Sunday, March 18, 2012

கழுகு: திரைப்பார்வை -பிணம் தூக்கிகள்


மலைக்கிராமம் கதைக்களம். மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைப் பள்ளத்தாக்கில் இறங்கி  சேகரித்து வரும் தொழில் செய்யும் நான்கு நண்பர்கள் பற்றிய கதை இது. வியக்க வைத்த கதை தேர்வு. படத்தின் துவக்கக் காட்சியில் காதல் ஜோடி மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இருவரின் குடும்பத்தார்களிடமும் பிணத்தை எடுத்து வரப் பேரம் பேசிவிட்டு நால்வரும் மூன்று நாள் மலைக்கு அடியில் 4000 மீட்டர் பயணம் செய்கிறார்கள். ஆரம்பமே படத்தின் மீது ஆர்வத்தைக் கூட்டியது. வாழ்க்கையில் விரக்தியுற்ரவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள் மலை மேலேயிருந்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது மட்டுமே நாம் அறிந்த மிக அடிப்படையான விசயம். ஆனால் அப்படிக் கீழே விழுந்து உடல் சிதறி போயோ அல்லது தண்ணீரில் சிக்கித் தொலைந்தவர்களையோ தேடிக் கண்டுப்பிடித்து வருபவர்களின் வாழ்வை யாரும் இதுவரை கவனப்படுத்தியது கிடையாது. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படம்.

ஆனால், வழக்கமாக தமிழ்ப்படம் என்றாலே எத்துனை முக்கியமான கதைக்களமாக இருந்தாலும் எத்துனை வித்தியாசமான கதைக் கருவாக இருந்தாலும், காதல், பாடல், சண்டை, பகைவன் என ஒரே பார்மூலாவுக்குள் தன்னுடைய தனித்துவங்களை இழந்துவிடுகின்றது. கழுகு படமும் அது போலவே தனது தீவிரத்தைத் துவக்கக் காட்சிக்குப் பிறகு இழந்து சராசரியான திரைக்கதைக்குள் சிக்கி காணாமல் போய்விடுகிறது. இது தமிழ்ப்படத்திற்கே உரிய சாபமா?

அடுத்ததாக, முதல் காட்சியில் பிணத்தைச் சேகரிக்க அவர்கள் செல்லும் பயணத்தில் நகைச்சுவை வசனங்களை அதிகமாகத் திணித்தது போன்றே உணர்கிறேன். அது சாதரணமான பயணம் கிடையாது. நமக்கு சற்றும் அறிமுகமில்லாத ஒரு “horrible” ஆன பயணம். ஆனால் அதன் தீவிரத்தை வழிநெடுக கருணாசும் தம்பி இராமையாவும் செய்யும் நகைச்சுவையால் அடைய முடியாமல் தவிக்கிறோம். நகைச்சுவை இல்லாவிட்டால் ஒரு தமிழ் சினிமா இரசிகன் படத்தைப் புறக்கணித்துவிடுவான் என்ற வியாபார சிந்தனைத்தான் சில சமயங்களில் தமிழ் சினிமாவுக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியாமல் பின்னடைந்து போய்விடுகின்றன.

படத்தின் துவக்கத்தில் கதைநாயகன் மரணம் குறித்தும் காதல் குறித்தும் பேசும் அலட்சியமான வசனங்களே படத்தின் இறுதி காட்சியை அனுமானிக்கச் செய்தது. கட்டாயம் ஒருநாள் கதைநாயகனும் காதல் வயப்பட்டு மரணத்தின் வழியை உணர்ந்து, இதே மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்துகொள்வான் எனச் சட்டென யாராலும் ஊகித்துவிடமுடியும். இயக்குனர் திரைக்கதை அமைப்பில் இத்தனை பலவீனமான ஓட்டையைக் கவனிக்காமல் விட்டிருக்கவே கூடாது. பாடல்களும் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பாராட்டுதலுக்குரிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மலை பிரதேசத்திற்குரிய ஒளி, பனி படர்ந்த காட்சிகள், தேயிலை தொழிற்சாலை தொழிலாளிகள், வழக்கம் போல அழகான கதைநாயகி எனப் படம் நீள்கிறது. துவக்கக் காட்சிக்குப் பிறகு படத்தோடு இணையவே முடியாமல் தவித்ததுதான் மிச்சம். ஆனால் படம் எடுத்துக் கொண்ட கருவும், கதைக்களமும் இன்னமும் என்னை வியப்பிலிருந்து சற்றும் அசைக்கவில்லை. நல்ல தேர்வை இப்படி வீணடித்துவிட்டார்களே என்ற புலம்பல் இன்னமும் எனக்குள் ஆழமாக வருத்தப்பட வைக்கிறது.

