் துல்லியமாக ஆராய்ந்து பதிவுச் செய்திருக்கிறது. ஆனால் அப்படம் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பெரியவர்களின் மனம் எப்படிச் சுருங்கி சுயவதைக்கு ஆளாகின்றது என்பதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கிறது. ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கும் உடல் ஊனமுற்ற குழந்தையைப் பராமரிக்க முடியாமல் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே அக்குழந்தையைக் கொன்றுவிடுவதைக் காட்டும் படம் இது. மிகுந்த உளவியல் போராட்டத்தை முன்வைக்கும் இப்படம் எப்படி அந்தக் குழந்தையின் பிறப்புக்குப் பின் அனைவரும் மனம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மேலும் படத்தின் உக்கிரமான பகுதி என்னவென்றால் கடைசிவரை ஊனமாகப் பிறந்த அக்குழந்தையைத் திரையில் காட்டவேமாட்டார்கள். அக்குழந்தையின் பிளவுப்பட்ட ஒரு ஒலி மட்டும் படம் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த ஒலி அக்குழந்தையின் இருப்பைக் காட்டிக்கொடுப்பதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இறுதியில் அக்குழந்தை கொலை செய்யப்பட்டதை அந்த ஒலி நின்றுவிட்டதன் மூலம் காட்டி முடித்திருப்பது நம் மனதையும் இறுக்கமாக்கி வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகிறது.
போராளி படம் அப்படியில்லாமல் எப்படிச் சுயசிந்தனையுடன் இருக்கும் ஒரு குழந்தையை ஒரு குடும்பமும் கல்வி அமைப்பும் பைத்தியமாக்க முயல்கிறது என்பதைப் படமாக்கியிருக்கிறது. இது ஒரு முக்கியமான அரசியலைப் பேச முயலும் பகுதியாகும்.
அறிவை அடக்குவது அல்லது அடிமையாக்குவது
போராளி படத்தில் குமரன் என்ற சிறுவன் தன் கிராமத்தில் வைத்து ஒடுக்கப்படுவதைப் படத்தின் சிறு பகுதியாக மட்டுமே காட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுதியே படத்தின் மையக்கதை. ஆனால் நம் தமிழ் சினிமாக்களில்தான் எப்பொழுதும் ஆளுமைகளைக் குறைவாகவே சிந்திக்கிறார்கள் அல்லது இருப்பதேயில்லை. அதனால் முக்கியமான பகுதிகளைப் பலவீனமாக்கிவிட்டு அதனைச் சமூக பொது இரசனை, வெகுசன மக்களின் மனம், பொருளாதார சமன்பாடு என்றெல்லாம் சொல்லி தப்பித்துவிடுவார்கள்.
குமரன் கிராமப் பள்ளியில் பயில்கிறான். அவனுடைய சிந்தனையாற்றல் எல்லோருக்கும் பெரும் சவாலாக அமைந்துவிடுகிறது. அவன் முன்வைக்கும் கேள்விகள் ஆசிரியரைத் திணறடிக்கிறது. ஆகையால் அவனை அடித்துத் துன்புறுத்தி அவனுடைய ஆரோக்கியமான சிந்தனைமுறையைத் தடை செய்கிறார்கள். உலகத்திலேயே குழந்தைகளுக்கு எதிரான பயங்கரமான வன்முறை இதுவாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதைப் படத்தில் மொண்ணையாக மட்டுமே கையாண்டுள்ளார்கள். அறிவு என்பதே அதிகாரத்திற்கு ஒவ்வாத ஒரு விசயம். அறிவின் பேராற்றலை எதிர்க்கொள்வதில் ஆளுமையற்ற அதிகார அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதனை அடக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஒன்று அந்த அறிவை விலைப் பேசி தனதாக்கிக் கொள்வார்கள். அறிவுத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் தன் மூளையை அதிகாரத்திடமும் முதலாளிகளிடமும் அடகு வைத்துவிடுவதைச் சமக்காலத்தில் பார்க்க முடிகிறது.
