Monday, March 12, 2012

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும் நாவலின் வரலாறும்


பல வருடமாகக் காத்திருந்த நாவல் வெளியீடு இது. வருகின்ற 25 ஆம் நாள் மார்ச் மாதத்தில் கோலாலம்பூர் தேசிய நூலகத்தில் மாலை 2.00 மணிக்கு வெளியீடக் காணவிருக்கின்றது. 2007ஆம் ஆண்டு மலேசிய நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்று எனக்கொரு அடையாளத்தையும் கவனத்தையும் உருவாக்கிக்கொடுத்த நாவல் அது. நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். 245 பக்கங்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், ஓம்ஸ் தியாகராஜன் குழுமம், மலேசியத் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய 2006ஆம் ஆண்டு நாவல் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாவல்களில் இந்த நாவல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு தரப்பட்டது. பரிசு என்பதையும் மீறி அது எனக்கொரு அங்கீகாரமாக அமைந்திருந்தது.தொடர்ந்து இலக்கியத்தில் இயங்குவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொடுத்தத் தருணம் அது.

அடுத்ததாக, என்னுடைய 24ஆவது வயதில் எழுதப்பட்ட இந்த நாவல், 2010ஆம் ஆண்டுக்கான கரிகாற் சோழன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. (http://bala-balamurugan.blogspot.com/2011/01/2010.html )  மலேசியத் தோட்டத் தொழிலாளியின் குடும்பச் சிதைவைப் பற்றி ஆவணப்படுத்தியதற்காக, கரிகாலன் விருது என் நாவலுக்கு அளிக்கப்படுவதாக, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராஜெந்திரன் அவர்கள் சிங்கப்பூரில் தெரிவித்தார். 


ஜனவரி இரண்டாம் நாள் 2011 ஆம் ஆண்டு இந்தக் கரிகாலன் விருது சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையின் வாயிலாக எனக்கு அளிக்கப்பட்டது. நாவல் விருதளிப்பு விழாவில் கலந்துகொள்ள என்னுடன் மலேசியாவிலிருந்து எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு பேருந்து நிறைய ஆட்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார் என்னுடைய உரையில் நான் குறிப்பிட்ட நாவல் குறித்தான விசயங்களை மீண்டும் குறிப்பிட்டுப் பேசினார். அதன் தேவை குறித்தும் என்னிடம் பேசினார்.

தொடர்ந்து, அதே நாவல் கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சிலாங்கூர் மாநிலத்தின் கலை கலாச்சார விருதை எனக்குப் பெற்றுக்கொடுத்தது.( http://bala-balamurugan.blogspot.com/2011/09/2011.html ) ஆண்டுதோறும் சிலாங்கூர் மாநில அரசால் கொடுக்கப்படும் அந்த விருதளிப்பு விழாவில் தமிழ் நாவல் பிரிவில் என் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் கொடுக்கப்பட்டிருந்தது. இத்துடன் மூன்று வகையான அங்கீகாரத்தை எனக்கு தேடிக்கொடுத்த ‘நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்’ பல இடங்களில் முக்கியமான நாவலுக்கான அம்சங்களையும் சில இடங்களில் பலவீனங்களையும் கொண்டிருப்பதை நான் ஒப்புக்கொள்ளவே செய்கிறேன். அது என்னுடைய சிறந்த நாவல் என நான் பரிந்துரை செய்யமாட்டேன். ஆனால் 24 ஆவது வயதில் ஓர் மலேசிய இந்திய இளைஞனால் எழுதப்பட்ட அந்த நாவல் பல முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளது என்பதைச் சாதரணமாகப் பார்க்க முடியாது என்பதை மட்டும் அழுத்தமாகக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நாவல் வெளியீட்டு விழாவில் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் நாவலை ஆய்வு செய்து கருத்துரைக்கப் போவதாக அறியப்பட்டேன். இதுவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மலேசிய இலக்கியம் முதலில் மாணவர்களைப் போய் சேரவேண்டும் எனத் தொடர்ந்து விருப்பப்படுபவன் நான். அதன்படி இந்த நாவல் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகின்றேன். இந்தச் சமூகத்தின் கடந்தகால வரலாற்றைப் புதிய உத்திமுறையில் சொல்லியிருக்கும் விதத்தை அவர்கள் அடையாளம்கண்டு இலக்கியத்தின் பழைய மரபார்ந்த சிந்தனையிலிருந்து எப்படித் தங்களைப் புதுப்பித்துக்கொள்வது எனத் தொடர்ந்து சிந்திப்பார்கள் என்றும் கருதுகிறேன்.

இந்த நாவல் உருவாவதற்கு எனக்கு துணையாக இருந்தவர்களில் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் பாதுகாவலர் திரு.முருகன் அவர்கள் மிக முக்கியமானவர். புக்கிட் லெம்பு தோட்டத்தின் பல கதைகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார். 5 நாட்கள் தொடர்ந்து என்னிடம் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதோடு மட்டுமல்லாமல் புக்கிட் லெம்பு தோட்டத்தில் இன்றும் வசித்துக்கொண்டிருக்கும் ஒரு சில குடும்பங்களை நேரில் சந்தித்து நேர்காணல் செய்துதான் இந்த நாவலின் பாதி பகுதியை நான் முடித்திருந்தேன். அடுத்ததாக ஸ்காப்ரோ தோட்டத்தின் வரலாற்றையும் கதையோடு இணைத்துள்ளேன். அதற்காகவும் நான் ஸ்காப்ரோ தோட்டம்வரை சென்று என் ஆர்ம்பக்கால வாழ்க்கையின் பல பகுதிகளை மீட்டுக்கொண்டு வந்தேன். ஏறக்குறைய இரண்டு தோட்டங்களின் கதைத்தான் இந்த நாவல். முதலில் தோட்டத்தில் எப்படி அங்குள்ளவர்கள் வறுமையால் கடன்பட்டு அதைக் கட்டமுடியாமல் காணாமல் போனார்கள் என்றும், பிறகு எப்படி சீன முதலாளிகள் தோட்டத் தொழிலாளிகள் பாதிக்கப்பாட்டார்கள் என்றும் சொல்லியிருக்கிறேன். இவையனைத்தும் கதையோடு ஒட்டி வந்து போகும்.

மூத்த எழுத்தாளர்கள் மூத்த நாவலாசிரியர்கள் சொல்லாத தோட்டத்தின் கதையையா நான் சொல்லிவிட்டேன் என்ற கேள்வியும் எழக்கூடும். இதுவரை சொல்லப்படாத கதைச்சொல்லல் இது. சர்வதேசக் கவனத்தை ஈர்த்த அகிரா குரோசாவின் ரஷமோன் திரைக்கதையின் பாதிப்பினால், அது போன்ற ஓர் உத்தியைக் கையாண்டு எழுதி முடித்த பற்பல அடுக்குகளைக் கொண்ட நாவல் இது. நாவலின் மொழி, நாவலுக்குள் இருக்கும் வாழ்க்கை, இவையனைத்தையும் மீறி நாவல் சொல்லப்பட்ட விதம் கவனப்பெறும் எனச் சொல்ல முடியும். அதன்படி இனி வாசகர்களால்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும். கரிகாலன் விருது, நாவல் போட்டியில் முதல் பரிசு, சிலாங்கூர் கலை கலாச்சார விருது என இவையனைத்தையும் பெற்றுக்கொடுத்த இந்த நாவல் விமர்சிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் இந்த நாவலையும் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் என்னையும் ஒப்பிட்டு எந்தவொரு மதிபீட்டையும் உருவாக்கிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த நாவல் என்னுடைய 24 ஆவது வயதில் எழுதப்பட்டவை என்ற பிரக்ஞை எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியமானது.

இத்துடன் நாவல் வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். விவரங்களை அறிந்து கோலாலம்பூரில் இருக்கும் நண்பர்கள் என் சார்பாக வந்து விழாவில் கலந்துகொள்ளும்படி வரவேற்கின்றேன். விழாவில் கலந்துகொள்வதோடு நாவலியும் வாங்கி வாசித்துக் கருத்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 2006ஆம் ஆண்டில் எழுதப்பட்ட நாவல் 2012ஆம் ஆண்டில் விமர்சிக்கப்படுவதே ரொம்ப தாமதமான விசயம்தான். ஆகையால் தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

முக்கியக் குறிப்பு: மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் எனக்கு அன்பளிப்பாக 50 நாவல்கள் காப்பியைத் தருகிறார்கள். ஆகையால் என்னிடம் என் நாவலை வாங்க நினைப்பவர்கள் இப்பொழுதே தெரிவித்துவிட்டால் நாவலைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அனுப்பி வைப்பேன். என் சேகரிப்புக்கு 5 காப்பி போக, மீதம் 45 நாவல்கள் மட்டுமே விற்பனைக்கு. சீக்கிரம் சொல்பவர்களுக்கு மட்டுமே விற்கக்கூடும்.

நாவல் வெளியீட்டு விழா குறித்த விபரம்:
நாள்: 25.03.2012(ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மதியம் 2.00 மணியைப் போல
இடம்: தேசிய நூலக அரங்கம், ஜாலான் துன் ரசாக், கோலாலம்பூர்

சிறப்பு வருகை: தகவல் தொடர்பு, பண்பாட்டுத் துறை துனையமைச்சர், துணை ஆணையர், சிலாங்கூர் காவல்துறை அதிகாரி டத்தோ தெய்வீகன், ஓம்ஸ் தியாகராஜன்

மேலும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இது ஒரு தமிழ் மொழி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இன்னும் பல நிகழ்ச்சிகள் அன்றைய நாளில் நடைப்பெறும். கவிதை எழுதும் போட்டி, நூல் கண்காட்சி, இலக்கிய உரை, பாரம்பரிய நடனம் என.

நாவல் பெறுவது குறித்த மேல் விபரங்களுக்கு: கே.பாலமுருகன் (016-4806241)

கே.பாலமுருகன்

1 comment:

Tamilvanan said...

வாழ்த்துக்க‌ள். நிச்ச‌ய‌ம் க‌ல‌ந்து கொள்வேன்.