கழுகு வாழ்க்கையைத்தான் அவர்கள் நால்வரும் வாழ்கிறார்கள். பிணத்தைத் தின்பதற்காகக் கழுகு ஆவேசத்துடன் முதலில் மரணம் நிகழ்ந்த இடத்தை வட்டமிட்டப்படியே இருக்கும். பிறகு ஒவ்வொரு சதையாகக் கொத்தி தின்னுவிடும். மலையிலிருந்து விழுந்து செத்தவர்களின் பிணத்தைக் காசுக்காகத் தேடிச் செல்பவர்களுக்கும் கழுக்குக்கும் உருவாக்கியிருக்கும் தொடர்பு மிகக் கூர்மையாகப் பொருந்துகிறது. பசி என்பதன் ஆதி உணர்வைத் தணிய செய்வதற்காக ஒவ்வொரு சமூகமும் ஏதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. கருணை, அன்பு, இரக்கம் என இவையனைத்தையும் சில சமயங்களில் பசிக்கு முன் கொல்லவும் படுகின்றன.

கதைநாயகன் கிருஷணா தம்பி இராமையாவிடம் ஒரு கேள்வி கேட்கிறான். “ஏன் கீழெ உழுந்து செத்தவங்க உள்ளங்கையிலே இலைங்களும் கீறல்களும் இருக்கு” என. ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் அவர்கள் குதித்துவிட்டாலும், விழும்போது மரக்கிளைகளைப் பிடித்துத் தப்பித்துவிட மாட்டோமா என்று கடைசியாக முயற்சித்துப் பார்த்ததன் விளைவுத்தான் அது என அவர் சொல்கிறார். உயிர் வாழ்வதற்கான ஒரு கடைசி போராட்டம் அது. இறுதியாக கதைநாயகனும் விழுந்து செத்துவிடுகிறான். படத்தின் கடைசி காட்சி, இலைகளும் கீறல்களும் உள்ள அவன் உள்ளங்கையைக் காட்டி அவன் கேட்டக் கேள்வி திரையில் ஒலிக்கிறது. ஒரு கனம் சோகத்தாலும் வலியாலும் படம் மனதிற்குள் நிரம்புகிறது. எல்லோருக்கும் வாழத்தானே பிடிக்கிறது? 

கே.பாலமுருகன்

1 comment:

Tamilvanan said...

//நகைச்சுவை இல்லாவிட்டால் ஒரு தமிழ் சினிமா இரசிகன் படத்தைப் புறக்கணித்துவிடுவான் என்ற வியாபார சிந்தனைத்தான் சில சமயங்களில் தமிழ் சினிமாவுக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியாமல் பின்னடைந்து போய்விடுகின்றன// வியாபார‌ சிந்த‌னையை முன் வைத்து எடுக்க‌ப் ப‌டும் சில‌ ப‌ட‌ங்க‌ள் த‌யாரிப்ப‌ள‌ர்க‌ளுக்கு லாப‌த்தை த‌ருவ‌த‌னால்தான்,த‌மிழ் சினிமாக்க‌ள் அத‌ன் க‌ட்டுக்குள் இருந்து வெளி வ‌ர‌ முடிய‌வில்லை என‌த் தோன்றுகிற‌து.மேலும் ஒரு ப‌ட‌த்தை 2 ம‌ணி நேர‌த்துக்கு மேல் எடுக்க‌ வேண்டும் என்ற‌ எழுத‌ப்ப‌டாத‌ விதிமுறைக‌ள் திருத்த‌ப் ப‌ட்டால், ப‌ல‌ ம‌சாலாக் காட்சிக‌ள் த‌விர்க்க‌ப்ப‌ட்டு த‌ர‌மான‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ர‌ வாய்ப்புண்டு...