அடுத்ததாக சமாளிக்க முடியாத அறிவையும் ஆளுமையையும் சிதைத்து ஒடுக்குவதை அதிகாரங்கள் நிறைவேற்றுகின்றன. போராளி படத்தில் குமரனின் அறிவாற்றலைக் கண்டு மிரளும் பள்ளி ஆசிரியர்கள் அவனை எதிர்க்கொள்ள இயலாமல் தடுமாறுகிறார்கள். ஆகையால் அவனை உடல் ரீதியில் துன்புறுத்துவதன் வழியாக அவனுடைய அறிவை ஒடுக்குகிறார்கள்.
யார் போராளி?
போராளி என்பதற்கான பொதுவான அடையாளம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக உரிமை அல்லது சுதந்திரம் கேட்டுப் போராடுவது. அதிகாரத்திற்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் என்றும் சொல்லலாம். ஆனால் இப்படத்தில் போராளிக்கான அர்த்தத்தை வேறொரு தளத்தில் வைத்து மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தால் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு அல்லது பைத்தியம் என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் எப்படித் தன்னை அதிலிருந்து மீட்டெடுத்து வாழ முயல்கிறார்கள் எனப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். அவர்களின் அப்போராட்டத்தை முன்வைத்து போராளி என்றும் அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு போராளியாகத்தான் குமரன் கதைப்பாத்திரம் இப்படத்தில் படைக்கப்பட்டுள்ளது.
குமரன் அவனுடைய குடும்பத்தாரால் கடுமையாக நிராகரிக்கப்படுகிறான். அவர்களிடமிருந்து தப்பி வரும் அவன் சமூகத்தில் தன்னை அர்த்தமுள்ளவனாகக் காட்டப் போராடுகிறான். தன் அறிவையும் ஆற்றலையும் அங்கீகரித்துக்கொள்ள ஒரு களத்தைத் தேடி அலைகிறான். இது படத்தின் ஆரம்பம் முதல் பல கட்டங்களில் கவனப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் அல்லது குடும்பத்தால் மனநோயாளி என்றழைக்கப்பட்ட ஒருவன்தான் தெளிவானவன் என நிரூபிக்க பல நன்மைகளையும் சமூகச் சேவையும் செய்ய வேண்டியிருப்பதை ஒரு அவசியமாகப் படத்தில் நுழைக்கப்பட்டிருக்கின்றன.
நன்மைகளின் ஒரு பக்கத்தை மட்டும் பற்றிக்கொண்டு இந்த உலகிற்கு முன் நம்மால் எதை நிரூபிக்க முடியும்? வெறுமனே அவையனைத்தும் (நற்செயல்கள் என நாமே கற்பித்துக்கொண்டவை) ‘நல்லவனுக்கான’ அல்லது ‘தெளிவான சிந்தனையாளனுக்கான’ அடையாளத்தையும் கௌரவத்தையும் கொடுத்துவிடும் என்பது எந்தவகையில் நேர்மையான புரிதல்? தீமையின் இருப்பை மறுபுனைவு செய்து நன்மையின் இல்லாமையை வழியுறுத்தும் பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மட்டுமே குமரனின் நற்செயல்கள் உறுத்தல்களாக வந்து போகின்றன. உலகத்திலேயே மிக நல்லவன் குமரன் எனும் ஒரு கொண்டாட்ட மனச்சாய்வை நிறுவவே சமுத்திரக்கனி உழைத்துள்ளார். தீமையைக் கடுமையாக மறுப்பதே நன்மையை ஒரு பாடமாக மட்டும் நுழைப்பதற்கான ஒரு நன்னெறி நடவடிக்கையாகும். அதில் ஒரு கறாரான ஆசிரியர்த்தன்மையே எஞ்சியிருக்கும். தீமையுடன் உரையாடி அல்லது செயல்களின் எவ்வித போதாமையிலிருந்து தீமை என்ற அடையாளம் உருவாக்கப்படுகிறது என்ற தீவிரத் தேடல், சமூகத்தின் ஆழமன உருவாக்கத்தில் எதெல்லாம் தீமை என்று வகைப்படுத்தப்படுகின்றது என்ற கவனமும் ஒருவனுக்கு மிக முக்கியமானது. இது போன்ற தேடல்களும் ஆய்வும் இல்லாமல் வெறுமனே நன்மைகளைப் பிரச்சாரம் செய்து அதைக் கட்டளையாகப் பின்பற்றுதல்களாக நுழைப்பதில் அர்த்தம் இருக்கப் போவதில்லை.
போராளி என இப்படத்தின் மூலம் சமுத்திரக்கனி முன்வைக்கும் அந்த அடையாளத்தின் சிக்கல் என்ன? மனநோய் எனும் உளவியல் சார்ந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க குமரன் என்ன செய்கிறான்? ஓரிடத்திலிருந்து தப்பித்து வேறொரு இடத்திற்கு வந்து தன்னை மீட்டுக்கொள்கிறான்? அத்துனை எளிதான ஒரு தீர்வா? தன்னை ஒரு நல்லவனாகச் சித்தரித்துக்கொள்ள சமூகத்தில் சில போதாமைகள் நிரம்பிய மனிதர்கள் தேவை. அவர்களுக்கு உதவுவதன் மூலம் தன் மீதான இரக்கத்தையும் அன்பையும் பெற்றுக்கொள்கிறான். இவ்வளவுத்தானா படத்தின் வேலை? தன் குடும்பத்தினரால் தொடர்ந்து பல வருடங்கள் கொடுமைப்படுத்தப்பட்டு அறிவும் ஆற்றலின் சாத்தியங்களும் மழுங்கடிக்கப்பட்டு ஆளுமை சுருக்கம் பெற்றவன் எப்படி இத்தனை எளிமையான ஒரு தப்பித்தலின் வழி சீரான மனநிலைக்குத் திரும்புகின்றான்?
மேலும் மனநோய் தொடர்பான ஒரு சில மேலோட்டமான பிரச்சாரக் கருத்தாக்கங்களே படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. உடல் நோய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் மனம் தொடர்பான பிரச்சனைகளைத் தள்ளி வைத்துதான் பார்க்கிறோம் என மருத்துவர் கூறுகிறார். இது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும், மனம் தொடர்பான பிரச்சனைகளை அடையாளங்கண்டுகொள்ளவும் அதனை அணுகுவதிலும் இந்தச் சமூகம் இன்னும் தேர்ச்சிப்பெறாததே முதண்மையான காரணம் என நான் கருதுகிறேன். மனநோய் என்பதன் அளவுக்கோல் என்ன? மனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை தேவை என்ன? போன்ற விசயங்களில் நாம் உடனடியாக இன்னொரு தரப்பினரையும் அல்லது மனநல மருத்துவத்தையும் நாடும் ஒரு சூழல்தான் சமூத்தில் இருக்கிறது. மனம் சம்பந்தப்பட்ட விசயத்தில் இந்தச் சமூகத்தின் போதாமையையும் மனநலம் குறித்த நம்முடைய தேக்க மனநிலையையும் எப்படிச் சீரமைக்க முடியும் என்பதுதான் அடுத்தக்கட்ட முக்கியமான உரையாடலாக இருக்க முடியும்.
இன்றைய தொழில்மையமாகிவிட்ட நம் வாழ்க்கைமுறை, நிறுவனமாகிவிட்ட சமூகம், சாதிக்குள் உழன்றுகிடக்கும் மனநிலை, வர்க்க வேறுபாட்டினால் பொருளாதார பின்னடைவைச் சந்தித்து ஒடுங்கிப் போயிருக்கும் வாழ்க்கை நிலை, குடும்ப அமைப்பின் பிளவுகள் என மனநோய்க்குப் பல விசயங்கள் காரணமாகின்றன. ஒவ்வொன்றின் மூலமும் உருவாகும் மனப்பாதிப்பு என்பது வெவ்வேறானதாகும். இது சார்ந்து இன்னும் விரிவாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் ஜெயகாந்தன் எழுதிய ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்ற கட்டுரையை மீட்டுணர்ந்து விமர்சனத்தை முடித்துக்கொள்கிறேன்.
“நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் கோபத்தின் போது பொருள்களை உடைக்கிறோம், அவர்கள் அறியாமலேயே பொருள்களை உடைக்கிறார்கள். நாம் நான்கு சுவருக்குள் நிர்வாணமாக இருக்கிறோம், அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் தன்னை நிர்வாணமாக்கிக்கொள்கிறார்கள், நாம் வெறுப்படையும்போது இன்னொருவரை புன்படுத்துகிறோம், அவர்கள் அவர்களை அறியாமலேயே பிறரைக் காயப்படுத்துக்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாம் வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறோம், அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்'- ஜெயகாந்தன்.
கே. பாலமுருகன்
No comments:
Post a Comment