Friday, February 17, 2012

மெரினா திரைப்படம் - கொஞ்சமாகப் பிழைத்துக்கொண்ட கலை


மெரினா கடற்கரை – பசிக்கிறது எனும் ஓர் ஆதி செயலை எதிர்க்கொள்ள எத்தனை வகையான போராட்டம், வாழ்தல், தப்பித்தல், சுரண்டல், புறக்கணிப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. உலகத்தின் ஒரு பகுதியா மெரினா எனும் பகுதியில் நடந்து முடிந்த பல்லாயிரம் கணக்கான வாழ்வின் மீதத்தைப் பற்றிய கதை.

வழக்கம் போல பாண்டிராஜ் படத்தில் வரும் கதையின் மையத்தைவிட்டு நகரும் கிளைக்கதைகள் இப்படத்திலும் வந்து போகின்றன. காதல் இப்படத்தில் கேலி செய்யப்பட்டுள்ளது, விமர்சிக்கப்பட்டுள்ளது. மெரினாவிற்கும் காதலுக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருப்பதைச் சித்திரமாக வரைந்து வைத்திருக்கிறது மெரினா வாழ்வு. காதலர்கள் வாங்கி உண்பதற்காகச் சுண்டல் விற்கப்படுகிறது. அந்தச் சுண்டல்களை விற்று ஏதோ கொஞ்சமாக வாழ்ந்துகொள்ளும் குழந்தை தொழிலாளர்கள். இதை விரிவாகக் காட்டமுடியாமல் சட்டென காட்சிகளுக்குக் காட்சிகள் மிகையான பின்னணி இசையின் மூலம் அளவுக்கதிகமான பிரச்சாரமும், வசங்கனங்களும் எனப் படம் எதையோ இழந்து முடிகிறது. பசங்க படம் ஒரு அருமையான சிறுவர் சினிமா எனும் அடையாளத்தை இழந்ததைப் போல இந்த மெரினாவிற்கும் அதே நிலைமைத்தான்.

அவ்வப்போது வரும், பழைய பாடலைப் பாடி பிழைக்கும் அப்பா மகளின் கதை, அந்த மெரினாவை வாடகைக்கு விட்டதாக நம்பி பொய்யாகக் காதல் செய்பவர்களை விரட்டியும் அடித்தும் அலைந்து திரியும் மனநிலைப்பாதிக்கப்பட்டவரும், குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு மெரினாவில் பிச்சையெடுக்கும் வயதானவரும், குதிரைக்காரனும் என மெரினா எத்தனை வாழ்க்கையை எத்தனை மனிதர்களைத் தனக்குள் ஒளித்துவைத்திருக்கிறது? யாரும் கவனிக்காத மெரினா எனும் ஆயிரக்கனக்கான மனிதர்கள் வாழ முடியாமலும் வாழ்ந்து பார்க்க முடியும் எனவும் வந்து சேரும் கடற்கரையை, இந்தியாவின் மிக நீளமான கடற்கரை என்பதைத் தாண்டி இயக்குனர் பாண்டிராஜ் வேறு மாதிரி காட்டியிருப்பது பாராட்டுதலுக்குரியதே.

இரசிக்கவைத்தப் படத்தின் சில வசனங்கள்:

“நல்ல நண்பன் என்றெல்லாம் இல்லைடா, நண்பன் என்றாலே அவன் நல்லவன்தான்”

“பேண்டவனை விட்டுட்டு பீயை யேன் வெட்டுறே” (கல்வியாளர்கள் உருவாக்கிய பழமொழிகளைப் பற்றி அறிந்திறாத அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்விலிருந்து எடுத்து உருவாக்கியப் பழமொழிகளை வட்டாரத்தன்மைமிக்கது என்று சொல்வார்கள். இந்தப் பழமொழியையும் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்)

உடலில் ஈ மொய்க்க மெரினா கடற்கரையில் செத்துப் போகிறார் பிச்சைக்கார தாத்தா. மெரினா சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து போராடி அவருடைய உடலை மீட்டு அவருடைய கடைசி ஆசைகளை நிறைவேற்றி , ‘பாடகர்’ அண்ணன் பழைய பாடலைப் படிக்க அவரை அடக்கம் செய்கிறார்கள். மெரினாவின் மிக உண்மையான யதார்த்தின் மீது பாண்டிராஜ் கட்டியெழுப்பும் இலட்சியவாத கற்பனை இப்படம் என்பதற்கு இது போன்ற மிகையான காட்சிகளும் உதாரணங்கள் ஆகும். படத்தை ஒட்டுமொத்தமாகவும் புறக்கணிக்க இயலாது. குறிப்பிடத்தக்க நல்ல விசயங்களையும் இயக்குனர் மெனக்கெட்டுள்ளார். இயக்குனர் என்பவர் தனக்களிக்கப்பட்ட கலையைக் கொண்டு தான் வாழும் நிலப்பரப்பின் இழந்துபோன விழுமியங்களை அடையாளம் காட்ட முடியும் அல்லது அதை மீட்கவும் முடியும். அப்படி ஒரு நற்செயலைப் பாண்டிராஜ் அடையாளம் காட்டியுள்ளார். ஆனால் மீட்க முடியுமா என்பது இந்தியாவின் அரசியல் போக்கைச் சார்ந்தது.

படத்தில் திருபதியளிக்கும்படியான விசயம், படம் முடிந்த பிறகு இப்படத்தை மெரினாவில் வாழும் குழந்தை தொழிலாளர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறோம் என்ற அறிவிப்பெல்லாம் கொடுக்கப்படவில்லை. கலை கொஞ்சமாகப் பிழைத்துக்கொண்டது.

கே.பாலமுருகன்

No comments: