மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் தமிழ் நாவல் எழுதும் போட்டி-3 கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக பிரபல நடிகர் சேரன் அவர்கள் வந்திருந்தார். வழக்கமாக இது போன்ற இலக்கியம் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்பே இல்லாத பிரமுகர்கள் வந்து தலைமை தாங்குவது சர்வதேச நோயாக நிறுவப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் நடிகர் சிவகுமாரையும் வரவழைத்து தங்களின் நிகழ்ச்சிக்கு ஒரு புகழ்ச்சியைத் தேடிக்கொண்ட அதே போன்ற முயற்சிகள்தான் மலேசியாவிலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அரசாங்க சார்பற்ற பொது அமைப்புகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால், சமூகப் பிரதிநிதியாகச் செயல்படும் ஒரு பொது அமைப்பு தான் வாழும் நிலத்தின் மொழிக்கும் மக்களுக்கும் கொஞ்சமாவது தார்மீகமாக இருக்கலாமே? இங்கு வாழ்ந்து தொடர்ந்து இலக்கியப் பங்களிப்பைச் செய்யும் மலேசியப் படைப்பாளிகளுக்குத் தார்மீகமாக இருக்கலாமே? இவ்வாறான அமைப்புகள் சமூகத்துடன் இணைந்து சமூகத்திற்காகத்தானே இயங்குகின்றன. நாம் செலுத்தும் சந்தாபணமும் சமூகத்தைக் காட்டி நன்கொடையாளர்களிடமிருந்து சேகரிக்கும் பணமும் என அனைத்துமே எதற்காக? அப்படிப்பட்ட சமூகத்திற்கு இலக்கிய அமைப்புகள் செய்ய வேண்டியது என்ன? சேரனுக்கும் வைரமுத்துவிற்கும் காசை அள்ளி இரைப்பதா?
தமிழ் நாவல் எழுதும் போட்டியின் ஒரு துவக்க நிகழ்ச்சியின் மீது நாட்டின் கவனத்தைச் சேகரிக்க சேரன் போன்ற சினிமா பிரபல்யத்தைக் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துவது என்பது நியாயமான செயல்பாடா? அவர் ஒரு இயக்குனர் என்பதைவிட அவருக்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு என்ன? மலேசியாவிலேயே முதல் நாவல் எழுதும் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றவரும் மலேசியாவின் மிக முக்கியமான மூத்த நாவலாசிரியருமான அ.ரெங்கசாமி போன்றவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை முன்வைத்து இந்த விழாவை எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்திருக்கலாமே? சமீபத்தில் தேசிய நூலகத்துடன் இணைந்து தமிழ் நூல்களுக்கு ஓர் அங்கீகாரம் பெற்று தந்த மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏன் இப்படிச் சில சமயங்களில் தன்னுடைய தார்மீகத்தை இழந்துவிடுகின்றது?
அடுத்ததாக, சினிமா நடிகரும் இயக்குனருமான சேரன் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு லட்சம் கேட்டிருப்பதைக் கண்டு மிரள என்ன இருக்கிறது? சினிமா நடிகர்களும், கமர்சியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களும், தங்களுக்கு எப்பொழுதும் ஒரு விலைப்பட்டியலை வைத்திருப்பது நடைமுறையான ஒரு விசயம் ஆகும். வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும்போது தங்களின் பிரபலத்திற்கு விலை பேசி குறிப்பிட்ட சில நாள்களுக்குத் தங்களை விற்றுவிடும் அவலம் எங்கும் நடந்து வருவதுதானே? அவர் வந்தாராம், இங்கு தமிழ் வளர்க்கப்படுவதைக் கண்டு மிரண்டு பணம் வேண்டாம் என மேடையில் மறுத்தாராம். சேரன் எனக்கு ஒரு பொருட்டே கிடையாது. அவரை வரவழைத்தது யாருடைய தவறு? தன் மீது இந்தச் சமூகமும் அமைப்புகளும் ஒட்ட நினைக்கும் விலைப்பட்டியலைக் கிழித்துத் தூக்கியெறியும் உண்மையான படைப்பாளிக்கும் இது போன்ற சினிமா நடிகர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகையால் என்னுடைய கேள்விகளும் விமர்சனங்களும் சேரனை நோக்கியது இல்லை.
மொழி சார்ந்து தீவிரமாக இந்தச் சமூகத்தை முன்னெடுக்க நினைக்கும் அமைப்புகள், முதலில் நம் இலக்கியத்தை நம் மொழியை நம் வாழ்வை தமிழகத்து சினிமா துறையைச் சேர்ந்தவர்களிடமும் ஆளுமையற்ற கமர்சியல் நடவடிக்கையாளர்களிடமும், பட்டிமன்ற பேச்சாளர்களிடமும் ஒப்படைக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். கலை இலக்கியத்தை வளர்ப்பதற்கு நமக்கு ஏன் சாலமன் பாப்பையாவின் வருகை அவசியமாகத் தேவைப்படுகிறது? இவையனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கும் இந்த மண்ணைச் சேர்ந்த நமக்கு ஏன் தார்மீகச் சிந்தனை சரியாக வேலை செய்வதில்லை?
சொகுசை எதிர்ப்பார்த்து வரும் பிரபலங்களிடம் பணத்தை விரையப்படுத்துவதற்குப் பதிலாக தன்னுடைய நூல்களை அச்சிட முடியாமல் தவிக்கும் எத்தனையோ நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மலேசியப் படைப்பாளிகளுக்கு எழுத்தாளர் சங்கம் உதவலாமே? அவர்களை அடையாளங்காண்பதில் சிக்கல் என்றால் அதற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நியாங்களை எதிர்ப்பார்த்து ஓய்ந்துபோய்விட்ட இந்தச் சமூகம் இது போன்ற இலக்கிய/மொழி அமைப்புகளிடமிருந்து இறுதியாக எதிர்ப்பார்ப்பது தார்மீகமான சிந்தனையைத்தான். அதையாவது மேலும் மேலும் பழுதடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கே.பாலமுருகன்
thanks: thinakural sunday edition
No comments:
Post a Comment